உலகத்தைக் கவனித்தல்
செர்நோபில் பற்றிய புதிய தகவல்
மான்செஸ்டர் கார்டியன் வீக்லியின் பிரகாரம் செர்நோபிலில், ரஷ்யாவில் அணு விபத்து நடந்து நான்கரை ஆண்டுகளான பின்பு, உள்ளூர்வாசிகள், “விசேஷமாக பிள்ளைகள், வீங்கிய கேடயச் சுரப்பி, சோம்பல், கண்படலம் இன்னும் புற்றுநோய் வீதத்தின் உயர்வினாலும் வேதனையுறுகின்றனர்.” ஒரு பகுதியில், கதிர்வீச்சு ஏற்படுத்தும் புற்றுநோயிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இன்னும் மரிக்கவிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் முன்னறிவிக்கிறார்கள். பண்ணை நிர்வாகிகள், பண்ணை விலங்குகள் மத்தியில், அதிகமான பிறப்பு ஊன விகிதம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்: “தலைகள், கை கால்கள், விலா எலும்புகள் அல்லது கண்களில்லாத கன்றுக்குட்டிகள்; இயற்கைக்கு மாறான மண்டையோட்டோடு பன்றிகள்.” அளவினை காட்டும் கருவியின் குறிப்பு, கதிர்வீச்சு அளவு அந்தப் பகுதியில் இயல்பான அளவைவிட 30 மடங்கு உயர்வாக இருப்பதாகக் காண்பிக்கிறது. பெலோரஸ்யாவிலுள்ள மாகிலேவ் பிராந்தியத்தில் மருத்துவ மனை நிர்வாகி சோய கச்சோவா தெரிவித்ததாவது: “தூய்மை கெடுக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு எந்த உறுதியையும் நம்மால் அளிக்கமுடியாது.” (g90 3/8)
சூரிய ஒளி வீசுகையில்
ஜெர்மனி நாட்டின் கூட்டரசு குடியரசிலுள்ள ஒரு கட்டிடக் கலைஞர், குறிப்பிடத்தக்க தகைத்திறமுடைய, விசித்திரமான தோற்றமுள்ள சூரியனின் ஆற்றலால் இயங்கும் காரை வடிவமைத்து உருவாக்கியிருக்கிறார். டை சீட் என்ற செய்திதாளின்படி, கட்டிடக்கலைஞரின் சொந்த ஊரில், கார் பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான ஆரவாரத்தை வெளியிடச் செய்கிறது. வயது வந்தவர்கள், அது வரிப்பந்தாட்ட மேசையைப் போன்றா அல்லது தட்டையான ஒரு சிறு மீனைப் போன்றா இருக்கிறது என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தோற்றத்தை ஒரு புறம் ஒதுக்கிவிட, கார் நன்றாகவே ஓடுகிறது. சூரிய ஆற்றலால் இயங்கும் ஊர்திகளில் உலகில் முதன்மை வாய்ந்த இடத்தை அது வென்றிருக்கிறது, அது மணிக்கு 80 மைல் வேகத்தையும்கூட அடைந்துவிட்டிருக்கிறது. ஆனால் மின்கலத்தில் முழு மின்விசை ஏற்றப்படுகையில் இது இப்படியாக இருக்கிறது. நேரடியாக சூரிய ஒளியில் ஓடுகையில், காரினால் மணிக்கு 20 மைல் வேகத்தைத் தாண்ட முடியாது—அதுவும் சூரிய ஒளி வீசுகையில் மட்டுமே. (g90 3/8)
ஏழ்மையிலுள்ள பிள்ளைகள்
ஐக்கிய மாகாணங்கள் வளமான வாழ்வுக்கும் நிறைவுக்கும் பேர்போன நாடாகும், என்றபோதிலும் அரசாங்க ஏஜென்ஸிக்கள் நடத்திய ஆய்வு, அந்தத் தேசத்தில் லட்சக்கணக்கான ஆரோக்கியமற்ற மற்றும் படிப்பறிவில்லாத பிள்ளைகள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது. ஆள்தொகை கணக்கு புள்ளிவிவர மதிப்பாய்வின்படி ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு 5 பிள்ளைக்கும் ஒரு பிள்ளை—18 வயதுக்குட்பட்ட 126 லட்சம் பேர்—வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்ந்துவருகிறார்கள். பிள்ளைகள் மத்தியில் வறுமையின் அதிகரிப்புக்கு ஓரளவு ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் அதிகரிப்பைக் குற்றஞ்சாட்டுகிறார் பொருளியலர் D. லீ பொடன். ஐக்கிய மாகாணங்களில் 170 இலட்சத்துக்கும் அதிகமான பிள்ளைகள் ஒற்றை பெற்றோரோடு வாழ்ந்துவருவதாக மதிப்பிடப்படுகிறது. (g90 3/8)
காலியான சர்ச்சுகள்
சமீபத்தில் ஜெர்மன் கூட்டரசு குடியரசில் செய்யப்பட்ட ஆய்வின்படி, ஜெர்மன் நாட்டவரில் 70 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள், 13 சதவீதத்தினர் மாத்திரமே தாங்கள் நாத்தீகர்கள் என்பதாக ஒப்புக்கொண்டதாக ஒரு ஜெர்மன் செய்திதாள் ஷிவின்ஃபர்டர் டாக்ப்ளாட் அறிவிப்பு செய்கிறது. என்றபோதிலும் அலன்பாச் ஒப்பினியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நடத்திய வாக்கெடுப்பின் விளைவு, ஜெர்மன் கூட்டரசு குடியரசில், லூதரன்களில் 5 சதவீதத்தினரும் கத்தோலிக்கர்களில் 25 சதவீதத்தினரும் மாத்திரமே சர்ச் ஆராதனைக்கு ஒழுங்காகச் செல்வதைக் காண்பித்தது. இவர்களில் 50 சதவீதத்தினர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். (g90 3/8)
சிறியதிலும் மிகச் சிறியது
நீரில் வாழும் சிற்றுயிரினத்தின் புதிய மண்டலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: 0.000008 அங்குல விட்டத்தைக் கொண்ட நச்சுக்கிருமிகள். முன்னதாக, 0.0004 அங்குலத்திலிருந்து 0.0008 அங்குல விட்டத்தைக் கொண்ட உயிரினங்களான நானோப்ளாங்டனும் (Nanoplankton) 0.00008 அங்குலத்துக்கும் குறைவான விட்டமுடைய பைக்கோப்ளாங்டனும் (Picoplankton) மிகச் சிறிய உயிர்வகைகளாக கருதப்பட்டது. தூய்மைக்கெடுக்கப்படாத தனி ஒரு கனசதுர அங்குல தண்ணீரில் 1,600 லட்சம் முதல் 16,000 லட்சம் வரையான நச்சுக்கிருமிகள்—பாக்டீரியாவின் எண்ணிக்கையைவிட பத்துமடங்கு—இருக்கக்கூடும் என்பதாக மதிப்பிடப்படுகிறது. இது இவைகளை “பூமியிலேயே மிகப்பல உயிர் வகைகளாக செய்கிறது” என்கிறது சையன்டிஃபிக் அமெரிக்கன். (g90 3/22)
குழம்பிவிடும் புலிகள்
தி நியுயார்க் டைம்ஸின் பிரகாரம் இந்தியாவில் சுந்தர்பான் புலி சரணாலயக் காடுகளிலுள்ள சுமார் 500 வங்க புலிகள் ஆண்டுக்கு சுமார் 60 ஆட்களைக் கொன்றுவிடுகிறது. மனித உயிர் சேதத்தைக் குறைக்கும் முயற்சியில், இந்திய காட்டிலாக்கா துறை புதிய ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. புலிகள் மக்களை பின்னிருந்து மாத்திரமே தாக்குவதாகச் சொல்லப்படுவதன் காரணமாக, காட்டிலாக்கா வேலையாட்கள் அவர்களுடைய தலைக்குப் பின்னால் அணிந்துகொள்வதற்கு முகமூடிகளை வழங்கியுள்ளது. மூன்று ஆண்டு காலப்பகுதியின் போது, முகமூடி அணிந்த எவரும் கொல்லப்படவில்லை. மாறாக, மூன்று ஆண்டு காலப்பகுதியின் போது கடந்த 18 மாதங்களில் புலிகளால் கொல்லப்பட்ட 29 ஆட்களில் எவருமே முகமூடியை அணிந்திருக்கவில்லை. மரவெட்டி ஒருவன், மதிய உணவுக்காக தன் முகமூடியை கழற்றிவிட்டு உட்கார்ந்தபோது, பின்னிருந்து புலியினால் தாக்கப்பட்டான். உள்ளூர்வாசிகள் மத்தியில், “புத்திசாலியான புலிகளை நீண்ட காலத்துக்கு ஏமாற்றமுடியாது” என்பதாக வாதிடும் சிலர் இருக்கிறார்கள். (g90 3/22)