பூர்வ கிறிஸ்தவர்களும் உலகமும்
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், மிகவும் ஆச்சரியமான ஒரு சம்பவம் மத்திய கிழக்கில் நிகழ்ந்தது. கடவுளுடைய ஒரே பேறான குமாரன், ஒருசில காலத்திற்கு மனிதவர்க்கத்தின் உலகில் வாழும்படி அவருடைய பரலோக வாசஸ்தலத்திலிருந்து அனுப்பப்பட்டார். பெரும்பான்மையான மனிதவர்க்கம் எவ்வாறு பிரதிபலித்தது? அப்போஸ்தலன் யோவான் பதிலளிக்கிறார்: “அவர் [இயேசு] உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே [இஸ்ரவேல்] வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.”—யோவான் 1:10, 11.
கடவுளுடைய குமாரனாகிய இயேசுவை உலகம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? இயேசு இவ்வாறு சொன்னபோது, ஒரு காரணத்தை விளக்கினார்: “உலகம் . . . அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.” (யோவான் 7:7) முடிவில்,—சில யூத மதத் தலைவர்கள், ஓர் ஏதோமிய அரசன், மற்றும் ஒரு ரோம அரசியல்வாதி ஆகியோரால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட—இதே உலகம்தானே இயேசுவை மரணத்திற்கு உள்ளாக்கியது. (லூக்கா 22:66–23:25; அப்போஸ்தலர் 3:14, 15; 4:24-28) இயேசுவைப் பின்பற்றியவர்களைப் பற்றியதென்ன? உலகம் அவர்களை ஏற்றுக்கொள்ள அதிக தயாராக இருக்குமா? இல்லை. தம்முடைய மரணத்திற்கு சற்று முன்னர், இயேசு அவர்களை எச்சரித்தார்: “நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.”—யோவான் 15:19.
அப்போஸ்தலரின் காலங்களில்
இயேசுவின் வார்த்தைகள் உண்மையாக நிரூபித்தன. அவருடைய மரணத்திற்கு ஒருசில வாரங்களுக்குப் பின்னர், அவருடைய அப்போஸ்தலர்கள் சிறைச்சாலையில் வைக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, அடிக்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 4:1-3; 5:17, 18, 40) அதற்குச் சற்றுப்பின்னர், வைராக்கியமுள்ள ஸ்தேவான் யூத ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக இழுத்துச்செல்லப்பட்டு, பின்னர் கல்லெறிந்து கொல்லப்பட்டார். (அப்போஸ்தலர் 6:8-12; 7:54, 57, 58) பின்பு, அப்போஸ்தலன் யாக்கோபு, ஏரோது ராஜாவாகிய முதலாம் அக்ரிப்பாவால் கொலை செய்யப்பட்டார். (அப்போஸ்தலர் 12:1, 2) அவருடைய மிஷனரி பயணங்களின்போது, சிதறியிருந்த யூதர்களின் தூண்டுதலால் பவுல் துன்புறுத்தப்பட்டார்.—அப்போஸ்தலர் 13:50; 14:2, 19.
அத்தகைய எதிர்ப்பிற்குப் பூர்வ கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? தொடக்க நாட்களில், இயேசுவின் நாமத்தினால் பிரசங்கிக்கக்கூடாது என்று மத அதிகாரிகள் அப்போஸ்தலர்களைத் தடை செய்தபோது, அப்போஸ்தலர் குறிப்பிட்டனர்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” (அப்போஸ்தலர் 4:19, 20; 5:29) எதிர்ப்பு எழும்பியபோதெல்லாம், அவர்களுடைய மனநிலை இப்படியே தொடர்ந்திருந்தது. இருந்தாலும், அப்போஸ்தலன் பவுல் “மேலான [அரசாங்க] அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படிய”வேண்டும் என்று ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்,” என்றும் அறிவுரை கூறினார். (ரோமர் 12:18; 13:1) ஆகவே, பூர்வ கிறிஸ்தவர்கள் ஒரு கடினமான சமநிலையை அடையப்பெற வேண்டியிருந்தது. கடவுளைத் தங்கள் முதன்மையான ஆட்சியாளராகக்கொண்டு அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள். அதே சமயத்தில், தேசிய அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக இருந்து, எல்லா மனிதரோடும் சமாதானமாக வாழ முயன்றனர்.
ரோம உலகில் கிறிஸ்தவர்கள்
அன்று முதல் நூற்றாண்டின் ரோம பேரரச உலகிலே, சந்தேகமின்றி, கிறிஸ்தவர்கள் பாக்ஸ் ரோமானா அல்லது ரோம படைகளால் காக்கப்பட்ட ரோம சமாதானத்தால் பயனடைந்தார்கள். சட்டமும் ஒழுங்கும் நிலையாக இருப்பது, நல்ல சாலைகள், ஓரளவிற்குப் பாதுகாப்பான கடல் பயணம் ஆகியவை கிறிஸ்தவம் விரிவடைவதற்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்கின. பூர்வ கிறிஸ்தவர்கள் தெளிவாகவே, சமுதாயத்திடம் தங்களுடைய கடனை உணர்ந்து, “இராயனுடையதை இராயனுக்கு . . . செலுத்துங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்குக் கவனம் செலுத்தினர். (மாற்கு 12:17) ரோமப் பேரரசராகிய அந்தோனியஸ் பயசுக்கு (பொ.ச. 138-161) எழுதுகையில், கிறிஸ்தவர்கள் “மற்ற எல்லா மனிதரையும்விட மனமுவந்து” தங்கள் வரிகளைச் செலுத்தினார்கள் என்று ஜஸ்டின் மார்டர் உரிமைபாராட்டினார். (ஃபர்ஸ்ட் அப்பாலஜி, அதிகாரம் 17) அவர்கள் தங்கள் வரிகளைக் கடமையுணர்ச்சியுள்ள முறையில் செலுத்தியதற்காக அவர்களுடைய வரி வசூலிப்பவர்கள் “கிறிஸ்தவர்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கின்றனர்” என்பதாக பொ.ச. 197-ல் டெர்ட்டுல்யன் ரோம ஆட்சியாளர்களிடம் கூறினார். (அப்பாலஜி, அதிகாரம் 42) அவர்கள் மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டும் என்ற பவுலின் அறிவுரையைப் பின்பற்றியதில் இது ஒரு வழியாகும்.
மேலுமாக, தங்களுடைய கிறிஸ்தவ நியமங்கள் அனுமதிக்கும் அளவிற்கு, பூர்வ கிறிஸ்தவர்கள் தங்களுடைய அயலாருடன் சமாதானமாக வாழ முயன்றனர். ஆனால் இது எளிதாக இருக்கவில்லை. அவர்களைச் சுற்றியிருந்த உலகம் பெரிதும் ஒழுக்கங்கெட்டதாயும், கிரேக்க ரோம விக்கிரகாராதனையில் மூழ்கியதாயும் இருந்தது; அதோடு சமீபத்தில் பேரரசரை வணங்குவதும் சேர்க்கப்பட்டிருந்தது. ரோம புறமதம் அவசியமாக ஒரு தேசிய மதமாக இருந்தது; ஆகையால் அதை அப்பியாசிப்பதற்கான எந்த மறுப்பும் தேசத்தை எதிர்ப்பதாகக் கருதப்படலாம். இது கிறிஸ்தவர்களை எங்கே விட்டது?
ஆக்ஸ்ஃபர்ட் பேராசிரியர் E. G. ஹார்டி எழுதினார்: “ஒரு மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட கிறிஸ்தவன் ஈடுபட முடியாமல் இருக்கிற, விக்கிரகாராதனையை உட்படுத்துவதுபோன்ற அநேக காரியங்களை டெர்ட்டுல்யன் குறிப்பிடுகிறார்: உதாரணமாக, ஒப்பந்தங்களில் பொதுவாக செய்யப்படும் ஆணை; பண்டிகைகளின்போது கதவுகளில் விளக்கேற்றுதல், போன்றவை; எல்லா புறமத ஆசாரங்கள்; விளையாட்டுகள், காட்சி அரங்குகள்; உலகப்பிரகாரமான [புறமத செவ்விய] இலக்கியங்களைக் கற்பிக்கும் தொழில்; படைத்துறை சேவை; பொது பணிமுறைகள்.”—கிறிஸ்டியானிட்டி அன்ட் தி ரோமன் கவர்ன்மன்ட்.
ஆம், கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் ரோம உலகில் வாழ்வது கடினமாக இருந்தது. பிரஞ்சு கத்தோலிக்க நூலாசிரியர் A. ஆமான் எழுதுகிறார்: “ஒரு தெய்வத்தை எதிர்ப்படாமல் ஓர் அடி எடுத்துவைப்பது கூடாத காரியமாக இருந்தது. கிறிஸ்தவனுடைய நிலைநிற்கை அவனுக்குத் தினமும் பிரச்னைகளைக் கொண்டுவந்தது; அவன் சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்தான் . . . அவன் வீட்டிலும், தெருக்களிலும், சந்தையிலும் தொடர்ந்து பிரச்னைகளை எதிர்ப்பட்டான் . . . தெருவில், அவன் ரோம குடிமகனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு கிறிஸ்தவன் ஒரு கோயிலையோ ஒரு சிலையையோ கடந்து செல்லும்போது தன் தலையிலிருந்து தொப்பியை எடுக்கவேண்டியதாக இருந்தது. சந்தேகத்திற்கு இடமளிக்காமல், எப்படி அவன் அவ்வாறு செய்யாமல் இருக்கவும், அதேசமயத்தில் ஒரு பற்றுறுதிக்குரிய செயலைச் செய்யாமல் எவ்வாறு இசைந்துசெல்லவும் முடியும்? அவன் வியாபாரம் செய்பவனாக இருந்து பணத்தைக் கடனாக வாங்கத் தேவைப்பட்டால், பணம் கடன்கொடுப்பவரிடம் தெய்வங்களின்பேரில் ஆணையிட வேண்டும். . . . அவன் பொதுப்பணி பதவியை ஏற்றுக்கொண்டால், ஒரு பலியைச் செலுத்த எதிர்பார்க்கப்பட்டான். படையில் சேர்க்கப்பட்டால், அவன் ஆணையிடுவதையும் படைத்துறை சேவையின் சடங்குகளில் பங்கெடுப்பதையும் எவ்வாறு தவிர்க்க முடியும்?”—La vie quotidienne des premiers chrétiens (95-197) (பூர்வ கிறிஸ்தவர்கள் மத்தியில் தினசரி வாழ்க்கை, பொ.ச. 95-197).
நல்ல குடிமக்கள், இருந்தாலும் பழித்துக் கூறப்பட்டவர்கள்
சுமார் பொ.ச. 60 அல்லது 61-ல், பேரரசராகிய நீரோவால் விசாரணை செய்யப்படுவதற்காக பவுல் ரோமில் காத்திருந்தபோது, பூர்வ கிறிஸ்தவர்களைப்பற்றி முக்கியத்துவம்வாய்ந்த யூதர்கள் கூறினர்: “எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கி”றோம். (அப்போஸ்தலர் 28:22) கிறிஸ்தவர்கள் சாதகமற்ற முறையில்—ஆனால் அநியாயமாக அவ்விதத்தில்—பேசப்பட்டனர் என்று வரலாற்றுப் பதிவு உறுதியளிக்கிறது. கிறிஸ்தவத்தின் எழுச்சி (The Rise of Christianity) என்ற தன்னுடைய புத்தகத்தில் E. W. பார்ன்ஸ் விவரிக்கிறார்: “அதன் தொடக்க அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் கிறிஸ்தவ இயக்கம் முக்கியமாக ஒழுக்கரீதியிலானதும் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதுமானதாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் அங்கத்தினர்கள் நல்ல குடிமக்களாகவும் உண்மையுள்ள பிரஜைகளாகவும் இருக்க விரும்பினர். அவர்கள் புறமதங்களின் தவறுதல்கள் மற்றும் கீழ்த்தர செயல்களை விட்டுவிலகி இருந்தனர். தனிப்பட்ட வாழ்க்கையில், சமாதானமான அயலாராயும் நம்பகரமான நண்பர்களாயும் இருப்பதை நாடினர். அவர்கள் மட்டுமிதமானவர்களாக, உழைப்பாளிகளாக, சுத்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்கும்படி கற்பிக்கப்பட்டனர். நிலைத்திருக்கும் ஊழல் மற்றும் கட்டுப்பாடற்ற நிலைமைகளின் மத்தியில், அவர்கள் தங்களுடைய நியமங்களுக்கு உண்மைத்தன்மையுடன் இருந்தால், நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தார்கள். அவர்களுடைய பாலின தராதரங்கள் உயர்ந்தவையாக இருந்தன: திருமண கட்டு மதிக்கப்பட்டது, மேலும் குடும்ப வாழ்க்கை தூய்மையானதாக இருந்தது. அத்தகைய நற்குணங்களுடன் அவர்கள் தொந்தரவுமிக்க குடிமக்களாக இருந்திருக்க முடியாது என்று ஒருவர் யோசித்திருக்கலாம். இருந்தாலும், அவர்கள் நெடுங்காலமாக இகழப்பட்டு, பழித்துக்கூறப்பட்டு, வெறுக்கப்பட்டனர்.”
பூர்வ உலகம் இயேசுவைப் புரிந்துகொள்ளாததுபோலவே, அது கிறிஸ்தவர்களையும் புரிந்துகொள்ளவில்லை; ஆகையால் அவர்களை வெறுத்தது. அவர்கள் பேரரசரையும் புறமத தெய்வங்களையும் வணங்க மறுத்ததால், அவர்கள் நாத்திக கொள்கையினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டனர். ஓர் அழிவு நேரிட்டால், தெய்வங்களைக் கோபப்படுத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் ஒழுக்கக்கேடான விளையாட்டுகளை அல்லது காட்சியரங்குகளில் இரத்தம் சிந்தும் காட்சிகளைக் காணச்செல்லாததால், அவர்கள் சமூகத்திற்கு விரோதிகள் என்றும், ‘மனித இனத்தை வெறுப்பவர்கள்’ என்றுங்கூட எண்ணப்பட்டனர். இந்தக் கிறிஸ்தவ “மதப் பிரிவு” காரணமாகக் குடும்பங்கள் பிளவுபடுகின்றன, மேலும் அதனால் அது சமுதாயத்தின் நிலையான தன்மைக்கு ஓர் ஆபத்தாக இருக்கிறது என்றும் அவர்களுடைய எதிரிகள் வாதாடினர். தங்கள் மனைவிமார் கிறிஸ்தவர்களாவதைவிட விபசாரம் செய்வதைத் தெரிந்துகொண்ட புறமத கணவன்மாரைப்பற்றி டெர்ட்டுல்யன் பேசினார்.
அந்தச் சமயத்தில் பரவலாகச் செய்யப்பட்ட கருச்சிதைவுக்கு எதிராக இருந்ததற்காக கிறிஸ்தவர்கள் குறைகூறப்பட்டனர். இருந்தாலும், பிள்ளைகளைக் கொல்லுவதாக அவர்களுடைய எதிரிகள் அவர்களைக் குற்றஞ்சாட்டினர். தங்களுடைய கூட்டங்களில், பலியிடப்பட்ட பிள்ளைகளின் இரத்தத்தை அவர்கள் குடித்ததாக அறிக்கை செய்யப்பட்டது. அதே சமயத்தில், அவர்களுடைய எதிரிகள் அவர்களை இரத்தமடங்கிய உணவு பொருட்களைச் சாப்பிடும்படி வற்புறுத்த முயன்றனர்; இது அவர்களுடைய மனச்சாட்சிக்கு விரோதமானது என்று அவர்கள் அறிந்திருந்து அவ்வாறு செய்தனர். இவ்வாறு அவர்களை எதிர்த்தவர்கள் தங்கள் சொந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விரோதமாகச் செயல்பட்டனர்.—டெர்ட்டுல்யன், அப்பாலஜி, அதிகாரம் 9.
ஒரு புதிய மதப் பிரிவாக இகழப்பட்டது
சரித்திராசிரியரான கென்னத் ஸ்காட் லாட்யூரெட் எழுதினார்: “அதன் சமீப தோற்றம், கிறிஸ்தவர்கள் ஏளனத்திற்கு உள்ளாக்கப்படுவதற்கு மற்றொரு தொகுதியான குற்றச்சாட்டுகளாக அமைந்து, அதன் போட்டியாளர்களின் [யூதமதம் மற்றும் கிரேக்க-ரோம புற மதங்கள்] தொன்மையுடன் அதை வேறுபடுத்திக் காட்டியது.” (கிறிஸ்தவத்தின் விஸ்தரிப்பைப்பற்றிய ஒரு சரித்திரம், A History of the Expansion of Christianity, தொகுதி 1, பக்கம் 131) பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரோம சரித்திராசிரியரான ஸூட்டோனியஸ், கிறிஸ்தவத்தை “ஒரு புதிய, தீங்கான விளைவுகளுள்ள மூடநம்பிக்கை” என்று அழைக்கிறார். கிறிஸ்தவன் என்ற பெயர்தானே வெறுக்கப்பட்டது என்றும் கிறிஸ்தவர்கள் ஒரு விரும்பப்படாத மதப் பிரிவு என்றும் டெர்ட்டுல்யன் சான்றளித்தார். ரோம பேரரசின் அதிகாரிகள் கிறிஸ்தவர்களை நோக்கின விதத்தைப்பற்றி சொல்லும்போது, ராபர்ட் M. கிரான்ட் எழுதினார்: “கிறிஸ்தவம் வெறுமனே ஒரு தேவையற்ற, ஒருவேளை கெடுதி விளைவிக்கக்கூடிய ஒரு மதமாக இருந்தது என்ற அடிப்படை எண்ணமே இருந்தது.”—பூர்வ கிறிஸ்தவமும் சமுதாயமும் (Early Christianity and Society).
பலவந்தப்படுத்தி மதமாற்றுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்
தன்னுடைய புத்தகமாகிய லா பிரேம்யா ஸியாகல் டி லேக்லிஸ் (சர்ச்சின் தொடக்க நூற்றாண்டுகள்) என்பதில் சார்பான் பேராசிரியர் ஸான் பெர்னாடீ எழுதினார்: “[கிறிஸ்தவர்கள்] எல்லா இடங்களுக்கும் சென்று எல்லாரிடமும் பேச வேண்டியவர்களாய் இருந்தனர். நெடுஞ்சாலைகளிலும் நகரங்களிலும், வீதிகளிலும் வீடுகளிலும். வற்வேற்கப்பட்டாலும் வற்வேற்கப்படாவிட்டாலும். ஏழைகளிடமும் தங்களுடைய ஆஸ்திகளால் சுமத்தப்பட்டிருக்கும் செல்வந்தரிடமும். சிறியவர்களிடமும் ரோம மாகாணங்களின் ஆளுநர்களிடமும் . . . அவர்கள் சாலைகளிலும், கப்பலேறியும் பயணம்செய்து, பூமியின் கடையாந்தரங்களுக்குச் செல்லவேண்டும்.”
அவர்கள் இதைச் செய்தார்களா? சந்தேகமின்றி அவர்கள் செய்தனர். தங்களுடைய “ஆர்வமிக்க மதமாற்றுதல்” காரணமாக பூர்வ கிறிஸ்தவர்கள் பொதுமக்களின் கருத்தைத் தங்களுக்கு எதிரானதாகக் கொண்டிருந்தனர் என்று பேராசிரியர் லாயன் ஆமா தெரியப்படுத்துகிறார். பேராசிரியர் லாட்யூரெட், யூதர்கள் மதமாற்றம் செய்வதற்கான வைராக்கியத்தை இழந்திருக்கும்போது, “கிறிஸ்தவர்கள், மறுபட்சத்தில் தீவிரமான மிஷனரி உணர்வுள்ளவர்களாக இருந்ததால் கோபத்தைக் கிளறிவிட்டனர்.”
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில், ரோம தத்துவ அறிஞர் செல்சஸ் கிறிஸ்தவர்களின் பிரசங்கிக்கும் முறைகளில் குறைகண்டார். கிறிஸ்தவம் கல்லாதவர்களுக்கு என்றும், அது ‘வெறும் முட்டாள்கள், அடிமைகள், பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகளையே நம்பவைக்க முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். “எளிதில் ஏமாற்றப்படும் இயல்புடைய மக்கள்,” “பகுத்தறிவுடன் யோசிக்காமல் நம்பும்படி,” போதனைகளைக் கற்பிப்பதாக அவர் கிறிஸ்தவர்களைக் குற்றஞ்சாட்டினார். அவர்கள் தங்களுடைய புதிய சீஷர்களிடம், “கேள்விகளைக் கேட்காதீர்கள்; வெறுமனே நம்புங்கள்,” என்று சொன்னதாக வாதிட்டார். இருந்தாலும் ஆரிகன்னின்படி, செல்சஸ் தாமே, “வெறும் எளியவர்கள் மட்டுமே, இயேசுவின் மதத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவருடைய கோட்பாட்டால் வழிநடத்தப்படவில்லை,” என்று ஒப்புக்கொண்டார்.
கலப்பு விசுவாசமாக இல்லை
பூர்வ கிறிஸ்தவர்கள் ஒரே உண்மை கடவுளைப்பற்றிய சத்தியத்தைக் கொண்டிருப்பதாக உரிமைபாராட்டியதற்காகவும் மேலுமாகக் குறைகாணப்பட்டனர். அவர்கள் எல்லாவற்றையும் உட்படுத்திய அல்லது கலப்பு விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. லாட்யூரெட் எழுதினார்: “அந்தச் சமயத்திலிருந்த அநேக விசுவாசங்களுக்கு மாறாக, அவர்கள் [கிறிஸ்தவர்கள்] மற்ற மதங்களிடம் எதிரிடையான மனநிலையைக் கொண்டிருந்தனர். . . . ஓரளவிற்கு சகிப்புத்தன்மையைக் காண்பித்த மற்ற வழிபாட்டுமரபுகளின் பரந்த மனப்பான்மைக்கு மாறாக, தாங்கள் மறுக்கமுடியாத சத்தியத்தைக் கொண்டிருந்ததாக அறிக்கை செய்தனர்.”
பொ.ச. 202-ல், பேரரசராகிய செப்டீமீயஸ் செவரஸ், கிறிஸ்தவர்கள் மற்றவர்களை மதமாற்றம் செய்வதைத் தடுப்பதற்கான ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். இருந்தாலும், இது தங்கள் விசுவாசத்தைக்குறித்துச் சாட்சிகொடுப்பதிலிருந்து அவர்களை நிறுத்திவிடவில்லை. லாட்யூரெட் விளைவை விளக்குகிறார்: “அப்போதைய புறமதம் மற்றும் அந்தக் காலத்தின் அநேக சமூக வழக்கமுறைகளிலும் ஒழுக்க பழக்கவழக்கங்களிலும் ஒத்துப்போவதற்கான அதன் மறுப்பில், [பூர்வ கிறிஸ்தவம்], சமுதாயத்திற்கு எதிராகத் தன்னை வைக்கக்கூடிய ஓர் இசைவையும் ஓர் அமைப்பையும் வளர்த்தது. அதில் சேர்வதற்குத் தேவைப்பட்ட அந்தத் தொடர்பறுத்தல்தானே, அதன் ஆதரவாளர்களுக்கு ஓர் உறுதியளிப்பைக் கொடுத்தது; அது துன்புறுத்தலுக்கு எதிராகப் பலத்தின் ஊற்றுமூலமாகவும், வெற்றிகரமாக மதமாறியவர்களுக்கு வைராக்கியத்தின் ஊற்றுமூலமாகவும் அமைந்தது.”
ஆகவே, வரலாற்றுப் பதிவு தெளிவாக இருக்கிறது. பெரும்பாலும், பூர்வ கிறிஸ்தவர்கள், நல்ல குடிமக்களாகவும் எல்லா மனிதரோடும் சமாதானமாக வாழவும் முயற்சிசெய்கையில், “உலகத்தாரா”வதற்கு மறுத்தனர். (யோவான் 15:19) அவர்கள் அதிகாரிகளிடம் மரியாதையுடன் நடந்துகொண்டனர். ஆனால் அவர்கள் பிரசங்கிப்பதை ராயன் தடை செய்தபோது, அவர்களுக்குப் பிரசங்கிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் எல்லா மனிதரோடும் சமாதானமாக வாழ முயற்சிசெய்தனர்; ஆனால் ஒழுக்க தராதரங்களிலும் புறமத விக்கிரகாராதனையிலும் விட்டுக்கொடுக்க மறுத்தனர். இவை எல்லாவற்றிற்காகவும், இயேசு அவர்கள் என்ன செய்யப்படுவர் என்று முன்னறிவித்திருந்தபடியே இகழப்பட்டு, பழிதூற்றப்பட்டு, வெறுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார்கள்.—யோவான் 16:33.
அவர்கள் உலகத்திலிருந்து பிரிந்திருந்தது தொடர்ந்ததா? அல்லது காலப்போக்கில், கிறிஸ்தவத்தை அப்பியாசிப்பதாக உரிமைபாராட்டியவர்கள் இந்தக் காரியத்தில் தங்கள் மனநிலையை மாற்றிக்கொண்டார்களா?
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
“கிறிஸ்தவனுடைய நிலைநிற்கை அவனுக்குத் தினமும் பிரச்னைகளைக் கொண்டுவந்தது; அவன் சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்தான்”
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“கிறிஸ்தவம் அதன் சமீப தோற்றத்திற்காக ஏளனத்திற்கு [உள்ளாக்கப்பட்டது]; மேலும் அதன் போட்டியாளர்களின் தொன்மையுடன் . . . வேறுபடுத்திக் காட்டப்பட்டது”
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover: Alinari/Art Resource, N.Y.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
கிறிஸ்தவர்கள் ரோம பேரரசரையும் புறமத தெய்வங்களையும் வணங்க மறுத்ததால், அவர்கள் நாத்திக கொள்கையினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டனர்
[படத்திற்கான நன்றி]
Museo della Civiltà Romana, Roma
[பக்கம் 7-ன் படம்]
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ராஜ்ய செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கிப்பவர்கள் என்று அறியப்பட்டிருந்தனர்