திக்குத் தெரியாத விளம்பர அலைகளில்
“அப்பா, சந்திரன் எதை விளம்பரப்படுத்துகிறது?” இப்படி ஒரு விசித்திரமான கேள்வியை ஒரு சிறுமி கேட்பதாக 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதையில் கார்ல் சேன்ட்பர்க் என்பவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எதிர்காலத்தில் இந்தக் கேள்வி ஒன்றும் அவ்வளவு விசித்திரமாக இருக்காது. லண்டனில் உள்ள இரண்டு விளம்பர நிபுணர்கள், பிரதிபலிக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி சந்திரனின் மீது விளம்பரங்களைக் காட்ட திட்டமிட்டிருக்கின்றனர் என்பதாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது.
சந்திரனை விளம்பரப் பலகையாக உபயோகிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அதில், உலகெங்குமுள்ள மக்கள் ஒரு வியாபாரப் பொருளின் விளம்பரத்தைக் காண்பதாக கற்பனை செய்து பாருங்கள். அது ரேடியோ விளம்பரமல்ல, ஆஃப் செய்துவிடுவதற்கு; டெலிபோன் விளம்பரமுமல்ல, கட் செய்துவிடுவதற்கு; தபால் விளம்பரமுமல்ல, குப்பையில் எறிந்துவிடுவதற்கு; ஏன், டிவி விளம்பரமும்கூட அல்ல, வால்யூமைக் குறைத்துவிடுவதற்கு. இந்த ஐடியாவில் சந்தோஷப்பட்டுத் துள்ளி குதிக்க அப்படியென்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கோ இது ஒரு கனவே நனவாகும் விஷயம்.
விளம்பர அலை இன்னும் சந்திரனை சென்று எட்டவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் பூமியை மூழ்கடித்து விட்டதென்னவோ உண்மைதான். அமெரிக்காவில் உள்ள பத்திரிகைகளும் செய்தித்தாள்களும் 60 சதவீத இடத்தை விளம்பரத்திற்காக ஒதுக்கிவிடுகின்றன. த நியூ யார்க் டைம்ஸ்-ன் ஞாயிறு வெளியீடு மட்டும் 350 பக்கங்களை விளம்பரத்திற்காக ஒதுக்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! சில வானொலி நிலையங்கள் ஒரு மணிநேரத்திற்கு 40 நிமிடங்களை விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கி வைக்கின்றன.
அடுத்ததாக டெலிவிஷனுக்கு வருவோம். ஒரு தகவலின்படி அமெரிக்க இளைஞர்கள் டிவியில் ஒவ்வொரு வாரமும் மூன்று மணிநேரம் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது 3,60,000 டிவி விளம்பரங்களை பார்த்திருப்பார்கள். ஏர்போர்ட்களிலும், ஆஸ்பத்திரி வெயிட்டிங் ரூம்களிலும், பள்ளிகளிலும் விளம்பரங்களை டெலிவிஷன் அள்ளி வீசுகின்றது.
இப்போது நடைபெறும் பெரிய விளையாட்டு போட்டிகளெல்லாம் பெரிய விளம்பர நிகழ்ச்சிகளாகவே ஆகிவிட்டன. கார் ரேஸில் உபயோகிக்கப்படும் கார்களெல்லாம் வேகமாக ஓடும் விளம்பரப் பலகைகளாகிவிட்டன. சில விளையாட்டு வீரர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதிப்பதற்கு முக்கிய காரணம் விளம்பரதாரர்களே. ஒரு தலைசிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் அவ்விளையாட்டின் மூலம் சம்பாதித்ததென்னவோ 3.9 மில்லியன் டாலர். ஆனால், விளம்பரதாரர்கள் அவருக்கு அதைப்போல ஒன்பது மடங்கு பணத்தை தங்களது பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கென வாரி வழங்கினர்.
விளம்பரங்களிடமிருந்து நாம் எங்குமே தப்பி ஓட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. அவற்றை நாம், சுவர்கள், பஸ்கள், லாரிகள் போன்றவற்றில் பார்க்கலாம். டாக்ஸிகளின் உட்புறங்களிலும், சுரங்க ரயில் நிலையங்களிலும், ஏன் பொதுக்கழிப்பிட கதவுகளிலும்கூட அவற்றைக் காணலாம். விளம்பர இரைச்சல்களை சூப்பர் மார்க்கெட்களில், கடைகளில், லிஃப்ட்களில், இவ்வளவு ஏன் போனில்கூட கேட்கலாம். சில நாடுகளில் தபால் மூலம் மிக அதிகமான விளம்பரங்கள் வருவதால் சிலர் தபால் வந்தவுடன் முதல் வேலையாக வெட்டித் தபால்களை தூக்கி எறிய குப்பைத்தொட்டியையே நாடுகிறார்கள்.
இன்டர்நேஷனல் விளம்பரம் செய்யும் மக்கன் எரிக்கஸன் என்ற நிறுவனத்தின் இன்சைடர்ஸ் ரிப்போர்ட்டின்படி 1990-ஆம் ஆண்டில் மட்டும் விளம்பரத்திற்காக உலகம் முழுவதும் செலவிடப்பட்ட தொகையின் மதிப்பீடு 275.5 பில்லியன் டாலர். 1997-ஆம் ஆண்டில், அந்தத் தொகை 411.6 பில்லியன் டாலராக உயர்ந்தது; ஆனால் 1998-ஆம் வருடத்திலோ 434.4 பில்லியன் டாலராக எம்பி குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய முதலீடுதான்!
இவற்றின் விளைவுதான் என்ன? ஒரு ஆராய்ச்சியாளர் இவ்விதம் குறிப்பிடுகிறார்: “கலாச்சாரத்தோடு ஒன்றிப்போவதற்குக் காரணமாக இருக்கும் பெரும் சக்திகளில் விளம்பரமும் ஒன்று. . . . விளம்பரப் பொருட்களைவிட விளம்பரங்கள் அதிகம் விற்பனையாகின்றன. அவை, இமேஜ், மதிப்பு, லட்சியம், நாம் யாராக இருக்கிறோம், ஆனால் யாரைப்போல் இருக்க வேண்டும் போன்ற பலவித கருத்துக்களை விற்கின்றன . . . அவை நம் மனப்பான்மைகளை வடிவமைக்கின்றன, நம் மனப்பான்மைகள் நம் குணங்களை வடிவமைத்து விடுகின்றன.”
நீங்கள் விளம்பர அலைகளிலிருந்து தப்பி ஓடவே முடியாது என்பதால் அவை எவ்விதம் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றன என்பதையும் எவ்விதம் செல்வாக்கு செலுத்தக்கூடும் என்பதையும் தெரிந்து கொள்ள முயலுங்களேன்.