பூர்வ கிறிஸ்தவமும் அரசாங்கமும்
இயேசு தம்முடைய மரணத்துக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும் நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.” (யோவான் 15:19) ஆனால் இந்த உலகத்தின் அதிகாரிகளிடமாக கிறிஸ்தவர்கள் விரோத மனப்பான்மையை ஏற்கவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா?
உலகப்பிரகாரமானவர்கள் அல்ல, ஆனால் விரோத மனப்பான்மை கொண்டவர்களும் அல்ல
அப்போஸ்தலன் பவுல் ரோமில் வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவர்களிடம் சொன்னார்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்.” (ரோமர் 13:1) அதேவிதமாகவே அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: “நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமை செய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மை செய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி கீழ்ப்படியுங்கள்.” (1 பேதுரு 2:13, 14) அரசாங்கத்துக்கும், சரியாகவே அதனால் நியமனம் செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் கீழ்ப்பட்டிருத்தல் என்பது பூர்வ கிறிஸ்தவர்கள் மத்தியில் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு நியமமாக இருந்தது. அவர்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிற குடிமக்களாக இருக்கவும் எல்லா மனிதரோடும் சமாதானமாக வாழவும் கடுமையாக முயற்சிசெய்தனர்.—ரோமர் 12:18.
“சர்ச்சும் அரசாங்கமும்” என்ற தலைப்பின்கீழ் தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் அறிவிப்பதாவது: “கிறிஸ்துவுக்குப்பின் முதல் மூன்று நூற்றாண்டுகளில், கிறிஸ்தவ சர்ச் அதிகாரப்பூர்வமான ரோம சமுதாயத்திலிருந்து அதிகமாக விலகியே இருந்தது . . . இருந்தபோதிலும் கிறிஸ்தவ தலைவர்கள் . . . கிறிஸ்தவ விசுவாசம் நிர்ணயித்திருக்கும் வரம்புகளுக்குள் ரோம சட்டத்துக்கு கீழ்ப்படிதலையும் பேரரசருக்கு உண்மைப்பற்றுறுதியாய் இருப்பதையும் கற்பித்தனர்.”
கனம் செய்தல், வணக்கம் அல்ல
கிறிஸ்தவர்கள் ரோம பேரரசரிடமாக விரோத மனப்பான்மை உள்ளவர்களாக இருக்கவில்லை. அவருடைய அதிகாரத்துக்கு அவர்கள் மரியாதை காண்பித்தார்கள், அவருடைய பதவிக்கு உரித்தாயிருந்த கனத்தை அவருக்கு செலுத்தினார்கள். பேரரசர் நீரோவின் ஆட்சி காலத்தின்போது, அப்போஸ்தலன் பேதுரு ரோம பேரரசின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; . . . ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.” (1 பேதுரு 2:17) கிரேக்க மொழிபேசும் உலகில் “ராஜா” என்ற வார்த்தை உள்ளூர் ராஜாக்களுக்கு மட்டுமல்லாமல், ரோம பேரரசருக்கும்கூட பயன்படுத்தப்பட்டது. ரோம பேரரசின் தலைநகரில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கூறிய அறிவுரையானது: “யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; . . . எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.” (ரோமர் 13:7) ரோம பேரரசர் அதிக நிச்சயமாகவே கனத்தைக் கேட்கிறவராக இருந்தார். காலப்போக்கில் அவர் வணக்கத்தையும்கூட கேட்கிறவராக இருந்தார். ஆனால் இங்கேதான் பூர்வ கிறிஸ்தவர்கள் ஒரு எல்லையை வகுத்தனர்.
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் ஒரு ரோம அதிபதிக்கு முன்பாக விசாரிக்கப்படுகையில் பாலிகார்ப் இவ்விதமாகச் சொன்னதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது: “நான் ஒரு கிறிஸ்தவன் . . . கடவுளால் நியமிக்கப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் . . . தகுதியான எல்லா கனத்தையும் கொடுக்க நாங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.” இருப்பினும் பேரரசரை பாலிகார்ப் வணங்குவதற்குப் பதிலாக மரிக்கவே தெரிந்துகொண்டார். தன் மதத்துக்காக வாதாடுபவராக இருந்த இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த அந்தியோகியாவின் தியாஃபிலஸ் இவ்வாறு எழுதினார்: “நான் பேரரசரை கனம்பண்ணுவேன், அவரை வணங்கமாட்டேன். ஆனால் அவருக்காக ஜெபம் பண்ணுவேன். ஆனால் கடவுளை, உயிருள்ள மற்றும் உண்மையான கடவுளை நான் வணங்குவேன்.”
பேரரசருக்காக செய்யப்படும் பொருத்தமான ஜெபங்கள் நிச்சயமாகவே பேரரசர் வணக்கத்தோடு அல்லது தேசப்பற்றோடு சம்பந்தப்பட்டவையாக இல்லை. அப்போஸ்தலன் பவுல் அவற்றின் நோக்கத்தை விளக்கினார்: “நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும். நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.”—1 தீமோத்தேயு 2:1, 2.
“சமுதாயத்தின் விளிம்பில்”
பூர்வ கிறிஸ்தவர்களின் பங்கில் இருந்த இந்த மரியாதைக்குரிய நடத்தை, அவர்கள் வாழ்ந்துவந்த உலகத்தின் நட்பை அவர்களுக்குக் கொண்டுவரவில்லை. பிரெஞ்சு சரித்திராசிரியர் ஏ. ஆமா, பூர்வ கிறிஸ்தவர்கள் “சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்துவந்தனர்,” என்பதாக குறிப்பிடுகிறார். அவர்கள் உண்மையில் யூத மற்றும் ரோம சமுதாயங்கள் இரண்டின் விளிம்பிலும் வாழ்ந்து, இரு சாராரிடமிருந்தும் அதிகமான தப்பெண்ணத்தையும் தவறான புரிந்துகொள்ளுதலையும் எதிர்ப்பட்டனர்.
உதாரணமாக, யூத தலைவர்களால் அப்போஸ்தலன் பவுல் பொய்யாய் குற்றஞ்சாட்டப்பட்டபோது, ரோம அதிபதியின் முன்னால் குற்றச்சாட்டுக்கு எதிராக விளக்கமளிக்கையில் இவ்வாறு சொன்னார்: “நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை . . . இராயருக்கு அபயமிடுகிறேன்.” (அப்போஸ்தலர் 25:8, 11) யூதர்கள் தன்னைக் கொலைசெய்ய சதிசெய்வதை உணர்ந்தவராய், பவுல் இராயருக்கு அபயமிட்டு, இவ்விதமாக ரோம பேரரசரின் அதிகாரத்தை ஒப்புக்கொண்டார். அதை அடுத்து, ரோமில் அவருடைய முதல் விசாரணையின்போது பவுல் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று தெரிகிறது. ஆனால் பின்னால் அவர் மறுபடியுமாக கைதுசெய்யப்பட்டார், பாரம்பரியம் சொல்லுகிறபடி, அவர் நீரோவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்.
ரோம சமுதாயத்தில் இருந்த பூர்வ கிறிஸ்தவர்களின் கடினமான நிலைமையைக் குறித்து மனித சமுதாய வளர்ச்சியின் ஆய்வாளரும் இறையியலருமான எர்னஸ்ட் ட்ரால்ச் எழுதினார்: “விக்கிரகாராதனையோடு, அல்லது பேரரசர் வணக்கத்தோடு அல்லது எந்த இரத்தஞ்சிந்துதலோடு அல்லது கொலை தண்டனையோடு அல்லது புறமத ஒழுக்கக்கேட்டோடு கிறிஸ்தவர்களைத் தொடர்புகொள்ளச் செய்யும் எல்லா அலுவல்களும் தொழில்களும் தடைசெய்யப்பட்டிருந்தன.” இந்நிலையானது, கிறிஸ்தவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் சமாதானமான மற்றும் பரஸ்பர மரியாதைக்குரிய உறவுக்கு இடமில்லாமல் போகும்படி செய்ததா?
இராயனுக்குரிய ‘கடமைகளை’ செலுத்துதல்
ரோம அரசாங்கத்திடமாக அல்லது உண்மையில் வேறு எந்த ஒரு அரசாங்கத்திடமாகவும் ஒரு கிறிஸ்தவனின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் ஒரு விதிமுறையை இயேசு அளித்து இவ்விதமாக அறிவித்தார்: “இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மத்தேயு 22:21) இயேசுவை பின்பற்றினோருக்கு கொடுக்கப்பட்ட இந்தப் புத்திமதி, ரோம ஆதிக்கத்தைக் குறித்து ஆத்திரமடைந்து அந்நிய ஆட்சிக்கு வரி செலுத்துவது நியாயமா என்பதைக் குறித்து வாக்குவாதம் செய்துகொண்டிருந்த தேசியவாதிகளான அநேக யூதர்களின் மனப்பான்மைக்கு தெளிவாகவே எதிரிடையாக இருந்தது.
பின்னால், ரோமில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களிடம் பவுல் இவ்வாறு சொன்னார்: “ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் [அரசாங்க ‘மேலான அதிகாரங்கள்’] இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவ ஊழியக்காரராயிருக்கிறார்களே. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்.” (ரோமர் 13:5-7) கிறிஸ்தவர்கள் உலகத்தின் பாகமாக இல்லாத போதும், அவர்கள் நேர்மையானவர்களாக, செய்யப்பட்ட சேவைகளுக்காக அரசாங்கத்துக்கு வரிசெலுத்தும் குடிமக்களாக இருக்கவேண்டும்.—யோவான் 17:16.
ஆனால் வரிசெலுத்துவதற்கு மாத்திரமே இயேசுவின் வார்த்தைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனவா? இராயனுடையது எது மற்றும் கடவுளுடையது எது என்பதை இயேசு நுட்பமாக விவரிக்காத காரணத்தால், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப அல்லது முழு பைபிளை நாம் புரிந்துகொண்டிருப்பதற்கு ஏற்ப தீர்மானிக்கவேண்டிய வரம்புக்கருகிலுள்ள விஷயங்கள் இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், இராயனுக்கு ஒரு கிறிஸ்தவன் என்ன காரியங்களைச் செலுத்தலாம் என்பதைத் தீர்மானிப்பது, சில சமயங்களில் பைபிள் நியமங்களால் அறிவொளியூட்டப்பட்ட அந்தக் கிறிஸ்தவனின் மனச்சாட்சியை உட்படுத்துவதாக இருக்கும்.
போட்டியிடும் இரண்டு உரிமைகோரிக்கைகளுக்கு இடையே கவனமுள்ள ஒரு சமநிலை
இராயனுடையதை அவனுக்குச் செலுத்த வேண்டும் என்பதாக சொன்னபிறகு, “தேவனுடையதை தேவனுக்குச் செலுத்துங்கள்,” என்பதாக இயேசு கூடுதலாக சொன்னதை அநேக ஆட்கள் மறந்துவிடும் மனச்சாய்வுடையவர்களாக இருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதை அப்போஸ்தலன் பேதுரு காண்பித்தார். “ராஜா”வுக்கு அல்லது பேரரசருக்கு மற்றும் அவருடைய “அதிபதி”களுக்கு கீழ்ப்பட்டிருக்கும்படியாக புத்திமதி சொன்னப்பின்பு உடனடியாக பேதுரு இவ்வாறு எழுதினார்: “சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.” (1 பேதுரு 2:16, 17) கிறிஸ்தவர்கள் கடவுளுக்கே அடிமைகள், ஒரு மனித ஆட்சியாளருக்கு அல்ல என்பதை அப்போஸ்தலன் காண்பித்தார். அரசாங்க பிரதிநிதிகளுக்குச் சரியான கனத்தையும் மரியாதையையும் அவர்கள் காண்பிக்க வேண்டியிருக்கையில் அதை அவர்கள் கடவுளுக்குப் பயந்துசெய்ய வேண்டும், அவருடைய சட்டங்களே உன்னதமானவை.
பல வருடங்களுக்கு முன்னரே பேதுரு, மனிதனுடைய சட்டத்துக்கு மேலாக கடவுளுடைய சட்டம் பிரதானமானது என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தார். யூத ஆலோசனை சங்கம் ஒரு நிர்வாக குழுவாக இருந்தது, ரோமர்கள் அதற்கு சமூக மற்றும் மத சம்பந்தமான அதிகாரத்தை வழங்கியிருந்தனர். கிறிஸ்துவின் நாமத்திலே போதிப்பதை நிறுத்திவிடும்படியாக இயேசுவை பின்பற்றுவோருக்கு அது உத்தரவிட்டபோது, பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் மரியாதையுடன் ஆனால் உறுதியாக, “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் [“அரசராக,” NW] தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது,” என்பதாக பதிலளித்தார்கள். (அப்போஸ்தலர் 5:29) பூர்வ கிறிஸ்தவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கும் மனித அதிகாரங்களுக்கு சரியாக கீழ்ப்பட்டிருப்பதற்குமிடையே கவனமான சமநிலையைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது தெளிவாயிருக்கிறது. பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டெர்ட்டுல்லியன் இவ்விதமாகக் குறிப்பிட்டார்: “எல்லாம் இராயனுடையதாக இருந்தால், கடவுளுக்கு என்ன மீந்திருக்கும்?”
அரசாங்கத்தோடு ஒத்துப்போதல்
காலம் செல்ல செல்ல, அரசாங்கத்தின் சம்பந்தமாக முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏற்றிருந்த நிலைநிற்கை படிப்படியாக பலவீனமானது. இயேசுவும் அப்போஸ்தலரும் முன்னுரைத்திருந்த விசுவாசதுரோகம் பொ.ச. இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் மலர்ந்தது. (மத்தேயு 13:37, 38; அப்போஸ்தலர் 20:29, 30; 2 தெசலோனிக்கேயர் 2:3-12; 2 பேதுரு 2:1-3) விசுவாசதுரோக கிறிஸ்தவம் ரோம உலகத்தோடு ஒத்துப்போனது, அதன் புறமத பண்டிகைகளையும் அதன் தத்துவத்தையும் தனதாக்கிக்கொண்டது, மேலும் குடிமுறை அரசுப் பணியை மட்டுமல்லாமல் இராணுவ சேவையையும்கூட ஏற்றுக்கொண்டது.
பேராசிரியர் டிரால்ச் இவ்விதமாக எழுதினார்: “மூன்றாவது நூற்றாண்டு முதற்கொண்டு நிலைமை அதிக கடினமாக ஆனது, ஏனென்றால் சமுதாயத்தின் உயர் பதவிகளிலும் அதிக பிரசித்திபெற்ற தொழில்களிலும் படைப்பிரிவிலும் அலுவலக வட்டாரங்களிலும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் அதிகமானார்கள். [பைபிள் சாராத] கிறிஸ்தவ எழுத்துக்களின் பல பகுதிகளில் இந்தக் காரியங்களில் பங்குகொள்வதற்கு எதிராக கோபாவேசத்தோடு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. மறுபட்சத்தில், ஒத்துப்போவதற்கு செய்யப்பட்ட முயற்சிகளையும்கூட நாம் காண்கிறோம்—அரசாங்கத்தோடு ஒத்துப்போவது குறித்த விஷயத்தில் மனச்சாட்சியின் உறுத்தலைத் தணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விவாதங்கள் . . . கான்ஸ்டன்டைன் காலம் முதற்கொண்டு இந்தச் சங்கடங்கள் மறைந்துபோயின; கிறிஸ்தவர்களுக்கும் புறமதத்தினருக்கும் இடையே இருந்த கொள்கை பிணக்குகள் முடிவுக்கு வந்தன, அரசாங்கத்தில் எல்லா அலுவல்களும் கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டியவர்களுக்குத் திறந்து வைக்கப்பட்டன.”
பொ.ச. நான்காம் நூற்றாண்டின் முடிவில், கலப்படம் செய்யப்பட்ட ஒத்துப்போகின்ற இந்த வகையான கிறிஸ்தவம் ரோம பேரரசின் அரசாங்க மதமாயிற்று.
அதன் வரலாறு முழுவதிலுமாக—கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும்—கிறிஸ்தவமண்டலம் தொடர்ந்து அரசாங்கத்தோடு ஒத்துப்போயும் அதன் அரசியலில் ஆழமாக உட்பட்டும், அதன் போர்களில் அதை ஆதரித்தும் வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்திருக்கும் அநேக உண்மை மனதுள்ள சர்ச் அங்கத்தினர்கள், அரசாங்கத்தோடு தங்களுடைய உறவில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் நிலைநிற்கையைக் கடைப்பிடிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று இருக்கிறார்கள் என்பதை அறிவதில் மகிழ்ச்சி அடைவர் என்பதில் சந்தேகமில்லை. பின்வரும் இரண்டு கட்டுரைகள் இந்த விஷயத்தை அதிக விவரமாக கலந்தாலோசிக்கும்.
[பக்கம் 5-ன் படம்]
“ராஜாவைக் கனம்பண்ணுங்கள்,” என்று பேதுரு யாரைப்பற்றி எழுதினாரோ அந்த இராயன் நீரோ
[படத்திற்கான நன்றி]
Musei Capitolini, Roma
[பக்கம் 6-ன் படம்]
பேரரசரை பாலிகார்ப் வணங்குவதற்குப் பதிலாக மரிக்கவே தெரிந்துகொண்டார்
[பக்கம் 7-ன் படம்]
பூர்வ கிறிஸ்தவர்கள் சமாதானமான, நேர்மையான, வரிகொடுக்கும் பிரஜைகளாக இருந்தனர்