கிறிஸ்தவமண்டலம் கானானின் வழியில் நடக்கிறது
கானானியர்கள் வேசித்தனத்தையும், விபசாரத்தையும், ஓரினப்புணர்ச்சியையும், குழந்தைகளைக் கொலைச் செய்வதையும் உட்படுத்திய ஒரு மதத்தைக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக பூமி அவர்களைக் கக்கிப்போட்டது. இஸ்ரவேலர் அந்த மதத்தைப் பார்த்துப் பின்பற்றி அதன் ஒழுக்கக்கேடான செயல்களை யெகோவாவின் வணக்கத்தோடு இரண்டறக் கலக்க, தேசம் அவர்களைக் கக்கிப் போட்டது. இன்று கிறிஸ்தவர்களென உரிமைப் பாராட்டிக்கொண்டு அந்தப் பூர்வ பாலின ஒழுக்கக்கேட்டைப் பின்பற்றும் ஜனங்களும் மதங்களும் இருக்கின்றன. விபசாரமும் வேசித்தனமும் பொதுச் செய்திகளாகிவிட்டன. ஓரினப்புணர்ச்சியும் கருவில் உயிரை அழிப்பதும் அதிகமாகி வருகிறது. விரும்பப்படாதக் குழந்தைகள் கானானில் நூற்றுக்கணக்கில் பலியிடப்பட்டன; இன்று அவை இலட்சக்கணக்கில்—ஆண்டுக்கு 5 1/2 கோடி—அழிக்கப்பட்டுகின்றன.—யாத்திராகமம் 21:22, 23 ஒப்பிடவும்.
பழம் பாணியைப் பின்பற்றுவதாக அல்லது அளவுக்கு மிஞ்சி அடக்கமாக இருப்பதாக ஒதுக்கிக் குறிப்பிடப்படாதிருப்பதற்காக கிறிஸ்தவ மண்டலத்திலுள்ள அநேக சர்ச்சுகள், “எதையும் செய்யலாம்” என்ற பிரபலமானக் கருத்தை ஏற்றுக்கொள்ள தீவிரமாகச் செயல்பட்டிருக்கின்றன. தன்னுடைய சபையாருக்குக் கருத்தடை உறைகளை விநியோகம் செய்வதற்காக தன் பிரசங்கத்தை இடையில் நிறுத்திய, தனியொருமைக் கோட்பாட்டை ஆதிரிக்கும் ஓர் ஊழியர் செய்தவிதமாக சிலர் “பாதுகாப்பாக” பாலுறவு சம்பந்தப்பட்ட பாவங்களைச் செய்வதற்காக ஏற்பாடும்கூட செய்கிறார்கள்.
பத்திரிகையில் குறிப்பிட்ட ஒரு பத்தியில் தொடர்ந்து எழுதிவரும் மேற்றிராணியார் திருச்சபை உறுப்பினர் ஒருவர் சொன்னதாவது: “80-ம் ஆண்டுகளின் மேற்றிராணியார் திருச்சபை, ஓர் இறையியல் தோற்பாவை கலை கடையாக இருக்கிறது. தற்கால சமுதாயத்தின் விருப்பம் எதுவோ அதையே நிரப்பி அடைத்து, அதைக் காட்சிக்குரியதாக்க அதைத் தாராளமாக நம்ப முடியும். சில ஆண்டுகளாக அது அரசியலாக இருந்தது. இந்த வருடம் அது பாலுறவு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.” அவர், “கிறிஸ்தவர்கள் ஓரினப்புணர்ச்சியையும் விவாகமில்லாமல் பேரின்பத்தை அனுபவிப்பதையும் ஆதரிப்பதில் காலத்துக்குப் பின்னால் இருப்பதைக்” காட்டும் புதிய பாலுறவு கல்வி பாடத்திட்டத்தைக் குறிப்பிடுகிறார். நியு யார்க்கிலுள்ள ஒரு மேற்றிராணியார் திருச்சபை பிஷப், “பொறுப்புள்ள ஓரினப்புணர்ச்சி உறவுகள் ஒரு நாள் கடவுளுடைய சித்தமாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்பதாக நம்பிக்கைத் தெரிவிக்கிறார்.
ஐக்கிய மெத்தடிஸ்ட் நிருபர் என்ற மத வார பத்திரிகையின் உறுப்பினர் ராய் ஹொவார்ட் பெக், மெல்லிய பனிக்கட்டியின் மீது, என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “[ஒழுக்கங்கெட்ட] செயல்களில் பிடிப்பட்டவர்கள், டெலிவிஷன் சுவிசேஷகர்கள், மிக உயரமான தூபியினையுடைய ஆலயங்களில் முக்கிய பிரசங்கிமார்கள், பிஷப்புகள், பிரபலமான குழுக்களின் தலைவர்கள், மதிப்புக்குரிய சிறிய சர்ச் பாதிரிமார்கள், குருக்கள், பெந்தெகொஸ்தே சபையினர், முற்போக்காளர்கள், பழமைப் பற்றாளர்கள். சமுதாயத்தை மேம்படுத்துவதில் சர்ச்சின் பங்கைக் குறித்து என்னே ஒரு விளக்கவுரை!”—பக்கம் 214.
இங்கிலாந்து சர்ச்
இங்கிலாந்து சர்ச்சின் சட்ட மாமன்றமாகிய, பொது குருமார் கூட்டம் 1987 நவம்பரில், “விபசாரமும் வேசித்தனமும் ஓரினப்புணர்ச்சி செயல்களும் பாவமானவை” என்பதை மீண்டும் உறுதி செய்யும் தீர்மானம் ஒன்றை கலந்து ஆராயக் கூடியது. ஆண் மற்றும் பெண் ஓரினப்புணர்ச்சி கிறிஸ்தவ இயக்கப் பொதுச் செயலர் அறிவித்ததாவது: “இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுமேயானால் அது சர்ச்சை தகர்த்துவிடும் என்பதை கான்டர்பரி தலைமை குரு அறிவார். பொதுவான ஓர் எண்ணிக்கையாக, இங்கிலாந்து சர்ச்சின் குருமாரில் 30-லிருந்து 40 சதவிகிதத்தினர் ஓரினப்புணர்ச்சிக்காரராக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.”
1987 அக்டோபர் 29 தேதியிட்ட இங்கிலாந்தின் டேய்லி எக்ஸ்பிரஸில் எழுதுகையில் நிருபர் பிலிப்பா கென்னடி சொன்னார்: “தேசத்துக்குப் போதிய தார்மீக வழிநடத்துதலைக் கொடுக்க தவறியதற்காக சர்ச் தலைவர்களை மார்கரட் தாட்சர் தாக்கியிருப்பது, பத்தாண்டுகளின் மதகுருமார் சம்பந்தமான மிகப் பெரிய முன்னேற்ற நிலையாக இருக்கப் போவதாக நம்பிக்கை அளிக்கும் காரியத்துக்கு விறுவிறுப்பூட்டுவதாக இருக்கிறது. பொதுவாக பிஷப்புகளும் குறிப்பாக கான்டர்பரி தலைமை குருவும், வெறும் சுவையற்ற குழிவப்பங்களின் ஒரு தொகுதியாக இருப்பதாகக் கருதுவது பிரதம மந்திரி மாத்திரமல்ல.”
1987 நவம்பர் 11-ம் தேதி, தீர்மானம் பொது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது விழுங்குவதற்கு மிகப் பெரிய மாத்திரையாக இருப்பதாக உணரப்பட்டது. இது, பெரும்பான்மையானோரின் ஆதவுடன் நிறைவேற்றப்பட்ட உறுதியில்லாத மாற்று தீர்மானத்தினால் உதறித் தள்ளப்பட்டது. ஆகவே இது “மதகுருமார் சம்பந்தமாக பத்தாண்டுகளின் மிகப் பெரிய முன்னேற்ற நிலைகளில்” ஒன்றாக இல்லை. அது தோல்வியடைந்தது. பிஷப்புகள், கற்பனை எதிரியோடு குத்துச் சண்டையிட்டனர், தட்டிக் கழித்தனர், சதிசெய்தனர், ஏமாற்றினர், பின்னால் தயங்கி நின்றனர்.
பொது குருமார் கூட்டத்தின் தீர்மானம்: நிரந்தரமான விவாக உறவில் பாலுறவுக் கொள்வதே மிகச் சிறந்த தராதரமாகும். விபசாரமும் வேசித்தனமும் இந்தச் சிறந்த தராதரத்துக்கு எதிரான பாவங்களாகும்; ஓரினப்புணர்ச்சி செயல்கள் இந்தத் தராதரத்திலிருந்து குறைவுபடுகிறது. பாலின ஒழுக்கம் உட்பட எல்லாக் கிறிஸ்தவர்களும் ஒழுக்க அம்சங்கள் அனைத்திலும் முன்மாதிரிகளாக இருக்கவேண்டும். ஓரினப்புணர்ச்சி செயல்கள் விபசாரத்தையும் வேசித்தனத்தையும்விட குறைந்த அளவே வினைமையானதாக மதிப்பிடப்பட்டது—பின்னது சிறந்த தராதரத்திற்கு எதிரான பாவங்களாக இருக்கையில், ஓரினப்புணர்ச்சி, சிறந்த தராதரத்திலிருந்து வெறுமென குறைவுபடும் காரியமாகவே இருக்கிறது. வேசித்தனம் செய்கிறவர்கள் நீக்கப்படுவதில்லை. விபசாரிகள் விலக்கப்படுவதில்லை. ஓரினப்புணர்ச்சிப் பழக்கமுள்ள பாதிரிமார்கள் மற்றும் குருமார்களின் குற்றங்கள் மேலாகப் பூசி மழுப்பப்படுகின்றன.
பொது குருமார் கூட்ட எக்காளம் தெளிவற்ற ஓர் அழைப்பை விடுத்திருக்கிறது. டோனி ஹிக்டன் சமர்ப்பித்த முதல் தீர்மானம் அலங்கோலமாகக் கைவிடப்பட்டது. (1 கொரிந்தியர் 14:8) என்றபோதிலும் விநோதமாக, வலுவற்ற இந்தப் பதிப்புக்கு அவர் ஆதரவு கொடுத்து, இதன் விளைவைக் குறித்து “வெகுவாக மகிழ்ச்சி”யடைந்ததாக தெரிவித்தார். இவருடைய முந்தைய கருத்துக்களை முன்னிட்டுப் பார்க்கையில், ஆழம் பார்க்க இது மிகவும் கடினமான ஒரு பிரதிபலிப்பாகும். “சர்ச்சானது தன் வீட்டை ஒழுங்குபடுத்தவில்லையென்றால், அப்போது கடவுள் அதை நியாயந்தீர்ப்பார்” என்பதாக அவர் எச்சரித்தார்.
பொது குருமார் கூட்டத்தின்போது, ஹிக்டன், ஓரினப்புணர்ச்சி பழக்கமுள்ள பாதிரிமார்களுக்கு எதிராக பரபரப்பூட்டும் வரலாற்றுப் பத்திர அத்தாட்சிகளைச் சமர்ப்பித்திருந்தார். பாலுறவு வேட்கையுடன் ஒரு சிறு பிள்ளையை ஈனப்படுத்தியக் குற்றத்துக்காக தீர்க்கப்பட்ட ஒருவர் வெறுமென மற்றொரு பங்குக்கு மாற்றப்பட்டார். பொது கழிப்பிடமொன்றில் படுமோசமான கேவலமான நடத்தையில் ஈடுபட்ட குற்றவாளியென தீர்க்கப்பட்ட மற்றொரு பாதிரி வேறொரு மேற்றாசனத்துக்கு நியமிக்கப்பட்டார். இங்கே அவர் அதுபோன்ற இன்னொரு குற்றத்துக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டார். இன்னும் அவர் மேலங்கி அகற்றப்படவில்லை. லண்டனிலுள்ள ஓரினப்புணர்ச்சி பழக்கமுள்ள ஆங்கில நாட்டுப் பாதிரிமார்கள் “வரையறையற்ற ஓரினப்புணர்ச்சியையும், ஆண்வேசிகளின் உபயோகத்தையும் பல்வகைப்பட்ட ஓரினப்புணர்ச்சி செயல்களையும் ஊக்குவிக்கும் இலக்கியங்களை விற்பதற்காக” சர்ச் புத்தக விற்பனை சாவடியொன்றை நடத்தியதாக ஹிக்டன் தெரிவித்தார். விற்பனை சாவடியில் ஒரு புத்தகம், “ஐந்து வயது சிறுமி அவளுடைய தகப்பனோடும் அவருடைய ஆண் காதலனோடும் படுக்கையில்” இருப்பதைக் காட்டியது.
ஹிக்டனின் அத்தாட்சி அசட்டை செய்யப்பட்டதால், அவர் எவ்விதமாக “வெகுவாக மகிழ்ச்சி” அடைந்திருக்க முடியும்? ஆங்கில நாட்டு குருக்கள் எளிதில் மகிழ்விக்கப்படக்கூடிய மென்மையான ஆத்துமாக்களாக இருப்பதன் காரணமாக, இதில் சந்தேகத்துக்கு இடமில்லை. செய்தி அறிக்கை ஒன்று குறிப்பிட்ட விதமாகவே: “இந்தத் தில்லுமுல்லுகள் எதுவும் இடிமுழக்கத்தை அல்ல, ஆனால் ஆங்கில நாட்டவரின் தனியியல்பான அமைதியான சிறிய தூறல்களையே எதிர்ப்பட்டன.”
ஓரினப்புணர்ச்சி பழக்கமுள்ள மதகுருமார் திருப்தியடைந்ததை புரிந்துகொள்ள முடிகிறது. “பொது குருமார் கூட்டம் ஓரினப்புணர்ச்சி பழக்கமுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் சமுதாயத்துக்குச் சர்ச்சின் வரலாற்றில் உரிமையை தெளிவாக வழங்கியிருக்கிறது” என்று அவர்கள் சொன்னார்கள். மொத்தத்தில் கான்டர்பரி ரன்சியின் தலைமை குரு, “கட்டுப்பாடும் பொறுப்புமுள்ள ஓரினப்புணர்ச்சி பழக்கத்தை சர்ச் கண்டனம் செய்யக்கூடாது என்பதாக வாதிட்டு” மேலுமாகச் சொன்னதாவது: “சுபாவப்படி ஓரினப்புணர்ச்சி பழக்கமுள்ளவராயிருப்பவர் ஒரு முழு மனிதனாக இருக்கிறார் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.”
“சுபாவப்படி ஓரினப்புணர்ச்சி” என்பதாக கான்டர்பரி தலைமை குரு சொன்னார். மரபு வழி பண்பியலால் இப்படியாக தீர்ப்பளிக்கப்பட்ட உதவியற்ற ஓரினப்புணர்ச்சிக்காரர்கள்? சிலர் இவ்விதமாக விவாதித்து, ஓரினப்புணர்ச்சி நிலையானது, “எந்த ஓர் ஒழுக்கத்துக்குரிய தெரிவும் செய்வதற்கு முன்பாக ஏற்படும் ஓர் “அடிப்படையான அகநிலை உணர்வுக்குரிய விசேஷ குணம்” என்பதாகச் சொல்கிறார்கள். ஆவியால் ஏவப்பட்டு ஓரினப்புணர்ச்சியைக் கண்டனம் செய்த அப்போஸ்தலனாகியப் பவுலை “அளவுக் கடந்த அடக்கம்” என்பதாக அவர்கள் தள்ளிவிட்டார்கள் என்கிறது லண்டனின் தி டைம்ஸ்.
இதன் பேரில் கருத்து தெரிவித்த தலைமை யூத குரு சர் இம்மானுவேல் ஜாக்கோபோவிட்ஸ், “ஓரினப்புணர்ச்சியினிடமாக இப்படிப்பட்ட சுபாவப்படியான விருப்பம்” நிரூபிக்கப்பட்டு விட்டதா என்பதாகக் கேட்டுவிட்டுச் சொன்னதாவது: “சுபாவப்படியான முற்சார்பு என வாதிடுவது என்பது, முழு ஒழுக்க சம்பந்தமான அமைப்பையும் தகர்த்துவிடுவதற்கு வழிநடத்தக்கூடிய வழுக்கலான சரிவாக இருக்கிறது. . . . குற்றப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட சுபாவமான மனசாய்வுதானே போதுமானது என்பதை எந்தச் சமுதாயத்திலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. சுபாவத்தை நாம் அடக்கி ஆள வேண்டுமேயன்றி நாம் அதன் பலியாட்களாக இருக்கக்கூடாது.”
கான்டர்பரி தலைமை குரு, இயேசுவின் வார்த்தைகளை அவை கிறிஸ்துவின் சர்ச்சில் ஓரினப்புணர்ச்சிக்காரர்களுக்கு இடமளிப்பதற்கு அவை மீண்டும் வடிவங் கொடுக்கப்படும்வரை அவைகளைக் குறைத்துக் கொண்டே இருந்து அவர் சொன்னதாவது: “கிறிஸ்துவின் சர்ச்சினுடைய இந்தப் பூமிக்குரிய வாசஸ்தலத்தில் அநேக மாளிகைகள் உண்டு, அவை அனைத்தும் கண்ணாடியினாலானவை.” (யோவான் 14:2 ஒப்பிடவும்.) ஆகவே அவர், ‘வேறு எவர் மீதும் கல்லெறியாதீர்கள், ஓரினப்புணர்ச்சி பழக்கமுள்ளவர்கள் மீதும்கூட அப்படிச் செய்யாதீர்கள், ஏனென்றால் கிறிஸ்துவின் சர்ச்சில் அவர்களுக்கும்கூட ஒரு மாளிகை உண்டு’ என்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஓரினப்புணர்ச்சி பழக்கமுள்ளவர்களிடமாக ‘அன்பை, துயரத்தை, கூருணர்வு திறனை மற்றும் புரிந்துகொள்ளுதலை’ வெளியிடும்படியான ஆங்கில நாட்டு சர்ச் கொள்கையின் மறு அறிவிப்பை புதிய ஏற்பாட்டின் கிரேக்க மொழி சரியென காண்பிக்கிறது” எனவும் வேதாகமத்தில் ஓரினப்புணர்ச்சியானது “நெறிமுறையிலிருந்து வழிவிலகிச் செல்வதாக” மாத்திரமே கண்டனம் செய்யப்படுகிறது எனவும் செஸ்டரின் பிஷப் மைக்கல் பாகன் தர்க்கம் செய்தார். ஓரினப்புணர்ச்சிக்காரர், அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லையென்றால், ராஜ்யத்தைச் சுதந்தரிக்க மாட்டார்கள் என்றும், “மரணத்துக்குப் பாத்திரராயிருக்கிறார்கள்” என்றுமே வேதாகமம் உண்மையில் சொல்லுகிறது.—ரோமர் 1:27, 32; 1 கொரிந்தியர் 6:9-11.
தி டைம்ஸ் பத்திரிகையை மீண்டும் மேற்கோள் காட்ட, பொதுகுருமார் கூட்டம் “இங்கிலாந்து சர்ச் எதையும் நம்புவதில்லை, அனைத்தையும் அனுமதிக்கிறது என்ற பழகிப்போன குற்றச்சாட்டை” நிரூபித்து, “பலவீனமான அதன் மனப்போக்கை” நிலைநாட்டி “ஒவ்வொரு புதிய முற்போக்கு பாணியையும் அது சுவிசேஷம்போல எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டிருக்கிறது” என்கிறது. லிவர் பூல் டேய்லி போஸ்ட், “சர்ச்சின் வெற்றுப் பேச்சு” என்ற தலைப்பின் கீழ் சொன்னதாவது: “இங்கிலாந்து நாட்டு சர்ச் தலைவர்கள் எது சரி மற்றும் தவறு என்று அவர்கள் கருதுகிறார்கள் என்பதைத் தெளிவான மொழியில் தெரியப்படுத்த அதிகமதிகமாக இயலாதவர்களாகி வருவதுபோல் தெரிகிறது.” பொருளியல் ஆய்வாளர் ரைலி குறிப்பிட்டதாவது: “இங்கிலாந்து நாட்டு சர்ச் ஓரினப்புணர்ச்சி பழக்கங்களை எதிர்க்கிறது, ஆனால் மிக அதிகமாக இல்லை.”
“ஓரினப்புணர்ச்சி சம்பந்தமாக குருமார் கூட்ட தீர்வு முடிவின்பேரில் கொந்தளிப்பு” என்ற தலைப்பின்கீழ், முற்காலப் பிரிட்டன் பழமைசார்புக் கட்சி, சட்ட மன்ற உறுப்பினர் பலரின் கருத்தை டேய்லி போஸ்ட் வெளியிட்டது. சட்டமன்ற உறுப்பினர் குருமார் கூட்ட தீர்மானத்தை “வெட்கக் கேடானது, கோழத்தனமானது” என்று அழைத்தார். மற்றொருவர்: “ஓரினப்புணர்ச்சி இப்பொழுது இங்கிலாந்து நாட்டு சர்ச் குருமாரிலும் இங்கிலாந்து நாட்டு சர்ச்சிலும் அசைக்க முடியாத பிடியை பெற்றுக்கொண்டுவிட்டது என்று நான் பயப்படுகிறேன்.” மூன்றாமவர்: “இந்தக் கருத்தை—நான் வெட்கக்கேடான வெற்று செய்தி என்று அழைக்க விரும்புகிறேன்—இது பிள்ளைகளை ஆபத்தான நிலையில் வைக்கிறது. துணையைக் கண்டுபிடிக்க இயலாத அநேக ஆண்புணர்ச்சிக்காரர், இளம் பிள்ளைகளிடமாகத் திரும்புகிறார்கள். இவ்விடத்தில்தானே சர்ச்சுக்கு வரும் இளைஞர்கள் எளிதில் தாக்குதலுக்குள்ளாகிறார்கள் . . . முழுதளவில் சொன்னால், சர்ச்சானது தன்னுடைய சொந்த சமுதாயத்தினுள்ளேயே இருக்கும் ஒரு பொல்லாப்பை சுத்தப்படுத்த தவறிவிட்டிருக்கிறது.”
ரோமன் கத்தோலிக்க சர்ச்
ஓரினப்புணர்ச்சியை கத்தோலிக்க சர்ச் மொட்டையாக கண்டனம் செய்து அதை படுமோசமான ஒரு பாவம் என்பதாக குறிப்பிடுகிறது. ஆனால் செயலளவில், சர்ச், குற்றமுள்ள பாதிரிமார்களின் விஷயத்தை மூடிமறைத்து தொடர்ந்து நெறி தவறிய பாலின பழக்கங்களை கடைப்பிடிப்பதை அவர்களுக்குக் கூடியகாரியமாக்குகிறது. நிச்சயமாகவே இரண்டாவது போப் ஜான் பால் பின்வருமாறு சொன்னபோது ஓரினப்புணர்ச்சிக்காரர்களுக்கு அனலான வார்த்தைகளைக் கொண்டிருந்தார்: “அவர்கள் சர்ச்சில் இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள்.”
1987 பிப்ரவரி 27-ம் தேதியிட்ட சுயேச்சை கத்தோலிக்கச் செய்தித்தாளாகிய நேஷனல் கத்தோலிக் ரிப்போர்டர், ஐக்கிய மாகாணங்களில் கத்தோலிக்க குருமாரில் 50 சதவிகிதத்தினர் ஓரினப்புணர்ச்சிக்காரர் என்பதாக ஓரினபுணர்ச்சிப் பழக்கமுள்ள மதகுருமார் மதிப்பிடுகின்றனர், என்று சொன்னது. இந்த எண்ணிக்கையைக் குறித்து கருத்து வேறுபாடு இருக்கிறது. 1,500 பேட்டிகளின் அடிப்படையில், ஒரு மனோதத்துவ நிபுணர், ஐக்கிய மாகாணங்களிலுள்ள 57,000 கத்தோலிக்க பாதிரிமார்களில் 20 சதவிகிதத்தினர் ஓரினப்புணர்ச்சிக்காரர்கள் என்பதாகச் சொல்கிறார். ஆனால் மிக அண்மையில் வெளியான அறிக்கைகளின்படி, “உண்மையான எண்ணிக்கை இன்று 40 சதவிகிதத்துக்கு அருகாமையில் இருக்கக்கூடும் என்பதாக நோய் நீக்கல் துறையிலுள்ள மற்றவர்கள் கருதுவதாகத்” தெரிகிறது.
ஓராண்டுக்கும் சற்று முன்பாக, தேசம் முழுவதிலும் செய்தித் தாள்களில் கத்தோலிக்கப் பாதிரிமார்களின் பால் சம்பந்தமான தாக்குதல்களைப் பற்றிய அநேக அறிக்கைகள் வந்த வண்ணமே இருந்தன. கலிஃபோர்னியாவில் சான் ஜோஸிலிருந்து வெளியாகும் மெர்குரி நியூஸின் பின்வரும் அறிக்கை இதற்கு ஒரு சான்றாகும்:
“சிறு பிள்ளைகளை துர்ப்பிரயோகம் செய்வது பற்றிய பிரச்னையைக் குறித்து வெகுவாக தேசத்தளவில் உணர்வு ஏற்பட்டிருக்கும் சமயத்தில், நீதிமன்ற பதிவுகள், சர்ச்சினுள்ளிருக்கும் ஆதாரச் சான்றுகள், பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் இதில் பாதிக்கப்பட்டவர்களின்படி, ஐக்கிய மாகாணங்களில் கத்தோலிக்க சர்ச், பாலுறவு வேட்கையுடன் பிள்ளைகளை ஈனப்படுத்தும் பாதிரிமார்களின் விஷயங்களைத் தொடர்ந்து அசட்டைச் செய்தும் மூடி மறைத்தும் வருகிறது.
“ஒரு பாதிரியார், குறைந்தபட்சம் 35 பையன்களையாவது பாலுறவு வேட்கையுடன் ஈனப்படுத்தியிருந்த, பேர் போன 1985 லூஸியானா வழக்கு பிரச்னையைக் கண்டிப்புடன் கையாளத் தங்களுக்குக் கற்பித்திருக்கிறது என்பதாக சர்ச் அதிகாரிகள் ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஆனால் மெர்குரி நியூஸ் செய்தித்தாளின் மூன்று மாத கால ஆய்வு, தேசம் முழுவதிலுமுள்ள 25-க்கும் அதிகமான மேற்றாசனங்களில் சர்ச் அதிகாரிகள், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதையும், பாலுறவு வேட்கையுடன் பிள்ளைகளை ஈனப்படுத்தும் பாதிரிமார்களை மற்ற பங்குகளுக்கு மாற்றல் செய்ததையும், பெற்றோரிடமிருந்து வந்த புகார்களை அசட்டைச் செய்து இப்படியாக பலியாகக்கூடிய பிள்ளைகளுக்கு ஏற்படும் தீங்கை கவனியாதிருந்ததையும் காண்பிக்கிறது . . . இவ்விதமாக பலியானவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் இலட்சக்கணக்கில் பணம் நஷ்ட ஈடாக ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு சர்ச்சின் 1986 அறிக்கை அடுத்த பத்தாண்டுகளில், சர்ச்சின் கடன் தொக 1,700 கோடி ரூபாயை எட்டிவிடக்கூடும் என்று மதிப்பிட்டது.”
மெர்குரி நியூஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த “பேர் போன 1985 லூஸியானா வழக்கு” கில்பர்ட் கோத்தே என்ற பெயருள்ள பாதிரியார் சம்பந்தப்பட்டதாகும். “அவருடைய பலியாட்களுக்கு 14 1/4 கோடி ரூபாய் பணம் செலுத்தங்கள்” செய்யப்பட்டிருக்கிறது. கோத்தேயின் ஓரினப்புணர்ச்சி செயல்கள் பல ஆண்டுகளாக அறியப்பட்டதாயிருந்தது. ஆனால் ‘மேற்றாசனம் அவரை ஒரு பங்கிலிருந்து மற்றொன்றுக்குக் குறைந்தபட்சம் மூன்று தடவைகளாவது மாற்றல் செய்வதன் மூலம் பிரச்னையைக் கையாண்டது.’ ஒரு சந்தர்ப்பத்தில், “பெற்றோர்கள் கோத்தேயால் தங்கள் ஏழு வயது பையன் பலிபீடப் பையனாக சேர்ந்த முதல் நாளும் அதற்குப் பின் ஓராண்டுக்கும், பாதிரியார் மாற்றலாகிப் போகும் வரையாக, ஓரினப்புணர்ச்சியில் பயன்படுத்தப்பட்டான் என்று சாட்சி சொன்னார்கள்.”
“பிள்ளைப் பருவ பலியாட்களுக்கு நேரிடும் சேதமும்” கூட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில சமயங்களில் சேதம் மாற்றமுடியாததாகிவிடுகிறது. 12 வயது பையன் ஒருவன், “ஃபிரான்சிஸின் மடத்தைச் சேர்ந்த ஒரு சகோதரரால் உண்மையில் பால் சம்பந்தமாக அடிமையாக்கப்பட்ட பின்பு வாழ்வதில் அர்த்தமில்லை” என்ற குறிப்பை எழுதி வைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டான். ஒரு பாதிரியால் பாலுறவு வேட்கையுடன் ஈனப்படுத்தப்பட்ட மற்றொரு பையன், “தந்தை S.——உடன் தொடர்புக் கொண்டு அவரை நான் மன்னித்துவிட்டேன் என்று சொல்லிவிடு” என்று தன் சகோதரனிடம் சொல்லிவிட்டு தூக்குக் கயிற்றில் தொங்கினான்.
பெரும்பாலும் பால் சம்பந்தமாக தாக்கப்படுவது பையன்களாக இருந்தாலும், பெண்களும்கூட இதற்குப் பலியாகிறார்கள். 1987 டிசம்பர் 19 தேதியிட்ட க்ளிவ்லாந்தின் ப்ளேய்ன் டீலர்-ன் அறிக்கையின்படி, 16 வயது பெண் ஒருத்தியும் அவளுடையப் பெற்றோரும் 1986-ல் பால் சம்பந்தப்பட்ட ஈனச் செயல்களுக்காக ஏழு பாதிரிமார்கள் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். அவள் கர்ப்பமாகிவிட்டிருந்தாள். பாதிரிமார்கள் கருச்சிதைவு செய்துகொள்ளும்படி துரிதப்படுத்தினார்கள். அவள் மறுத்தப்போது, அவளுடைய கர்ப்பத்தை மறைக்க அவளைப் பிலிப்பைன்ஸ்க்கு அனுப்பிவிட ஏற்பாடு செய்தனர். சர்ச் ஓரினப்புணர்ச்சியையும் கருச்சிதைவையும் எதிர்க்கிறது, ஆனால் அவர்களுடைய சொந்த பாதிரிமார் அதில் உட்படுகையில் அவ்விதமாக இல்லை போல் தெரிகிறது.
கத்தோலிக்கப் பாதிரிகளால் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட அநேக குறிப்பிட்ட கத்தோலிக்க இளைஞர்களைப் பற்றிய வழக்குகளையும், வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள செலுத்தப்பட்ட இலட்சக்கணக்கான பணத்தையும், நீதி மன்றத்துக்கு வெளியே செய்துகொள்ளப்பட்ட அநேக ஒப்பந்தங்களையும் “இனிமேலும் கற்பழிப்புக் குற்றங்களுக்காக, மேற்றாசனத்திலுள்ள ஆட்களுக்கு ஈடுகாப்பு செய்யாத” காப்பீட்டுக் கம்பெனிகளையும் பற்றிய விஷயங்களைத் தொடர்ந்து செய்தித்தாள் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டு வருகின்றன.
நேஷனல் கத்தோலிக் ரிப்போர்டர்-ன் பதிப்பாசிரியர் தாமஸ் ஃபாக்ஸ் சொன்னதாவது: “பிஷப்புகள் பல ஆண்டுகளாக தேசீய அளவில் பிரச்னையை மூடி மறைத்து வந்திருக்கிறார்கள்.” முன்னாள் பாதிரியும் தற்போது லயோலா பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ பேராசிரியருமான யூஜீன் கென்னடி சொல்வதாவது: “நீங்கள் நீதிமன்றத்தில் பார்ப்பது, பனிப்பாறையின் ஒரு முனையே.” டாமினிக் குழுவின் பாதிரியாரும் குருக்கள் குழுவின் வழக்கறிஞருமான தாமஸ் டாயல் தெரிவிப்பதாவது: “இந்த நூற்றாண்டில் நாம் எதிர்ப்பட வேண்டியதாயிருக்கும் தனி ஒரு மிக வினைமையான பிரச்னை பாலுறவு வேட்கையுடன் பாதிரிமார்களால் ஈனப்படுத்தப்படும் சிறு பையன்களுடையதாக இருக்கிறது.”
பைபிள் என்ன சொல்கிறது?
அது சொல்வதாவது: “இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர் மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும் அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.”—ரோமர் 1:26, 27, 32.
அது மேலுமாகச் சொல்வதாவது: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும், தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) வசனம் 11 கூடுதலாகச் சொல்வதாவது: “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கழுவப்பட்டீர்கள்.” கிறிஸ்தவர்களாக மாறின பாவிகள் சுத்தமாக்கிக் கொண்டார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள்: “அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.” (1 கொரிந்தியர் 5:11-13) மாம்சப் பிரகாரமான பாவங்கள் கிறிஸ்தவ சபையில் ஒருபோதும் நிகழாது என்பதல்ல, ஆனால் அவை நிகழும்போது, குற்றமுள்ளவர்கள் மனந்திரும்புவார்கள் அல்லது நீக்கப்படுவார்கள்.
ஆனால் இந்த ஆவிக்குரிய சுத்தம் செய்தலை—விபசாரக்காரரையும் வேசிமார்க்கத்தாரையும் ஓரினப்புணர்ச்சிக்காரர்களையும் நீக்குவதை—கிறிஸ்தவமண்டலத்தின் பெரும்பாலான மதங்கள் செய்யமாட்டா. இஸ்ரவேலர் பூர்வ பால் சம்பந்தப்பட்ட வணக்கத்தை அப்பியாசித்துக் கொண்டே யெகோவாவை சேவிப்பதாக உரிமைப்பாராட்டினர். (2 நாளாகமம் 33:17) கிறிஸ்தவ மண்டல சபைகளில், அவர்கள் மத்தியில் பாலின ஒழுக்கக்கேடு செழிந்தோங்கிக் கொண்டிருக்கும் போத, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “‘நீங்கள் திருடி, கொலை செய்து, விபசாரம் பண்ணி, பொய்யாணையிட்டு பாகாலுக்குத் தூபங்காட்டி நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?’ என்று யெகோவா கேட்கிறார்.”—எரேமியா 7:4, 8-10, புதிய சர்வ தேசீய மொழிபெயர்ப்பு.
யெகோவா தம்மை பரியாசம் பண்ணவொட்டார்; அனைவரும் எதை விதைக்கிறார்களோ அதையே அறுப்பார்கள். (கலாத்தியர் 6:7) எரேமியாவின் மூலமாக கொடுக்கப்பட்ட யெகோவாவின் வார்த்தைகள், தீர்க்கதரிசியால் இஸ்ரவேலிடமாகப் பேசப்பட்டபோது இருந்தவிதமாகவே இன்றும் பொருத்தமாக உள்ளது: “அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்.”—எரேமியா 6:15, புதிய சர்வ தேசீய மொழிபெயர்ப்பு.
யெகோவா பட்சபாதமுள்ளவரல்ல. அவர் ஆள் வேறுபாடு காட்டுகிறவரல்ல. கானானியரின் விஷயத்தில் இருந்ததுபோல, கிறிஸ்தவ மண்டலத்திற்கும் சம்பவிக்கும்.—அப்போஸ்தலர் 10:34; வெளிப்படுத்துதல் 21:8 ஒப்பிடவும். (g89 1/22)
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
மேற்றிராணியார் திருச்சபை உறுப்பினர்: “கிறிஸ்தவர்கள் ஓரினப்புணர்ச்சியை ஆதரிக்க மறுப்பதில் காலத்துக்குப் பின்னாலிருக்கிறார்கள்”
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
“இங்கிலாந்து சர்ச்சின் குருமாரில் 30-லிருந்து 40 சதவிகிதத்தினர் ஓரினப் புணர்ச்சிக்காரராக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்”
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“பாலுறவு வேட்கையுடன் பிள்ளைகளை ஈனப்படுத்தும் பாதிரிமார்களுக்கு” மறைகாப்பு
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
“அடுத்தப் பத்தாண்டுகளில் சர்ச்சின் கடன் தொகை 1,700 கோடி ரூபாயை எட்டிவிடக்கூடும்”
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
பாலுறவு வேட்கையுடன் பாதிரி ஒருவரால் ஈனச் செயலுக்குட்படுத்தப்பட்ட மற்றொரு இளைஞன் தூக்கில் தொங்கினான்
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
பாதிரியால் கருத்தரிக்கப்பட்டு, கருவை சிதைத்துவிடும்படியாக துரிதப்படுத்தப்பட்டாள்
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
“பரிச்சேதம் வெட்கப்படார்கள்; நாணவும் அறியார்கள்”