அந்தப் புதிர் ஆழமாகிறது
நாம் மரண படுக்கையிலிருப்பவரைச் சுற்றி நிற்கும்போது மெய்ம்மைக்கு அண்மையில் இருக்கிறோம். என்றபோதிலும், மரணம் சிந்திப்பதற்கு ஓர் அச்சுறுத்தும், பயங்கரமான அனுபவமாக இருக்கிறது. உயிரோடிருப்பவர்களை மரணம் கிட்டும் ஒவ்வொரு சமயமும் அது ஒரே அனுமானமும் புதிருமாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்க்கை குறுகியது. “மரணம் தன் நாளைக் கொண்டிருக்கும்,” என்றார் ஷேக்ஸ்பியர்.
எனவே சரீர மரணம் என்பது என்ன? அதுதான் நாம் நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டிய முதல் கேள்வி.
ஏற்றுக்கொள்ளப்படாத ஓர் உண்மை
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறபடி, மரணம் வெறுமனே “உயிர் இல்லாமை” என்று விளக்கப்படுகிறது. மீன், மிருகங்கள், பறவைகள் இயல்பாகவே மரிக்கின்றன என்பதை மனிதன் ஏற்றுக்கொள்ளக்கூடும் என்றாலும், பைபிள் குறிப்பிடுகிறபடி, மரணம் ஒரு சத்துருவாக வருகிறது என்பதை அவனுடைய சொந்த அறிவுத்திறன் அவனுக்குத் தெரிவிக்கிறது.a
பூமியிலுள்ள எல்லா விலங்கினங்களிலும், மனிதன் மட்டுமே தன்னுடைய சொந்த மரணத்தைக் குறித்து சிந்திக்கும் நிலையில் இருக்கிறான். மரித்தோரை அடக்கம் செய்வதிலும் அவன் தனித்து விளங்குகிறான். என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறபடி, மரித்தோரை சம்பிரதாய சடங்குமுறைப்படி அடக்கம் செய்யும் காரியம் “மரணத்தை மனித வாழ்வின் திட்டவட்டமான முடிவாக ஏற்க முடியாத அல்லது ஏற்க மறுக்கும் ஓர் இயல்பான உள்ளுணர்விலிருந்து தோன்றுகிறது.” மரணம் ஏற்படுத்தும் உடல் சீரழிவுதானே அச்சுறுத்தும் அத்தாட்சியாக இருந்தபோதிலும், அந்த நபரில் ஏதோ ஒன்று மரணத்தின் அனுபவத்தைக் கடந்து பிழைக்கிறது என்ற நம்பிக்கை தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது.”
இதன் விளைவாக, மரணத்தைப் பின்தொடரும் சம்பிரதாய வழக்கங்கள் பெரும்பாலும் பழங்கால பாரம்பரியத்தாலும் புரியா புதிராக இருக்கும் மூடநம்பிக்கைகளாலும் போர்த்தப்படுகின்றன.
சம்பிரதாய பழக்கங்களும் நம்பிக்கைகளும்
உதாரணமாக, பூர்வ காலத்து கல்லறைகள் வெறுமனே எலும்புகளைக் கொண்டவையாயிருக்கவில்லை, ஆனால் அவற்றில் உணவும் பானமும் வைக்கப்பட்டன. இவை மரணத்துக்குப் பின்னர் மரித்தோருக்குத் தேவைப்படும் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்டன. மரணத்தில் பிரிந்திருப்பவரை வழிநடத்துவதற்காக எகிப்திய சவப்பெட்டியில் நில வரைப்படங்களும் கண்களும் வரையப்பட்டிருந்தன. அந்த நபர் பயன்படுத்திய உபகரணங்களும் தனிப்பட்ட விதத்தில் விரும்பிய காரியங்களாகிய நகை போன்றவையும் மரணத்துக்குப் பின்னான ஒரு வாழ்க்கைக்கு அவசியமாயிருக்கும் என்ற எண்ணத்தில் வைக்கப்பட்டிருந்தன.
எலும்புக்கூடுகள் பக்கவாட்டில் படுத்திருக்கும் நிலையில், கருவில் குழந்தை இருக்கும் நிலையில் காணப்பட்டன. இது மறுபிறப்பு நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகிறது என்று சில ஆராய்ச்சி நிபுணர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். மரித்தோர் கீழுலகத்தின் பிரதான நதியாகிய ஸ்டக்ஸ் நதியைக் கடந்து கொண்டுசெல்லப்படவேண்டும் என்று கிரேக்கரும் ரோமரும் நம்பினர். இந்தப் பணி பேயுலகக் கப்பலோட்டியால் மேற்கொள்ளப்பட்டது. மரித்தோரின் வாயில் வைக்கப்பட்ட ஒரு காசு அவனுடைய சேவைக்குக் கூலியாக அமைந்தது. இப்படிச் செய்வது உலக முழுவதும் பல பாகங்களில் இன்று வரை இருந்துவரும் ஒரு பழக்கமாக இருக்கிறது.
“பிரசித்திபெற்றிருக்கும் ஒவ்வொரு மதமும் மரிக்கும் முறை, மரணம் மற்றும் மரணத்துக்குப் பின் ஆகியவை குறித்து தங்கள் நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றன,” என்று மத கல்வி அகராதி கூறுகிறது. உண்மைதான்—ஏன்? உணர்வுள்ளவர்களாக இருப்பதற்கு முடிவு என்பதை சிந்தித்துப் பார்ப்பது அந்தளவுக்கு ஏற்கத்தகுந்ததாயில்லை. “எவருமே தன்னுடைய சொந்த மரணம் குறித்து நம்புவதில்லை,” என்றார் உளநூலர் சிக்மண்டு ஃப்ரூட், நம்முடைய “உணர்வில்லா நிலையிலுள்ள [மனதில்] நாம் எல்லாருமே நம்முடைய சொந்த அழியாமைத் தன்மை குறித்து நிச்சயமாயிருக்கிறோம்.”
அப்படிப்பட்ட எண்ணம்தானே இன்று பிரபலமாயிருக்கும் அநேக நம்பிக்கைகள் உருவாவதற்குக் காரணமாயிருந்திருக்கிறது. அவற்றில் முக்கியமான சில நம்பிக்கைகளைக் கவனியுங்கள்.
உத்தரிக்கும்ஸ்தலமும் நரகமும்
மரித்தோர் உயிருடனிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கேயாவது ஓரிடத்தில் இருக்கவேண்டும்—ஆனால் எங்கே? இதில்தான் பிரச்னை அடங்கியிருக்கிறது, ஏனென்றால் மரிப்பவர்கள் முற்றிலும் கெட்டவர்களாகவும் இல்லை, முற்றிலும் நல்லவர்களாகவும் இல்லை. அடிப்படை நீதிக்குரிய உணர்வுடன் மனிதன், மரணத்தில் பிரிந்தவர்களில் நல்லவர்களைக் கெட்டவர்களிடமிருந்து பிரித்திருக்கிறான்.
யூதரின் என்சைக்ளோபீடியாவில் (The Jewish Encyclopedia) ரபீக்களின் கருத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அது இப்படியாக வாசிக்கிறது: “கடைசி நியாயத்தீர்ப்பு நாளில் ஆத்துமாக்களின் மூன்று பிரிவுகள் இருக்கும்: நீதிமான்கள் உடனடியாக நித்திய ஜீவனுக்கு எழுதப்படுவார்கள்; துன்மார்க்கர் கெஹென்னாவுக்கு; ஆனால் கற்புக்குரிய தன்மைகளிலும் பாவங்களிலும் சரிசமமாக இருப்பவர்கள் கீழே கெஹென்னாவுக்குச் சென்று, அவர்கள் சுத்திகரிக்கப்பட்டவர்களாக உயரும் வரையில் மேலும் கீழுமாக மிதப்பார்கள்.” இந்தக் கடைசி கூற்றில் உத்தரிக்கும் ஸ்தலத்தைப்பற்றிய ஒரு விவரத்தைப் பலர் காணக்கூடும்.
அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், உத்தரிக்கும் ஸ்தலம் என்ற கோட்பாட்டுக்கு அதிகாரப்பூர்வ மதிப்பீட்டைக் கொடுக்கும் வகையில் புதிய கத்தோலிக்க என்சைக்ளோபீடியா (New Catholic Encyclopedia) தெளிவாகக் கூறுகிறது: “கடைசியாக, உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய [ரோமன்] கத்தோலிக்க கோட்பாடு பரிசுத்த வேதவசனங்களின் பேரில் சார்ந்ததாயில்லை, பாரம்பரியத்தில் அடிப்படக் கொண்டதாய் இருக்கிறது.” இது ஆச்சரியப்படுவதற்கு இல்லை, ஏனென்றால் அந்த வார்த்தை பைபிளில் காணப்படவில்லை, மற்றும் அந்தக் கருத்தும் அதில் கற்பிக்கப்படவில்லை. ஆனால் யூதரின் என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறபடி துன்மார்க்கரின் முடிவாகக் கருதப்படும் கெஹென்னாவைப் பற்றியதென்ன?
கெஹென்னா என்ற வார்த்தை கெ ஹின்னோம் (geh hinnomʹ) என்ற எபிரெய வார்த்தையின் ஒரு சொல்லாகும். அது எருசலேமுக்குத் தென்மேற்கிலுள்ள இன்னோம் பள்ளத்தாக்காகும். இது முற்காலங்களில் மோளேக் தெய்வத்துக்குப் பிள்ளைகள் பலியிடப்பட்ட இடமாக இருந்தது. “இந்தக் காரணத்துக்காக அந்தப் பள்ளத்தாக்கு சபிக்கப்பட்டதாக இருந்தது, மற்றும் ‘கெஹென்னா’ அடையாள அர்த்தத்தில் ‘நரகத்துக்கு’ இணையானது,” என்று யூதரின் என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறது.
அநேக மதக் கருத்துகள்படி, “நரகம் என்பது பிசாசுகள் குடிகொண்டிருக்கும் இடம், துன்மார்க்கர் மரணத்துக்குப் பின்பு வாதிக்கப்படும் இடம்,” என்று தி உவர்ல்டு புக் என்சைக்ளோபீடியா கூறுகிறது. இந்தக் கோட்பாடு இன்னும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளாலும் மற்ற மதங்களாலும் விறுவிறுப்பாய்ப் போதிக்கப்பட்டுவருகிறது. இதன் விளைவாக, அநேகர் நரகத்துக்குப் போகும் ஒரு பயத்திலேயே வளர்ந்திருக்கின்றனர்.
“நான் சிறுவனாயிருக்கும் போது, சொல்லர்த்தமான ஒரு நரகம் அநேக பக்தர்களால் உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைக் கற்பனைசெய்துபார்க்கும் ஒரு சிறுபிள்ளைக்கு இது ஏற்படுத்தக்கூடிய துன்பங்கள் மிகைப்படுத்தப்படமுடியாதது. அது என்னைக் கடவுளை வெறுக்கச்செய்தது. பின்பு, என்னுடைய வளரும் அறிவுத்திறன் அந்த நம்பிக்கையைப் பொய்யென மறுத்தபோது, அதைக் கற்றுக்கொடுத்த மதத்தையும் வெறுக்கச் செய்தது” என்று 1926-ல் ஆங்கில கதை ஆசிரியர் ஜெரோம் K. ஜெரோம் எழுதினார்.
நரகத்தைக் குறித்து உங்களுடைய கருத்து எதுவாயிருப்பினும், (கூடுதல் தகவலுக்கு இத்துடன் இணைந்த “நரகமும் கெஹென்னாவும்—வித்தியாசம்” என்ற பெட்டியைப் பாருங்கள்) மகிழ்ச்சியான முடிவு மோட்சம் அல்லது நிர்வானா என்பது பலருடைய நம்பிக்கையாக இருக்கிறது.
மோட்சமும் நிர்வானாவும்
“மோட்சம் என்பது கடவுளுடைய பிரசன்னத்திலும், அவருடைய பரிசுத்த தூதருடைய பிரசன்னத்திலும் பரிசுத்தவான்களின் முடிவில்லா மகிழ்ச்சிக்குரிய இடமும் நிலையுமாகும்” என்று கத்தோலிக்க மதம்—ஆங்லிக்கன் சர்ச் அங்கத்தினருக்கு ஒரு போதனா ஏடு (The Catholic Religion—A Manual of Instruction for Members of the Anglican Church) குறிப்பிடுகிறது. அது மேலுமாகக் கூறுகிறது: “நாம் கீழே நேசித்த அனைவருடனும், தேவ தயவில் மரித்தவர்களுடனும் முடிவில்லா ஐக்கியத்தில் மீண்டும் இணைவதையும், பரிபூரண விதத்தில் நல்லவர்களாகவும் என்றும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் இருப்பதை உட்படுத்துகிறது.”
மறுபட்சத்தில் நிர்வானா என்பது “வேதனை மிகுந்த மரணமும் மறுபிறப்பும் என்ற சுழற்சியின் தொடர்” இறுதியில் முடியும்போதுதானே “பரிபூரண அமைதியும் ஆசீர்வாதமுமான” நிலையை அடைந்திடக்கூடும் என்ற புத்த மத நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. மோட்சமோ, முக்தியோ அல்லது நிர்வானா என்ற நிலையோ, இரண்டு வழியிலும் மதம் இந்த வாழ்க்கையின் துன்பங்களுக்கு முடிவையும், அதைத் தொடர்ந்து காவிய உலகில் ஒரு வாழ்க்கைக்கான ஏற்பாட்டையும் அறிமுகப்படுத்துவதாயிருக்கிறது.
முரண்பட்ட இந்தப் போதனைகள், நாம் மரிக்கும்போது என்ன நேரிடுகிறது என்ற நம்முடைய கேள்விக்கு விடை காண உதவுகின்றனவா? அல்லது அந்தப் புரியா புதிர் ஆழமாகச் செல்கிறதா? நாம் தெரிந்துகொள்ளும் நம்பிக்கை உண்மையானது என்பது குறித்து நாம் எவ்விதத்தில் நிச்சயமாயிருக்கலாம்? மதம் நமக்கு உண்மையைப் போதிக்கிறதா அல்லது பொய்யைப் போதிக்கிறதா?
ஆத்துமா என்பது என்ன? என்ற அடிப்படைக் கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடிந்தால் தவிர மரணத்துக்குப் பின்னால் நம்முடைய முடிவு என்ன என்பது புதிராகவே பூட்டப்பட்டிருக்கும். இதைத்தான் நாம் அடுத்து செய்ய வேண்டும். (g88 7⁄8)
[அடிக்குறிப்புகள்]
a பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில் அதிகாரம் 15, வசனம் 26-ஐ பார்க்கவும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
மரித்தோரை உறைநிலையில் வைத்துக் காத்தலும் ஆத்துமா அழியாமையுமா?
மரித்தோரை உறைநிலையில் வைத்துக் காக்கும் முறையில் அந்தச் சவங்கள் மிகத் தாழ்ந்த உறைநிலையில் வைக்கப்படுகிறது. நைட்ரஜன் திரவம் –385°degreeF நிறைந்த ஒரு கொள்கலத்தில் முழு உடலும் வைக்கப்படுகிறது, அல்லது வாடிக்கையாளர்கள் “மூளை சிகிச்சையைத்” தெரிந்துகொள்ளலாம், அதாவது அவர்களுடைய தலை மட்டும் பாதுகாக்கப்படுகிறது. “மத அடிப்படயில் நான் மரணத்துக்குப் பின்னான ஒரு வாழ்க்கையை நம்பவில்லை,” என்கிறார் மரித்தோரை உறைநிலையில் வைத்துக் காக்கும் முறையைச் சிபாரிசு செய்யும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் தலைவர், “ஆனால் நான் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கிறேன், தன்னுணர்வை இடையில் நிறுத்துவது தீயது என்று நான் நினைக்கிறேன்.” இந்த வியாபாரப் பேச்சின் நோக்கம், எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள், அறிவியல், உயிரை மீண்டும் நிலைநிறுத்த முடியும், துண்டிக்கப்பட்டிருக்கும் தலைக்குப் புதிய உடல்களையும் அமைத்திட முடியும் என்பதே. “ஆத்துமா அழியாமை நிலையை அடைவதற்கு” இது ஒரு வழி என்று லண்டனின் “தி சன்டே டைம்ஸ்” அறிக்கை செய்கிறது.
[பக்கம் 7-ன் பெட்டி]
நரகமும் கெஹென்னாவும்—வித்தியாசம்
“எரிநரகம்” என்ற வார்த்தை “கெஹென்னா” என்ற ஆங்கில சொல்லின் சிதைவாகும். கெஹென்னா என்ற பெயர் எருசலேமுக்குப் புறம்பே இருந்த பூர்வீக குப்பைக் களமாகும். நித்திய அழிவைக் குறிப்பதற்கு அடையாளமாக இயேசு இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார். (மத்தேயு 10:28) அப்படியென்றால் (எபிரெயுவில் “ஷியோல்” மற்றும் கிரேக்கில் “ஹேய்டீஸ்” என்ற பதங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகிய) நரகத்தைப் பற்றியதென்ன? அது வாதிக்கும் ஓர் இடமாக இருக்குமாயின், அங்கு செல்வதற்கு யாராகிலும் விரும்புவார்களா? விரும்ப மாட்டார்கள். என்றாலும் கோத்திர பிதாவாகிய யோபு தன்னை அங்கு ஒளித்துவைக்கும்படியாகக் கடவுளிடம் கேட்கிறான். (யோபு 14:13) யோனாவும்கூட பெரிய மீனின் வயிற்றில் இருக்கும்போது பைபிள் கூறும் அந்த நரகத்துக்குச் சென்றான், அங்கே மீட்புக்காகக் கடவுளிடம் ஜெபித்தான். (யோனா 2:1, 2) பைபிள் குறிப்பிடும் நரகம் மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக்குழி, மரித்தவர்கள் அங்கே உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருப்பவர்களாய்க் கடவுளுடைய அன்பான ஞாபகத்தில் இருக்கிறார்கள்.—யோவான் 5:28, 29.
[பக்கம் 5-ன் படம்]
‘மரித்தவரின் ஆத்துமா இப்படியாக வெளியே எட்டிப்பார்க்கக்கூடும்’ என்ற நம்பிக்கையில் ஒரு பூர்வீக எகிப்திய சவப்பெட்டியில் கண்கள் வரையப்பட்டிருந்தன
[படத்திற்கான நன்றி]
Courtesy of the British Museum, London
[பக்கம் 7-ன் படம்]
எருசலேமுக்குத் தென்மேற்கில் இன்றைய நிலையில் இன்னோம் பள்ளத்தாக்கு