விளம்பரம் எந்தளவுக்கு அவசியம்?
இந்தியாவின் நீலநிற மயில் தன் வண்ணமிகு மகிமை ஜொலிக்க தோகை விரித்து நிற்கிறது. தன் உடலைவிட ஐந்து மடங்கு நீளமுள்ள சிறகுகளில் கண்களாம் சித்திரங்கள் சூரிய ஒளியில் மின்னுகிறது. அவன் தன் எதிர்கால துணையினிடம் மிடுக்கு நடைபோட்டுச் செல்லும் கம்பீரக் காட்சி கண்களுக்கு ஒரு விருந்து. “உலகிலேயே மிகுந்த மாட்சிமை பொருந்திய விளம்பரம்,” என்று விவரிக்கப்பட்டிருக்கும் காரியத்தை அவள் எவ்விதம் மறுத்திட முடியும்? விளம்பரப்படுத்துதல் உலகில் ஓர் இயல்பான அம்சம். இத்தொடர்க் கட்டுரைகள் எமது விழித்தெழு! நிருபரின் கண்ணோட்டத்தில் அதன் உள்நோக்கத்தையும் பாதிப்புகளையும் ஆராய்கிறது.
விளம்பரப்படுத்துதல் அடிப்படையில் எதைக் குறிக்கிறது? அது ஒரு காரியத்தைத் தெரியப்படுத்தும் செயலாகும். இயல்பாகவே உயிர்வாழ்வு காக்கப்படுவதற்கும் அதன் பெருக்கத்திற்கும் அது பெரும்பாலும் அவசியமாக இருக்கிறது.
உதாரணமாக, ஊளையிடும் நரிகள் உணவு தேடும் மற்ற விலங்குகளுடன் அனாவசியமாகப் போராடுவதைத் தவிர்ப்பதற்குத் தாங்கள் எங்கு இருக்கின்றன என்பதைத் தெரியப்படுத்துகின்றன. பல மைல்களுக்கப்பாலிருந்து தான் துணைத் தேடுவதாக விளம்பரம் செய்யும் ஓர் ஆண் அந்துப்பூச்சி வெளிவிடும் ஒருவித இரசாயன வஸ்துவின் ஒருசில அணுதிரண்மங்களை, அதே இனத்துப் பெண் அந்துப் பூச்சியால் கணித்திட முடிகிறது. மாம்சம் உண்ணும் விலங்கினங்கள் பெரிய சிவந்த விட்டில் பூச்சிகளைத் விவேகமாக தவிர்க்கின்றன, எப்படியெனில், இவற்றின் மீதுள்ள மஞ்சள் கருப்புக் கோடுகள் மூலம் இவை சுவையற்றவை மட்டுமின்றி நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பதையும் தெரியப்படுத்துகின்றன.
மனிதர்களாகிய நம்மைப் பற்றியதென்ன? நாம் ஒரு படி அதிகமாகச் சென்று விளம்பரக் கலையை வியாபாரமாக்கிவிட்டிருக்கிறோம். ஒரு சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
வர்த்தக விளம்பரங்கள்
தீப்ஸில் கண்டெடுக்கப்பட்ட எகிப்திய பப்பைரஸ் அல்லது நாணற்புல் தாள் அநேகமாய் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான வர்த்தக விளம்பரமாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்த விளம்பரம் ஓடிப்போன ஓர் அடிமை திரும்பிவந்தால் அவனுக்கு வெகுமானம் உண்டு என்று குறிப்பிட்டது.
பூர்வ கிரேக்கு பட்டணத்தின் பொது அறிவிப்பாளர்கள் பிற்காலத்தில் ஐரோப்பிய பட்டண அறிவிப்பாளர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டனர்; இவர்கள் உண்மையில் ஒவ்வொரு இடமாகச் செல்லும் விளம்பர மனிதர்களாகத் தங்களுடைய அறிவிப்புகளுக்குக் கவனத்தைத் திருப்புகிறவர்களாக இருந்தனர்.
இடைக்கால இங்கிலாந்தில் கடன்தொகைக் கொடுத்து உதவி செய்யும் இத்தாலிய மெடிசி குடுப்பத்தினர் அணிந்த உடையில் தொங்கிக்கொண்டிருந்த மூன்று பொற்பந்துகள் கடன் வழங்குபவர்களை விளம்பரப்படுத்தின. இன்றுங்கூட ஓர் அடகு கடையை அடையாளப்படுத்த அதே சின்னம் பயன்படுத்தப்படுகிறது.
250 ஆண்டுகளுக்கு முன்னால் லண்டனைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஜான்சன் பின்வருமாறு குறைகூறினார்: “விளம்பரங்கள் இன்று அவ்வளவுக்கு அதிகமாகிவிட்டதால், அவை கவனமாக வாசிக்கப்படுவதில்லை. . . . விளம்பரம் இப்பொழுது பூரணமடையும் நிலைக்கு அருகாமையில் இருப்பதால், அதை முன்னேற்றுவிப்பதற்கு ஆலோசனை கொடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை.” ஆனால் அதுமுதல் காரியங்கள் எவ்வளவாய் மாறிவிட்டது! கடந்த 50 ஆண்டுகளில் இந்த வாணிகம் ஒரு தொழில்துறையாக விருத்தியடைந்துவிட்டது.
விளம்பரம் இப்பொழுது ஒரு பெரிய வியாபாரமாகிவிட்டது. வர்த்தகம் சார்ந்த தினசரிகள், விளம்பரப்பலகைகள், பத்திரிகைகளின் பளபளப்பான பக்கங்கள், செவ்வொளி விளக்குகள், வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்—இவை அனைத்துமே அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நம்மை இடைவிடாமல் ஏவுகின்றன, சில சமயங்களில் பெருமுழக்கத்துடனும், சிலசமயங்களில் நம்பமுடியாதளவுக்குப் புத்திசாலித்தனமாகத் தந்திரமாயும் ஏவுகின்றன.
வானில் இரைச்சலுடன் பறக்கும் நவீன விண்கலங்கள் வானில் மிதந்திடும் விளம்பரங்களிடமாக நம் கவனத்தைத் திருப்புகின்றன. சிறிய விமானங்கள் சுலோகங்களை வானில் விரித்திடுகின்றன. அவற்றின் வகைகளுக்கு முடிவில்லை! ஆனால் அது உண்மையிலேயே அவசியந்தானா?
விளம்பரம் எவ்விதத்தில் செயல்படுகிறது? அது குறைவாக இருந்தால், நுகர்வோராகிய நமக்கு நன்மையாக இருக்குமா அல்லது தீமையாக இருக்குமா? அது நம்முடைய வாழ்க்கையில் என்ன பாகத்தை வகிக்கக்கூடும்? (g88 2⁄8)