பூர்வ கிறிஸ்தவம் ஒரு தற்செயலாக நடந்த காரியம் அல்ல
முதல் நூற்றாண்டில் ஏராளமான தெய்வங்கள் இருந்தன மற்றும் எல்லாச் சுவைகளுக்கும் ஏற்ற தெய்வங்களும் இருந்தன. தொட்டில் துவங்கி சுடுகாடு வரை, ரோமப் பேரரசின் குடிகள் அவர்களுடைய ஆபத்துக்கால உதவிக்கும் பாதுகாப்புக்கும் தேவர்களிலும், தேவதைகளிலும் நம்பிக்கை வைத்தனர்.
புதிதாகப் பிறந்த குழந்தையைக் கியூபா கவனித்துப் பராமரித்தது, ஒஸ்ஸிபாகோ குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்தியது. அடியோனா அவனுடைய முதல் அடிகளை வழிநடத்தியது மற்றும் ஃபெபுலைனஸ் அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தது. போரில் அவன் மார்ஸ் வாயிலாக பாதுகாக்கப்படுவான். அவன் வியாதிப்படும்போது அஸ்க்லீப்பியஸ் அவனைக் கவனிக்கும். அவன் மரிக்கையில் கீழுலக தேவனாகிய ஓர்கஸ்ஸால் கவனிக்கப்படுவான்.
ஒவ்வொரு பிரதான நகரமும் கோத்திரமும் தன்னுடைய ஆதரிக்கும் தேவனில் மேன்மைப்பாராட்டியது மற்றும் கடவுளுடைய அவதாரம் என்று கருதப்பட்ட ரோம பேரரசருக்குத் தினமும் தூபவர்க்கம் செலுத்தப்பட்டது. கிழக்கத்திய தெய்வங்கள் பழக்கத்தில் இருந்தன மற்றும் மித்ராஸ், ஐசீஸ், ஓஸ்ரீஸ் ஆகியவற்றைக் கனப்படுத்தும் வகையில் கோயில்கள் கட்டப்பட்டன. காணக்கூடாத சர்வவல்லமையுள்ள கடவுளை வணங்குவதாக உரிமைப்பாராட்டிய யூதர்களும்கூட எண்ணற்ற மதப்பிரிவுகளாகப் பிரிந்திருந்தனர்.
அந்தச் சரித்திரக் கட்டத்தில், எல்லா மதக் குழப்பங்களுக்கிடையில், இயேசு கிறிஸ்து தோன்றினார். அவர் புதிய ஒன்றைப் போதித்தார்: ஓர் உலகம் தழுவிய மதம், இன மற்றும் தேசீய பாகுபாடுகளைத் தாண்டிய ஒன்று; சர்வவல்லமையுள்ள கடவுளைப் பற்றியதும், மனிதரை மூடநம்பிக்கை மற்றும் பொய்யின் கட்டிலிருந்து விடுவிப்பதுமாகிய சத்தியத்தின் அடிப்படையிலான ஒரு மதம். (யோவான் 8:32) பிலாத்துவுக்கு அவர் விளக்கினார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:37) இந்த மாபெரும் வேலையை அவர் எப்படிச் செய்து முடித்தார்?
“ஆவியில் எளிமையுள்ளவர்களுக்குப்” பிரசங்கித்தல்
பெரிய அளவில் மதமாற்றம் செய்ய, அடிப்படையில் இரண்டு வழிகள் இருப்பதாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று, பொதுப்படையாக மக்களுக்குச் சுவிசேஷத்தை அறிவித்து அதன்பிறகு சாதாரண மக்களிலிருந்து மேல் நோக்கி வேலை செய்தல். இன்னொன்று மேல்மட்ட ஆட்களிலிருந்து அல்லது மேல்மட்ட ஆட்களின் தலைவர்களிலிருந்து, அதிகாரத்தை அல்லது பலவந்தத்தை உபயோகித்து கீழ்நோக்கிச் செயல்படுதல். இந்தப் பின்சொல்லப்பட்டது கத்தோலிக்க, புராட்டஸ்டண்டு மற்றும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளினால் உபயோகிக்கப்பட்டது. ஆனால் இது இயேசு மற்றும் அவரைப் பின்பற்றுவோரின் சிந்தையிலும்கூட இடம்பெறவில்லை.
தம்முடைய வெளியரங்க ஊழியத்தின் ஆரம்பத்திலிருந்தே தம்முடைய கவனத்தை “ஆவியில் எளிமையுள்ளவர்கள்” அல்லது சொல்லர்த்தமாக “ஆவிக்காகப் பிச்சைக் கேட்கிறவர்கள்” இடமாக திருப்புவேன் என்பதாக இயேசு விளக்கினார். இவர்கள்தான் நீதிக்காக பசிகொண்ட, “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ள” எளிய மக்கள்.—மத்தேயு 5:3, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு; புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள் (ஆங்கிலம்), அடிக்குறிப்பு.
ஆகவேதான், இயேசுவின் அப்போஸ்தலர்கள் பிரசங்க வேலையிலிருந்து திரும்பி வந்தபோது கிறிஸ்து சொன்னார்: “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தாத்திரிக்கிறேன்.” (மத்தேயு 11:25) அவருடைய பிரசங்க வேலையின் பெரும்பகுதி பரிசேயரின் மற்றும் யூத பிரபுக்களின் கோட்டையாய் இருந்த யூதேயாவில் அல்ல, மாறாக, எளிய வாழ்க்கை நடத்திய மீன்பிடிப்போர் மற்றும் விவசாயிகளின் தாயகமாகிய கலிலேயாவில் செய்யப்பட்டது.
இயேசு தாமே முக்கியமான ஒருவரையும் ஒருபோதும் பிறப்பித்திராத நன்கு அறியப்படாத நாசரேத்து என்ற கிராமத்திலிருந்து வந்தவர். “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” என்று நாத்தான்வேல் கேட்டான். (யோவான் 1:46) ஆனால் அவன் ஒரு திறந்த மனதைக் கொண்டிருந்ததால் அவன் கற்றதும் கேட்டதும் இந்தப் பிராந்திய சம்பந்தமான தப்பெண்ணத்தை மேற்கொள்ள அவனுக்கு உதவியது. மறுபட்சத்தில் அகந்தையுள்ள பரிசேயர் பெருமை பாராட்டினார்கள்: “அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டோ?”—யோவான் 7:48.
கிறிஸ்தவ விசுவாசம் தற்செயலாக சம்பவிக்க விடப்படுவதில்லை
இருதயத்தை எட்டிப்பிடித்து அவர்களை நம்பவைப்பதே இயேசுவின் இலக்காக இருந்தது. உண்மையுள்ள விசுவாசிகளாக இருக்க விரும்பும் தகுதியுள்ள ஆட்களைத் தேடிக்கண்டுபிடித்து அவர்களைச் சீஷராக்குவதற்கு—அவர்கள் விருப்பம் அதுவானால்—அவர்கள் வீடுகளில் போதுமான நேரம் தங்கியிருக்கும்படி தன்னுடைய சீஷர்களுக்கு அவர் போதித்தார். கிறிஸ்துவின் போதனைக்குச் செவிகொடுத்த சமாரிய கிராமத்தில் இருந்த சிலர் சொன்னதாவது: “அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்.”—யோவான் 4:42.
கிறிஸ்தவத்திற்கு மதம்மாறும் ஒவ்வொருவரும் செவிகொடுத்துக் கேட்டு, கேட்டதின் பேரில் தியானம் செய்த பிறகு ஒரு விவேகமான தெரிவைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அந்த நபர் திடநம்பிக்கை உள்ளவராக இருப்பது அவசியமாயிருந்தது, ஏனென்றால், எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியதாயிருந்தது. எல்லாப் பூர்வ சீஷர்களும் ஜெப ஆலயத்திலிருந்து நீக்கப்பட்டனர். அது அந்த உள்ளூர் சமூகத்திலிருந்து தள்ளிவைக்கப்படுதலை அர்த்தப்படுத்தியது.
மேலும், ஒவ்வொரு சீஷனும் தான் புதிதாய்க் கண்ட நம்பிக்கையை ஆதரித்துப்பேசவும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் கடமையுணர்ச்சி உள்ளவனாக இருந்தான். செல்சஸ் என்ற இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவமத விமர்சிகர், “கூலியாட்கள், செருப்புத்தைப்பவர்கள், விவசாயிகள் போன்ற பாமரரும் விகடரும் சுவிசேஷத்தின் வைராக்கியமுள்ள பிரசங்கிகளாக இருப்பது” பரிகாசத்திற்குரிய காரியம் என்றார்.—யோவான் 9:24-34-ஐ ஒப்பிடவும்.
இத்தகைய மதமாற்றமும், மதமாறியவர்களின் மதமாற்றும் வைராக்கியமும் கிறிஸ்தவம் தீவிரமாக பரவுவதில் விளைவடைந்தது. சீக்கிரத்தில் அது பிராந்திய மதமாக அல்ல, மாறாக, சர்வதேச மதமாக மாறியது. “பூமியின் மிகத் தொலைவான பாகத்துக்கும்” பிரசங்கிக்க வேண்டும் என்று தன்னைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு குறிப்பிட்டுச் சொன்னார்.—அப்போஸ்தலர் 1:8, NW.
முதல் சீஷர்கள் யூதர்களாக இருந்ததும், மற்றும் ஆரம்ப மதமாற்றங்கள் யூதர்களிடையே இருந்ததும் உண்மைதான், அது கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக இருந்தது. புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட திருச்சபையை வழிநடத்த அப்போஸ்தலர் கூடிவருவதற்கு எருசலேம் மையமாக ஆனது. இதன் காரணமாக, கிறிஸ்தவர்களை வெகுவாக துன்புறுத்தியவர்கள் யூதர்களாக இருந்தபோதிலும், அடிக்கடி, கிறிஸ்தவர்கள் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த மக்களால் யூதர்கள் என்று தவறாக தூஷிக்கப்பட்டனர். மேலும், ஒரு ரோம சரித்திர ஆசிரியன் கிறிஸ்தவத்தை ஒரு தீங்கிழைக்கும் மூடநம்பிக்கை என்று தள்ளுபடி செய்தான்.
முதல் யூதனல்லாதவனை முழுக்காட்டுவதற்கு முன்பாக பேதுரு அறிவித்தான்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நான் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 10:34, 35) இவ்வாறு, கிறிஸ்தவர்களின் வைராக்கியம் அசையாத விசுவாசத்தினால் கொழுந்துவிட்டு எரிந்து ரோமப் பேரரசு முழுவதும் கிறிஸ்துவின் செய்தியை ஏந்திச் சென்றது. துன்புறுத்துதல் இந்தக் கிறிஸ்தவர்களை அழித்துவிடவில்லை. மேலும் தாங்கள் தெரிவு செய்த மதத்தை மறுதலிக்காததன் காரணமாக அநேகர் மரணத்திற்குட்பட்டார்கள், அவர்களுடைய ஆர்வமும் பக்தியும் 20-ம் நூற்றாண்டு கிறிஸ்தவ மண்டலத்தில் நிலவும் அக்கறையற்ற தன்மைக்கு வெகு தூரமாயிருக்கிறது.
விசுவாசம் என்ற காரியத்தில் ஒரு சிலரே உணர்ந்து தெரிவு செய்வதன் காரணமாகவே, இந்த ஆவி காணப்படுவதில்லையா? மதம் உங்களுடைய அக்கறைக்குரிய காரியமாக இன்னும் இருக்கிறதென்றால், பின்வரும் கட்டுரையை ஏன் ஆழ்ந்து கவனிக்கக்கூடது? (g88 8⁄8)
[பக்கம் 6-ன் படங்கள்]
பூர்வ ரோம் அநேக தேவர்களை வணங்கி வந்தது, அவற்றில் மார்ஸ், யுத்ததேவன்; ஜூபிடர், ரோமின் பிரதான தேவன்; மற்றும் அஸ்க்லீப்பியஸ், மருத்துவ தேவன்
மார்ஸ்
[படத்திற்கான நன்றி]
Drawing based on Mansell Collection
ஜூபிடர்
[படத்திற்கான நன்றி]
Drawing based on a display, British Museum
அஸ்க்லீப்பியஸ்