மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 1: பொ.ச.மு. 4026–2370 மத வேற்றுமை அது எப்படி ஆரம்பித்தது
“தன்னுடைய ஆக்க அமைவுபடி மனிதன் ஒரு மத விலங்கு.”—எட்மண்டு பர்க், 18-வது நூற்றாண்டு அயர்லாந்து அரசியல் மேதகை
மனிதர் வணங்குவதற்கான ஓர் உள்ளுணர்வுத் தேவையைக் கொண்டிருக்கின்றனர். தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (The New Encyclopœdia Britannica) கூறுகிறதாவது, “அறிஞர்கள் கண்டுபிடித்திருப்பதைப் பார்க்கும்போது, ஏதோ ஒரு வகையில் அல்லது கருத்தில் மத பற்றில்லாதவர் எந்தச் சமயத்திலும், எந்த இடத்திலும் இருந்ததில்லை.” முறையாகவே மனிதவர்க்கத்தின் ஆரம்பத்திலிருந்தே மனுஷனும் மனுஷியும் வழிபடுவதற்காகத் தங்களுடைய சிருஷ்டிகரிடம் திரும்பியிருக்கின்றனர். தங்களுக்கு வழிநடத்துதலையும் ஆலோசனையையும் கொடுக்க அவரையே அதிகாரியாக ஏற்று அவரிடமே திரும்பினர். இப்படியாக, எல்லா எண்ணங்களுக்கும் நோக்கங்களுக்குமாக, மதம் பூமியில் தோன்றியிருப்பது ஆதாமின் சிருஷ்டிப்புடன் இணைந்ததாக இருக்கிறது. பைபிள் கால கணக்குப்படி, இது பொ.ச.மு. 4026-ம் ஆண்டு சம்பவித்தது.
“ஆதாமின் சிருஷ்டிப்பு” என்ற தொடருக்குச் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். ஆனால் நிரூபிக்கப்பட்டிராத பரிணாமக் கோட்பாடு அண்மையில் கடுமையான குறைகளைச் சந்தித்திருக்கிறது. இவை அவற்றின் சொந்த ஆதரவாளர்களிடமிருந்தே வந்திருக்கின்றன. கூடுதல் தகவலுக்கு காவற்கோபுர பைபிள் மற்றும் துண்டுபிரதி சங்கம் ஆங்கிலத்தில் பிரசுரித்திருக்கும் உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா? (Life—How Did It Get Here? By Evolution or by Creation?) என்ற நூலைப் பார்க்கவும்.
இன்று, மனிதவர்க்கம் ஒரு பொது ஆரம்பத்தைக் கொண்டிருக்கிறது என்ற பைபிள் பதிவு அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று ஒருவர் உண்மைகள் கொண்டு வாதிட முடியாது. நவீன மனிதன் ஒரு தாயின் வழியே தோன்றியவன் என்பதை மரபுவழிப்பண்பியல் ஒப்புக்கொள்ளும் போக்கில் இருக்கிறது என்று 1988 நியூஸ் வீக் (News Week) பத்திரிகையின் கட்டுரை ஒன்று அறிக்கைசெய்தது. ஹார்வார்டு புதைபடிவ ஆய்வு நூலர் S. J. கோல்டு, “மனிதர் எல்லாரும், வெளித் தோற்றத்தில் வித்தியாசங்கள் இருந்தபோதிலும், அண்மையில் ஒரே இடத்தில் ஆரம்பத்தைக் கொண்டிருந்த ஓர் உயிரின் அங்கத்தினர்களாகவே இருக்கின்றனர்.” அவர் மேலும் கூறுகிறார்: “நாம் எந்தச் சமயத்திலும் உணர்ந்ததைவிட அதிக தெளிவாக இருக்கும் ஒரு வகை உயிர் சார்ந்த சகோதரத்துவம் இருக்கிறது.”
இந்த உண்மைகள் பைபிளின் திருத்தமான தன்மைக்கு சான்றளிக்கின்றன. மத போராட்டம் எப்படி ஆரம்பித்தது என்பதுபற்றி அது அளித்திடும் விளக்கத்தைச் சந்தேகிக்க நமக்கு எந்தக் காரணமும் இல்லை என்பதை இது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது.
ஒரே மதம் எப்படி இரண்டானது
அநேகமாய் அறியப்பட்டிருக்கும் அனைத்து மதங்களுமே விவரிப்பில் வித்தியாசப்பட்டிருந்தாலும் ஆச்சரியத்திற்குரிய வகையில் ஒரே மாதிரியாக இருக்கும் சில நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றன என்று மத என்ஸைக்ளோபீடியா (The Encyclopedia of Religion) கூறுகிறது. உதாரணமாக, மனிதவர்க்கம் தெய்வீக தயவைக் கொண்டிருந்த ஓர் ஆரம்ப நிலையிலிருந்து விழுந்துவிட்டது, மரணம் இயல்பானதல்ல, தெய்வீக தயவைத் திரும்பப் பெறுவதற்குப் பலி அவசியம் என்று அவை நம்புகின்றன. இன்றைய அனைத்து மதங்களும் ஒரு பொதுவான ஆரம்பத்தைக் கொண்டிருந்தன என்பதற்கு இது ஒரு பலமான சூழ்நிலைச் சான்றாக அமைகிறது.
இது எவ்விதம் ஏற்பட்டது என்பதைப் பைபிள் விளக்குகிறது. முதல் மனுஷனும் மனுஷியும் கடவுளுடைய வழிநடத்துதலை மறுத்து வழிநடத்துதலுக்காகவும் ஆலோசனைக்காகவும் வேறொரு ஊற்றுமூலத்திடமாய்த் திரும்பினர் என்று அது சொல்லுகிறது. அவர்கள் சாத்தானையும் கடவுளுக்கு எதிரான அவனுடைய கலகத்தனத்தையும் குறித்து அறியாதிருந்த போதிலும், அவர்கள் சுயமான ஒரு போக்கைத் தெரிந்துகொண்டு, சிருஷ்டிகரின் ஆலோசனைக்குப் பதிலாக, சர்ப்பத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட ஒரு சிருஷ்டியின் ஆலோசனையைப் பின்பற்றினார்கள். வஞ்சித்த அந்தச் சர்ப்பத்துக்குப் பின்னால் உண்மையில் குரலாக இருந்தது சாத்தானே என்று பைபிள் பின்பு வெளிப்படுத்தியது.—ஆதியாகமம் 2:16–3:24; வெளிப்படுத்துதல் 12:9.
இப்படியாக மனிதன் தேவாட்சியின் அதிகாரத்திலிருந்து விலகி, நன்மை தீமை ஆகிய காரியங்களைக் குறித்ததில் தனக்கென்று தானே தராதரங்களை அமைத்துக்கொண்டான். தங்களுடைய சுயேச்சையான செயல்களின் மூலம், வித்தியாசமான பல மதங்களில் விளைவடையும் ஒரு பாதையில் ஆதாமும் ஏவாளும் மனிதவர்க்கத்தைத் துவக்கிவைத்தார்கள். அவை அனைத்துமே சரித்திரம் முழுவதும் யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளால் கடைபிடிக்கப்பட்டுவந்த உண்மை வணக்கத்துக்கு முரணாகப் பொய் வணக்கமுறையை உள்ளடக்கியவையாய் இருந்தன. நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ, அந்தப் பொய் வணக்கத்தைப் பெற்றவன் அந்த மகா எதிராளியாயிருந்த சாத்தான் என்பவனே. எனவே பவுல் அப்போஸ்தலன் இப்படியாக எழுதினான்: “அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளைத் தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.” இரண்டு வணக்கமுறை மட்டுமே இருக்கிறது என்று காண்பிப்பவனாய், அவன் தொடர்ந்து கூறினான்: “நீங்கள் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.”—1 கொரிந்தியர் 10:20, 21.
எனவே ஆதாமின் கலகத்தனம் இரண்டாவது வணக்கமுறை ஒன்றை ஆரம்பித்துவைத்தது. இது சிருஷ்டிகருக்கு முன்னாக சிருஷ்டியை நிறுத்திய ஒரு வணக்கமுறை. அந்தப் புதிய மதத்தை உண்மையில் பரிந்துரை செய்தது, தன்னையே “தெய்வமாக” நியமித்துக்கொண்ட பிசாசாகிய சாத்தான்.—2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19.
ஆதாம் ஏவாளின் முதல் இரண்டு குமாரர்களாகிய காயீனும் ஆபேலும் சிருஷ்டிகருக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்; அவர்கள் இருவருமே மத பற்றுடைய மனச்சாய்வு கொண்டவர்களாயிருந்தனர் என்பதை இது குறிப்பிடுகிறது. என்றபோதிலும், அதனைப் பின்தொடர்ந்த சம்பவங்கள், அவர்கள் மதசம்பந்தமாக ஒற்றுமையாயில்லை என்பதைக் காண்பித்தது. இந்தக் காரியம் மனித சரித்திரத்தில் 130 ஆண்டுகளுக்குள்ளாகவே வெளிப்படலாயிற்று; ஆபேல் செலுத்தின பலி சிருஷ்டிகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் காயீன் செலுத்திய பலியோ மறுக்கப்பட்டது. தெளிவாகவே, கடவுள் எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் ஏற்க மனமுள்ளவராயில்லை. இந்த உண்மைதானே காயீனைக் கோபம்கொள்ளச் செய்து தன்னுடைய சகோதரனைக் கொல்ல வழிநடத்தியது.—ஆதியாகமம் 4:1–12; 1 யோவான் 3:12.
மனித சரித்திரத்திலேயே முதல் முறையாக, மத விரோதம் பூமியைக் குற்றமற்ற இரத்தத்தினால் கறைப்படுத்தியது. அது கடைசி முறையாக இருக்கப்போவதில்லை. “உலகமுழுவதும் இன்று நடைபெறும் போர்களில் பாதிக்கும் மேல் வெளிப்படையான மத போராட்டங்களாக இருக்கின்றன, அல்லது மத வேற்றுமைகளை உட்படுத்தியவையாக இருக்கின்றன,” என்று நம் நாளைய பத்திரிகை ஒன்றில் தொடர்ந்து எழுதும் ஒருவர் குறிப்பிட்டார்.
காயீன், ஆபேல் ஆகியவர்களின் தம்பியின் மகன் ஏனோஸ் என்பவனுடைய நாட்களில், “மனுஷர் யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.” (ஆதியாகமம் 4:26, தி.மொ.) ஏற்கெனவே ஆபேல் விசுவாசத்துடன் கடவுளுடைய நாமத்தை தொழுதுகொள்ள ஆரம்பித்ததால், அதற்குப் பின்னால் குறிப்பிடப்படும் இந்த “யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்”ளுதல், மக்கள் அந்த நாமத்தை இழுக்காக அல்லது இழிவான வகையில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என்பதை அர்த்தப்படுத்துவதாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அது தெளிவாகவே ஒரு மத மாய்மாலத்தனமாகும்.
யூத எருசலேம் டார்கம், அல்லது தொகுப்புரை குறிப்பிடுவதாவது: “அந்தத் தலைமுறையில்தானே அவர்கள் தவறிழைக்கவும், தங்களுக்கென்று விக்கிரகங்களை உண்டாக்கவும், தங்களுடைய விக்கிரகங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தையின் பெயரைச் சூட்டவும் ஆரம்பித்தார்கள்.” அதுமுதல், கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற போர்வையின் கீழ் விக்கிரகாராதனை பொய் மதத்தின் அம்சமாக இருந்துவந்திருக்கிறது.
யூதா 14, 15-ல் முதல் ஆயிரம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த விக்கிரகாராதனைக்கொண்ட மனிதவர்க்கத்தைக் குறித்த கடவுளுக்கு உண்மையாயிருந்த ஏனோக்கின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி வாசிக்கிறோம். அவன் சொன்னான்: “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் (யெகோவா, NW) வருகிறார்.” இந்தத் தீர்க்கதரிசனம் பொய்மதம் தாண்டவமாடின மனித சரித்திரத்தின் இரண்டாவது ஆயிரம் ஆண்டின் காலப்பகுதியில் நிறைவேறியது. அந்த அவபக்தி, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் மனித ரூபமெடுத்து இந்தப் பூமிக்கு வந்து “மனுஷகுமாரத்திகளை” விவாகம் செய்து “பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்க”ளடங்கிய ஒரு கலப்பு இனத்தை எற்படுத்திய தேவதூதர்களை விக்கிரகங்களாகக் கொள்வதையும் உட்படுத்தியிருக்கக்கூடும்.—ஆதியாகமம் 6:4.
என்றபோதிலும், நோவாவுக்கு “யெகோவாவின் கண்களில் தயவு கிடைத்தது,” ஏனென்றால், அவன் உண்மையான “கடவுளோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.” (ஆதியாகமம் 6:8, 9, தி.மொ.) அவனும் அவனுடைய குடும்பமுமாக உண்மை மதத்தைப் பின்பற்றிய மொத்தம் எட்டு பேரை துன்மார்க்கரின் எண்ணிக்கை மிஞ்சிவிட்டது. பொய் மதமும் அதைப் பின்பற்றியவர்களும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருந்ததால், “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது,” மற்றும் “பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.” (ஆதியாகமம் 6:5, 11) பொய் மதத்தை அப்பியாசித்தவர்களை அழிப்பதற்காகக் கடவுள் ஒரு ஜலப்பிரளயத்தைக் கொண்டுவர தீர்மானித்தார். கடவுளுடைய பாதுகாப்பின்கீழ் நோவாவும் அவனுடைய குடும்பமும் மட்டுமே தப்பிப்பிழைத்தனர். அதற்குப் பின்பு அவர்கள் உண்மை வணக்கத்தின் ஒரு செயலாக “யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி”யதற்குத் தகுந்த காரணத்தையுடையவர்களாய் இருந்தனர். (ஆதியாகமம் 8:20) நோவாவின் நாளிலிருந்த மத முறைமைகளில் எது உண்மை, எது பொய் என்பதை அந்தப் பிரளயம் தெளிவாகவே அடையாளங்காட்டியது.
மேற்குறிப்பிடப்பட்டிருப்பவை பைபிள் பதிவு உண்மையானது என்ற முகப்புரையின் அடிப்படையிலானது. ஆனால் எமது கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட அத்தாட்சிகளோடுகூட, “பூகோள அளவான ஜலப்பிரளயம் ஒன்று உண்மையிலேயே ஏற்பட்டதா?” என்ற பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் அத்தாட்சியையும் சற்று பாருங்கள்.
மதத்தின் எதிர்காலம்—உங்கள் எதிர்காலம்
மதத்தின் கடந்தகாலத்தைக் குறித்து அறிவைப் பெற்றுக்கொள்வது அதிக அவசியம், ஏனென்றால் அடிப்படையில் இரண்டு மதங்கள்தான் இருக்கின்றன. ஒன்று மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகர் ஏற்றுக்கொள்ளக்கூடியது, மற்றொன்று ஏற்றுக்கொள்ளக் கூடாதது. அப்படியிருக்க, ஒருவன் சிருஷ்டிகரின் அங்கீகாரத்தைக் கொண்டிருக்கவேண்டுமானால், அவன் மதத்தின் பேரில் அவருடைய கருத்தைப் பகிர்ந்துகொள்கிறவனாக இருக்கவேண்டும். நாம் எல்லாருமே உட்பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள், ஏனென்றால் “தன்னுடைய ஆக்க அமைவுபடி மனிதன் ஒரு மத விலங்கு.”
மதத்தின் கடந்த காலத்தைப் பார்க்கும்போது, அதை திறந்த மனதுடன், அதைவிட முக்கியமாக காரியங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் அப்படிச் செய்வோமாக. எந்த ஒரு மதம் ஆராய்ச்சிக்கு உட்படுகிறதோ, அதைச் செய்வதற்கு முன்னால், அதிக நேரமெடுத்து அதன் போதனைகள் புரியக்கூடியதாயும், தெளிவாயும், அறிவுப்பூர்வமானதாயும் இருக்கின்றனவா என்று நம்மநாமே கேட்டுக்கொள்வோமாக. அதன் சாதனைகளைப் பற்றியதென்ன? சிருஷ்டிகரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியவேண்டிய முக்கியத்துவத்தை அவர்களில் பதிய செய்வதன் மூலம் அது தன் அங்கத்தினரை அவரிடமாக நெருங்கியிருக்கச் செய்திருக்கின்றதா, அல்லது தங்களுடைய சொந்த நடத்தைத் தராதரங்களை அமைத்துக்கொள்ள அவர்களை அனுமதித்திருக்கின்றதா? உலக பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கடவுளை நம்பியிருக்கும்படியாக மதம் மக்களுக்குப் போதித்திருக்கின்றதா? அல்லது, அதற்கு மாறாக, அப்படிச்செய்ய அரசியல் வழிகளை நம்பும்படியாக அவர்களை மோசம்போக்கியிருக்கின்றதா? அது பூமியின் குடிகளின் மத்தியில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் வளர்த்திருக்கின்றதா, அல்லது வேற்றுமையுணர்வைத் தூண்டி போர்களை ஊக்குவித்திருக்கின்றதா?
இந்தக் கேள்விகளும் மற்ற கேள்விகளும், மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகரால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ஒரே ஆதி மதத்துக்கும் அவருடைய எதிரியால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல போலி வகைகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைக் கண்டுணர நமக்கு உதவி செய்யும்.
தற்போதைய ஒழுக்க நெறிமுறையின் சீர்க்குலைவுக்கும் நன்னெறி வழியின் வீழ்ச்சிக்குமான காரணத்தில் மதம் உட்படுத்தப்படுகிறதா? பின்வரும் கட்டுரை அந்தக் கேள்வியைச் சுருக்கமாகச் சிந்திக்கும். (g89 1⁄8)
[பக்கம் 7-ன் பெட்டி]
பூகோள அளவான ஜலப்பிரளயம் ஒன்று உண்மையிலேயே ஏற்பட்டதா?
“அண்மை மண்ணியல் காலங்களில் ஆதியாகமத்தின் ஜலப்பிரளயம் நிகழாத ஒரு சம்பவமாக இருப்பதற்கு மாறாக அது அப்படிப்பட்ட ஒரு காலப்பகுதிக்குப் பொருந்தும் ஒன்றாகவே இருக்கிறது . . . உண்மையில் அது அப்படிப்பட்ட ஒரு விரைவான மற்றும் வன்முறை கொண்ட எழுச்சி ஏற்படக்கூடிய சாத்தியமுடைய காலப்பகுதியாயிருந்தது.”—ஜலப்பிரளயம் மறுபரிசீலனை செய்யப்பட்டது (The Flood Reconsidered).
“தொல்பொருளியல் ஜலப்பிரளயத்தைப்பற்றிய [ஆதியாகமம்] கதையின் மற்ற வகையான விளக்கங்களையும் தோண்டியெடுத்திருக்கிறது . . . அவற்றில் வித்தியாசங்களைவிட ஒத்த கருத்துக்களே அதிகக் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன.”—பைபிள் தேசங்களைத் தோண்டியெடுத்தல் (Digging Up the Bible Lands).
“ஓர் உலக பிரளயத்தின்போது பூமி தண்ணீரில் மூழ்கிய காரியம் அநேகமாய் உலகத்திலுள்ள அனைத்து புராணக் கதைகளிலும் காணப்படும் ஒரு கருத்தாக இருக்கிறது. . . . பெரு நாட்டு புராணக் கதைகளில், அது முதல் மனிதரில் அதிருப்தியடைந்து அவர்களை அழிக்கத் தீர்மானித்த விராக்கோச்சா என்ற உன்னத தெய்வத்துடைய கோபத்தின் விளைவாகக் காணப்படுகிறது.”—மரபுவழிக் கதைகள், புராணக் கதைகள் மற்றும் கட்டுக்கதைகளின் ஃபங்க் மற்றும் வாக்னால்ஸ் ஸ்டண்டர்டு அகராதி (Funk and Wagnalls Standard Dictionary of Folklore, Mythology and Legend).
“ஆதியாகம பதிவுக்கு ஒத்திருக்கும் நிறைய காரியங்கள் மற்றொரு பாபிலோனிய காவியத்தில் இருக்கின்றன. அதன் கதாநாயகன் கில்காமெஷ் என்ற பெயர் கொண்டவன். . . . அது அநேகமாய் இரண்டாவது ஆயிர ஆண்டு காலப்பகுதியின் ஆரம்பத்தில் தோன்றியிருக்கவேண்டும். . . . [களிமண் பலகை XI] பேரளவில் முழுமையாக சிதையா நிலையில் இருப்பதால், சித்திர எழுத்து முறையில் ஜலப்பிரளய கதையின் முழு விளக்கத்தையும் அநேகமாய் அளிப்பதாயிருக்கிறது.”—என்சைக்ளோபீடியா ஜுடேய்க்கா (Encyclopœdia Judaica).
“எபிரெயர், பாபிலோனியர், கிரேக்கர், நார்வேயினர், மற்றும் பழைய உலகின் மற்ற மக்களைப்போன்று வட அமெரிக்க, தென் அமெரிக்க இந்திய பழங்குடிகள் பலர் ஜலப்பிரளயத்தின் பாரம்பரியக் கதைகளைக் கொண்டிருந்தனர். . . . ‘பூர்வ மிஷனரிகள் வந்தபோது, . . . அவ்விந்தியர் ஜலப்பிரளயம் குறித்த பாரம்பரிய கதைகளைக் கொண்டிருந்ததையும், ஒரு மிதவையில் ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் பாதுகாக்கப்பட்டதையும் அறியவந்தனர்,’ என்று 1878-ல் ரெவரண்டு மிரான் ஈல்ஸ் அறிக்கை செய்தார்.”—பசிபிக் வடமேற்கின் இந்திய மரபுவழிக் கதைகள் (Indian Legends of the Pacific Northwest). (g89 1⁄8)