நீங்கள் தெரிவு செய்கிறீர்களா—அல்லது மற்றவர்கள் உங்களுக்குத் தெரிவுசெய்ய அனுமதிக்கிறீர்களா?
தனது எட்டாவது வயது வரையாக, பெட்ரோ, மனிதனை சிருஷ்டித்ததும் பூமியை உண்டாக்கியதுமாகக் கருதப்பட்ட மலைவாவை வணங்கினான். தீமையையும் வியாதியையும் கொண்டு வருவதாகச் சொல்லப்பட்ட யோலுஜாவுக்குப் பயந்திருந்தான். பாதாள உலகின் தேவதையாக எண்ணப்பட்ட புலோவியின் கெடுதி விளைவிக்கும் செயல் திட்டங்களிலிருந்து விடுபடவும் நாடினான்.
பெட்ரோ, வெனிஜூவேலாவின் அநேக இந்தியக் கோத்திரங்களில் ஒன்றான குவாஜிரோ கோத்திரத்தான். உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவர் அவனைக் கத்தோலிக்கனாக மாற்ற ஞானஸ்நானம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் அந்த நாள் வரையாக அவன் தன்னுடைய முன்னோரின் பாரம்பரிய மதத்தைப் பின்பற்றினான்.
“யாரும் என்னோடு கலந்தாலோசிக்கவில்லை, எனக்கும் என்னுடைய புதிய மதத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை,” என்று பெட்ரோ விவரித்தான். “ஆனால் என்னுடைய அன்றாட நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தேவைப்படுத்தாத இந்தப் புதிய விசுவாசத்திற்கு ஏற்றவாறு என்னை வைத்துக்கொள்ள கடினமாயிராது என்று அறிந்துகொண்டேன். நான் என்னுடைய புதிய மதத்திற்கு உண்மையுள்ளவனாய் இருந்தேன். டிசம்பர் மாதத்தின் போதெல்லாம் ஜெபக்கூட்டங்களுக்குச் சென்றேன்.”
இரண்டு வித்தியாசமான மதங்களைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும் ஓர் உணர்வுள்ள தெரிந்துகொள்ளுதலை பெட்ரோ எதிலும் செய்யவில்லை. அவனுக்காக மற்றவர்கள் தெரிவு செய்தார்கள். அவனுடைய அனுபவம் அநேக நூற்றாண்டுகளினூடே எண்ணற்ற தடவைகள் திரும்பத் திரும்ப சம்பவித்திருக்கிறது. உண்மையில், இன்றைக்கு உயிரோடிருக்கும் ஐந்நூறுகோடி ஆட்களில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் மதம் சம்பந்தமான காரியத்தில் தாங்களாகவே தெரிவு செய்யவில்லை. அவர்களுடைய மதமானது, அவர்களுடைய தோற்றம், அவர்களுடைய தன்மைகள், அல்லது அவர்கள் வாழும் வீடு இவற்றைப் போன்று இயல்பாகப் பெற்ற ஒரு பரம்பரை சொத்தாக இருக்கிறது.
அவர்கள் தங்கள் சொந்த தெரிவைச் செய்தனர்
ஆனால், நாம் பரம்பரையாகப் பெற்றுக்கொள்வது எப்போதுமே சிறந்ததா? நம்முடைய தோற்றத்தை நம்மால் முடிந்த அளவு மேம்படுத்த முயற்சி செய்யலாம். நம்முடைய பெற்றோர் நமக்கு விட்டுச் சென்ற வீட்டை மேம்படுத்த நாம் கடினமாய் முயற்சி செய்யலாம். விரும்பத்தகாத பரம்பரைத் தன்மைகளையும் கூட மேற்கொள்ள நாம் கடினமாகப் போராடக்கூடும்.
இதன் காரணமாகவே, உலகெங்கும் சிலர் தாங்கள் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து பரம்பரையாகப் பெற்றுக்கொண்ட மதத்தை மறுபடியும் உற்றுப் பார்க்கின்றனர். கேள்விக்கிடமின்றி போற்றிப் பாதுகாக்க வேண்டிய குடும்பப் பாரம்பரியத்துக்கெதிராக ஒரு நம்பிக்கைத் துரோகம் என்று கருதாமல் அவர்களுடைய ஆவிக்குரிய வேட்கை மேம்பட்ட ஒன்றைத் தேடிப்பார்க்க அவர்களைத் தூண்டியிருக்கிறது. ஹிரோகோவின் காரியத்தில் இது உண்மையாயிருந்தது. அவளுடைய தந்தை ஜப்பானின் மியாக்யோ ஆலயத்தில் ஒரு புத்தமதப் புரோகிதர்.
“நான் ஒரு சிறுபிள்ளையாயிருக்கையில் குளிர்காலத்தின் கடுங்குளிருள்ள இரவு வேளைகளில் என்னுடைய கிராமத்தின் பனிபடர்ந்த வீதிகளில் தீபக்கூட்டை ஏந்திக்கொண்டு மேலும் கீழும் நடந்து திரிந்தேன்,” என்று விவரிக்கிறார் ஹிரோகோ. “தவில் வாசித்துக் கொண்டும், ஸ்லாகங்கள் உச்சரித்துக் கொண்டும் என் தந்தையார் முன்னால் நடந்து செல்வார். மிக இளைய பிராயத்திலிருந்தே உடலை வருத்தும் ஈமச் சடங்குகளும், புத்தமத சம்பிரதாயங்களும் என்னுடைய வாழ்க்கையின் ஒரு பாகமாக இருந்தன.”
இருப்பினும் ஹிரோகோவுக்குத் தன்னுடைய பரம்பரை மதத்தைப் பற்றிய மனத்தாங்கல் இருந்தது. “என்னுடைய அநேக கேள்விகளுக்கு ஒரே ஒரு திருப்தியான பதிலும் காணப்படவில்லை. இறந்தபிறகு இறந்தவர்களின் பெயர்கள் மாற்றப்படுவது, ஸ்லாகங்கள் உச்சரிக்கப்படுகையில் கல்லறைகள் உயிருள்ளவையாகக் கருதப்படுவது, விசுவாசியை அற்புதமாய் காக்கவேண்டிய காகித மந்திரங்கள், இன்னும் மற்ற அநேக ஆலய ஆசாரங்கள் உண்மையில் என்னைக் குழப்பின.
“புத்தமதத்தின் மிகவும் அறிவொளியூட்டப்பட்ட மதப்பிரிவைச் சார்ந்திருக்கிறோம் என்று எனக்குச் சொல்லப்பட்டது. இருப்பினும் என்னுடைய எல்லாக் கேள்விகள் இன்னமும் பதிலளிக்கப்படாதிருந்தன. எங்கேயோ, ஏதாகிலும் நிச்சயமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டேன். எனக்குத் தேவையான பதில்களைத் தருகின்ற ஒரு மதத்தைச் சுயாதீனமாய் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.” மனநிறைவடையாதவளாக ஹிரோகோ ஒரு கிழக்கத்திய மதத்திலிருந்து இன்னொரு கிழக்கத்திய மதத்திற்கு அலைந்தாள். திருப்தியடையவில்லை. கடைசியாக, யெகோவாவின் சாட்சிகளின் உதவியால் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த சர்வவல்லமையுள்ள கடவுளைப் பற்றி பைபிளிலிருந்து கற்றறிந்தாள். மேலும் தன்னுடைய பிள்ளைப்பிராய கேள்விகளுக்குப் பதில்களையும் கண்டுபிடித்தாள்.
அவளுடைய காரியத்தில் எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் சொல்லர்த்தமாகவே நிறைவேறின: “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால் என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள், நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—எரேமியா 29:13, 14.
தன்னுடைய பெற்றோருடையதிலிருந்து வேறுபட்டதாயிருப்பினும், தன்னுடைய சொந்த தெரிவைச் செய்வது மதிப்புள்ளது என்று ஹிரோகோ உணர்ந்தாள். “அறிவொளி பெற்றது எனக்குப் பேரின்பத்தை அளிக்கிறது. அநேக ஆண்டுகளாக என்னை வருத்திய தொந்தரவளிக்கும் கேள்விகளும் கவலைகளும் எனக்கு இப்பொழுது இல்லை” என்று அவள் விவரிக்கிறாள். ஆனால், நீங்கள் உங்களுடைய தற்போதைய மதத்தில் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒரு தெரிவைச் செய்வது உங்களுக்கு நன்மையானதாய் இருக்கும்.
ஏன் ஒரு தெரிவைச் செய்ய வேண்டும்
நம்மில் பெரும்பாலோர், அதைப் பற்றிச் சிந்திக்க முற்படுவோமேயானால் மதம் என்பது தற்செயலாக நிகழ அனுமதிக்கப்படமுடியாத மிக முக்கியமான ஒன்று என்று ஒத்துக்கொள்வோம். ஏன், அன்றாட காரியங்களிலேயும்கூட நாம் நம்மால் இயன்ற அளவு நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முயலுகிறோம். யார்தான் வெறுமனே சூழ்நிலைமைகளால் வஞ்சிக்கப்பட விரும்புகிறார்கள்?
உங்களுக்குத் தலைவலி இருந்தால் முத்திரைக் காகிதத்தை முதலில் கவனமாக பார்க்காமல் பலரகங்களைச் சேர்ந்த மருந்துகளின் குவியலில் காணப்படும் ஓரிரண்டு மாத்திரைகளை அவசரமாய் விழுங்குவீர்களா?
நீங்கள் ஒரு புதிய துணியைத் தேர்ந்தெடுக்கையில், அது உங்களுக்குச் சந்தேகமின்றி வெகுவாய்ப் பொருந்தும் என்று கண்மூடித்தனமாக கடையில் உங்கள் கையில் கிடைக்கின்ற முதல் உடையை எடுத்துக்கொள்வீர்களா?
நீங்கள் ஒரு பழைய காரை வாங்கும்போது அதன் இயந்திரம் சரியாக வேலைசெய்கிறதா என்றுகூட பார்க்காமல் ஓட்டிச் செல்வீர்களா?
‘ஓர் அசட்டுத் தைரியம் உள்ளவன்தான் அதைச் செய்வான்?’ என்று நீங்கள் எண்ணலாம். அத்தகைய காரியங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இருப்பினும், நம்மில் பெரும்பாலோருக்கு வாழ்க்கையின் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்றான—எந்த மதத்தை நாம் பின்பற்றவேண்டும் என்பது—நீண்ட காலமாகவே மறக்கப்பட்ட வரலாற்றின் திடீர் திருப்பங்களாலும் பிறந்த இடத்தினாலும் நமக்காக தற்செயலாக தீர்மானிப்பட்டுள்ளது.
உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்வது ஞானமாக இருக்காதா: ‘நான் என்னுடைய மதத்தை எவ்வாறு பெற்றேன்? நான் ஒருபோதும் தட்டிக்கேட்காத, பரம்பரையாக பெற்றுக்கொண்ட ஒன்றா? அல்லது நானாகவே செய்த விவேகமான தெரிவா?’ அத்தகைய கேள்விகளைக் கேட்பதைத்தான் பைபிளும் நம்மைச் செய்யும்படி துரிதப்படுத்துகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களை, ‘அவர்கள் விசுவாசமுள்ளவர்களோ என்று சோதித்துக் கொண்டிருக்கவும், அப்படி இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கவும்’ அறிவுரை அளித்தான்.—2 கொரிந்தியர் 13:5, NW.
தாயும் பாட்டியும் வேதவாக்கியங்களுக்கு இசைவாக வளர்த்த தீமோத்தேயு என்ற இளைஞனைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. ஆனால் தெளிவாகவே, அவன் அவர்களுடைய விசுவாசத்தைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் ‘கற்று நிச்சயித்துக்கொண்டவன்’ என்று அநேக ஆண்டுகளுக்குப் பின்பு பவுல் அவனுக்கு நினைப்பூட்டினான். (2 தீமோத்தேயு 3:14) அவன் பெற்றுக்கொண்ட விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி தீமோத்தேயுவுக்கு உற்சாகமூட்டப்பட்டது—ஆனால் அவன்தானே அதை முற்றிலும் சோதித்தறிந்த பிறகே அப்படிச் செய்யுமாறு சொல்லப்பட்டது.
மறுபட்சத்தில் சிலர் தங்கள் பழக்கப்பட்ட மதத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தத் தூண்டப்பட்டனர். செர்கியுபவுல், சீப்புரு தீவில் ஒரு ரோம மாகாண ஆளுநராக இருந்தான். அவன் ரோம தேவர்களுக்கு ஆராதனை செய்து வந்தான் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், பவுலின் பிரசங்கத்தைக் கேட்டபிறகு அவன், “கர்த்தரைப் பற்றி கற்ற உபதேசத்தைப் பற்றியதில் ஆழமாகப் பாதிக்கப்பட்டு, விசுவாசித்தான்.”—அப்போஸ்தலர் 13:12, NE.
இந்த இரண்டு அனுபவங்களிலும், கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் தீர்க்கமான ஆய்வு செய்தபிறகே சிந்தனையோடு தெரிவு செய்யப்பட்டது. செர்கியுபவுல் மற்றும் தீமோத்தேயுவின் போக்கை ஏன் பின்பற்றக்கூடாது? ஒருவன் தன் மதத்தை மாற்றிக்கொண்டான், இன்னொருவன் மாற்றிக் கொள்ளவில்லை; ஆனால் தாங்களாகவே சத்தியத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் பலனடைந்தனர். இருப்பினும், பாரம்பரியம், பயம், அல்லது தப்பெண்ணம் ஆகியவற்றின் காரணமாக சிலர் அத்தகைய படியை எடுப்பதில் மனமற்றவர்களாக இருக்கின்றனர்.
ஒரு தெரிவைச் செய்வதின் சவால்
மதப் பாரம்பரியங்கள் எளிதில் நம்மைவிட்டு அகலுவதில்லை. அநேகர் பழமைவாய்ந்த பழக்க வழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும் ஆறுதல் பெறுகின்றனர். சிலர் சொல்லலாம், “ஒரு தடவை கத்தோலிக்கனாக இருந்தால், எப்போதும் கத்தோலிக்கனே.” ஒருவேளை நீங்களும் உங்கள் விசுவாசத்தைக் குறித்து இப்படியே உணருபவர்களாய் தெரியாத ஒன்றைக் காட்டிலும் பாரம்பரியமே மேலானது என்று தேர்ந்தெடுக்கலாம். அதனுடைய மதிப்பைப் பகுத்தாராயாமல், ஒரு பாரம்பரியத்தை ஒதுக்கித் தள்ளுவது ஞானமாக இருக்காது. தெசலோனிக்கேயாவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு, ‘அவர்கள் கற்றறிந்த பாரம்பரியங்களைப் பற்றிக்கொண்டிருங்கள்’ என்று சொன்னான். (2 தெசலோனிக்கேயர் 2:15, NE) மறுபட்சத்தில், பாரம்பரியங்கள், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை மதிப்பற்றதாக்கி நம்மைக் கடவுளிடமிருந்து விலக்கி வைக்கும் என்று இயேசு எச்சரித்தார். (மத்தேயு 15:6) பாரம்பரியத்தை எப்பொழுதும் நம்ப முடியாது.
அறிவு விருத்தியடையும்போது, மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பாரம்பரிய செயல்முறைகள் அடிக்கடி திருத்தியமைக்கப்படுகின்றன அல்லது அகற்றப்பட்டு மற்றவைகள் அதன் இடத்தைப் பிடிக்கின்றன. இந்தத் துறைகளில் பெரும்பான்மையான ஆட்கள் ஒரு திறந்தமனம் கொண்டிருப்பதானது அபிவிருத்திக்கு உகந்ததாக இருக்கிறது. நாம் நம்முடைய மதப்பாரம்பரியம் தெய்வீக ஊற்று மூலத்திலிருந்து வந்தது என்று எண்ணினாலும் “எல்லா ஆவிகளையும் நம்பாமல்” இருக்கும்படி எச்சரிப்பதுடன், “அந்த ஆவிகள் (ஏவப்பட்ட வார்த்தைகள், NW) தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” என்று பைபிள் சொல்லுகிறது. (1 யோவான் 4:1) “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பற்றிக்கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:21) மதிப்புள்ள பாரம்பரியங்கள் அத்தகைய பரிசோதனையில் நிலைத்து நிற்கும்.
மதத்தைத் தெரிவுசெய்யும் காரியத்தில் இருக்கும் மற்றொரு தடையானது பயம். “நான் மதத்தைப் பற்றியோ அரசியலைப் பற்றியோ விவாதிப்பதில்லை,” என்று பொதுவாக சொல்லப்படுகிறது. நாம் தவறாக வழிநடத்தப்பட்டோம் என்பதை கண்டுபிடிக்கையில் ஏற்படும் பயம் அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம், எதிலும் ஈடுபடாமலிருப்பதற்குப் பலத்த சாக்குப்போக்காக இருக்கிறது. இயேசுவின் நாட்களில் அவரது போதனையின் பயனை பலர் அங்கீகரித்தனர். ஆனால் அவர்கள் அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்வதிலிருந்து பின்வாங்கினார்கள். காரணமென்னவெனில் அவர்கள், “ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர் நிமித்தம் அறிக்கை பண்ணாதிருந்தார்கள். அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.”—யோவான் 12:42, 43.
அந்தக் குறுகிய மனப்பான்மையுள்ள மதத் தொகுதியின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுத்ததால் இயேசுவின் நாட்களிலிருந்த ஆட்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கும் ஒப்பற்ற வாய்ப்பை இழந்தனர். நீரோட்டத்திற்கு எதிராக நீச்சல்போடுவது தைரியத்தைக் கேட்கிறது, உண்மைதான். வித்தியாசப்பட்டவராக இருப்பது ஒருபோதும் எளிதல்ல. ஆனால், ஒரு தெரிவைச் செய்வதை நீங்கள் தள்ளிப்போடுவீர்களேயானால் மற்றவர்கள் உங்களுக்காகத் தெரிவு செய்வது நிச்சயம் சம்பவிக்கும்.
“அயல் நாட்டிலிருந்து வந்தது” என்று கருதப்படும் எதுவாயினும் அதைக் குறித்துத் தப்பெண்ணம் கொண்டிருப்பதும் பட்சபாதமற்ற ஆய்வைச் செய்ய விரும்புவோருக்கு இடையூறாக இருக்கும். இயேசுவின் நாட்களிலே மேசியா நசரேயனாக இருந்ததன் நிமித்தம் அசட்டை செய்யப்பட்டார் மற்றும் கலிலேயனாக இருந்ததன் நிமித்தம் இகழப்பட்டார். இருபதாம் நூற்றாண்டு தப்பெண்ணமும் இதைப்போன்றதே.—யோவான் 1:46; 7:52.
“அது, வெறுமனே, நவநாகரிக அமெரிக்க மதங்களில் ஒன்று!” இதுதான், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர், அவருடைய மதநம்பிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும்படி அவரை அழைத்தபோது ரிக்கார்டோவின் முதல் பிரதிபலிப்பாக இருந்தது. அவருடைய லத்தீன் அமெரிக்க பின்னணி ஐக்கிய மாகாணங்கள் என்ற வாடையைக் கொண்ட எதுவானாலும் விழிப்பாய் இருக்கச் செய்தது. இருப்பினும், அவருக்கு அளிக்கப்பட்ட அத்தாட்சியால் அவருடைய தப்பெண்ணம் தகர்க்கப்பட்டது. எல்லாவற்றிலும் மேலாக, சாட்சிகளிடையே அவர் கண்ட கிறிஸ்தவத்தின் நடைமுறையான வெளிக்காட்டினால் அவர் அறிவுறுத்தப்பட்டார். அவர்களுடைய உண்மையான அன்பும், விசுவாசமும் அவரைக் கவர்ந்தன.—பக்கம் 10-ல் உள்ள பெட்டியைப் பார்க்கவும்.
தன்னுடைய ஆரம்பகால தப்பெண்ணத்தைக் களைந்துவிட்ட பின்பு யெகோவாவின் சாட்சிகள் “அவர்களுடைய அமைப்பு மற்றும் சாட்சி கொடுக்கும் வேலையில் . . . பூர்வ கிறிஸ்தவ சமூகத்தைக் கிட்டத்தட்ட எட்டும் வகையில் மிக நெருக்கமாக ஒத்திருக்கும் ஒரு தொகுதியாக இருக்கிறார்கள்,” என்று இன்னொரு பார்வையாளர் எழுதியதை ரிக்கார்டோ ஒத்துக்கொள்கிறார். சாத்தியமுள்ள சிறந்த தெரிவைச் செய்வதற்கு ஒரு திறந்தமனம் அவசியமான ஒன்று என்று அவர் இப்பொழுது உணருகிறார்.
நீங்கள் எதைத் தெரிவு செய்வீர்கள்?
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பெட்ரோ, வேதவாக்கியங்களைத் தானாகவே ஆய்வு செய்ய பாரம்பரியம், பயம், மற்றும் தப்பெண்ணத்தை மேற்கொண்டார். முதலில், பொதுவாகவே, மதத்தில் நம்பிக்கையற்றவராய் அநேக சந்தேகங்களைக் கொண்டிருந்தார். அவர் விவரிக்கிறார்: “மலைவாவில் என்னுடைய நம்பிக்கையோ, எனக்குத் தெரியாதிருந்த கத்தோலிக்கரின் கடவுளோ எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை.” ஆனால் கடைசியாக அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்க தெரிவு செய்தார், 36-வது வயதில் அப்படியே முழுக்காட்டப்பட்டார். “எனக்கு உதவி செய்தவர்களின் அன்பும், பொறுமையும் மற்றும் பைபிளிலிருந்து நான் பெற்ற திருப்தியளிக்கும் பதில்களுமே தீர்மானிக்கும் அம்சங்களாக இருந்தன,” என்று அவர் சொன்னார்.
பெட்ரோவின் முன்மாதிரியைப் பின்பற்ற உங்களுக்குத் தைரியம் இருக்குமா? உங்கள் மதம் எதுவாக இருப்பினும் அதைத் தற்செயலாக சம்பவிக்கும் ஒரு காரியமாக விட்டுவிடாதீர்கள். இயேசு போதித்த, ஒப்பற்றதும் அருமையானதுமாகிய சத்தியம் எது என்று கடவுளுடைய வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு நீங்களே நிரூபித்துக் காட்டுங்கள். யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய உதவியை அளிப்பதில் மகிழ்ச்சியடைவார்கள். யோசுவாவின் வார்த்தைகளுக்குக் கவனமாய்ச் செவிசாய்க்க அவர்கள் உங்களை உண்மையுடன் அழைக்கிறார்கள்: ‘யாரைச் சேவிப்பது என்று நீங்கள்தாமே தெரிந்துகொள்ளுங்கள்.’—யோசுவா 24:15. (g88 8⁄8)
[பக்கம் 10-ன் பெட்டி]
யெகோவாவின் சாட்சிகள் ஓர் “அமெரிக்க மதமா”?
அநேக தேசீயவாத மக்கள் அயல் நாட்டிலிருந்து வருவது அல்லது பழக்கப்பட்டிராதது என்று கருதப்படுவதைக் குறித்து சந்தேகம் அல்லது பயத்தைக் கொண்டுள்ளனர். இது மற்ற மதங்களைக் குறித்த அவர்களுடைய நோக்குநிலையைப் பாதிக்கிறது.
யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி மக்களின் இந்த மனப்போக்கிற்குப் பலியாகியிருக்கிறார்கள். அவர்களுடையது அமெரிக்க மதம், “அமெரிக்காவில் உருவானது” என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே, இந்த அடிப்படையில் தள்ளிவிடத் தகுதியுள்ளதாகக் கருதுகிறார்கள். அது உண்மையில் ஒரு நியாயமான பிரதிபலிப்பாக இருக்கிறதா?
உண்மைகள் என்ன?
1. விகிதப்படியாக, கானடாவிலும், கோஸ்ட்டா ரீகாவிலும், ஃபின்லாந்திலும், ஜமாய்காவிலும், போர்ட்டோ ரீகோவிலும் மற்றும் ஜாம்பியாவிலும், மற்ற நாடுகளிலும் ஐக்கிய மாகாணங்களில் இருப்பதைப் பார்க்கிலும் அதிகமான சாட்சிகள் இருக்கிறார்கள்.
2. யெகோவாவின் சாட்சிகள் ஒரு சர்வதேசீயம் என்பதைக் காட்டிலும் அதிகம். அவர்கள் தேசீயவாதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். அதாவது குறுகிய தேச எல்லைகள் அல்லது இனவெறி அக்கறைகளைத் தாண்டிய ஒன்று. யெகோவாவின் சாட்சிகள் இன, கோத்திர மற்றும் தேசீய தப்பெண்ணங்களை மேற்கொண்டு பெரும் வெற்றி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவே, தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், லெபனான், வட அயர்லாந்து மற்றும் இதர இனக்கலவரமுள்ள தேசங்களிலும் உண்மையாயிருக்கிறது. கறுப்பரும், வெள்ளையரும், யூதரும் மற்றும் அரேபியர்களும் முன்பு கத்தோலிக்கராகவும், புராட்டஸ்டண்டினராகவும் இருந்தவர்களும் இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளாக அவர்களுடைய மாநாடுகளிலும் ராஜ்ய மன்றங்களிலும் ஒன்று சேர்ந்து வேலை செய்தும் வணங்கியும் வருகிறார்கள்.
3. சுமார் 200 மொழிகளில் அவர்கள் தங்கள் பைபிள் பிரசுரங்களை அச்சிடுகிறார்கள். உதாரணமாக, “காவற்கோபுரம்” 105 மொழிகளிலும், “விழித்தெழு!” 54 மொழிகளிலும் பிரசுரிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமான மாதாந்திர அச்சடிப்பு 4 கோடியே 85 இலட்சம் பிரதிகள்.
4. யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உலக தலைமைக் காரியாலயத்தை நியு யார்க்கில் கொண்டிருந்தாலும் அவர்களில் 23 சதவிகித எண்ணிக்கையினர் மட்டுமே ஐக்கிய மாகாணங்களில் இருக்கின்றனர்.
5. பூர்வ கிறிஸ்தவத்திற்கு எருசலேம் எப்படி ஒரு செளகரியமான இடமாக அமைந்ததோ அதுபோன்று, இன்றைய உலகப்போர்கள் மற்றும் சண்டைகள் நிலவும் சகாப்தத்தில் ஐக்கிய மாகாணங்கள் நற்செய்தியை உலகம் முழுவதிலும் பிரசங்கிப்பதற்கான செளகரியமான தளமாக அமைகிறது. மற்ற எந்த இடத்திலும் இந்த வேலையானது தப்பெண்ணம், தடைகள் அல்லது மூலப்பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவற்றால் முடக்கப்பட்டிருக்கும் என்று அனுபவங்கள் காட்டுகின்றன. ஆனால் சாட்சிகள் தங்கள் தலைமைக் காரியாலயத்தை நியூ யார்க்கில் கொண்டிருப்பதுதானே அவர்களுடையது ஓர் “அமெரிக்க மதம்,” என்று அர்த்தப்படுத்தாது. பூர்வ கிறிஸ்தவர்கள் “யூதமதத்தினர்” என்று தவறாக அடையாளப்படுத்தப்பட்டாலும் அப்படியாக அது இல்லாதது போன்றே இதுவுமாகும்.
நியாயமற்ற துன்புறுத்துதல்
அவர்களுடைய தேசீய வாதத்திற்கு அப்பாற்பட்ட தோற்றத்தைத் தெளிவாக வெளிக்காட்டும் ஓர் உண்மையானது, வித்தியாசப்பட்ட ஆட்சிமுறைகளால் அவர்கள் எப்படி அடையாளக் குறிப்பிடப்படுகிறார்கள் என்பது. கடந்த காலத்தில் அவர்கள் ஐக்கிய மாகாணங்களில் கம்யூனிஸ்டுகள் என்றும் கம்யூனிச நாடுகளில் சி.ஐ.ஏ. ஏஜென்டுகள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றனர்!
உதாரணமாக, 1950-களில் ஐக்கிய மாகாணங்களின் ஒரு செய்தித்தாளில் கட்டுரை ஒன்று இவ்வாறு சொன்னது: “போலந்துநாட்டு கம்யூனிஸ்டுகள் ‘யெகோவா’ ஏஜென்டுகளுக்கு நிதியுதவி செய்கிறார்கள்.” ஐக்கிய மாகாணங்களின் ஒரு வானொலி நிலையத்தில் மற்றொரு அறிவிப்பு சொன்னதாவது: “சோவியத் நாட்டின் ஆதரவு தேசமாகிய போலந்து நாட்டு அரசு சாட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கிறது.” அயர்லாந்தில் வன்முறைக் கும்பலால் சாட்சிகள் நிந்தனையை எதிர்ப்பட்டனர்: “கம்யூனிஸ்டுகளே! இங்கிருந்து வெளியேறுங்கள்!”
இதற்கிடையில், சாட்சிகள் போலந்து நாட்டிலும் மற்ற கம்யூனிஸ்டு நாடுகளிலும் அரசாங்க தடையின்கீழ் வந்தனர். அநேகர் தங்கள் நம்பிக்கைகளுக்காக சிறையிலிடப்பட்டனர். சிலர் சி.ஐ.ஏ.-யின் ஆதரவின் கீழ் இயங்கும் ஒரு வேவுக்குழுவைச் சார்ந்தவர்கள் என்றும்கூட குற்றஞ்சாட்டப்பட்டனர். 1976-ல் மேற்கத்திய நாடுகளுக்குக் குடியேறிய விலாடிமிர் பூகோங்ஸ்கி என்பவரால் சோவியத் யூனியனில் அவர்களுடைய நிலைமை பின்வருமாறு விவரிக்கப்படுகிறது: “ஒரு நாள் மாலைப்பொழுதில் லண்டனில் ஒரு கட்டடத்தின் முன்னால் ஒரு பெயர்ப்பலகையை நான் கவனிக்க நேரிட்டது. அது வாசித்ததாவது: யெகோவாவின் சாட்சிகள் . . . நான் திகலடையும் அளவுக்கு வியப்படைந்தேன். அது எப்படி இருக்கக்கூடும்? நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். சோவியத் யூனியனில் மாம்சமும் இரத்தமுமுள்ள ‘சாட்சிகளை’ சிறைகளிலும் துன்புறுத்தும் முகாம்களிலுமே நீங்கள் சந்திக்கலாம். உள்ளே சென்று அவர்களுடன் யாராவது தேநீர் அருந்தக்கூடுமா? என்னுடைய ஒப்புமை இங்கு சற்று மிகைப்படுத்துவதாக இருக்கலாம், ஆனால் கோசா நாஸ்ட்ரா லிமிடெட்., மாஃபியா ஜெனரல் ஸ்டஃப் என்று எழுதப்பட்ட ஒரு பெயர்ப் பலகையை உடைய ஒரு கட்டடம் உங்கள் பார்வைக்குத் தென்படுவதை ஒரு கணப்பொழுது கற்பனை செய்து பாருங்கள். சாட்சிகள் வாழும் நாடுகளில் மாஃபியா குழுக்கள் எப்படி வெறியோடு பின்தொடரப்படுகின்றனவோ அதுபோல் எங்கள் நாட்டில் “சாட்சிகள்,” பின் தொடரப்படுகிறார்கள்.”
சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த உதாரணங்கள் அநேக பட்சபாதமற்ற பார்வையாளர்கள் ஏற்கெனவே ஒப்புக்கொள்வதை வெளிக்காட்டுகிறது—அதாவது, யெகோவாவின் சாட்சிகள் எந்த ஒரு தேசீயவாத அல்லது அரசியல் சார்புள்ளவர்களாக இல்லை என்பது. அவர்களுடைய விசுவாசம் தேசீயவாதத்திற்கும் அப்பாற்பட்டது. ஏனென்றால், அவர்கள் தங்களுடைய பட்சபாதமற்ற கடவுளைப் பின்பற்றுகிறார்கள்.—அப்போஸ்தலர் 10:34. (g88 8⁄8)
[பக்கம் 8-ன் படம்]
முத்திரைக் காகிதத்தை வாசிக்காமல் உங்கள் கைக்கு வரும் முதல் மருந்தை நீங்கள் எடுப்பீர்களா?
[பக்கம் 9-ன் படங்கள்]
நீங்கள் உங்கள் மதத்தில் பிறந்தீர்களா, அல்லது நீங்கள் அதைத் தெரிவு செய்தீர்களா?