இன்காஸ் படிகட்டுகளின் மீது நடந்து செல்வது
“அச்சத்தையும் மதிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது!” “அது அத்தனை கம்பீரமாக இருக்கிறது!” “நான் முற்காலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதுபோல உணருகிறேன்.” பெருவில், மச்சு பிச்சு என்னுமிடத்தில் புதுமை உணர்வு இழந்து நிற்கும் இன்காஸ் நகரத்தின் காட்சியைப் பார்த்து அடக்கமுடியாமல் நாங்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் இவை.
இதற்கு முன்பே நான் மச்சு பிச்சுவுக்குச் சென்றிருந்த போதிலும், மறுபடியுமாக என் மனைவி எலிசபெத்தோடும் எங்கள் நல்ல நண்பர்கள் பால்டாஸார் மற்றும் ஹீட்டியுடன் இதைப் பார்ப்பது மறக்க முடியாத அனுபவமாக எனக்கிருந்தது.
மச்சு பிச்சுவுக்கு எங்கள் பயணம் சமுத்திர மட்டத்துக்கு 11,000 அடி மேலே இருக்கும் இன்கான் சாம்ராஜ்யத்தின் முன்னாள் தலைநகராகிய குஸ்கோ என்ற கவர்ச்சிமிக்க நகரில் ஆரம்பமானது. இன்கா அரசன் பச்சகுட்டியினால், பூனையினத்தைச் சேர்ந்த ப்யூமா என்ற விலங்கின்வடிவில் அமைக்கப்பட்ட இந்நகரம் தன்நிகரில்லா அழகுடைய இன்கான் சிற்பக் கலையினால் இன்னும் கண்ணுக்கு நிறைவாக இருக்கிறது. முக்கிய இடத்திலுள்ள பெரும்பாலான கட்டிடங்கள், பூர்வ இன்கான் அடிக்கல் மீது ஒரே நிலையில் உறுதியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விசைப் பொறியின்றியே துல்லிபமாகப் பொருத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தக் கற்கள் அநேகமாக ஐந்து அல்லது அதிக அடி உயரமானதாக பல டன்கள் எடையுடையனவாக இருக்கின்றன. ஸ்பனிய நாட்டைச் சார்ந்த வரலாற்றுப் பதிவாளர் சீசா எழுதியவிதமாகவே: “இவை எவ்விதமாக மேலே கொண்டுவரப்பட்டு இவ்விடத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது . . . மனதை தடுமாறச் செய்கிறது.” என்றபோதிலும் மச்சு பிச்சு நாங்கள் இதுவரை பார்த்திருக்கும் எதையும் விஞ்சிவிடும் என்பதாக கேள்விப்பட்டோம்.
வளைவு நெளிவுமிக்க பயணம்
அந்த வெள்ளிக்கிழமை அதிகாலமே எழுந்திருந்து ஏழு மணிக்கு குஸ்கோவிலிருந்த சான் பெட்ரோ நிலையத்தைவிட்டு புறப்பட்டோம். கடைசியாக மச்சு பிச்சுவுக்குப் போகும் இரயிலில் இருப்பது குறித்து கிளர்ச்சியடைந்தோம். இரயில் அநேக ஆண்டுகளாக வேலை செய்திருப்பதாகத் தோன்றியபோதிலும், குஸ்கோவிலிருந்து அமேஸான் காட்டின் சுற்றுவட்ட அளவு வரையாக 4,000 அடி கீழே இறங்கியபோது, இம்மலையூர்தி தடங்கலின்றியேச் சென்றது. உருபாம்பா நதி ஓரமாக மச்சு பிச்சுவுக்கு (“பழைய மலையுச்சி” என்று பொருள்படுகிறது) செல்வதற்கான நான்கு மணிநேர பிரயாணத்தின்போது, எங்கள் கண் முன்னிருந்தக் காட்சி மாறினது. வறண்ட மலைகளிலிருந்தும் அல்டிப்ளேனோவிலிருந்தும் நாங்கள் இறங்கியபோது, நிலப்பரப்பு தாவர வளர்ச்சியினால் பச்சை பசேலென்று இருந்தது. கடைசியாக நாங்கள் செழிப்பான இலைகள் நிறைந்த மரங்களால் மூடப்பட்ட மலைகளுக்கு நடுவில் வந்து சேர்ந்தோம்.
இரயிலில் நாங்கள் மச்சு பிச்சுவைப் பற்றி வாசித்தக் காரியங்களையும் அதன் வரலாற்றைப் பற்றி எங்களுக்குத் தெரிந்தவற்றையும் பற்றி பேசிக் கொண்டு சென்றோம். ஒரு சிறு பையன் வழிகாட்டிச் செல்ல, 1911 ஜூலை மாதம், ஆய்வு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஹிராம் பெங்ஹாம் என்பவர் காணாமற் போன இந்த நகரத்தைக் கண்டுபிடித்தார். பையன் பெங்ஹாமுக்கு, மச்சு பிச்சு மலையுச்சியின் மீது வெப்பமண்டல காட்டிலுள்ள “அண்மையிலிருந்த இடிபாடுகளைக்” காண்பிக்க அவரை அழைத்துச் சென்றான். ஆனால் பெங்ஹாம் எழுதிய விதமாகவே, “திடீரென்று முன்னறிவிப்பின்றி, மேலே நீட்டிக்கொண்டிருந்த மாபெரும் பாறைமுகட்டுக்குக் கீழே பையன் மிகவும் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்த கல்லினால் அழகாக வரியிட்டு நிரப்பப்பட்டிருந்த ஒரு குகையைக் காண்பித்தான்.” பையன் ஒரு சுவரை அவருக்குக் காண்பித்தபோது, “அது நம்பமுடியாத ஒரு கனவுபோல தோன்றியது. இந்தச் சுவரும் அதை அடுத்து குகையின் மேலிருந்த அரை வட்டவடிவ ஆலயமும் உலகிலேயே மிக நேர்த்தியான கற்கட்டிட வேலையைப் போல இருப்பது எனக்குப் புலப்பட துவங்கியது” என்பதாக அவர் சொன்னார். இந்தக் கற்கட்டிட வேலைபாட்டையும்கூட நாங்கள் பார்க்க இருந்ததை நினைத்தபோது!
ஒருவேளை சுமார் 500 ஆண்டுகளுக்கும் முன்பாக நகரத்துக்கு அண்மையில் இந்தக் கோட்டைக் கட்டப்பட்டதற்கான நோக்கம் இன்னும் அறியப்படவில்லை. சூரியனின் கன்னிப்பெண்களுக்கு ஒரு புகலிடமாக இது இருந்தது என்பது ஒரு கருத்து. ஏனென்றால் பெங்ஹாம் கண்டுபிடித்த பெரும்பாலான அறைவீடுகளில் பெண்களின் பிணங்களே இருந்தன. இந்த நகரம் ஓர் இராணுவ புறங்காவல் அரணாக சேவித்தது என்பது மற்றொரு கருத்தாகும். பேரரசன் போரில் பின்வாங்கியதாலோ அல்லது ஸ்பனிய வெற்றி வீரன் பிஸாரோவின் கைக்குத் தப்பி இன்காஸ்கள் ஓடிவந்து தஞ்சம் புகுந்த புகலிடமாகவோ இது இருந்திருக்கலாம் என்பதாகச் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் அல்லது நுழைய முடியாத அமேஸான் காடுகளில் மான்கோ இன்கா ஸ்தபித்திருந்த புதிய இன்கா ஆட்சிப்பரப்பாகிய வில்காபாம்பாவின் தலைநகரமாகவோ இது இருந்திருக்கலாம். மச்சு பிச்சு நகரத்துக்குப் பின்னாலிருந்த உண்மை எதுவாக இருப்பினும் கடல்மட்டத்துக்கு மேல் 6,750 அடி உயரத்திலிருந்து கண்கவர் இடிபாடுகளைக் காண நாங்கள் ஆவலாயிருந்தோம்.
நாங்கள் மச்சு பிச்சுவின் மலையடிவாரத்தை வந்து சேர்ந்தபோது, கைவிடப்பட்ட நகரம் எங்களுக்கு மேலே இருந்ததை நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் இரயிலைவிட்டு இறங்குகையில் எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை. மலை உச்சிக்குச் செல்லும் குறுகலான வளைவுடைய பாதையில் 20 நிமிட பேருந்து பயணத்துக்காக வரிசையில் நிற்க நாங்கள் விரைந்தோம். என்றபோதிலும் மலையை நோக்கி நாங்கள் வளைந்து வளைந்து சென்றுக் கொண்டிருக்கையில் இடிபாடுகளின் கணநேரக் காட்சியைக் காணமுயன்றும் எதையும் எங்களால் காணமுடியவில்லை.
முடிவற்ற படிகட்டுகளும் கற்களும்
(மலையின் மேலிருந்த ஒரே நவீன கட்டிடமாகிய) விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியப் பின்பு நாங்கள் கடைசியாக இடிபாடுகளின் நுழைவாயிலை வந்தடைந்தோம். மூலையை சுற்றிச் சென்றபோது நாங்கள் பார்த்தக் காட்சி எங்களை கிளர்ச்சியடையச் செய்தது. கண்ட காட்சி நம்ப முடியாததாக இருந்தது. “நான் புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன், ஆனால் படங்கள் இந்த இடத்தைச் சரியாக படம்பிடித்து காண்பிக்க முடியாது” என்பதாக எலிசபெத் சொன்னாள். இரண்டாயிரம் அடிகளுக்குச் கீழே, உருபாம்பா நதி மலைத்தொடரின் அடிவாரத்தின் ஓரமாக ஓடியது. எத்திசையிலும் கம்பீரமான அழகுடன் பசுமையான மலை உச்சிகளை நாங்கள் பார்த்தோம். இது எங்களை மிகவும் அற்பமானவர்களாக உணரச் செய்தது. அச்சத்தையும் மதிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய இந்த எல்லாப் பின்னணிக்கும் எதிராக, துறக்கப்பட்ட நகரம்தானே இதைக் கைப்பற்றியவர்களால் கறைப்படுத்தப்படாமல் புனிதமான ஓர் இடம்போல அமையப் பெற்று ஆச்சரியமான மயிர்க்கூச்செறிய வைக்கிற உணர்வை உண்டுபண்ணுகிறது.
இடிபாடுகள் நகரம் முழுவதுமாக கல்லினால் கட்டப்பட்டிருந்ததை, கருங்கல், வடிவியல் மற்றும் அசாதாரணமானத் தனித்தன்மையுடைய நிலப்பகுதியை இயன்ற அளவு பயன்படுத்திக்கொண்டு திறமையாக இணைத்து உருவாக்கப்பட்டிருந்ததைக் காண்பித்தது. பெரும்பாலான கட்டிடங்கள் ஒரு மாடி கட்டிட அமைப்புகளாக, நவீன சரித்திராசிரியர்களின்படி பிற்காலத்திய இன்கான் வடிவமைப்பைக் கொண்டவை. அறைகளின் உட்புறத்தில் சிலையுருக்களை வைப்பதற்குரிய சுவர் மாடங்கள் உள்ளன. கதவுகளும், சன்னல்களும் சுவர் மாடங்களும் பிற்காலத்திய இன்கா கட்டிடக் கலையின் தனித்தன்மையைக் காண்பிக்கும் வகையில் மேலே ஒடுக்கமாக, கோடக வடிவில் உள்ளன. நகரத்தின் மையப்பகுதியில் ஒரு பெரிய திறந்த வெளியிடம், சந்தைக் கூடுமிடம் காணப்படுகிறது. இதைச் சுற்றிலும் படிவரிசைகளும், கோயில்களும், தங்கல் விடுதிகளும் செங்குத்தான படிகட்டுகளும் காணப்படுகின்றன. ஒருசில சுவர்களில் இன்கான் கைவேலைப் பாட்டின் சிறப்பான, அழகிய கல் முத்தாய்ப்பு வெளிப்படுகிறது.
நாங்கள் இந்த ஈடிணையற்ற இடிபாடுகளுடைய தொகுதியின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு நடந்து சென்றபோது, அதன் பரப்பெல்லை அளவை நாங்கள் உணர ஆரம்பித்தோம். ஹுயனா பிச்சு மலையுச்சியை ஏறுவதற்கான நேரத்தை கணக்கில் எடுக்காமல், ஒரு முனையிலிருந்து மற்றொன்றுக்கு நடந்து செல்ல எங்களுக்கு ஒரு மணிநேரத்துக்கும் அதிகமானது. மலைப்பாங்கான பூமியாக இருப்பதனால், எல்லா இடங்களிலும் படிகட்டுகளும் அவை 3,000-க்கும் அதிகமாகவும் இருக்கின்றன. பயிரிடுவதற்கும் கால்நடைகளை மேய்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட நகரத்தின் ஓரத்தைச் சுற்றியுள்ள தட்டையான மேட்டுச்சிகளும்கூட ஒரு மட்டத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல படிகட்டுகளாக அமையும் நீட்டிக் கொண்டிருக்கும் கற்களைக் கொண்டிருக்கின்றன. நகரம் ஐந்து சதுர மைல்கள் நிலப்பரப்பில் அமைந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது!
இடிபாடுகள் நல்ல விதத்தில் பாதுகாக்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் வியப்படைந்தோம். பெங்ஹாம், இவைகளைக் கண்டு பிடித்தபோது, அவ்விடத்தில் எந்த யுத்தமும் நடைபெற்றதற்கு அத்தாட்சி எதுவும் காணப்படவில்லை. நகரம் கைப்பற்றப்பட்டது போலில்லாமல் கைவிடப்பட்டது போலிருந்ததை எங்களால் காண முடிந்தது. சக்கரத்தைப் பற்றிய அறிவு இல்லாததன் காரணமாக, இன்காஸ் எவ்விதமாக இப்பேர்ப்பட்ட கனமானக் கற்களை இங்கு இடம் பெயர்த்துக்கொண்டுவர முடிந்தது என்பது இன்னும் அறியப்படாமலே இருக்கிறது. ஆனால் கற்கள் மிக துல்லிபமாக வெட்டப்பட்டு சரியான இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இயல்பான பிரிவுகளாக கவனமாகத் திட்டமிடப்பட்டிருந்த இடிபாடுகள், நன்கு ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டிருந்த ஒரு நாகரீகத்தைப் பற்றி இன்னும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
லாமாக்களோடும் நட்சத்திரங்களோடும் தனிமையில்
பகல் நேர சுற்றுலாப் பயணிகள் புறப்பட்டுச் சென்றப் பின்பு, மச்சு பிச்சு, விடுதியில் இரவு தங்கிய ஒருசில விருந்தினர்களுக்கு விடப்பட்டது. இடிபாடுகளில் சுற்றித் திரிந்து சூரிய அஸ்தமனத்தைத் தனிமையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கையில், ஆழ்ந்து சிந்தனைச் செய்யும் ஒரு மனநிலையிலிருந்தோம். சுற்றி நடந்துசெல்கையில், ஹீட்டியும் எலிசபெத்தும் இடிபாடுகளின் ஒரு மூலையில் ஒரு குட்டி லாமா அதன் தாயோடு இருப்பதை சுட்டிக் காண்பித்தார்கள். லாமாக்கள், சுமைகளை சுமந்து செல்வதற்கு பெருவில் விரிவாக பயன்படுத்தப்படும் மிருகங்களாகும். இவை மனிதனைச் சுமந்துச் செல்ல இயலாதவையாக, ஆனால் 80 பவுண்டுகள் எடையுள்ள சுமைகளைச் சுமந்து செல்ல போதிய பலமுள்ளவையாக இருக்கின்றன. முதலில் லாமாக்கள், எங்களுடைய மனைவிகள் ஹீட்டி மற்றும் எலிசபெத்தையும் பார்த்து, பதட்டமடைந்ததுப் போல் தோன்றியது, ஆனால் இடிபாடுகளின் மத்தியில் பழக்கப்பட்டச் சூழலில் காணப்பட்ட இந்த அழகிய மிருகங்களை மிக அருகிலிருந்து படமெடுக்க அவர்கள் தீர்மானமாயிருந்தார்கள். அவைகளின் அமைதியை அதிகமாகக் கெடுக்க அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அவைகள் தங்கள் அமில உமிழ்நீரைத் துப்பி தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன. ஆகவே பெண்கள் மெள்ள அவைகளோடு நட்புக் கொண்டார்கள். ஹீட்டி அருகிலிருந்த புல்லையும்கூட தாய் லாமாவுக்கு வாயில் கொடுத்தாள்.
பிந்தின மாலைப் பொழுதில், நாங்கள் அருகிலிருந்த தங்கல் விடுதியின் செயற்கை ஒளியிலிருந்து நீங்கி, நட்சத்திரங்கள் ஒளிவிடும் இரவை நோக்கிச்செல்ல எங்கள் கம்பளிச் சட்டையை மாட்டிக்கொண்டோம். இப்பொழுது வானங்களிலுள்ள நட்சத்திரங்களிலிருந்து வந்த ஒளிமட்டுமே வெளிச்சமாக இருந்தது. நாங்கள் யெகோவாவின் மாட்சிமையைக் குறித்து சிந்தித்துப் பார்த்தோம். பின்னர் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் வாழ்ந்து அதே நட்சத்திரங்களைப் பார்த்த ஜனங்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்தோம்.
இன்காஸும் ஸ்பனிய வீரர்களும்
அடுத்த நாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பு நாங்கள் இடிபாடுகளை மீண்டும் வந்தடைந்தோம். பின்னணியில் குழல்களைக் கொண்ட இசைக் கருவியிலிருந்து சோகமான நாத ஒலி எங்கள் காதில் வந்துவிழுந்தது. பகல்நேர சுற்றுலாப் பயணிகள் வந்துசேருவதற்கு முன் மச்சு பிச்சுவினுடைய இயற்கைச் சூழலின் அழகை நாங்கள் எப்படி மனதில் கிரகித்துக் கொண்டிருந்தோம்!
இடிபாடுகளின் மத்தியிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு நாங்கள் பார்த்த அனைத்தையும் பற்றி ஆழ்ந்து சிந்திக்கையில், பைபிள் உண்மையில் போதிக்கும் காரியங்களால் வழிநடத்தப்படாத ஒரு மதம் உண்டுபண்ணின அவலமான விளைவுகளைக் குறித்து பால் டாஸார் குறிப்பிட்டார். (மத்தேயு 7:15-20) ஸ்பனிய வீரர்கள், தங்களுடைய கத்தோலிக்க மதத்தின் பெயரிலும், அவர்களுடைய தணியாத பேராசையாலும் ஒரு முழு நாகரீகத்தையே நாசப்படுத்திவிட்டார்கள். இன்காஸ் எவ்விதமாக வாழ்ந்தார்கள் என்பதை அறிந்துகொள்ளாமலே இதை அவர்கள் செய்தார்கள். இன்காஸ் எழுத்துருவில் மொழியைக் கொண்டில்லாமல் புள்ளி விவரப் பதிவுகள், அறுவடைப் பற்றிய செய்தி குறிப்புகள், ஆயுதங்கள், பிறப்பு, இறப்பு போன்றவற்றை பன்னிற முடிச்சுக்களால் பதிவு செய்யும் எழுத்து முறையை உபயோகித்ததால், ஸ்பனிய வீரர்கள் இவைகளை அழித்துவிட, இன்கான் கலாச்சாரத்தைப் பற்றிய பதிவுகள் அதிகமில்லை.
இன்காஸ் திரும்ப வருவார்கள்!
உயிர்த்தெழுதல் பற்றிய யெகோவாவின் வாக்குறுதியை நினைவுகூருகிறவர்களாய், எலிசபெத்தும் ஹீட்டியும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு நாகரீகத்திலிருந்த ஆட்கள் மறுபடியுமாக வாழ வாய்ப்பைப் பெறுவர் என்பதை அறிவது எத்தனை விந்தையாக இருக்கிறது என்பதாகச் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 24:15) உண்மையில் பூர்வ இன்காஸ் இனத்தவரில் சிலரை நாம் சந்தித்து அவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றி நேரடியாக கற்றறிய முடியும் என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கையில்! மச்சு பிச்சுவில் வாழ்ந்த சில இன்காஸ்களுக்கு மெய்க் கடவுளைப் பற்றியும் அவர்களுக்கான அவருடைய நோக்கத்தைப் பற்றியும் கற்பிக்கும் சிலாக்கியத்தையும்கூட நாம் பெற முடியும்.
மச்சு பிச்சுவில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு குஸ்கோவுக்கு எங்கள் பயணத்தைத் துவங்கினோம். இப்பொழுது இடிபாடுகளால் மாத்திரமே நினைவுகூரப்படும் மலையுச்சியின் மீதுள்ள நகரத்தைப் பற்றிய ஈடிணையற்ற சிந்தைகளின் நினைவுகளை எங்களோடு சுமந்து வந்தோம். ஸ்பனியர்கள், இன்கா சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய போதிலும் அவர்கள் மச்சு பிச்சுவை ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இன்காஸின் கைவிடப்பட்ட நகரத்தை நாம் கண்டுபிடித்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.—அளிக்கப்பட்டது. (g89 2/8)
[பக்கம் 22-ன் படம்]
மச்சு பிச்சு, படிகட்டுகளையும் படிவரிசைகளையும் கொண்ட பூர்வ நகரம்
[பக்கம் 23-ன் படம்]
உயரே ஆன்டிஸ் மலைகளின் மீது மச்சு பிச்சுவும் (பழைய உச்சியும்) பின்னணியில் ஹுயனா பிச்சுவும் (அண்மையில் தோன்றிய உச்சியும்)
[பக்கம் 23-ன் படம்]
சக்கரமின்றியே இன்காஸ் மக்கள் கனமான, கையினால் வெட்டப்பட்ட கற்களைத் தங்கள் கட்டிடங்களுக்காக இடம் பெயர்த்துக்கொண்டு வந்தனர்
[பக்கம் 24-ன் படம்]
மேலே ஒடுக்கமாக, கோடக வடிவில் உள்ள கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ள இன்கா இருப்பிடங்கள்
[பக்கம் 24-ன் படம்]
மச்சு பிச்சுவின் இடிபாடுகளில் தனிமையில் ஒரு லாமா
[பக்கம் 25-ன் படம்]
உருபாம்பா நதி, மச்சு பிச்சுவுக்கு 2,000 அடி கீழே