உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 11/15 பக். 8-11
  • இணங்கிவிடும் எந்த எண்ணமும் இல்லை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இணங்கிவிடும் எந்த எண்ணமும் இல்லை!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • காரணமில்லாமல் பகைக்கப்பட்டனர்
  • ரோம் துன்புறுத்தலைக் கடுமையாக்குகிறது
  • திட்டவட்டமான வேறுபாடுகள்
  • சாட்சி கொடுப்பதற்குரிய விலை
  • பெருக்கம் மிகுந்த துன்புறுத்தலைக் கொண்டுவருகிறது
  • பலன்
  • பூர்வ கிறிஸ்தவமும் அரசாங்கமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • பூர்வ கிறிஸ்தவர்களும் உலகமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • விசுவாசத்திற்காக பகைக்கப்பட்டார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • ஆறாவது உலக வல்லரசு—ரோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 11/15 பக். 8-11

இணங்கிவிடும் எந்த எண்ணமும் இல்லை!

யெகோவாவின் கரம் தொடக்கத்தில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினோருடன் இருந்தது. (அப்போஸ்தலர் 11:21) கடவுளுடைய உதவியுடன், அவர்கள் இணங்கிவிடாமல் நேர்மையான போக்கைப் பின்தொடர்ந்தனர். மேலும் பகைமையையும் கடுமையான துன்புறுத்தலையுங்கூட அவர்கள் அனுபவித்தனரென்பது நன்றாய் அறியப்பட்ட சரித்திரப்பூர்வ உண்மையே.

கிறிஸ்துவை முதன்முதல் உண்மையுடன் பின்பற்றினோரின் இந்த உத்தமநிலை யாவராலும் அறியப்பட்ட உண்மையாகியது. தங்கள் உயிர் பாதிக்கப்பட்டபோதுங்கூட, அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுவிலகி இணங்கிப்போக மறுத்தனர். ஆனால் அவர்கள் ஏன் அவ்வளவு கொடூரமாய் நடத்தப்பட்டனர்?

காரணமில்லாமல் பகைக்கப்பட்டனர்

இயேசுவைப்போல், உண்மையானக் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் நாட்டங்களிலும் நம்பிக்கைகளிலும் பங்குகொள்ளவில்லை. (1 யோவான் 4:4-6) மேலும், கிறிஸ்தவத்தின் வளர்ச்சி “அவ்வளவு மிக விரைவாயும், அதன் வெற்றி அவ்வளவு மிகக் கவனிக்கத்தக்கதாயும் இருந்ததால், [ரோமின் பேரரசு அதிகாரத்துடன்] ஒரு பயங்கர மோதல் தவிர்க்கமுடியாததாக இருந்தது,” என்று சரித்திராசிரியர் எட்மோன் டி ப்ரெசான்சே குறிப்பிடுகிறார்.

இயேசு ஒருமுறை ஒரு தீர்க்கதரிசன சங்கீதத்தைத் தமக்குப் பொருத்திப் பயன்படுத்தி, பின்வருமாறு கூறினார்: “காரணமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்.” (யோவான் 15:25, திருத்திய மொழிபெயர்ப்பு; சங்கீதம் 69:4) இதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்வதற்கு முன்பாக, அவர் அவர்களைப் பின்வருமாறு எச்சரித்திருந்தார்: “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:20) அவருடைய அடிச்சுவடுகளில் பின்பற்றி நடப்பது எளிதாயிராது. ஒரு காரியமாக, யூதருக்குள்ளிருந்த மதத் தலைவர்கள் இயேசுவின் யூத சீஷர்களை, யூதேய மதத்தை விட்டுவிட்ட விசுவாசத்துரோகிகள் என்றவாறு நடத்துவார்கள். எனினும், இயேசுவைப் பின்பற்றினோர் அதற்குமேலும் அவரைப்பற்றிப் பேசக்கூடாதெனக் கட்டளையிடப்பட்டபோது, அதற்கு உடன்பட்டு இவ்வாறு தங்கள் விசுவாசத்தை விட்டுவிலகி இணங்கிவிட அவர்கள் மறுத்துவிட்டனர்.—அப்போஸ்தலர் 4:17-20; 5:27-32.

பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேக்குச் சற்றுப் பின்னால் யூத ஆலோசனை சங்கத்திற்கு அளித்த சாட்சியத்தில், சீஷனாகிய ஸ்தேவான் ‘மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளைப் பேசினதாகக்’ குற்றஞ்சாட்டப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் மூர்க்கத்தனமானவையாக இருந்தபோதிலும், அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார். இதன் விளைவாக, “எருசலேம் சபைக்கு மிகுந்த இம்சையுண்டாயிற்று,” மேலும் “அப்போஸ்தலர் தவிர மற்ற யாவரும் யூதேயா சமாரியா நாடுகளில் சிதறுண்டுபோனார்கள்.” (அப்போஸ்தலர் 6:11, 13; 8:1, தி.மொ.) பலர் சிறைப்படுத்தப்பட்டனர்.

இயேசுவைப் பின்பற்றினோரை யூதர்கள் “தீராப் பகையுடன்” பின்தொடர்ந்தார்கள் என்று கிறிஸ்தவமும் ரோமப் பேரரசும் என்ற ஆங்கில புத்தகம் சொல்லுகிறது. கிறிஸ்தவர்களைப் பாதுகாக்க ரோம அரசாங்கம்தானே அடிக்கடி நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று! உதாரணமாக, அப்போஸ்தலன் பவுலைக் கொலைசெய்ய நோக்கங்கொண்டிருந்த யூதர்களிடமிருந்து அவரை ரோம போர்ச்சேவகர்கள் காப்பாற்றினர். (அப்போஸ்தலர் 21:26-36) எனினும், கிறிஸ்தவர்களுக்கும் ரோமருக்குமிடையான உறவு அமைதிகுலைந்ததாகவே நிலைத்திருந்தது.

ரோம் துன்புறுத்தலைக் கடுமையாக்குகிறது

ஸ்தேவானின் மரணத்திற்கு ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், ரோம அரசன் ஏரோது அகிரிப்பா I, யூதர்களின் நல்லெண்ணத்தைப் பெறும்படி அப்போஸ்தலன் யாக்கோபு கொல்லப்படும்படி செய்தான். (அப்போஸ்தலர் 12:1-3) இந்தக் காலத்திற்குள்ளாக, கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது ரோமுக்குப் பரவிவிட்டது. (அப்போஸ்தலர் 2:10) பொ.ச. 64-ல், அந்த நகரத்தின் பெரும்பாகம் தீயினால் அழிக்கப்பட்டது. அந்தப் பெருந் தீக்குத் தான் பொறுப்புள்ளவனென்ற வதந்திகளை அடக்கும்படி நீரோ, அந்தப் பேரழிவுக்குக் கிறிஸ்தவர்களைக் காரணராகக் குற்றஞ்சாட்டினதைப் பின்தொடர்ந்து கிறிஸ்தவர்கள் பயங்கரமாய்த் துன்புறுத்தப்பட்டனர். அந்த நகரத்தை அதிக சிறப்புவாய்ந்த முறைகளில் மீண்டும் கட்டி அதைத் தன் பெயரில் நீரோப்பாலிஸ் என்று மறுபெயர் கொடுக்கும் ஒரு சாக்கின்பேரில் அவன் அதற்குத் தீ வைத்தானா? அல்லது யூத மதத்துக்கு மாறியவளும் கிறிஸ்தவர்களினிடமாக வெறுப்புக்கொண்டவளாக அறியப்பட்டவளுமான அவனுடைய அரசி பாப்பேயா, அவர்களைக் குற்றஞ்சாட்டும்படியான அவனுடைய தீர்மானத்தைத் தூண்டி செல்வாக்குச் செலுத்தினாளா? ஆராய்ச்சியாளர்கள் அதைப்பற்றி நிச்சயமாயில்லை, ஆனால் அதன் விளைவு பயங்கரமாக இருந்தது.

ரோம சரித்திராசிரியர் டாசிட்டஸ் கூறுவதாவது: “மரணத்தோடு ஏளனம் கூட்டப்பட்டது; [கிறிஸ்தவர்கள்] மிருகங்களின் தோல்களில் உடுத்துவிக்கப்பட்டு, நாய்களால் துண்டுதுண்டாகக் கடித்துக் குதறிப்போட செய்யப்பட்டனர், அவர்கள் சிலுவைகளில் அறையப்பட்டனர்; பகல் மங்குகையில் அவர்கள் விளக்கொளிகளாகச் சேவிக்கும்படி கொழுந்துவிட்டெரியச் செய்யப்பட்டனர்,” பேரரசுக்குரிய தோட்டங்களுக்கு ஒளிதருவதற்கு மனிதத் தீவட்டிகளாகச் சேவித்தனர். கிறிஸ்தவர்களின் நண்பனாயிராத டாசிட்டஸ், மேலும் சொல்வதாவது: “அவர்கள் குற்றமுள்ளோராயிருந்து, எச்சரிக்கையான தண்டனைக்குத் தகுதியானோராக இருந்தபோதிலும், பொதுஜன நன்மைக்காக அல்ல, ஒரு மனிதனின் [நீரோவின்] கொடுமையினால் அழிக்கப்படுவோராக இரக்கத்தைத் தூண்டினர்.”

திட்டவட்டமான வேறுபாடுகள்

ரோமின் அழிவுக்குக் கிறிஸ்தவர்களைக் காரணமாகக் குற்றஞ்சாட்டுவது நீரோவின் நோக்கத்துக்குப் பொருத்தமாயிருந்தபோதிலும், அவன் அவர்கள்பேரில் ஒருபோதும் தடையுத்தரவு போடவில்லை அல்லது அந்த அரசாங்கத்துக்குள் ஒரு மதமாக இராதபடி கிறிஸ்தவத்தை விலக்கவுமில்லை. ஆகவே ரோமர்கள் அந்தத் துன்புறுத்தலை ஏன் சம்மதித்தனர்? ஏனெனில் “அந்தச் சிறிய கிறிஸ்தவ சமுதாயங்கள், இன்ப நாட்டங்கொண்ட புறமத உலகத்தைத் தங்கள் பக்தியாலும் தங்கள் ஒழுக்க நடத்தையாலும் தொந்தரவுபடுத்துவோராக இருந்தனர்,” என்று சரித்திராசிரியர் உவில் டூரன்ட் கூறுகிறார். கிறிஸ்தவத்துக்கும் ரோம காட்சியரங்கு போட்டிகளின் இரத்தஞ்சிந்துதலுக்கும் இடையே இருந்த மாறுபாடு அதைப்பார்க்கிலும் பெரிதாக இருந்திருக்க முடியாது. கிறிஸ்தவர்களை ஒழித்து இவ்வாறு தங்கள் சொந்த மனச்சாட்சியின் வேதனையைத் தணித்துக்கொள்ள ரோமருக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு தவறவிடுவதற்குரியதல்ல.

உலக வல்லரசாக, ரோம் வெல்ல முடியாததாகத் தோன்றினது. எல்லா தெய்வங்களையும் தாங்கள் வணங்குவதே தங்கள் இராணுவ வீரத்துக்கு ஒரு காரணமென ரோமர் நம்பினர். ஆகையால், கிறிஸ்தவ ஒரே கடவுள் கொள்கையின் தனித்தன்மையையும், பேரரசனை வணங்குவது உட்பட, மற்ற எல்லா கடவுட்களையும் அது ஏற்க மறுப்பதையும் புரிந்துகொள்வதை கடினமாகக் கண்டனர். பேரரசின் அஸ்திபாரங்களைத்தானே அடியோடு அரித்துப்போடும் பாதிப்பாக ரோம் கிறிஸ்தவத்தைக் கண்டது ஆச்சரியமாயில்லை.

சாட்சி கொடுப்பதற்குரிய விலை

பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவு பகுதியின்போது, அப்போஸ்தலன் யோவான், “கடவுளைப்பற்றிப் பேசினதற்காகவும் இயேசுவுக்குச் சாட்சி பகர்ந்ததற்காகவும்” பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். (வெளிப்படுத்துதல் 1:9, தி.மொ.) ரோமப் பேரரசன் டொமீஷியன் இதற்குப் பொறுப்புள்ளவனாக இருந்தானென நம்பப்படுகிறது. எனினும், இயேசுவைப் பின்பற்றினோரின்மீது கொண்டுவரப்பட்ட இந்த நெருக்கடியின் மத்தியிலும், அந்த நூற்றாண்டின் திருப்பத்துக்குள், கிறிஸ்தவம், ரோமப் பேரரசு முழுவதிலும் பரவிவிட்டது. இது எவ்வாறு சாத்தியமாயிருந்தது? கிறிஸ்தவம் “அதன் ஊழியத்தால் ஒன்றுபட்டிருந்தது” என பூர்வ சர்ச்சின் ஒரு சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. யோவானைப்போல், துன்புறுத்தப்பட்ட பூர்வ கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டு இணங்கிப்போக மறுத்து, கடவுளைப்பற்றிப் பேசுவதிலும் இயேசுவுக்குச் சாட்சி கொடுப்பதிலும் ஆர்வத்துடன் விடாது தொடர்ந்தனர்.—அப்போஸ்தலர் 20:20, 21; 2 தீமோத்தேயு 4:2.

பிளைனியை (இப்பொழுது வடமேற்கு துருக்கியாயுள்ள) பித்தினியாவின் தேசாதிபதியாக பேரரசன் டிராஜன் நியமித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பான, பொ.ச. 112-க்குள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது புதிய அம்சத்தை ஏற்றது. அங்கே அதற்கு முன்பிருந்த ஆட்சிமுறை உறுதியற்றதாயிருந்து, குழப்பத்தில் விளைவடைந்தது. ஆலயங்கள் பெரும்பாலும் கவனியாமல் விடப்பட்டன, பலிக்குரிய மிருகங்களுக்கானத் தீவனத்தின் விற்பனைகள் பேரளவாய்க் குறைந்தன. வாணிகர்கள், கிறிஸ்தவ வணக்கத்தின் எளிமையானத் தன்மையைக் குற்றஞ்சாட்டினர், ஏனெனில் அதற்கு மிருக பலிகளும் விக்கிரகங்களும் இல்லை.

புறமத வணக்கத்தை மீண்டும் கொண்டுவர பிளைனி கடினமாக உழைத்தான், அதேசமயத்தில் கிறிஸ்தவர்கள் பேரரசனின் சிலைகளுக்கு முன்பாகத் திராட்ச மதுவையும் தூபவர்க்கத்தையும் செலுத்த மறுத்ததற்காகத் தங்கள் உயிர்களைச் செலுத்தினர். முடிவில், கிறிஸ்தவர்கள் “சிறந்த ஒழுக்கமுள்ள ஜனங்கள், ஆனால் பழைய மதப் பாரம்பரியத்துக்கு விளக்கமுடியாதபடி எதிர்ப்புணர்ச்சியுடையவர்கள்” என ரோம அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர் என்று பேராசிரியர் ஹென்ரி சட்விக் சொல்கிறார். கிறிஸ்தவராக நிலைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக இருந்தபோதிலும், இயேசுவை உண்மையாய்ப் பின்பற்றினவர்கள் இணங்கிவிடும் எண்ணத்தை உடையோராக இல்லை.

“தனி உறுப்பினர் மதமாறினதால் புறமத குடும்பங்களில் உண்டான கோப எரிச்சலி”னாலும் பகை உண்டாயிற்று என்று பேராசிரியர் W. M. ராம்சே சொல்கிறார். “மிகச் சாதாரணமான சமுதாயப் பழக்கவழக்கம் புறமத தெய்வங்களை அங்கீகரிப்பதாக உள்ளதென்ற காரணத்தின்பேரில், ஒருவரின் அயலார் அதோடு ஒத்துப்போக முடியாதபோது சமுதாய வாழ்க்கை வெகு கடினமாக்கப்பட்டது,” என்று டாக்டர் J. W. C. உவான்ட் கூறுகிறார். மனிதவர்க்கத்தைப் பகைப்போரென பூர்வ கிறிஸ்தவர்களைப் பலர் நோக்கினது அல்லது நாத்திகரென அவர்களைக் கருதினது வியக்கத்தக்கதாயில்லை.

பெருக்கம் மிகுந்த துன்புறுத்தலைக் கொண்டுவருகிறது

அப்போஸ்தலன் யோவானால் கற்பிக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிற பாலிக்கார்ப், சிமிர்னா (இப்பொழுது இஸ்மிர்) பட்டணத்தில் மதிக்கப்பட்ட மூப்பரானார். அவருடைய விசுவாசத்தினிமித்தம் பொ.ச. 155-ல் அவர் கழுமரத்தில் எரிக்கப்பட்டார். ரோம மாகாண அதிபதி ஸ்டேட்டியுஸ் குவாட்ராட்டுஸ் கூட்டங்களை ஒன்றுசேர்த்தான். அந்த அரங்கம் பகைமையுள்ள புறமதத்தாரால் நிறைந்திருந்தது, அவர்கள் தங்கள் தெய்வங்களை வணங்குவதை ஊக்கங்கெடுத்ததற்காக 86 வயது பாலிக்கார்ப்பை இகழ்ந்தனர், மேலும் மதவெறியரான யூதர்கள், பெரிய ஓய்வுநாளன்று தாங்கள் அதைச் செய்யவேண்டியிருந்த போதிலும், எரிப்பதற்கான கட்டைகளை மனமாரப் பொறுக்கிக் குவித்தனர்.

அடுத்தப்படியாக ரோம உலகம் முழுவதிலும் கிறிஸ்தவர்கள்மீது பெரும்படியானத் துன்புறுத்தல் கொண்டுவரப்பட்டது. பேரரசன் மார்க்கஸ் ஆரிலியஸின்கீழ், கிறிஸ்தவர்கள் மேலுமதிகம்பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் ரோம குடிமக்களாக இருந்தால், பட்டயத்தால் மாண்டனர்; இல்லையெனில், அவர்கள் வட்டரங்கங்களில் மூர்க்க மிருகங்களால் கொல்லப்பட்டனர். அவர்களுடைய குற்றம்? இணங்கிவிட அல்லது தங்கள் விசுவாசத்தைத் துறந்துவிட மறுத்த வெறும் கிறிஸ்தவர்களாக இருந்ததே.

தற்கால பிரெஞ்ச் நகரமாகிய லையன்ஸ் ரோம குடியமைப்பாகிய லுக்டூனும் என்பதிலிருந்து தோன்றியது, அது முக்கிய நிர்வாக மையமும் ரோமுக்கும் ரைன் நதிக்கும் இடையேயுள்ள ரோமப் படைக்குரிய ஒரே கோட்டையுமாகும். பொ.ச. 177-க்குள், அது பலத்தக் கிறிஸ்தவ சமுதாயத்தைக் கொண்டிருந்தது, அதற்கு எதிராக புறமத ஜனத்தார் மூர்க்க எதிர்ப்புடன் எழும்பினர். கிறிஸ்தவர்கள் பொதுப் புகலிடங்களில் வரத் தடைசெய்யப்பட்டபோது இது தொடங்கினது. இந்தக் கலகக் கூட்டம் ஓர் அமளியைத் தூண்டிவிட்டது, அதைப் பின்தொடர்ந்த துன்புறுத்தல் அவ்வளவு மிகுந்ததாக இருந்ததால் கிறிஸ்தவர் ஒருவரும் வீட்டைவிட்டு வெளிவர தைரியங்கொள்ளவில்லை. கிறிஸ்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கொல்ல வேண்டுமென ரோம அதிபதி கட்டளையிட்டான்.

பலன்

இயேசுவின் அப்போஸ்தலர் மரணமடைந்து அவர்களுடைய தடுத்து நிறுத்தும் பாதிப்பு இல்லாமற்போனபோது, பெயரளவுக்கே கிறிஸ்தவர்களாக இருந்தவர்களுக்குள் விசுவாசத்துரோகம் தோன்றிவளரத் தொடங்கினது. (2 தெசலோனிக்கேயர் 2:7) பொ.ச. நான்காம் நூற்றாண்டின் முடிவின்போது விசுவாசத் துரோகக் கிறிஸ்தவம் அரசாங்க மதமாயிற்று. அதற்குள் அது, கறைபட்டதாகி உலகத்தோடு இணங்கிப்போகவும் அதோடு தன்னை அடையாளங்காட்டவும் ஆயத்தமாகிவிட்டது. இது இயேசுவும் அவருடைய தொடக்கக் கால சீஷர்களும் ஒருபோதும் செய்யாததாகும். (யோவான் 17:16) எனினும், இதற்கு வெகு முன்பே, பைபிள் புத்தகத் தொகுப்பு, அதன் கிறிஸ்தவ விசுவாசப் பதிவோடு, தொகுத்து முடிக்கப்பட்டிருந்தது.

அந்த ஆயிரக்கணக்கானப் பூர்வ கிறிஸ்தவர்களின் துன்பமும் மரணமும் வீணாகவே இருந்ததா? நிச்சயமாக இல்லை! தங்கள் விசுவாசத்தை விட்டு இணங்கிப்போகும் எண்ணமே இல்லாமல், ‘மரணபரியந்தம் உண்மையுள்ளோராக அவர்கள் நிரூபித்து, ஜீவகிரீடம் அளிக்கப்பட்டார்கள்.’ (வெளிப்படுத்துதல் 2:10) யெகோவாவின் ஊழியர்கள் துன்புறுத்தப்படுதலை இன்னும் அனுபவிக்கின்றனர், ஆனால் தொடக்கக்கால உடன் விசுவாசிகளின் விசுவாசமும் உத்தம நிலைநிற்கையும் அவர்களுக்கு மிகுந்த ஊக்கமூட்டும் ஊற்றுமூலமாக நிலைத்திருக்கிறது. ஆகவே, தற்காலக் கிறிஸ்தவர்களும் இணங்கிவிடும் எந்த எண்ணத்தையும் மனதில் அனுமதிப்பதில்லை.

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

நீரோ

பேரரசுக்குரிய ரோமின் மாதிரிப்படிவம்

இராயனை வணங்குவதற்கு ஒதுக்கிவைக்கப்பட்ட பலிபீடம்

[பக்கம் 10-ன் படம்]

மார்க்கஸ் ஆரிலியஸ்

[படத்திற்கான நன்றி]

The Bettmann Archive

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்