பாங்காக் கடந்த காலமும் தற்காலமும் இணைந்த ஒரு கதம்பம்
தாய் மக்கள் இதை “தேவதூதரின் நகரம்” (Krung Thep) என்றழைக்கிறார்கள். கடந்த காலங்களில், மேற்கத்திய பார்வையாளர்கள் இதை “கிழக்கத்திய வெனீஸ்” என்பதாக அழைத்திருக்கின்றனர். ஏனையோரான நமக்கோ அது புராதன சயாம் ராஜ்யமாகிய தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்காகும்.
16-ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் முதல் முதலாக தாய்லாந்தில் வந்திறங்கிய போது, பாங்காக் சீன வியாபாரிகளும் தொழிலாளிகளும் வசித்துவந்த சிறிய மீனவர் கிராமமாக இருந்தது. இன்று ஆண்டுதோறும் வரும் 20 லட்ச சுற்றுலாப் பயணிகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இந்த சந்தடியான தலைநகரை கடந்த காலமும் தற்காலமும் இணைந்த கவர்ச்சிமிகுந்த கதம்பமாக காண்கிறார்கள்.
மாறுபட்ட காட்சிகளுள்ள நகரம்
1782-ல் தற்போதைய சக்ரி ராஜ பரம்பரையின் முதல் அரசனாகிய ராமா I, காவோ ஃபரயா ஆற்றுக்கு குறுக்கேதான் பூரியிலிருந்த சயாமின் தலைநகரை பாங்காக்குக்கு மாற்றினார். இங்கே ஆற்றில் கிழக்கே ஒரு வளைவிலிருந்த கரையோரத்தில், இப்பொழுது க்ராண்ட் பேலஸ் கட்டிடத் தொகுதியாக இருக்கும் அரண்மனையை தனக்குக் கட்டினான். மூன்று பக்கங்களிலும் ஆற்றினால் சூழப்பட்டிருந்த நகரத்தில் குறுக்கும் மறுக்குமாக, கால்வாய்கள் வலைப் போன்ற பின்னலமைப்பாக இருந்த இவை க்ளாங்ஸ் என்றழைக்கப்பட்டன. இவை பொது வழியாகவும், குடிநீர் வழங்கவும், குளியலுக்கும், சந்தையிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. “கிழக்கத்திய வெனிஸ்” என்பது பொருத்தமான பெயராகவே இருந்தது.
ஆனால் இன்றோ பார்வையாளர் இனிமேலும் பளபளப்பான அமைதியான கால்வாயோரங்களில் எளிய நாட்டுப்புற வாழ்க்கை காட்சிகளை காணமாட்டார். தண்ணீருக்கு மேலே கட்டிடத்தை தாங்கிக் கொண்டு நிற்க பயன்படுத்தப்பட்ட நீண்ட கொம்புகள் அல்லது மூங்கில் கட்டுமரத் தோணியின் மீது அமைக்கப்பட்ட பெரும்பாலான வீடுகள் மறைந்துவிட்டன. மாறாக, அவர் கான்கீரீட்டும் செவ்வொளி விளக்கும் நிறைந்த தலைநகரை முடிவில்லா போக்குவரத்து நெருக்கடிகளினூடேக் காண்பார். இங்கே ஒரு சாலையை கடந்து செல்வதும்கூட வருத்தமான ஒரு அனுபவமாக இருக்கும். பெரும்பாலான கால்வாய்கள் மூடப்பட்டு சாலைகள் இப்பொழுது போடப்பட்டுவிட்டன. கால்வாயோர வீடுகளுக்குப் பதிலாக, கடைகளைக் கொண்ட, இரண்டு, மூன்று அல்லது நான்கு மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
உயரமான அலுவலகக் கட்டிடங்களையும், குளிர் சாதனம் பொருத்தப்பட்ட கடைகளையும் கொண்ட பாங்காக் அநேக விதங்களில் மேற்கத்திய பாணியையே தனதாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நவநாகரீக கட்டிடத்துக்கு அருகே பழமையான புத்த ஆலயங்களும் கோயில்களும் ஆவி விடுகளும் காணப்படுகின்றன. ஒரு புத்த மடத்தினுள்ளே, துறவிகள் தியானம் செய்வதும் பாடுவதும் கேட்கிறது. மக்கள் இங்கே ஓரளவு சமாதானத்தையும் மன அமைதியையும் காணமுயற்சி செய்கிறார்கள். இதற்கு வெளியே, இடைவிடாமல் மோட்டார் கார்களும், இரைச்சலுடன் செல்லும் “சாம்லோர்” என்றழைக்கப்படும் மூன்று சக்கர வாடகை கார்களும், மோட்டார் சைக்கிள்களும் புகையை கக்கிக்கொண்டுச் செல்லும் பேருந்துகளும் சரக்கு வண்டிகளும் சாலையை அடைத்துக் கொண்டுச் செல்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன் இவைகளில் சில யானை வண்டிகளாகவே இருந்தன.
நகரத்தின் மக்கள்வாழ் பகுதியில், குளிர்சாதனம் பொருத்தப்பட்ட மேற்கத்திய பாணி வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் எல்லைப்புறங்களிலும் நகரின் ஏழ்மையானப் பகுதிகளிலும் பல தலைமுறைகளாக, குடும்பங்கள் சிறிய மர வீடுகளில் ஒரு சில தட்டுமுட்டுச் சாமான்களோடு பொதுவாக கூரையின்மீது ஒரு தொலைக்காட்சி அலைவாங்கியோடு வாழ்கிறார்கள்.
ஆன்மீக வாழ்க்கை
தாய் மக்களில் சுமார் 95 சதவிகிதத்தினர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே பல அடுக்கு கூர்மையான கூரைகளையும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட முக்கோணச் சுவர்களையுமுடைய ஏராளமான பளபளப்பான கோவில்களே பார்வையாளர்களின் கண்ணிகளுக்கு முதலில் தென்படுகிறது. தேசத்திலுள்ள 30,000 புத்த துறவி மடங்களில் 400 பாங்காக்கிலுள்ளது. இவைகளில் எமரால்ட் புத்தரின் ஆலயமே மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இது அரச குடும்பத்தின் தொழுகையிடமாக, தாய்லாந்து மக்கள் மிக உயர்வாக மதிக்கும் பச்சைப் பளிங்குக் கல்லாலான 61 சென்டிமீட்டர் உயரமுள்ள புத்தரின் சிலையை கொண்டதாக இருக்கின்றது. அது அத்தனைப் புனிதமானதாக கருதப்படுவதன் காரணமாக மழைக்காலம், குளிர்காலம் மற்றும் கொடை காலத்தில் ஆரம்பத்தில் அரசனே அதன் உடைகளை மாற்றுகிறார்.
நகரத்தின் மிகவும் சந்தடியான ஒரு சந்திப்பில் பாங்காக்கின் மிகப் பிரபலமான கோவிலில் நான்கு தலையுள்ள இந்து கடவுளாகிய பிரம்மாவின் சிலை காணப்படுகிறது. இங்கே ஆரம்பத்திலிருந்தே புத்த மதம் இந்து மதத்தோடு கலந்து விட்டிருக்கிறது.
நகரம் முழுவதிலும் அநேக ஆவி வீடுகள் காணப்படுவது கிழக்கத்திய ஆன்மீகத்தின் மற்றொரு பாகமாகும். ஒவ்வொரு நிலப்பகுதியிலும் சாந்தப்படுத்தப்படவேண்டிய ஒரு காவல் ஆவி இருக்கிறது என்பது தாய் மக்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே அது ஒரு வீடாக, ஒரு உணவகமாக, ஒரு வங்கியாக, ஒரு அலுவலகமாக அல்லது ஒரு துறவி மடமாக இருந்தாலும்கூட உண்மையில் ஒவ்வொரு கட்டிடத்தின் பக்கத்திலும் ஆவி வீடு ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.
ஆன்மீக நம்பிக்கைகளும் கருத்துக்களும் கலந்து, தாய் மக்களின் மனநிலைகளையும் சிந்தனைகளையும் பல வழிகளில் உருப்படுத்தி அமைந்திருக்கின்றன. புத்தர்கள் வாழ்க்கையை முக்கியமாக வேதனை நிறைந்ததாக கருதினாலும், தாய் மக்கள் சிற்றின்பத்தில் அல்லது கேளிக்கைகளில் ஈடுபாடு கொள்கிறார்கள். இது கவலையற்ற சொகுசான வாழ்க்கையை விரும்பும்படி செய்திருக்கிறது. சில விஷயங்களில் இது உதவிச் செய்தாலும் சீரான போக்குவரத்துக்கு அல்லது அவசியமான சட்டங்களைக் கைக்கொள்வதற்கு நிச்சயமாகவே உதவிச் செய்வதில்லை. பரவாயில்லை, கவலைப்படாதீர் மற்றும் அலட்டிக் கொள்ளாதே போன்ற மனநிலைகள் குப்பைக்கூளப் பிரச்சினையை நீக்க அல்லது நீண்ட எதிர்கால திட்டங்களை ஊக்குவிக்க உதவிச் செய்வதில்லை.
மறுபட்சத்தில், துன்பங்களுக்கு கரணம் முன்வினைப்பயனே (கர்மா) என்பதை ஏற்றுக் கொண்டிருப்பது தாய் மக்கள் எரிச்சலூட்டும் சூழ்நிலைமைகளை பொறுமையோடு சகித்துக் கொள்வதற்கு விளக்கமளிப்பதாக இருக்கிறது. விவசாயி வாழ்க்கையில் தன்னுடைய கடினமான யோகத்தில் மனநிறைவுடன் இருப்பது மட்டுமில்லாமல் நகரில் மோட்டார் ஓட்டிச் செல்லும் சராசரி மனிதனும் எவராவது அவனை முந்திக்கொண்டுச் சென்று இடங் கொடாமல் இருக்கும் பட்சத்தில் அதைக் குறித்து எரிச்சலடைவது கிடையாது. புழுக்கமான ஒரு மதிய வேளையின் உஷ்ணத்தில் ஜன நெரிசலுடன் செல்லும் பேருந்து போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்டாலும் கூட பிரயாணிகள் அமைதியை இழந்துவிடுவது கிடையாது. இவை அனைத்தும் பொருத்தமாகவே எளிதில் உணர்ச்சி வயப்படாத நிலை என்று குறிப்பிடப்படுகிறது.
மாறிவரும் ஒரு நகரம்
சம்பிரதாய வாழ்க்கை பாணி படிப்படியாக மறைந்து வருகிறது. என்றபோதிலும் சிறு பிரயாயம் முதற்கொண்டே முதியோருக்கு மரியாதை செலுத்துவதற்கு முக்கியத்துவம் இன்னும் கொடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் முகவாய்க்கட்டை அடியில் கரம் கவிந்து தலை வணங்கி ஆசிரியர்களுக்கு வணக்கம் தெரிவிப்பது பார்ப்பதற்கு இன்பமான காட்சியாக இருக்கிறது.
கருமஞ்சள் நிற உடையணிந்து துறவிகள் அதிகாலை யாசித்து சுற்றி வருவது பாங்காங்கில் வழக்கமாக காணப்படும் காட்சியாகும். அநேக இளைஞர்கள் இன்னும் சம்பிரதாயத்துக்கு மதிப்புக் கொடுத்து துறவி நிலையை குறுகிய காலப் பகுதிக்காவது மேற்கொள்கின்றனர். இவர்கள் வேலை செய்யுமிடத்திலிருந்து முழு ஊதியத்தோடு விடுப்பு எடுத்து கொண்டுவந்து இவ்விதமாகச் செய்கின்றன.
தாய்லாந்திலுள்ள சாலைகள் அனைத்தும் தலை நகரோடு இணைந்து, பாங்காக் போஸ்ட் அழைக்கின்ற விதமாகவே “ஆசியாவில்—ஒருவேளை உலகிலேயே மிக அதிகமான போக்குவரத்து நெருக்கடியை” உண்டுபண்ணுகிறது. இருக்கின்ற கால்வாய்கள் மூடப்பட்டு இந்தச் சாலைகள் பல அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவுகளாக, சாக்கடை நீர் பிரச்னைகளும், கழிநீர் தேக்கமும், விசேஷமாக ஆண்டுதோறும் பருவக்காற்று சமயத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கும் இருக்கின்றன.
பாங்காக் ஒவ்வொரு ஆண்டும் நான்கு சென்டிமீட்டர் விகிதத்தில் அமிழ்ந்துக் கொண்டு வருவது பிரச்சினையை தீவிரமாக்கிவிட்டிருக்கிறது! இதன் காரணமாக கடந்த காலமும் தற்காலமும் இணைந்த இத்தனைக் கவர்ச்சிவாய்ந்த கதம்பமான “கிழக்கத்திய வெனீஸ்” விரைவில் “கிழக்கத்திய அட்லான்டிஸ்” ஆக மாறிவிடுமோ? (g88 1/8)
[பக்கம் 18-ன் பெட்டி/படங்கள்]
பாங்காக்கின் மிதக்கும் பொதுச்சந்தை
நீளமான முகப்புள்ள ஒடுக்கமான படகில் உட்கார்ந்துகொண்டு சந்தைக்குச் செல்வதையும், அங்கு போய்சேருகையில் அதே போன்ற வேறு படகுகளிலிருந்து பழங்களையும் காய்கறிகளையும் வாங்கி வருவதையும் கற்பனைச் செய்துப் பாருங்கள். வழக்கத்துக்கு மாறாக இருக்கிறதா? விநோதமான வனப்புள்ள பாங்காங்கில் வாழ்ந்து அதன் மிதக்கும் பொது சந்தைக்கு வழக்கமாகச் சென்று வந்தால் அவ்விதமாக இராது.
உண்மைதான், மக்கள் தொகை பெருகி வரும் தலைநகரம் நவீன பாணியில் சந்தை இடங்களைக் கொண்டிருந்த போதிலும் பாங்காக்கின் கால்வாய்களின் மீது அமையப்பெற்றதும் இந்தத் தலைநகரை நீர்வளமிக்க பின்னல் அமைப்போடு இணைக்கும் சந்தையைப் போல் அதிக கவர்ச்சியானதும் வேறு எதுவுமில்லை.
மிதக்கும் படகுகளில் ஏற்படுத்தப்பட்ட சந்தைகளில், தங்கள் தலைகளில் அகன்ற தட்டையான விளிம்புள்ள விளக்குத் திரைப்போன்ற தொப்பிகளை அணிந்த வியாபாரிகள் கூவிக்கொண்டு, வாங்குவதற்கு ஆவலாயுள்ள வாடிக்கையாளர்களிடம் தங்கள் சரக்குகளை விற்பனைச் செய்து திரிகிறார்கள். ஒரு படகில் வளமை ததும்பிய வெப்பமண்டலப் பழங்களும் மற்றொன்றில் ஏராளமான காய்கறிகளும் அடுத்ததில் சமுத்திரத்தில் கிடைக்கும் உணவு பொருட்களும் ஏற்பட்டிருக்கின்றன.
இப்படியாக பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று உங்களுக்கு பசியோ தாகமோ ஏற்பட்டால் கவலைப்படாதீர்கள். வெறுமெனெ துடிப்பினால் படகை ஓட்டிச் செல்லுங்கள். அங்கே தலைமை சமையற்காரி நமக்கு ஆசையூட்டும், காரசாரமான நறுமணத்தை வெளியேற்றும் ஆவி பரக்கும் ஒரு அடுப்பின் பக்கத்தில் நிற்கிறாள். நறுஞ்சுவை மிக்க சில உணவு துணிக்கைகளை அவள் சமைத்துக் கொண்டிருக்கிறாள். எதையாவது ஒன்றை சாப்பிட்டுப் பாருங்கள்! அல்லது குளிர்ச்சியான பழரச பானங்கள் விற்கப்படும் படகுக்கு அருகே செல்லுங்கள். நீங்கள் அசைத்துச் செல்லும் படகு போக்குவரத்து நெருக்கடியைவிட்டு மெதுவாக புறப்பட்டு வருகையில் அவை உங்கள் தாகத்தை தணித்துவிடும்.
[படத்திற்கான நன்றி]
Tourism Authority of Thailand
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
Photos: Tourism Authority of Thailand