ஒரு மரத்தின் ஆச்சரியமான நீர் இறைக்கும் இயந்திரம்
ஒரு மரத்தின் உச்சியிலுள்ள இலைகளுக்குத் தண்ணீரும், சத்துப் பொருட்களும் பொதுவாக ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான காலன்கள் தேவைப்படுகின்றன. இவை மேலே இறைக்கப்பட வேண்டும். ஆனால் எப்படி?
“இந்த ஆச்சரியமான இறைக்கும் செயல், இலட்சக்கணக்கான நுண்ணிய வேர் இழைகள் நீரையும், கரைந்த தாது உப்புக்களையும் உறிஞ்சுவதன் மூலம் பூமிக்கு அடியிலேயே ஆரம்பிக்கிறது,” என்று கம்ப்ரஸ்ட் ஏர் மேகசின் [Compressed Air Magazine] விளக்குகிறது. “நீர் உட்கொள்ளப்படும் போது, இலைகளில் குறைவு ஏற்பட்டு, அது தண்டுகளில் மேல்நோக்கிச் சென்று சொல்லர்த்தமாக நிலத்திலிருந்து இன்னும் அதிக நீரை இழுக்கிறது. மனிதனால் செய்யப்பட்ட எந்த வெற்றிட பம்பும் சுமார் 32 அடிக்கு அப்பால் நீரை இழுக்க முடியாது.” ஆனால் ஒரு மரத்தின் நீர் இறைக்கும் முறையைப் பற்றியென்ன?
தேவைப்பட்டால் ஒரு மரத்தில் சுமார் இரண்டு மைல்கள் உயரத்திற்கும் நீர் உயர்த்தப்படக்கூடும் என்று சொல்லப்படுவது மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்! ஒரு பிரபல பம்புகள் தயாரிப்பவர் விளம்பரம் ஒன்றில் சர்க்கரை தரும் நிழல்தரு மரவகையான மாப்பில் மரத்தின் “ஆச்சரியமான நீர் இறைக்கும்” இயந்திரத்திற்குக் கவனத்தை ஈர்த்து: “பொறுமையிலும், உழைப்பிலும் நாம் இயற்கைக்கு ஈடு கொடுக்க முடியாது,” என்று ஒத்துக்கொள்கிறார். (g88 8⁄22)