கூசுக்கோ—இன்கா மக்களின் பண்டைய தலைநகரம்
பெருவிலிருந்து விழித்தெழு! நிருபர்
எங்களுடைய விமானம் பக்கவாட்டில் சாய்ந்து வட்டமடித்துத் திரும்பி குறுகிய பள்ளத்தாக்கில் கீழ்நோக்கி பறந்தபோது, நாங்கள் கிளர்ச்சியும் ஒருவித பயமும் அடைந்தோம். பெருவின் சரித்திரப்பூர்வ நகரமாகிய கூசுக்கோவில் நாங்கள் தரையிறங்கவிருந்தோம். அந்நகரம் 3,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்தபோதிலும், பிரமாண்டமாக உயர்ந்துநிற்கும் கரடுமுரடான மலைகளால், எங்கள் விமானம் ரன்வேயைச் சென்றடைவது மிக ஆபத்தாக தோன்றியது. சந்தோஷகரமாக, நாங்கள் பாதுகாப்பாக தரையிறங்கினோம். ஒரு காலத்தில் மிகப்பரந்த இன்காப் பேரரசின் தலைநகரமாக இருந்து, இப்போது 2,75,000 குடிமக்களைக் கொண்டிருக்கும் இந்த பிரபலமான நகரத்தைப் பார்ப்பது இன்பமானதாக இருக்கப் போகிறது.
பண்டைய இன்கா கலாச்சாரம் கூசுக்கோவில் இன்றும் தெளிவாகத் தெரிகிறது. அந்த நகரத்தின் குடிமக்களில் அநேகர் இன்றும் குச்சுவா மொழியைப் பேசுகின்றனர். உண்மையில், ஆண்டிஸ் மலைத்தொடரில் வாழும் சுமார் 80 லட்சம் மக்கள் இன்றும்கூட இந்தப் பழமையான மொழியைப் பேசுகின்றனர். சமீபத்தில், குச்சுவா சமுதாயத்தினர் கூசுக்கோ என்ற பெயரை காஸ்கோ என்று மாற்றும்படி அதிகாரிகளை வற்புறுத்தினர். காஸ்கோ என்ற உச்சரிப்பு பேச்சுவழக்கிலுள்ள குச்சுவா மொழியில் அசல்பெயருக்கு நெருக்கமாக உள்ளது என்பதாக காரணம்காட்டினர்.
ஒரு பண்டைய நகரம்
கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நகரம் இருந்து வந்தது என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்கின்றனர். இது மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த அதே காலப்பகுதியாக உள்ளது. பிறகு, கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்பு, இன்காவின் ஒன்பதாவது பேரரசரான பாச்சாகூடி, கைப்பிடியளவு களிமண்ணையெடுத்து, கூசுக்கோ நகரத்தின் புதிய, மறுவடிவமைக்கப்பட்ட திட்டமாதிரி (model) ஒன்றை உருவமைத்தார். சுமார் 1527-ல் ஸ்பானிய வெற்றிவீரர்களின் வருகைக்கு 89 ஆண்டுகளுக்கு முன்பாக பாச்சாகூடி ஆட்சிசெய்யத் தொடங்கினார். அவருடைய கண்காணிப்பில், நவீன கூசுக்கோவிற்கு அடிப்படையாக இருந்த, அந்நகரம், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளைக் கொண்ட நன்கு அமைக்கப்பட்ட தலைநகரமாக மாற்றியமைக்கப்பட்டது.
அதின் பூர்வீகவாசிகள் சிலரின்படி, அந்த நகரம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. பிளாசா அல்லது நகரச் சதுக்கம் அமைந்திருந்த இடத்தின் மையப்பகுதியிலிருந்து அது ஆரம்பித்தது. குச்சுவா மொழியில் இந்தப் பிளாசா வாகைப்பாட்டா என்று அறியப்பட்டிருந்தது. இது கொண்டாட்டங்களுக்கும், சாவகாசமாக பொழுதுபோக்குவதற்கும், குடிப்பதற்குமுரிய இடமாக இருந்தது. குச்சுவா மொழியில் நிபுணர்களான சிலர் “கூசுக்கோ” அல்லது “காஸ்கோ” என்றால் “உலகின் மையப்பகுதி” என அர்த்தப்படுத்துகிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள். எனவே, கூசுக்கோ பிளாசாவின் மையப்பகுதி சாப்பீ, அல்லது “இன்காப் பேரரசின் மையப்பகுதியின் மையம்” ஆகிவிட்டது.
கூசுக்கோவிலிருந்து, தற்போதைய அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடார், பெரு ஆகியவற்றின் பகுதிகளில் இந்த இன்காப் பேரரசர் ஆட்சிசெய்தார். அவற்றில் அதிகமானவை வளமான, செழிப்பான நிலப்பகுதியாக இருந்தன. அம்மக்கள் வித்தியாசமான உயரங்களில் பல்வேறு அளவுகளில் நிலங்களை படிக்கட்டுகளாக வெட்டுவதன்மூலம் விவசாயத்தில் வெற்றியடைந்தனர். விளைச்சல் வளமிக்க இந்த படிக்கட்டு முறையில் அமைந்த நிலங்களில் அவர்களுக்கே உரிய தாவரங்களான வெள்ளை உருளைக்கிழங்கு, மற்றும் லீமா பீன்ஸ் போன்றவற்றை பயிர்செய்தனர். அவை இன்றும்கூட உலக உணவில் பெரும்பங்கு வகிக்கின்றன.
மேம்பட்ட அமைப்பைக் கொண்ட நெடுஞ்சாலைகள் பேரரசின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரையிலுமாக விரிந்திருந்தன. இவை இல்லாமல் போயிருந்தால் இன்காவின் பிராந்தியத்திற்குள் பயணம் செய்வது முற்றிலும் சாத்தியமற்றதாக இருந்திருக்கும். கண்கவரும் கூசுக்கோவுக்கு செல்லும் ஒருவருக்கு பண்டைய இன்கா மக்கள், ஆண்டிஸ் மலையின் பொதிசுமக்கும் விலங்கான லாமாக்களின் கூட்டத்தோடு வந்து இறங்குவதைப் போன்ற ஒரு காட்சி மனத்திரையில் ஓடும். அவர்களுடைய மதிப்புமிக்க சரக்குகளில் விலையேறப்பெற்ற கற்கள், செம்பு, வெள்ளி, பொன் ஆகியவை அடங்கியிருந்தன.
பொன் ஏராளமாக இருந்தபோதிலும், அவை இன்கா மக்களால் பணமாக பயன்படுத்தப்படவில்லை. மஞ்சள்நிறமாக ஜொலிக்கும் அதனுடைய உலோகத்தன்மையின் காரணமாக, இன்கா மக்களின் கடவுளாகிய சூரியனோடு பொன் தொடர்புபடுத்தப்பட்டது. பெரும்பாலும் அவர்களுடைய கோயில்களும் அரண்மனைகளும் தங்கத்தகடுகளால் அலங்கரிக்கப்பட்டன. கெட்டித்தங்கத்தால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த மிருகங்களும் செடிகளுமுள்ள தங்கத்தோட்டம் ஒன்றையும்கூட அவர்கள் உருவாக்கினார்கள். தங்கத்தகடாலான அதனுடைய கட்டடங்களுடன் சூரியவொளியில் தகதகவென்று மின்னிக்கொண்டிருக்கும் பண்டைய கூசுக்கோவின் மனதை கொள்ளைகொள்ளும் காட்சியைக் கற்பனைசெய்து பாருங்கள்! இத்தனை ஏராளமான தங்கமே பேராசையுள்ள ஸ்பானிய படையெடுப்பாளர்களை கவர்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 1533-ல் இவர்கள் அந்நகரத்தை கைப்பற்றி சூறையாடினார்கள்.
கூசுக்கோவின் தனித்தன்மைவாய்ந்த கட்டிடக்கலை
இன்கா மக்கள் நவீன கூசுக்கோவிற்கு அழகிய மற்றும் தனித்தன்மைவாய்ந்த கல் கட்டடக் கலை பாணியை விட்டுச்சென்றுள்ளனர். இன்றுள்ள கட்டடங்களில் அநேகம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பழுதுபடாமல் இருந்துவரும் கற்சுவர்களின் மேல் கட்டப்பட்டுள்ளது. சுவர்களின் குறிப்பிட்ட இடங்களுக்குள்ளே துல்லியமாக பொருத்துவதற்கு ஏற்ப சில கற்கள் வெட்டப்பட்டன. சுற்றுப்பயணிகளின் கவனத்தைக் கவர்ந்து பிரபலமாகிவிட்ட ஒரு சுவரில் பன்னிரண்டு வித்தியாசப்பட்ட கோணங்களைக் கொண்ட இதைப்போன்ற கல் இருக்கிறது. இக்கற்கள் பலதரப்பட்ட கோணங்களில் வெட்டப்பட்டிருப்பதன் காரணமாக, அதற்குரிய சாவித்துவாரத்தில் மட்டுமே பொருந்தும் சாவியைப்போல இருக்கின்றன.
இன்கா மக்களின் கல்தச்சர்கள் கட்டடக்கலையில் திறம்பட்டவர்களாக இருக்கின்றனர். நவீன தொழில்நுட்பத்தின் உதவியில்லாமல், ஒருமுறைப் பொருத்திவிட்டால் அக்கற்களுக்கிடையே கத்தியின் கூர்முனையைக்கூட நுழைக்க முடியாதளவுக்கு அவற்றை அவ்வளவு துல்லியமாக அவர்களால் வெட்ட முடிந்திருக்கிறது! இந்தக் கற்களில் ஒருசில அநேக டன் கணக்கான எடையுள்ளவை. இந்தப் பண்டையகால மக்களால் இப்படிப்பட்ட திறமைகளை எப்படி பெறமுடிந்தது என்பது ஒரு புதிராகவே உள்ளது.
கூசுக்கோவில் மதம்
குச்சுவா பழங்குடியினர் கத்தோலிக்க மதத்தை ஏற்றுக்கொண்டதால், பொதுவில் இனிமேலும் சூரிய வணக்கத்தாராக அவர்கள் கருதப்படுவதில்லை. என்றபோதிலும், இன்கா மக்களின் சூரிய வணக்கத்திற்கும்கூட முந்தையதாயிருந்த புறமத ஆவிக்கொள்கைகளை அவர்கள் இன்னும் கைக்கொள்கின்றனர். பாச்சா-மாமா என்று அவர்கள் அழைக்கும் அறுப்புக்காலத்தை இன்றும்கூட காணிக்கை செலுத்தி கொண்டாடுகின்றனர். குச்சுவா மொழியிலுள்ள இவ்வார்த்தைக்கு “அன்னை பூமி” என்று அர்த்தம்.
பெருவில், யெகோவாவின் சாட்சிகள் பைபிளை போதிப்பதற்கான அவர்களுடைய திட்டத்தில் மிகுந்த வெற்றியுடன் செயல்பட்டு வருகிறார்கள். குச்சுவா மொழியைப் பேசும் மக்கள் தங்களுடைய சொந்த மொழியில் ராஜ்ய செய்தியை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக, இப்போது சிலகாலமாக, உவாட்ச்டவர் சங்கம் குச்சுவா மொழியில் பைபிள் இலக்கியங்களை அளித்து வருகிறது. அம்மொழியில் ஆறு இடங்களில் கிறிஸ்தவ கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கூசுக்கோ இனிமேலும் உலகின் மையப்பகுதி என்று அறியப்படுகிறதில்லை; எனினும், தனித்தன்மைவாய்ந்த இந்நகரத்தைப் பார்ப்பதற்காக சுற்றுப்பயணிகள் கூட்டமாக வருகின்றனர். மனதை கொள்ளைகொள்ளும் பெருவிற்கு என்றாவது ஒருநாள் நீங்களும்கூட ஒருவேளை விஜயம் செய்யக்கூடும்.
[பக்கம் 19-ன் படம்]
1. கூசுக்கோ அதனுடைய நகரச் சதுக்கத்துடன் வானவெளியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி
2. கத்தியின் கூர்முனையும்கூட அக்கற்களுக்கிடையே நுழையக்கூடாதபடிக்கு இன்கா மக்கள் அதிக துல்லியமாக அவற்றை வெட்டினர்
3. அசல் பெருநாட்டு உடை
4. ஆண்டிஸ் மலையின் பொதிசுமக்கும் விலங்குகளான லாமாக்கள்