நீராவி சகாப்தம் தொடர்ந்து நீடித்திருக்கிறது
கூ–க்! இங்கிலாந்திலுள்ள சஸெக்ஸ் கிராமப்புறத்தின் அமைதியை ஒரு விசில் சத்தம் கலைக்கிறது. உஷ்–உஷ்! சுக்–சுக்–சுக்! பின்னர் இராட்சத இயந்திரம் ஒன்று நீராவி மேகத்தில் குளித்துவிட்டு அருகிலுள்ள ஒரு என்ஜின் பணிமனையிலிருந்து வெளிப்பட்டு வருகிறது.
இல்லை, நான் கனவு கண்டுகொண்டில்லை. இதுவே 1980-கள். நான் ஷெஃபீல்ட்டு பார்க்கிலிருந்து ஹார்ஸ்டெட் கீனெஸுக்கு, வடக்கே நான்கு மைல்கள் தொலைவுக்குப் பிரயாணப்பட இருக்கிறேன். சக்கரங்களுள்ள ஒரு நீராவி இயந்திரம் நான் பயணம் செய்ய இருக்கும் ரயில் வண்டிக்கு சக்தியை அளிக்க இருக்கிறது!
நீராவியின் வசியப்படுத்தும் தன்மை
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக நீராவி இயந்திரங்கள் அதன் உச்சக் கட்டத்திலிருந்தன. அப்போது முதற்கொண்டு டீசலும் மின் சக்தியுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. என்றபோதிலும், இன்றும் நீராவி ரயில் வண்டிகள் சாதாரண மக்களை வசியப்படுத்துவதாக இருக்கிறது. இன்பத்துக்காக இருப்புப் பாதைப் பயணம் (Railways for Pleasure) என்ற புத்தகத்தின்படி, ரயில் பயண பிரியர்கள் உலகின் வேறு எந்த தேசத்திலும் இருப்பதைவிட பிரிட்டனிலேயே அதிகமான சதவிகிதத்தில் உள்ளனர். “ரயில் வண்டிகளில், குறிப்பாக நீராவி ரயிலில் வெறுமென தற்செயலான அக்கறையைக் காட்டிலும் அதிகத்தைக் கொண்டிருப்பவர்கள்” 40 இலட்சம் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் என்பதாக மதிப்பிடப்படுகிறது. ஏன்?
கார்ன்வாலைச் சேர்ந்த ரிச்சர்ட் டிரவிதிக் (1771–1833) என்பவர் சரக்கு தொடர் வண்டிகளை இழுக்க நீராவி சக்தியைப் பயன்படுத்த ஆரம்பித்தது முதல் நீராவி இழுவைப் பிரியர்கள், நீராவி இயந்திரத்தை “இதுவரை உருவாக்கப்படாத மிகப் புதுமையும் அழகியதுமான இயந்திரங்களில் ஒன்று,” “மனித படைப்புகளில் மிகச் சிறப்பான ஒன்று” என்பதாக கருதி வந்திருக்கிறார்கள். “இதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள் மற்றும் பாமர மக்கள் ஆகிய இரு சாராரையுமே ஒன்று போல் கிளர்ச்சியடையச் செய்கிறது.” பிரிட்டனில் ஜார்ஜ் ஸ்டீஃபன்சனின் நீராவி இயந்திரத்தின் உதவியோடு, ஸ்டக்டனிலிருந்து டார்லிங்டனுக்கு ரயில் பிரயாணம் 1825-ல் திறந்து வைக்கப்பட்ட ஆரம்ப காலம் முதல் “பிரயாண இன்பத்துக்கென்றே” ரயில் பயணப் பிரியர்கள் இதில் பிரயாணம் செய்தார்கள். மற்றவர்களைப் பொறுத்தவரையில் பழமையாகிவிட்ட ஒரு போக்குவரத்து சாதனமாக இருக்கும் இதில் இத்தனை மகிழ்ச்சியைத் தூண்டுவது என்ன?
நீராவி இயந்திர ரயில்களின் நாட்களை நினைவுக்கூரும் வயதானவர்களுக்கு பழங்காலத்தில் ஒரு நாட்டம் இதற்கு காரணமாக இருக்கிறது. நீராவி இயந்திர ரயில் பிரயாணத்தை அனுபவித்திராத இளைஞர்களுக்கு கூச்சலிடும் அந்த மாபெரும் இயந்திரங்களுக்குப் பின்னால் சவாரி செய்வது புதுமையான அனுபவமாக இருக்கிறது. நீராவியின் இன்னியம் (Symphony in Steam) என்ற புத்தகத்தின் முகவுரையில், “நம் அனைவரிலுமுள்ள மென்மையான உணர்ச்சியே” இதற்குக் காரணம் என்கிறார் O.S. நாக் என்பவர். ஒரு சராசரி ரயில் பயணப் பிரியரை “மாற்றமுடியாத உள்ளார்ந்த காதல் உணர்ச்சி மிகுந்தவர்” என்பதாக ரயில்வே உலகம் (Railway World) பத்திரிகை ஒப்புக்கொள்கிறது. ஆனால் கவர்ச்சி இருப்பது எங்கே? “நீராவி இயந்திரத்தின் சக்தியையும் பலத்தையும் உங்களால் காணவும் உணரவும் முடிகிறது,” என்பதாக ஒரு நீராவி ரயில் பயண பிரியர் விளக்கினார். “அது அதிகமாக உயிருள்ள ஒரு பொருளைப் போலத் தெரிகிறது.” மற்றொருவர்: “என்னைப் பொறுத்தவரையில் அதன் வாசனையே” என்கிறார்.
பாதுகாத்து வைக்கப்பட்ட நீராவி
ஆகஸ்ட் 1968-ல் பிரிட்டனின் தேசீய ரயில்வே அமைப்பில் நீராவி என்ஜின்கள் மறைந்தன. வெப்பத்தின் ஆற்றல் 6 சதவிகிதத்தையும் விஞ்சிவிடுவதால் நீராவி இயந்திரங்கள் அதிக திறம்பட்ட இழுவை யூனிட்டுகளுக்கு வழியை திறந்து வைத்தன. பிரபலமான நீராவி ரயில் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிமனைகள் வழக்கற்றுப் போயின. நூற்றுக்கணக்கான நீராவி இயந்திரங்கள் ஓட்டை உடைசல்களாக விற்கப்பட்டன. நீராவி சகாப்தம் மறைந்துவிடுவதற்கு அருகில் வந்தது. என்றாலும் இருப்புப் பாதை திட்ட அமைப்பாளர்கள் நீராவி ரயில் பயணப் பிரியர்களின் பெரும் ஆர்வத்தை எண்ணிப்பார்க்கவில்லை. எழுத்தாளர் பிரயன் ஹேலிங்ஸ்உவர்த்தின்படி, “அவர்கள் வெகுவாக நேசித்து வந்த ரயில்கள் மறைந்த போது ஏற்பட்ட இழப்பு, பழங்காலத்துச் சூழ்நிலையிலிருந்த எதையாவது பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இவர்களில் தோற்றுவித்தது.” இதை அவர்கள் எவ்விதமாகச் செய்யத் துவங்கினார்கள்?
சிலர் பயன்படுத்தப்படாத என்ஜின் பணிமனைகளை விலை கொடுத்து வாங்கினார்கள். வட இங்கிலாந்தில் இவைகளில் ஒன்றான கார்ன்போத்தில் 37 ஏக்கர்கள் நிலப்பரப்பில் ஒரு நீராவி அருங்காட்சியகம் இடம் பெற்றிருக்கிறது. பல்வேறு விதமான நீராவி என்ஜின்கள் ஒரு குறுகிய தொலைவுக்கு தண்டவாளத்தில் ரயில் வண்டிகளை இழுத்துச் சென்று பார்வையாளர்களை மகிழ்விக்கின்றன. ஆனால் தண்டவாளத்தில் வழக்கமாக அவை சென்ற பாதையில் மெய்யாகவே இப்படிப்பட்ட நீராவி என்ஜின் ரயில் பிரயாணத்தை அனுபவிப்பதே பிரிட்டனிலுள்ள ரயில் பாதுகாப்பு சங்கங்கள் பலவற்றின் குறிக்கோளாகும்.
ரயில் பிரயாண பிரியர்களின் கவனம், தி ஸன்டே டெலிகிராப் “நீராவி விசிறிகளுக்கு மெக்கா” என்றழைத்த செளத் வேல்ஸின் குப்பைக் கொட்டும் ஓர் இடத்தினிடமாகத் திரும்பியது. ஆரம்பத்தில் வேண்டாத பொருளாக விற்கப்பட்ட 400 என்ஜின்களில், 1983-க்குள் நான்கில் ஒரு பங்கு பாழாகிவிடாமல் பாதுகாக்கப்படுவதற்காக மீட்கப்பட்டுவிட்டது. நீராவி ரயில்வே (Steam Railway) பத்திரிகை அறிவிப்பதாவது: “பேரி குப்பை மேட்டிலிருந்து நீராவி இயந்திரங்களை மீட்டுக்கொள்ளும் புதுமை சமீப ஆண்டுகளில் குறைந்துவிட்டிருக்கலாம், ஆனால் வேலை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” செப்டம்பர் 1985-க்குள் விற்கப்படாத என்ஜின்கள் வெறும் 30 மட்டுமே என்றும் “ஒன்றைத் தவிர அவை அனைத்தையும் வாங்க எண்ணமுள்ளவர்கள் இருப்பதாகவும்” செய்திகளிலிருந்து தெரிகிறது.
ஒரு நீராவி இயந்திரத்தைப் புதுப்பிப்பது எளிதாகவோ அதற்காகும் செலவு குறைவாகவோ இல்லை. சுமார் 2 1/4 லட்சம் ரூபாய் செலவில் வெகு சிலரால் மட்டுமே சொந்தமாக நீராவி இயந்திரங்களை வாங்க முடியும். அதை புதுப்பிப்பதற்கு இன்னும் 4 1/2 லட்சம் ரூபாய் செலவாகும். நீராவி ரயில் பயணப் பிரியர்கள் குழுக்களாக ஒன்று சேர்ந்து என்ஜின்களை வாங்கி வாரத்தின் இறுதி நாட்களிலும் ஓய்வாக இருக்கும் மற்ற சமயங்களிலும் வேலை செய்து அவைகளை புதுப்பிக்கிறார்கள். 1983-க்குள் அவர்கள் சுமார் ஆயிரம் நீராவி இயந்திரங்களை பாதுகாத்துவிட்டிருந்தார்கள். “பாதுகாக்கப்பட்ட நீராவி”யை செயல்படும் நீராவியாக மாற்றும் இலக்கோடு பிரிட்டனிலுள்ள நூறு ரயில்வே பாதுகாப்பு சங்கங்கள் இப்பொழுது சொந்தமாக 229 மைல்கள் இருப்புப் பாதையை அமைத்திருக்கின்றன. 56 1/2 அங்குல இடைவெளியுள்ள தனியார் இருப்புப் பாதையில் புளூபெல் ரயில்வே ஒரு முன்னோடியாக இருக்கிறது.
புளூபெல் இருப்புப்பாதையில் ஒரு பயணம்
ஷெஃபீல்டு பார்க்கிலிருந்து ஹார்ஸ்டெட் கீனெஸ் வரையாக அதைச் சுற்றிப் பயணம் செய்ய நான் கையில் வைத்திருக்கும் ரயில் சீட்டு ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக செல்லுபடி?இருக்கிறது. ரயில் நிலையத்தில் நின்றுகொண்டு 0415-பழங்கால நீராவி இயந்திர எண் 488, நீராவி மேகம் மூடிக்கொண்டிருக்க என்ஜின் பணிமனையை விட்டு வெளியே வருகையில் கீழே குனிந்து அந்தப் பாதையைப் பார்க்கிறேன். சுற்றிலுமுள்ள எல்லா இடங்களும் விக்டோரியா அரசிக் காலத்தையே நினைவுப்படுத்துகின்றன. ஜேம்ஸ் வாட், ஜார்ஜ் ஸ்டீஃபன்சன் மற்றும் I.K. ஃப்ரூனல் போன்ற அதன் முன்னோடிகளின் கண்ணாடியின் மேல் எழுதப்பட்ட நிறம் மாறிய படங்களைக் கொண்ட ஒரு சிறிய அருங்காட்சியகம் நீராவி சகாப்தத்தின் முழுமலர்ச்சி வேளையை மீண்டும் நினைவுப்படுத்துவதாக இருக்கிறது. பழைய ரயில் சீட்டுகள், சீருடைகள், கால அட்டவணைகள், என்ஜின் விளக்குகள், கார்ட் கொடிகள் ஆகிய அனைத்துமே அங்கு இருக்கின்றன.
இதற்குள் எண் 488 அதன் பெட்டிகளுக்கு இணைக்கப்பட்டு அவற்றை இழுத்துச்செல்கிறது. இருப்புப் பாதை கைக்காட்டி மரத்தின் கை இறங்குகிறது. கார்ட் தன் விசிலை ஊதி பச்சைக் கொடியை ஆட்டுகிறார். முன்னாலிருந்து கூ-க்! என்ற என்ஜினின் உற்சாகமான பதில் வருகிறது. மென்மையாக வேகத்தை அதிகரிக்கும் நமது ரயில் வண்டி முன்னால் செல்கிறது. முதலில் உணரமுடியாத வகையிலும், பின்னர் ஓசையொழுக்கோடும், நீராவி ரயில் பயணிகளுக்கு பழக்கமாயிருக்கும் மென்மையான அலைபாய்வான இயக்கத்தை உணரமுடிகிறது. தண்டவாளத்தின் மூட்டிணைப்புகளைக் கடந்து போகையில் டடக்-டடக் சப்தம் அதிகமாகிறது. படிப்படியான ஏற்றத்தின் மேலே என்ஜின் குப் குப் என்று புகைவிட்டுக் கொண்டே போகிறது.
ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, நமது ரயில் வண்டி தளிர்ப்பு பருவத்தில் கிராமப்புற மார்க்கமாய்ச் சென்று தானிய வயல்களினூடே இழுத்துக் கொண்டுப் போகையில் செங்குத்தான இறக்கத்தில் வேகத்தைக் குறைத்துக் கொள்கிறது. தொடர்ந்து ஒரு செங்கல் பாலத்தின் கீழும் சாலைக்கு மேலும் செல்கிறது. ஒரு வளைவைச் சுற்றி வருகையில் அதன் விசில் சத்தம் எச்சரிக்கைத் தர அடர்த்தியான காடுகளுக்குள் நுழைகிறது. நீராவியின் புகை அது செல்கின்ற திசையை காண்பிக்கிறது. நாம் இப்பொழுது அழகான நீலவண்ண புளூபெல் பூக்களும் கிண்ண வடிவில் பொன்னிற பூக்களும் பூத்துக் குலுங்கும் ஒரு காட்டின் ஓரமாய்ச் சென்று கொண்டிருக்கிறோம். புளூபெல் இருப்புப் பாதை என்ற பெயர் வர இதுவே காரணமாகும். அடுத்து ஹார்ஸ்டெட் கீனெஸ் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடைசியான வரப்பில் என்ஜின் இழுத்துக்கொண்டுச் செல்கையில் முன்னும் பின்னுமாக அசைகிறோம். மற்றொரு இருப்புப் பாதை கைகாட்டி சிக்னலைக் கடந்து நாம் இரண்டு முக்கிய ப்ளாட்பாரம்களுக்கிடையே ஒய்யாரமாக நுழைகிறோம். புறப்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பின் இங்கு நாம் வந்து சேருகிறோம்.
புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலைய கட்டிடங்களைச் சுற்றிப் பார்வையிடவும் “சிற்றுண்டிச்சாலையில்” கொஞ்ச நேரம் நிற்கவும் பின்னர் நமது மறுபயணத்தைத் துவக்க ரயில் வண்டியில் ஏறவும் நேரம் இருக்கிறது. என்ஜின் வெற்றிகரமாக தடம் திரும்பி வர, இப்பொழுது மீண்டும் ஷெஃபீல்ட் பார்க்குக்கு வேகமாகத் திரும்ப ரயில் வண்டியின் மறுபுறம் இப்பொழுது இணைக்கப்படுகிறது.
நீராவி சக்தியில் ஓடும் ரயிலில் முதல் முறையாக பிரயாணம் செய்யக் காத்திருக்கும் பள்ளிச் சிறுவர்களின் கூட்டம் அதிலிருந்து இறங்கும் பயணிகளைச் சுற்றிக் கொள்கிறது. நீராவி சகாப்தம் இன்னும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கிருக்கும் அத்தாட்சியை புகைப்படம் பிடிப்பதில் கருத்தாயிருக்கும் பெரியவர்கள் நிழற்படக் கருவிகளையும் வீடியோ காமிராக்களையும் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
முக்கிய இருப்புப் பாதையில் மீண்டும் நீராவியா?
தனியார் வெற்றிகரமாக இந்த இருப்புப் பாதைகளை நடத்திவருவதைப் பார்த்து, அரசு நடத்தும் ரயில் அமைப்புகள் இதைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டிருக்கின்றன. வழக்கமான முக்கிய இருப்புப் பாதை தண்டவாளங்களில் விசேஷித்த சுற்றுலா ரயில் வண்டிகளுக்கு முன்பாக வர்ணமிக்க தனித் தோற்றத்துடன் பழங்காலத்து நீராவி இயந்திரங்கள் இப்பொழுது அணிவகுத்து வருகின்றன. உதாரணமாக, 1938-ல் மணிக்கு 126 மைல்கள் வேகத்தில் ஓடி சாதனைப்புரிந்த, கார்டர்-புளூ மல்லார்ட் அண்மையில் யார்க்கிலுள்ள தேசீய ரயில்வே அருங்காட்சியகத்திலிருந்து 1963 முதற்கொண்டு முதல் முறையாக நீராவி சக்தியில் ரயில் வண்டியை இழுத்துக்கொண்டு வந்தது.
முக்கிய இருப்புப் பாதையில் நீராவி பாதுகாக்கப்பட்டிருப்பது, நீராவி ரயில் பயணப் பிரியர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஒரு இடத்தை வென்றுவிட்டிருக்கிறது. வாரத்தின் இறுதி நாட்களில், நீராவி எக்ஸ்பிரஸின் கிளர்ச்சியூட்டும் முழக்கத்துக்காக நூற்றுக் கணக்கில் ஆட்கள் ரயில் நிலைய ப்ளாட்பாரங்களில் வரிசையில் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். நீராவி சகாப்தம் தொடர்ந்து நீடித்திருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக ரயில் வண்டிகள் பெருமுழக்கம் செய்துகொண்டு வருகையில் கழுத்துக்கள் நீளுகின்றன, திரும்புகின்றன.—பிரிட்டன் விழித்தெழு! நிருபர். (g88 3⁄8)
[பக்கம் 17-ன் படம்]
மேலே: நீராவி இழுவை கொண்ட முதல் பொது ரயில்வேக்காக 1825-ல் ஜார்ஜ் ஸ்டீபன்சன் அண்டு கம்பெனியால் உருவாக்கப்பட்ட தொடர்வண்டி இயக்குப் பொறியின் நேர் பகர்ப்பு