வெளவால்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை, அதிசயமானவை, அருமையானவை, ஆபத்திலிருப்பவை
‘வெளவால்! அவற்றைக் கண்டாலே எனக்கு வெறுப்பு! பயிர்களைச் சேதப்படுத்தும் இனம்! அவை பார்வையில்லாமல் உங்கள் முடியில் சிக்கிக்கொள்கின்றவை, நாய்வெறி நோய்களைப் பரப்புகின்றவை, உங்கள் இரத்தத்தை உறிஞ்சுவிடுகின்றவை! சீ! என் உடம்பெல்லாம் ஊருவது போன்ற ஓர் உணர்வு!’ அவை உங்கள் உணர்வாகவும் இருக்கின்றனவா?
உண்மையில், வெளவால்கள் அதிகமாக வெறுக்கப்பட்ட சிறிய உயிரினங்கள். அவை தவறான தகவல்களைத் தரும் அச்சகங்களால் தாக்கப்பட்ட உயிரினங்கள். தங்கள் முடியை அதிக திருத்தமாகச் சீவி சுத்தம்செய்துகொள்பவை. பெரும்பான்மையான வெளவால்களுக்கு நல்ல பார்வை உண்டு; அவற்றில் எதுவுமே குருடு அல்ல. உங்களுடைய முடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவற்றிற்குக் கிடையாது. அவற்றிற்கு நாய்வெறி நோய் இருப்பது அரிது. அப்படி இருந்தாலும், அந்நோயை உடைய நாய்களைப் போன்று உங்களைக் கடிக்க வேண்டும் என்ற மனச்சாய்வு அவற்றிற்கு ஏற்படுவதில்லை. “தேனீ கொட்டியும், வீட்டில் வளர்ப்பு நாய்களால் கடிக்கப்பட்டும் ஆண்டுதோறும் அநேக ஆட்கள் மரிக்கின்றனர்,” என்கிறார் ஓர் ஆய்வாளர். வெளவாலில் ஏறக்குறைய ஆயிரம் வகைகள் இருக்க, அவற்றில் மூன்று வகை மட்டுமே இரத்தம் குடிப்பவை.
டெக்சாஸிலுள்ள ஆஸ்டின் வெளவால் பாதுகாப்பு சர்வதேச சங்கத்தைத் தோற்றுவித்த மெர்லின் D. டட்டில் என்பவர் உலக வெளவால்கள் ஆய்வு அதிகாரியாக அறியப்பட்டிருக்கிறார்.a அவர் நமக்குச் சொல்வதாவது: “பாலூட்டி விலங்கினங்கள் அனைத்திலும் இவை கால் பாகமாக இருக்கின்றன. உலகின் மிகச் சிறிய பாலூட்டி முதல்—ஒரு காசின் மூன்றிலொரு பங்கு எடையையுடைய தாய்லாந்து நாட்டு வண்டு வகை வெளவால்—இறக்கைகளை விரித்தால் ஆறு அடி அகலம் இருக்கக்கூடிய ஜாவா தேசத்தின் பழம் உண்ணும் மிகப் பெரிய வெளவால் வரை அதிசயமான வகைகள் காணப்படுகின்றன. . . . ஏறக்குறைய 70 சதவிகித வெளவால்கள் பூச்சிகள் உண்கின்றன. அநேக வெளவால்கள் பழங்களை அல்லது தேனையும், வெகு சில மாம்சம் உண்கிறவையாகவும் இருக்கின்றன.” அவை பிரியமானவையாகவும், மென்மையானவையாகவும், அறிவுள்ளவையாகவும், பயிற்றுவிக்கப்படக்கூடியவையாகவும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பவையாகவும் காண்கிறார்; மற்றும் அவை
அதிசயமானவை!
அறிவியல் அமெரிக்கன் (Scientific American) என்ற பத்திரிகை ஒப்புக்கொள்வதாவது: “தொழில்துறையில் வெற்றிச் சாதனைகளைக் காணும் இந்நாட்களில், உயிருள்ள இயக்க அமைப்பு முறை, அவற்றின் செயற்கை மாதிரி இயக்க அமைப்பு முறைகளுடன் ஒப்பிடப்படமுடியாதளவுக்கு அதிக திறம்பட்டதாக இருப்பதை அவ்வப்போது நம் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது. இதற்கு ஒலியலைகளை அனுப்பி அவற்றின் பிரதிபலிப்பால் பொருட்களை அறியும் வெளவால் கையாளும் முறையைக் காட்டிலும் சிறந்ததோர் உதாரணம் இருக்க முடியாது. மற்ற விமானங்கள் அல்லது கப்பல்கள் இருக்கும் நிலையை அறிந்துகொள்ள மனிதன் அமைத்திருக்கும் ரடார் மற்றும் சோனார் கருவிகளைவிட இவை அளவிலும் ஆற்றலிலும் பல கோடி மடங்கு அதிக திறம் வாய்ந்தவையாக இருக்கின்றன.”—ஜூலை 1958, பக்கம் 40.
வெளவால் அனுப்பும் ஒலியலைகளின் எதிரொலியலைகளைக் கணித்து பொருட்களின் இடத்தை உணரும் முறை மனிதனின் கண்டுபிடிப்புகளைவிட அதிக நுட்பமானதாயிருப்பதால், அதை இன்னும் அதிக திருத்தமாகக் குறிப்பிட “எதிரொலி மூலம் இடம் அறிதல் முறை” என்கிறார்கள் அநேகர். பூச்சிகளை வேட்டையாடும் வெளவால் வேகமாகப் பறந்துவரும்போதே ஒலியலைகளை அனுப்புகின்றன. அந்த ஒவ்வொரு தனியலையும் ஒரு வினாடியின் கால அளவில் 10 முதல் 15 ஆயிரத்தில் ஒரு பங்காக இருக்கிறது. அந்த ஒலி பூச்சியில் பட்டு அது எதிரொலியாகத் திரும்பிவர, வெளவால் அதன் உணவுப் பொருளை நெருங்குகிறது. தான் அனுப்பும் தனி ஒலியலையின் அளவை வினாடிக்கு ஆயிரத்தில் ஒரு பங்காகக் குறைத்து, வினாடிக்கு 200 ஒலியலைகள் என்று வேகத்தைக் கூட்டி அனுப்புகிறது, இப்படியாக அது தன் உணவுப் பொருளை நெருங்கிக்கொண்டிருக்க அந்தப் பொருளின் உண்மை நிலையை அறிந்த வண்ணம் இருக்கிறது. மெல்லிய கம்பிகள் மாட்டப்பட்டிருக்கும் ஓர் அறையில், எதிரொலி மூலம் இடம் அறிதல் முறையில் நிபுணராய்த் திகழும் வெளவால் அவற்றையெல்லாம் தவிர்த்துவிடுகிறது—அவை 0.04 அங்குல விட்டமுடைய கம்பிகளினிடையேயும் கடந்து செல்ல முடியும்.
எதிரொலி மூலம் இடம் அறிதல் முறை கொண்ட வெளவால், அது அனுப்பும் ஒவ்வொரு தனி ஒலியலையின் தொனியை மாற்றுவதன் மூலம், அதாவது வினாடிக்கு 50,000 முதல் 25,000 சைக்கிள்களாக மாற்றுவதன் மூலம் அது இன்னும் நுட்பமாக்கப்படுகிறது. தொனியின் உச்சம் மாறுகையில் அலையின் அளவு கூடுகிறது. கால் அங்குலத்தில் துவங்கி அரை அங்குலம் வரை ஆகிறது. இது வித்தியாசமான அளவிலான பொருட்களைக் கணிக்க வெளவாலுக்கு உதவுகிறது, ஏனென்றால் அலையளவிலுள்ள இந்த வித்தியாசம் பெரும்பாலும் தான் அருந்தும் பூச்சிகள் அனைத்தின் அளவையும் உள்ளடக்குவதாயிருக்கிறது. அந்தப் பொருள் உணவுக்குரியதா அல்லவா என்பதை வெளவால் அந்த எதிரொலியிலிருந்தே கணித்துவிடும். அது ஒரு கூழாங்கல்லாக இருக்குமானால், கடைசி நிலையிலும் அதை விட்டு விலகிப் பறந்துவிடும்.
ஆயிரக்கணக்கான வெளவால்களின் ஒலிகளுக்கு மத்தியில் தன்னுடைய சொந்த எதிரொலியைக் கணித்து செயல்படக்கூடிய வெளவாலின் திறமை ஒரு விந்தை. குகைகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான வெளவால்கள் காற்றைத் தங்களுடைய ஒலியாலும் எதிரொலியாலும் நிரப்புகின்றன, என்றபோதிலும் ஒவ்வொரு வெளவாலும் தான் அனுப்பும் ஒலியின் எதிரொலியைக் கணிப்பதுடன், மற்றவற்றுடன் மோதுவதில்லை. பிரச்னையை சிக்கல்மிகுந்ததாக்குவதும் எதிரொலி மூலம் இடம் அறியும் வெளவாலின் திறமையில் காணப்படும் அதிசயத்தைச் சிறப்பித்துக் காட்டுவதும் என்னவென்றால், “அவை அனுப்பும் ஒலியலைகளைவிட அவற்றின் எதிரொலி அதிகக் குறைவாக இருக்கிறது—2,000 மடங்கு குறைவாயிருக்கிறது. இவற்றைத் தாங்கள் வெளியிடும் ஒலியலைகளைப்போன்ற அளவுக்கு இருக்கும் சப்தங்களின் மத்தியில் பொறுக்கியெடுக்க வேண்டும். . . . இருந்தாலும், வெளவால், பின்னணிச் சப்தத்துடன் ஒப்பிடுகையில் 2,000 மடங்கு பலவீனமாயிருக்கும் இந்தக் குறிப்பலைகளை அடையாளங்கண்டு பயன்படுத்திக்கொள்கிறது!” ஒலியலையின் எதிரொலி மூலம் பொருட்களைக் கணிக்கும் இப்படிப்பட்ட மிக மேன்மையான முறை நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது.
நீண்ட காதுகள் கொண்ட வெளவால்கள், “தங்களுடைய குசுகுசுப்பு எதிரொலியையுங்கூட பரிபூரணமாக கேட்கமுடியும்,” என்று சொல்லப்படுகிறோம். சில வெளவால் வகைகளின் கேட்கும் திறன் எந்தளவுக்கு நுட்பமாயிருக்கிறதென்றால், பத்து அடிக்கு அப்பால் இருக்கும் ஒரு விட்டில் மண்ணில் நடந்து செல்லும் சப்தத்தையுங்கூட கேட்க முடிகிறது. என்றபோதிலும் “எதிரொலியின் மூலம் பொருட்களின் இடம் அறிய” ஒலியலைகளை அனுப்பும்போது, அவைகளுடைய சொந்த குரல் அவைகளுக்குக் கேட்பதில்லை. “ஒவ்வொரு முறையும் ஒரு குரல் எழுப்பப்படும்போதும், அதன் செவியின் ஒரு தசை தானாகவே மூடிவிடுகிறது, இப்படியாக அந்தக் குரலின் சப்தத்தைத் தற்காலிகமாக மூடிவிட்டு எதிரொலி மட்டுமே கேட்கப்படச் செய்கிறது. ஒவ்வொரு வெளவாலும் தனக்கென்ற ஒலி அமைவைக் கொண்டிருக்கும் சாத்தியம் இருக்கிறது, இப்படியாக தன்னுடைய சொந்த எதிரொலிகளால் வழிநடத்தப்படுகிறது.”
தாய் வெளவால்கள் போற்றுதற்குரியவை. பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குட்டிதானே கொண்டிருக்கும் இவற்றில் சில உணவு தேடிச் செல்லும்போதுங்கூட அதைத் தூக்கிக்கொண்டுபோகின்றன. மற்றவை அவற்றைக் குகையிலுள்ள ஒரு பாலர்க்கூடத்தில் விட்டுச்செல்கின்றன. இவை ஒரு சதுர கெஜ பரப்பளவில் 5,000 குட்டிகள் என்றளவில் அடைந்துகிடக்கின்றன. தாய் திரும்பி வரும்போது, தன் குழந்தையை அழைக்கிறாள், குழந்தை மறு குரல் கொடுக்கிறது. இலட்சக்கணக்கான வெளவால் குட்டிகளின் கூச்சலும் தாய்மார்களின் அழைப்பொலிகளும் நிரம்பியிருக்க, அவள் தன்னுடைய குட்டியைக் கண்டுபிடித்து பாலூட்டுகிறாள். சில பெண் வெளவால்கள் பொதுநலப் பண்புடையவை. உணவருந்திய பின்னரும், உணவு கண்டுபிடிக்க முடியாதிருக்கும் மற்ற பெண் வெளவால்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக உண்ட உணவை திரும்ப வெளியே கொணர்ந்து அவற்றிற்குப் பரிமாறுவர்.
அருமையானவை!
பூச்சிகளை உண்ணும் ஒரு வெளவால், ‘ஒரே மணிநேரத்தில் 600 கொசுக்களைப் பிடிக்க முடியும், ஒரே இரவில் 3,000 பூச்சிகளை உண்ணும்,’ என்று டட்டில் கூறுகிறார். அரிஸோனாவில் குடியிருக்கும் ஒரு வெளவால் கூட்டம் “ஒவ்வொரு இரவும் 3,50,000 பவுண்டு எடை பூச்சிகளை அல்லது 34 யானைகளின் எடையளவான பூச்சிகளை உட்கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது!
சில வெளவால்கள் தேன் அருந்துபவை, மகரந்த சேர்க்கைக்குப் பயனுள்ள சேவை புரிகின்றன. தேன் சிட்டுகளைப் போன்று மலர்கள் மேல் வட்டமிட்டு, சிலிர்த்த முடிகளைக் கொண்ட நுனியையுடைய நாவினால் தேனையும் மகரந்த துகளையும் ஒத்தி எடுத்துக்கொள்கின்றன. அவை வெப்பமண்டல விலங்கினங்களானதால் மெக்ஸிக்கோவுக்கும் தென்மேற்கு ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையே இடம் மாறிச் செல்கின்றன. பழம் உண்ணும் வெளவால்கள் பரந்த பகுதிகளில் விதைகளைப் பரப்புகின்றன. டட்டில் கூறுகிறார்: “விதைகளைப் பரப்பவும் மகரந்தசேர்க்கை நிகழவும் உதவும் பழம் உண்ணும் வெளவாலும் தேன் அருந்தும் வெளவாலும் இலட்சக்கணக்கான டாலர் வருமானத்தைக் கொடுக்கும் மழைக் காடுகள் பிழைத்திருக்கவும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட தாவரங்களின் உற்பத்திக்கும் அதிக அவசியம்.”
புதிய அறிவியலர் (New Scientist), செப்டம்பர் 1988 கூறியது: “தாவரங்களின் நாசினிகளாகக் கருதி வெளவால்களைக் கொல்லும் விவசாயிகள் உற்பத்தியில் அதிக இழப்பை எதிர்ப்படவேண்டியதாயிருக்கும், ஏனென்றால் அவை அவர்களுடைய கனி மரங்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. வெளியூர்களுக்கு அனுப்பப்படுவதற்காக கனிகள் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு முன் அறுவடை செய்யப்படுகின்றன, உள்ளூர் உபயோகத்திற்காக இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு முன் அறுவடை செய்யப்படுகின்றன, ஆனால் வெளவால்களோ அறுவடை செய்யப்படாத கனிகளைத்தான் பயன்படுத்துகின்றன—விவசாயிகளுக்கு அக்கனிகளால் எந்தப் பயனும் இல்லை. ஆனால் மகரந்த சேர்க்கையும் விதைகள் பரவுவதும் 500 தாவர இனங்களுக்கு மேற்பட்ட செடிகளும் மரங்களும் அழியாதிருக்க மிகவும் அத்தியாவசியமாயிருக்கின்றன. ஒரு காரியம் என்னவெனில், பழம் உண்ணும் வெளவால்கள் எதிரொலிக் கணிப்பு முறையைக் கையாண்டு பறப்பதில்லை—அவற்றிற்கு நல்ல கண் பார்வை இருக்கின்றன. அநேக சமயங்களில் பார்வையிழந்திருப்பது வெளவால்கள் அல்ல, விவசாயிகளே.
ஆபத்திலிருப்பவை
இருந்தாலும், இந்தப் பயனுள்ள வெளவால்கள் கடினமான காலங்களை எதிர்ப்படவேண்டியிருக்கின்றன. குடியிருப்பு இல்லாமை, பூச்சிக்கொல்லிகள், கணக்கில்லாமல் கொல்லப்படுதல் ஆகிய காரியங்கள் இவற்றின் எண்ணிக்கைகளை இலட்சங்களிலிருந்து ஆயிரங்களாகக் குறைத்தும், சிலவற்றை இல்லாமற்போகும் நிலைக்குள்ளும் ஆக்கிவிட்டிருக்கின்றன. வெறுப்பும், தவறாகப் புரிந்துகொள்ளப்படுதலும், அறியாமையும் பொதுவான காரணங்களாக இருக்கின்றன. லத்தீன் அமெரிக்காவில் இருக்கும் இரத்தம் உறிஞ்சும் வெளவால் நவீன கால்நடைகளைக் காப்பாற்றுவதற்காகக் கட்டுப்படுத்தவேண்டியதாயிருக்கிறது, ஆனால் “அந்த வெளவால்களைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான பயிற்சி பெறாத ஆட்கள் அப்பகுதியில் வாழும் மற்ற 250 வெளவால் இனங்களில் பெரும்பான்மையானவை அதிக பயனுள்ளவை என்பதை அறியாமல் கண்மூடித்தனமாக எல்லா வெளவால்களையும் கொன்றுவிடுகின்றனர்.”
ஆஸ்திரேலியாவில் “சுற்றுபுறச் சூழலின் சமநிலையைக் காத்துக்கொள்வதற்கு அத்தியாவசியமானதும் பொருளாதார ரீதியில் முக்கியமானதுமான மரங்கள் அந்த வெளவால்களைச் சார்ந்து இருக்கின்றன என்ற உண்மை அறியப்பட்டிருப்பதாலும்,” “தாவரங்கள் வெளவால்களால் சேதப்படுத்தப்படுவதால் அவை கட்டுப்படுத்தப்படவேண்டிய அவசியமில்லை என்பதை அரசின் சொந்த ஆய்வு காண்பித்தபோதிலும்” ஆயிரக்கணக்கான பழம் உண்ணும் வெளவால்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேயலில் “பழம் உண்ணும் வெளவால்களின் குடியிருப்புகள் என்று கருதப்பட்ட குகைகளில்—சரணாலயங்களிலுங்கூட—விஷம் வைக்கப்பட்ட செயல் எதிர்பார்க்காத அளவில் தேசத்தில் குடியிருந்த பூச்சிகளை உண்ணும் வெளவால்களில் 90 சதவிகிதத்தைக் கொன்றது.”
வெளவால்கள் நாய்வெறி நோயையும் மற்ற நோய்களையும் கடத்துபவை என்ற பழங்கால பயம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது: “வெளவால் மூலம் வரும் நோயால் ஒருவர் மரிப்பது என்பது வெகு அரிதாயிருக்கிறது; ஒரு நாயாலும், வண்டு கொட்டுதலாலும், அல்லது ஒரு சர்ச்சின் இன்ப உலாவின்போது ஏற்படும் நச்சு உணவாலும் கொல்லப்படும் ஆட்களின் எண்ணிக்கைக்கு இது வெகு தூரமாக இருக்கிறது.”
1985-க்கான அறிவியல் ஆண்டு (Science Year) வெளவால்களின் பேரில் அமைந்த கட்டுரையின் சுருக்கமாகப் பின்வருமாறு குறிப்பிட்டது: “எதிர்பாராத காரியம் என்னவென்றால், வெளவால்களால் ஏற்படும் பயன்களின் பட்டியல் கூடிக்கொண்டிருப்பது போலவே அவை உயிர்வாழ்வதன் அச்சுறுத்தலும் கூடிக்கொண்டிருக்கிறது. உலகமுழுவதுமே, வெளவால்களின் தொகை வேகமாகக் குறைந்துவருகிறது. அவற்றின் குடியிருப்புகள் கலைக்கப்படுவதாலும் அல்லது அழிக்கப்படுவதாலும் அவை ஒவ்வொரு ஆண்டும் அழிந்துவருகின்றன. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வெளவால்கள் உணவுக்காகவும், நாட்டு மருந்துகளுக்காகவும் ஏராளமாக வேட்டையாடப்படுகின்றன. பழம் உண்ணும் வெளவால்கள் தாவரங்களை வெகுவாக சேதப்படுத்திவிடும் என்று தவறாக நம்பப்படுவதால் அந்த பண்ணையாளர்களால் பெரும்பாலும் கொல்லப்படுகின்றன. வெளவால்களைப் பற்றிய கட்டுக் கதைகள் அந்தளவுக்குச் செல்வாக்குடையவையாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் அவை இலட்சக்கணக்கில் கொல்லப்படுகின்றன. சில வகை வெளவால்கள் இல்லாமற்போகும் நிலையிலிருக்கின்றன, இன்னும் பல ஆபத்திலிருக்கின்றன. வெளவால்கள் இருப்பதன் அருமையையும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இன்னும் பலர் உணரவந்தால் தவிர, இந்த முக்கியமான உயிரினங்களின் எதிர்காலம் அநிச்சயமாய் இருக்கிறது.”
வெளவால் பாதுகாப்புச் சர்வதேச சங்கம் கண்ட சில பயன்களின் பட்டியலைக் குறிப்பிட்ட பின்பு, மெர்லின் டட்டில் இப்படியாக முடிக்கிறார்: “ஆரோக்கியமான அளவில் வெளவால் தொகை உயிர்ப்பிழைப்பதற்கு, நாம் செய்யவேண்டியவற்றின் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறோம். சிலவற்றிற்குக் காலம் கடந்து விட்டது, இன்னும் மற்றவற்றிற்கு காலம் வேகமாகக் கடந்து போகிறது. வெளவால் தொகையில் இழப்பு, நாம் அனைவருமே பகிர்ந்துகொள்ளவேண்டிய சுற்றுபுறச் சூழலுக்கு மாற்றமுடியாத கவலைக்கிடமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.”
மீண்டும் இதோ, செய்தி தெளிவாகவே தொனிக்கிறது: மனிதன் தன்னுடைய சொந்த நடைகளை நடத்த முடியாது என்பதைப் பழங்கால சரித்திரமும் தற்கால சரித்திரமும் காண்பிக்கின்றன. (எரேமியா 10:23) அவனுடைய பண ஆசை, அவனுடைய குறுகிய பார்வை, அவனுடைய தன்னலம் சுற்றுப்புறச் சூழலை—காற்று, நீர், நிலம், தாவரம் மற்றும் விலங்கின வாழ்வு—மக்களும் உட்பட அழிக்கப்படுவதில் விளைவடைந்திருக்கின்றன. யெகோவா தேவன் மட்டுமே அதை நிறுத்துவார். அவர் மட்டுமே “பூமியை நாசப்படுத்தியவர்களை நாசப்படுத்துவார்.”—வெளிப்படுத்துதல் 11:18, NW. (g89 1⁄22)
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரையில் காணப்படும் எல்லாப் படங்களுமே வெளவால் பாதுகாப்புச் சர்வதேச சங்கத்தைச் சேர்ந்த மெர்லின் D. டட்டில் அளித்தவை.
[பக்கம் 16-ன் படம்]
கேம்பியன் பழம் உண்ணும் வெளவால்கள், தாயும் சேயும்
[பக்கம் 17-ன் படம்]
லைலின் பழம் உண்ணும் வெளவால்
[பக்கம் 17-ன் படம்]
தேன் அருந்தும் வெளவால்
[பக்கம் 18-ன் படங்கள்]
மேலிருந்து கீழாக:
பொதுவாகக் காணப்படும் நீள்செவி வெளவால்
பழம் உண்ணும் வெளவால்
இருதயவடிவு முகத்தையுடைய வெளவால் விட்டில் பிடிக்கிறது
உணவு வேளை உற்சாகம்!