ஆப்பிரிக்காவின் வியப்பூட்டும் “ஜீவ விருட்சம்”
டான்ஜானியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
“உலகின் எந்தப் பாகத்திலும் இதுபோன்ற ஒன்றை பார்க்கமுடியும் என்பதை என்னால் ஒருபோதும் நம்ப முடியாது.” பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிஷல் அடான்சன் 1749-ல் செனிகல் சென்றபோது பார்த்தது என்ன? அது ஒரு விருட்சம்! சுமார் 20 மீட்டர் உயரம், 8 மீட்டர் விட்டம் கொண்ட மிகப் பெரிய அகன்ற அடிமரம். டேவிட் லிவிங்ஸ்டன் அந்த விருட்சத்தை “தலைகீழாக நடப்பட்ட காரட்” என்பதாக பின்னால் குறிப்பிட்டார்.
கட்டுக்கதையின் பிரகாரம், “பிசாசு [அந்த விருட்சத்தை] பிடுங்கி, அதன் கிளைகளை பூமிக்குள் தள்ளி அதன் வேர்களை ஆகாயத்தில் விட்டுவிட்டான்.” இதன் காரணமாக அநேகர் இந்த விருட்சத்தை “தலைகீழாக நிற்கும் மரம்” என்ற பெயரால் அறிவர். அதைக் கண்டுபிடித்தவர் பெயரால், அடான்சோனியா டிஜிட்டேட்டா என்பதாக லத்தீனில் அது அழைக்கப்படுகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் அதை பேயோபாப் என்றழைக்கிறோம். மடகாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியாவிலும்கூட இதைவிட அதிக உயரமான மரங்கள் காணப்பட்ட போதிலும் இது கிழக்கு ஆப்பிரிக்காவின் மிகப் பிரபலமாக அறியப்பட்ட மரங்களில் ஒன்றாகும்.
தலைகீழாக நிற்கும் மரம்
டான்ஜானியாவின் நாட்டுப்புற பகுதிகளின் வழியாக பல மணிநேரங்கள் பயணம் செய்தோம். வைக்கோல் கூரை வேயப்பட்ட குடில்கள், தங்கள் தலைகளின்மீது விறகுக் கட்டையைச் சுமந்துசெல்லும் பெண்கள், மாமரத்தடியில் விளையாடும் பிள்ளைகள், தங்கள் மந்தையை மேய்த்துக்கெண்டிருக்கும் மேய்ப்பர்களோடு கண்ணுக்கினிய கிராமங்களைப் பார்ப்பது ஆனந்தமாக இருந்தது. கடைசியாக 18-வது நூற்றாண்டில் அடான்சன் பார்த்ததை நாங்கள் பார்க்கிறோம்.
“அதோ அவை அங்கே!” என்பதாக மார்ஜிட் உரக்க சொல்லுகிறாள். மிகப் பெரிய, கம்பீரமான பேயோபாப் வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக காணப்படுகிறது. சவானாவில், கரையோரமாகவும் கிளிமஞ்சாரோ மலைச்சரிவுகளிலும் இவை வளருகின்றன. “நான் எக்காலத்திலும் பார்த்திருக்கும் வேறு எந்த மரத்தையும் போல் இது இல்லை,” என்பதாக எங்கள் கூட்டாளிகளில் ஒருவர் சொல்கிறார். சாம்பல் நிறத்திலும் மிகப் பெரியதாகவும் இருக்கும் இந்தப் பேயோபாப் ஐந்திலிருந்து பத்து சென்டிமீட்டர் தடிமனாக இருக்கும் மரப்பட்டையைக் கொண்ட ஒரு தாவரமாகும். “அது உண்மையிலேயே தலைகீழாக நடப்பட்ட ஒரு மரம் போன்று இருக்கிறது!” வருடத்தில் முக்கியமாக, வறட்சியான காலத்தில் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு கொஞ்சம்கூட விருட்சத்தில் இலைகள் இருப்பதில்லை. மரம் எவ்வாறு தொடர்ந்திருக்கிறது? விஷயம் தெரிந்த எவராவது ஒருவரை நாம் ஏன் கேட்கக்கூடாது.
பேயோபாப் வளரும் பகுதிகள் வழியாக நாங்கள் பயணம் செய்கையில், கடைசியாக உள்ளூர்வாசியான ஷெம்மிடம் பேச்சுக்கொடுக்கிறோம். “இது ஒரு புட்டி மரம்,” என்பதாக அந்த மனிதன் சொல்கிறான். ஒரு புட்டி மரமா? “ஆம், குறுகிய மழைக்காலத்தின் போது, விருட்சத்தின் உறிஞ்சும் பண்புள்ள நார்கள் அதிக அளவான தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு, வறட்சியான காலத்துக்காக அதை அடிமரத்தில் சேமித்து வைத்துக்கொள்கிறது.” பேயோபாப்—அடான்சோனியா டிஜிட்டேட்டா பிரசுரம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அடிமரத்தின் மேற்பாகம் உட்புழையாக உள்ளது, மழைத் தண்ணீரும் பனித்துளியும் தேங்கி நிற்கிறது, இதுவே பல மைல் தூரத்துக்குக் கிடைக்கும் தண்ணீராக இருக்கலாம். . . . அடிமரம் அதிகமான தண்ணீரைக் கொண்டுள்ளது. சுமார் 200 சதுர மீட்டர் [7,000 சதுர அடி] உயரமான ஒரு விருட்சம் 1,40,000 லிட்டர் [37,000 காலன்] தண்ணீரைக் கொண்டிருக்கக்கூடும் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. . . . வெட்ட முடிந்த அடிமரக் கட்டைகளைத் துண்டித்து குடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரைப் பிழியலாம்.” ஷெம் தமாஷாக சொல்கிறார்: “அது மிகப் பெரிய விருட்சம், ஆனால் அதன் இதயம் மென்மையானது.” இதற்குள் இன்னும் அதிகமான கிராமவாசிகள் அருகில் வந்து உரையாடலை ஆவலாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். “பேயோபாப் ஜீவ விருட்சம் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்பதாக இம்மான்யல் கேட்டார்.
“ஜீவ விருட்சம்”
உள்ளூர்வாசிகள் பலருக்கு விருட்சம் கடவுளிடமிருந்து வந்த பரிசாக இருக்கிறது. ஏன்? “முதலாவது அதனால் மிகவும் நீண்ட காலம் வாழமுடிகிறது. ஒருவேளை ஓராயிரம் அல்லது அதற்கும் அதிகமாக,” என்பதாக ஒரு கிராமவாசி தொடருகிறார். “அது எங்களுக்கு உணவு, தண்ணீர், துணிமணிகள், கூரைக்குத் தேவையான பொருள், பசை, மருந்து, உறைவிடம், கழுத்து மாலை, பிள்ளைகளுக்கு மிட்டாய்களைக்கூட கொடுக்கிறது.” விறகைப் பற்றி என்ன? “இல்லை, தண்ணீர் நிரம்பியிருப்பதால் அது ஈரமாக உள்ளது. நாங்கள் பொதுவாக அதற்காக வேறு மரங்களைப் பயன்படுத்துகிறோம்.” இளம் டேனியேல் சொல்கிறான்: “ஆனால் எங்களுடைய கயிறுகளையும் நூலையும் செய்வதற்கு மரப்பட்டையைப் பயன்படுத்துகிறோம்.” அதற்கும் மேலாக, அது வலைகள், பாய்கள், துணி, தொப்பிகள், சிறு படகுகள், தட்டுகள், பெட்டிகள், கூடைகள் மற்றும் பேப்பர் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மரப்பட்டையிலிருந்து வரும் சாம்பல் உரமாக பயன்படுத்தப்படலாம், அநேகர் அதிலிருந்து சோப்பு தயாரிக்கின்றனர். “இளந்தளிர்களையும் இலைகளையும் சாப்பிடலாம்,” என்பதாக தன் முதுகில் ஒரு குழந்தையை சுமந்துகொண்டிருக்கும் இளம் தாய்மார்களில் ஒருத்தி சொல்கிறாள். “நாங்கள் விதைகளையும் வறுத்து காப்பிக்காக அதை பயன்படுத்துகிறோம். விதைப்பருப்பு பீர் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது, எண்ணெயும்கூட அதிலிருந்து பிழிந்தெடுக்கப்படலாம்.”
குறுகியதாக இருக்கும் மழைக்காலத்தின்போது, விருட்சத்தில் அழகிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்றன. ஆனால் அதன் நறுமணம் அத்தனை அழகாக அதன் தோற்றத்தைப் போல இல்லை! பிந்திய பிற்பகல் முதல் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் வரையாக அவை மலர ஆரம்பித்து, அடுத்த நாள் காலையில் முழுமையாக மலர்ந்துவிடுகின்றன. இரவின் போது பழம் உண்ணும் வெளவால்கள் மகரந்தச் சேர்க்கைக்காக கவர்ந்திழுக்கப்படுகின்றன. உள்ளூர்வாசிகள் பூவின் மகரந்தத்தைத் தண்ணீரில் கலந்து அதைப் பசைப்பொருளாக பயன்படுத்துகின்றனர். (40 சென்டிமீட்டர்) நீளமுள்ள பழம் காம்பிலிருந்து தொங்குகிறது. பச்சை நிற பழத்தை நாங்கள் தொட்டுப்பார்க்கிறோம், அது வெல்வெட்டைப் போல இருக்கிறது. அது குரங்கின் வால் போல தோற்றமளிக்கிறது. “ஆ, அதன் காரணமாகவே விருட்சம் குரங்கு-அப்ப விருட்சம் என்றும்கூட அழைக்கப்படுகிறது!” பழத்தை வெட்டி உள்ளே பார்ப்போமா? ஏன் கூடாது!
“சாம்பர இருபுளியகி”
விதையைச் சுற்றி, வைட்டமின் சி, வைட்டமின் பி1 மற்றும் கால்சியம் சத்து அதிகமாயுள்ள வெள்ளை நிற பழச் சுளை உட்பொதிந்து இருக்கிறது. சுடும்போது, சுளையை சாம்பர இருபுளியகிக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதன் காரணமாகவே சிலர் அதை சாம்பர இருபுளியகி என்பதாக அழைக்கின்றனர். ஷெம் சொல்கிறார்: “சுளையிலிருந்து சில சமயங்களில் நாங்கள் பானங்களைத் தயாரிக்கிறோம். அது எலுமிச்சைப் பழத்தைப் போல சுவைக்கிறது.” அதன் காரணமாகவே மற்ற ஆட்கள் அதை எலுமிச்சை மரம் என்பதாக அழைக்கின்றனர். வேறு எதற்காக அது பயன்படுத்தப்படுகிறது?
ஷெம் பதிலளிக்கிறார்: “விருட்சத்தில் எல்லா பாகங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். பழத்தின் ஓட்டை மீன் பிடிக்கும் மிதவையாக, பெரிய கரண்டியாக, சூப் கிண்ணமாக பயன்படுத்துகிறோம், அதை நல்ல எலிப் பொறி செய்யவும் உபயோகிக்கிறோம். எங்களுடைய கால்நடைகளுக்குப் பூச்சிகள் தொல்லை கொடுக்கும்போது, நாங்கள் வெறுமனே பழச்சுளைகளை எரிக்கிறோம், அந்தப் புகையில் அவை ஓடிவிடுகின்றன. சில சமயங்களில் மாவாக்கப்பட்ட சுளையை பாலோடு சேர்த்து நேர்த்தியான யோகர்ட்டைப் பெற்றுக்கொள்கிறோம்.” மருந்து பற்றி என்ன? “நிச்சயமாகவே, விருட்சம் எங்களுக்கு மருந்தகமாகும்,” என்று சொல்லி ஷெம் சிரிக்கிறார்.
பேயோபாப் மருந்தகம்
அதை எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? “எல்லாவற்றுக்கும்!” அதன் பல்வேறு பயன்பாடுகளின் காரணமாக, அநேக உள்ளூர்வாசிகள் விருட்சத்தை மதிப்பதையும் அதற்குப் பயப்படுவதையும் ஆம், அதை வணங்குவதையும்கூட குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. பால்கொடுக்கும் தாய்மார் வயிறு வீக்கம், பேதி, மற்றும் ஜுரத்திலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க பவுடர் செய்யப்பட்ட பழச்சுளையைப் பாலோடுக் கலந்து கொடுக்கின்றனர். விருட்சத்திலிருந்து பெறப்பட்ட “மருந்து” உள்ளூர் சந்தையில் விற்கப்படுகிறது, இது வீக்கம், பல்வலி இன்னும் மற்ற நோய்களைக் குணப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. உள்ளூரில் அது இரத்த சோகை, வயிற்றுப் போக்கு, சளிக்காய்ச்சல், ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறுகள், மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கட்டிகளுக்கும்கூட சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
அசாதாரணமான இந்த விருட்சத்தைச் சுற்றி கட்டுக்கதைகளும் புராணக்கதைகளும் உள்ளன. சிலர் நினைக்கின்றனர்: “[பேயோபாப்] இருக்கும் நிலம், விற்கப்படக்கூடாது, ஏனென்றால் அது இருப்பது நல்ல சகுனமாக நம்பப்படுகிறது. . . . விருட்சத்திலிருந்து ஒரு பூவைப் பறிக்க துணிச்சல்கொள்ளும் எவரையும் சிங்கம் விழுங்கிவிடும் என்பதாக மற்றொரு கட்டுக்கதைக் கூறுகிறது. இந்தப் பூக்களில் ஆவிகள் குடியிருப்பதாக நம்பப்படுகிறது. விருட்சத்தின் விதைகள் ஊறவைக்கப்பட்டு கலக்கப்படும் தண்ணீர் முதலை தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது என்றும் மரப்பட்டைச் சாரைக் குடிப்பவர்கள் திடகாத்திரமாகவும் பலமுள்ளவராகவும் வளருவர் என்பதாகவும்கூட சொல்லப்படுகிறது.”—பேயோபாப்—அடான்சோனியா டிஜிட்டேட்டா.
பிள்ளைகளுக்கு மிட்டாய்கள்
பேயோபாப் தேசத்திலுள்ள உள்ளூர்வாசிகளிடமிருந்து நாம் அநேக புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது, டார் எஸ் சலாமில், நவீனாவையும் சுமாவையும் கெவினையும் பார்க்கிறோம். அவர்கள் எதை மென்று உறிஞ்சுகிறார்கள் என்பதை ஊகிக்க முடிகிறதா? பேயோபாப் விதைகள்! சிவப்பு நிற விதைகள் சாலையோரத்தில் மிட்டாய்களாக விற்கப்படுகின்றன, இந்தப் பிள்ளைகள் இதை மிகவும் விரும்புவதாகத் தெரிகிறது. “அது புளிக்கிறதா?” “கொஞ்சம் புளிக்கிறது, ஆனால் எங்களுக்குப் பிடித்திருக்கிறது!” என்பதாக ஒரே குரலில் பிள்ளைகள் சொல்கிறார்கள். “தயவுசெய்து கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள்! சுவைத்துப் பாருங்கள்!” ஆம், ஏன் ஆப்பிரிக்காவின் ‘ஜீவ விருட்சத்திலிருந்து’ எதையாவது சுவைத்துப் பார்க்கக்கூடாது?
[பக்கம் 24-ன் படம்]
பேயோபாப், பல்பயன்களுள்ள விருட்சம்
[பக்கம் 24-ன் படம்]
விதைகள் மிட்டாய்களாக பயன்படுகின்றன, காப்பிக்காக வறுக்கப்படுகின்றன
[பக்கம் 25-ன் படம்]
அதன் புஷ்பங்கள் பெரிதாக உள்ளன
[பக்கம் 25-ன் படம்]
வறட்சியான காலத்தில் இலைகள் இருப்பதில்லை