இன்காக்கள் பொன்னா(லா)ன பேரரசை எப்படி இழந்தனர்
பெருவிலுள்ள விழித்தெழு! நிருபர்
கதிரவன் உதிக்கிறான். அதிகாலை வானின் இருளை கிழித்தபடி வெளிப்பட்ட கதிரவனின் கதிர்களால், பனிமூடிய ஆண்டிஸ் மலைத்தொடர் தளிர் ரோஜா நிறத்தில் வண்ணக்கோலம் பூண்டிருக்கிறது. இந்தியப் பழங்குடியினருள் வைகறையில் துயிலெழுந்தவர்கள் 4,300 மீட்டர் உயரத்தில் குளிர்ச்சியான இரவின் வெடவெடப்பை போக்க சூரியனின் இதமான வெப்பத்தில் குளிர்காய்கின்றனர். கதிரவனின் கதிர்கள், மெல்ல மெல்ல இன்கா பேரரசின் தலைநகரான கூசுக்கோவின் (“உலகின் மையப்பகுதி” என்பதே அதன் அர்த்தம்) நடுவிலுள்ள சூரியக் கோயிலை அடைந்து அதை ஆக்கிரமிக்கின்றன. தங்கத்தாலான மதில் சுவர்கள் சூரியக் கதிர்களின் தாக்கத்தால் ஜொலிக்கின்றன. கோயிலுக்கு முன்னால் இருந்த இன்காக்களின் தோட்டத்தில் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட லாமாக்களும், ஒட்டகங்களும், கழுகுகளும் சூரியவொளியில் மின்னுகின்றன. அவ்வழியே சென்றவர்கள் தங்களுடைய கடவுளாகிய சூரியனுக்கு நமஸ்காரம் செய்து அவனுக்கு தங்கள் கையில் முத்தமிட்டு, அதை காற்றில் ஊதியனுப்புகின்றனர். உயிரோடிருப்பதற்கும், தங்கள் வாழ்க்கைப்பாட்டை சூரியன் ஆசீர்வதிப்பதற்கும், அவர்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருந்தனர்; இவ்வாறே அவர்கள் நம்பினர்!
பதினான்காம் நூற்றாண்டுக்கும் பதினாறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரப் பகுதியில் ஒரு மிகப்பெரிய பொற்பேரரசு ஆதிக்கம் செலுத்தியது. புத்திக்கூர்மையான சிற்பாசாரிகளாலும் தொழில்நுட்பக் கலைஞர்களாலும் ஆளப்பட்ட இன்காக்கள், சமுதாயத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட மக்களாவர். இந்த அற்புதமான இன்கா பேரரசு, தற்கால கொலம்பியாவின் தெற்குப் பகுதியிலிருந்து அர்ஜன்டினா வரையிலும் கிட்டத்தட்ட 5,000 கிலோமீட்டருக்கு தன்னுடைய பேரரசை ஸ்தாபித்திருந்தது. உண்மையில் சொல்லப்போனால், “இன்காக்கள் கிட்டத்தட்ட இந்த முழு உலகையுமே அடக்கி ஆளுவதாக நினைத்தனர்.” (நேஷனல் ஜியாக்கிரஃபிக்) தங்களுடைய எல்லைகளுக்கு அப்பால் வென்று கைப்பற்றுவதற்கு தகுதியாக எதுவும் இல்லை என்று அவர்கள் நம்பினர். ஆனால், உலகின் மற்ற பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு இத்தகைய ஒரு பேரரசு இருந்ததுகூட தெரியவில்லை.
இன்கா என்பவர்கள் யார்? அவர்களுடைய தொடக்கம் என்ன?
இன்காக்களின் முன்னோடி யார்?
இன்காக்கள், இக்கண்டத்தின் ஆதிவாசிகள் அல்ல என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதிக முன்னேற்றமடைந்த மற்ற நாகரிகங்கள் அங்கு இருந்தன. லாம்பாயெகே, சாவின், மோச்சிகா, சிமூ, டியாவானாகோ ஆகிய நாகரிகங்கள் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பழங்குடிகள் பல்வேறு விலங்குகளை வணங்கினர்; காட்டுப் பூனைகள் (jaguars), பெரிய பழுப்புநிற பூனைகள் (pumas), மீன்களையும்கூட வணங்கினர். மலை தெய்வங்களுக்கு பயபக்தியைக் காட்டுவது அவர்களிடையே மிகப் பரவலாக இருந்தது. சில பழங்குடியினர் பாலின வணக்கத்தில் ஈடுபட்டு வந்ததை அவர்களுடைய மண்பாண்டங்கள் காட்டுகின்றன. டிடிகாகா ஏரிக்கு அருகே, பெரு மற்றும் பொலிவியாவின் எல்லையிலுள்ள மிக உயரமான இடத்தில், ஒரு பழங்குடியினர் இனப்பெருக்க உறுப்புகளின் சின்னங்கள் அடங்கிய ஒரு கோயிலைக் கட்டினர்; “அன்னை பூமி” என்று அர்த்தம் கொள்ளும் பாச்சா-மாமாவிடமிருந்து அமோக விளைச்சலை நிச்சயப்படுத்த கருவள வழிபாட்டில் இவை வணங்கப்பட்டன.
கட்டுக்கதையும் நிஜமும்
சுமார் 1200-ம் ஆண்டில்தான் இன்காக்கள் காட்சியில் தோன்றினர். முதல் இன்கா அரசரான மாங்கோ காபாக், சூரிய வணக்கத்தில் எல்லா மக்களையும் உட்படுத்த தன்னுடைய தகப்பனாகிய சூரியக் கடவுளால், தன்னுடைய சகோதரியும் மனைவியுமானவளுடன் டிடிகாகா ஏரிக்கு அனுப்பப்பட்டார் என்று கட்டுக்கதை கூறுவதாக வரலாற்றுப் பதிவாளர் கார்திலாசோ தே லா பேகா குறிப்பிடுகிறார்; இந்த வரலாற்றுப் பதிவாளர் இன்கா இளவரசிக்கும் ஸ்பானிய வீரப்பெருந்தகையும் நிலச்சுவான்தாரருமான ஒருவருக்கும் பிறந்த மகனாவார். இப்பழங்கதை இன்றும்கூட சில பள்ளிகளில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
இக்கட்டுக்கதை ஒருபுறமிருந்தபோதிலும், இன்காக்கள், டிடிகாகா ஏரி பழங்குடியினரான டியாவானாகோவிலிருந்து தோன்றியிருக்கலாம். காலப்போக்கில், விரிவடைந்து கொண்டிருந்த இப்பேரரசு தான் வென்று கீழ்ப்படுத்திய பழங்குடிகளின் நன்கு அமைக்கப்பட்ட அநேக வேலைப்பாடுகளை கைப்பற்றியது; ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கால்வாய்களையும் அடுக்குத் தளங்களையும் விரிவாக்கி ஒழுங்குபடுத்தியது. பிரமாண்டமான உருவங்களை வடிவமைத்துக் கட்டுவதில் இன்காக்கள் யாராலும் எட்ட முடியாத நிலையில் இருந்தனர். கூசுக்கோ நகரில் மேலோங்கியிருக்கும் ஒரு உயரமான பீடபூமியில் சாக்ஸாவாமன் கோயிலையும் கோட்டையையும் அவர்களுடைய கட்டிடக் கலைஞர்களால் எவ்வாறு கட்ட முடிந்தது என்பதைக் குறித்ததில் அநேக கருத்துக்கள் நிலவுகின்றன. 100 டன் எடையுள்ள பிரமாண்டமான ஒற்றைக் கற்கள் இணைத்து கட்டப்பட்டுள்ளன. அவற்றை இணைப்பதற்கு எவ்வித காரையும் பயன்படுத்தப்படவில்லை. பண்டைய நகரமாகிய கூசுக்கோவின் சுவர்களில் காணப்படும் நன்கு பொருத்தப்பட்ட கல் வேலைப்பாடுகளின்மீது பூமியதிர்ச்சிகள் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
சூரியனின் ஜொலிக்கும் கோயில்
கூசுக்கோ என்ற அரசகுல நகரத்தில், இன்காக்கள் மெருகேற்றப்பட்ட கற்கோயில் ஒன்றில் சூரிய வணக்கத்திற்காக ஒரு குருத்துவத்தை அமைத்தனர். அதன் உட்புறச் சுவர்கள் பசும்பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டன. குருத்துவத்தோடுகூட, லிமா நகருக்கு சற்று வெளியே, பாச்சாகாமாக்கின் சூரியக் கோயிலில் மறுபடியும் கட்டப்பட்ட மடத்தைப் போன்ற பிரத்தியேகமான மடங்களும் கட்டப்பட்டன. சின்னஞ்சிறு பிராயமான எட்டு வயது முதலே, பேரழகு பெற்ற கன்னிகைகள், ‘சூரியனுக்குரிய கன்னிகைகளாக’ இருப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டனர். இன்காக்கள் மனித பலிகளை செலுத்தினர் என்று தொல்பொருள் ஆராய்ச்சி காட்டுகிறது. ஆப்புஸ் அல்லது மலைத் தெய்வங்களுக்கு பிள்ளைகளை பலியிட்டார்கள். பிள்ளைகளின் சில பிரேதங்கள் ஆண்டிஸ் மலை சிகரங்களில் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்கா மக்களும் அவர்களுக்கு முன்பிருந்த குடிகளும் எழுத அறியாதிருந்த போதிலும், கியூபூ என்று அழைக்கப்பட்ட ஒன்றைப் பயன்படுத்தி, பதிவுகளை வைத்திருப்பதற்கான ஒரு முறையை உருவாக்கியிருந்தார்கள். இது “பெரிய கயிற்றில் சிறுசிறு பல வண்ண கயிறுகள் இணைக்கப்பட்ட முடிச்சுகளாலான, பண்டைய பெரு மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி.” விவரப் பட்டியல்களையும் பதிவுகளையும் கையாண்டவர்கள், நினைவில் வைத்திருப்பதற்கு உதவி செய்யும் கருவியாக இது பயன்படுத்தப்பட்டது.—வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி
இப்பேரரசு எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டது?
மத்தியிலிருந்த ஒரே அரசாங்கத்தை கண்டிப்பான சட்டங்களும் திட்டமிடப்பட்ட யுக்திகளும் உறுதியாக நிலைநாட்டின. அனைவரும் இன்கா மக்களின் மொழியாகிய குச்சுவாவை கற்கவேண்டும் என்பதே ஆரம்பத் தேவையாயிருந்தது. எல் குச்சுவா ஆல் ஆல்கான்சே டே டோடோஸ் (குச்சுவாவை அனைவரும் அறியும் வண்ணம்) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “குச்சுவா தென் அமெரிக்காவிலுள்ள கிளை மொழிகளில் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க, அதிக வேறுபட்ட, அதோடு மிக நேர்த்தியான மொழியாக கருதப்படுகிறது.” பெரு நாட்டு மலைவாழ் மக்களில் சுமார் 50 லட்சம் ஆட்களால் அது இன்றும் பேசப்படுகிறது; மேலும் அப்பேரரசின் பாகமாயிருந்த ஐந்து நாடுகளிலுள்ள லட்சக்கணக்கான ஆட்களாலும் பேசப்படுகிறது. இன்கா மக்களுக்கு முற்பட்ட காலத்திய, குச்சுவா மொழியிலிருந்து தோன்றிய மொழியாகிய ஐமாராவை, டிடிகாகா ஏரிக்கு தென்கிழக்கில் வாழும் மக்கள் தொகுதியினர் இன்றும் பேசுகின்றனர்.
குச்சுவா மொழி, அவர்கள் வென்று கைப்பற்றிய கிட்டத்தட்ட 100 பழங்குடி மக்களை ஒருங்கிணைக்க உதவியது. மேலும், இது ஒவ்வொரு தொகுதியிலும் அதிகாரம் செலுத்திய கிராம குராகாவுக்கு (பிரபுவுக்கு) உதவியாக இருந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் பயிர் செய்வதற்கு நிலம் கொடுக்கப்பட்டது. கைப்பற்றிய பிறகு, இன்காக்கள் உள்ளூர் பழங்குடி நடனங்களும் கொண்டாட்டங்களும் தொடர்ந்திருப்பதற்கு அனுமதித்தனர்; மேலும் தாங்கள் கைப்பற்றிய அனைத்து பழங்குடிகளையும் திருப்தி செய்வதற்கு நாடகமேடை காட்சிகளையும் விளையாட்டுக்களையும் ஏற்பாடு செய்தனர்.
மீட்டா வரி
பேரரசு முழுவதிலுமாக எந்தவொரு நாணய முறையும் புழக்கத்தில் இருக்கவில்லை; ஒரு உலோகமாக பொன், தனிப்பட்ட நபர்களால் மதிப்புமிக்கதாக கருதப்படவில்லை என்பதை இது குறிக்கிறது. அது சூரியக் கதிர்களை எதிரொளித்ததால் அதன்மீது அவர்களுக்கு தனிக்கவர்ச்சி இருந்தது. மீட்டா (குச்சுவாவில் “வரிசைமுறை”) என்ற ஒரேவொரு வரி மட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்டது; அதன் குடிமக்கள் இன்காக்களின் அநேக சாலைகளிலும் கட்டுமானத் திட்டங்களிலும் தங்கள் வரிசைமுறைப்படி கட்டாயமாக வேலை செய்வதை அவ்வரி தேவைப்படுத்தியது. இவ்விதமாக சட்டப்படி ஆயிரக்கணக்கான இந்தியப் பழங்குடித் தொழிலாளிகள் வேலையில் அமர்த்தப்பட்டனர்.
இன்காக்களின் கைதேர்ந்த கட்டட வல்லுநர்கள் மீட்டா தொழிலாளர்களைப் பயன்படுத்தி, 24,000 கிலோமீட்டருக்கும் அதிக நீளமுள்ள பல பகுதிகளை இணைக்கும் சாலைகளை அமைத்தனர்! கூசுக்கோவை அப்பேரரசின் கடைக்கோடி இடங்களுடன் இணைக்கும் வண்ணமாக பாறைகளாலான சாலைகளை அமைத்தனர். சாஸ்கி என்று அழைக்கப்பட்ட தேர்ச்சிபெற்ற செய்தி கொண்டு செல்லும் ஓட்டக்காரர்கள் இச்சாலைகளைப் பயன்படுத்தினர். அவர்கள் சுமார் ஒன்றிலிருந்து மூன்று கிலோமீட்டருக்கு இடையிலுள்ள குடிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். செய்தியுடன் ஒரு சாஸ்கி வந்துசேரும்போது, அடுத்த சாஸ்கி அங்கிருந்து ரிலே ஓட்டக்காரனைப் போல ஓடத் தொடங்கினான். இம்முறையைப் பயன்படுத்தி, ஒரு நாளில் 240 கிலோமீட்டர் தூரம் வரை அவர்கள் ஓடினார்கள். சீக்கிரத்திலேயே ஆட்சியிலிருந்த இன்கா அரசன் தன்னுடைய பேரரசின் எல்லா இடங்களிலிருந்தும் தகவல்களைப் பெற்றான்.
சாலைகளுக்கு அருகே, இன்காக்கள் மிகப்பெரிய கிடங்குகளை அமைத்தனர். வென்று கைப்பற்றுவதற்காக பயணம் செய்த இன்கா படைகள் பயன்படுத்துவதற்கென அவற்றில் உணவுப் பொருட்களும் உடைகளும் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. இன்கா கூடியவரை போரைத் தவிர்த்தார். முதலில் போர் தந்திரத்தைப் பயன்படுத்தி, சூரிய வணக்கம் செய்யவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில், பழங்குடியினர் தன்னுடைய ஆட்சியின்கீழ் வரும்படியான அழைப்பை ஒற்றர்கள் மூலம் கொடுத்தார். அதற்கு அவர்கள் இணங்கினார்களென்றால், பயிற்சியளிக்கப்பட்ட இன்கா ஆசிரியர்களால், தங்களுடைய சொந்தத் தொகுதியிலிருந்துகொண்டே காரியங்களை தொடர்ந்து செய்தனர். மறுத்தார்களென்றாலோ, ஈவிரக்கமில்லாத கைப்பற்றுதலுக்கு பலியானார்கள். எதிரிகளின் பிரேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட மண்டையோடுகள், மக்காச்சோளத்திலிருந்து செய்யப்பட்ட சிச்சா என்ற போதைமிக்க மதுபானத்தைக் குடிப்பதற்குரிய குடுவைகளாக பயன்படுத்தப்பட்டன.
ஒன்பதாம் இன்கா அரசரான பாச்சாகூடி (1438-ம் வருடத்திலிருந்து), அவருடைய மகன் டோபா இன்கா யூபாங்கி, வெற்றியாளரும் பெருந்தகையாளருமான வைனா காபாக் ஆகியோரின் ஆட்சியில் இப்பேரரசு தன் எல்லைகளை வேகமாக விரிவாக்கி, வடக்கிலிருந்து தெற்கு வரையாக பேரளவாக விரிவடைந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.
வடக்கிலிருந்து வந்த படையெடுப்பாளர்கள்
சுமார் 1530-ம் வருடத்தில், ஸ்பானிய வெற்றிவீரர் பிரான்ஸிஸ்கோ பிஸாரோவும் அவனுடைய போர்வீரர்களும் வெளியுலகிற்கு அறியப்படாதிருந்த அத்தேசத்தின் பொன்னைப் பற்றிய அறிக்கைகளால் கவர்ச்சிக்கப்பட்டு பனாமாவிலிருந்து வந்தனர்; ஆனால், அது அச்சமயத்தில் உள்நாட்டுப் போரால் பிளவுபட்டிருந்தது. ஆட்சியில் அமர்த்தப்படுவதற்கு சட்டப்படி வாரிசாயிருந்த இளவரசர் வாஸ்கர், தலைநகரை நோக்கி படையெடுத்துவந்த அவருடைய ஒன்றுவிட்ட சகோதரரான அடவல்பாவால் தோற்கடிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார்.
பிஸாரோவும் அவனுடைய மனிதர்களும் உள்நாட்டுப் பகுதியான கஜமர்காவை நோக்கி மிகுந்த சிரமத்துடன் முன்னேறியபோது, தகாவழியில் ஆட்சியைக் கைப்பற்றியவனான அடவல்பாவால் வரவேற்கப்பட்டனர். இருந்தபோதிலும், சதிச்செயலால், ஸ்பானியர்கள் அவனுடைய பல்லக்கிலிருந்து அவனை கீழே தள்ளி வெற்றிகரமாக சிறைபிடித்தனர். அதே சமயத்தில், அதைப் பார்த்து திகைத்து நின்ற, தயார் நிலையில் இல்லாத அவனுடைய ஆயிரக்கணக்கான போர்வீரர்களையும் கொன்றனர்.
எனினும், சிறைபிடிக்கப்பட்ட நிலையிலும்கூட, அடவல்பா உள்நாட்டுப் போரைத் தொடர்ந்தான். தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனாகிய இன்கா வாஸ்கரையும், அதோடுகூட அரச குடும்பத்தினர் ஆயிரக்கணக்கானோரையும் கொல்லும்படி கூசுக்கோவுக்கு தூதுவர்களை அனுப்பினான். தன்னை அறியாமலேயே, கைப்பற்றுவதற்கான பிஸாரோவின் திட்டத்தை எளிதாக்கினான்.
பொன்னிலும் வெள்ளியிலும் ஸ்பானியர்களுக்கிருந்த பேராசையைக் கண்டு, தன்னை விடுவிப்பதற்குரிய பிணையமாக ஒரு பெரிய அறையில் பொன் மற்றும் வெள்ளியாலான சிறு உருவச்சிலைகளால் நிரப்புவதாக அடவல்பா வாக்கு கொடுத்தான். ஆனால் அதிலும்கூட அவனுக்கு பலன் கிடைக்கவில்லை. மறுபடியுமாக சதித்திட்டம் குறுக்கிட்டது! வாக்கு கொடுக்கப்பட்ட பிணையம் நிரப்பப்பட்ட பிறகு, துறவிகளால் உருவ வழிபாடு செய்பவனென கருதப்பட்ட பதின்மூன்றாம் இன்கா அரசனான அடவல்பா, முதலில் கத்தோலிக்கனாக முழுக்காட்டப்பட்டு, பின்பு நெரித்துக் கொல்லப்பட்டான்.
வீழ்ச்சியின் தொடக்கம்
அடவல்பா சிறைபிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது இன்கா பேரரசுக்கு மரண அடியாக இருந்தது. ஆனால் இந்தியப் பழங்குடிமக்கள் படையெடுப்பாளர்களை எதிர்த்தனர்; அப்பேரரசின் மரண அவஸ்தை அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீடித்தது.
இன்னுமதிக படைவீரர்கள் வந்துசேர்ந்தபோது, அதிகமான இன்கா தங்கத்தை எடுத்துக் கொள்வதற்காக பிஸாரோவும் அவனுடைய அனைத்து போர்வீரர்களும் கூசுக்கோவுக்கு செல்வதில் ஆர்வமாக இருந்தனர். ஸ்பானியர்கள், தங்கத்திற்கான தங்களுடைய தீவிர வேட்டையில், இந்தியப் பழங்குடிகளிடமிருந்து புதையல் இரகசியங்களை தெரிந்து கொள்ளவும் எதிர்க்கிறவர்களை மிரட்டி ஒடுக்கவும் வெட்கமின்றி கொடூரமாக சித்திரவதைப்படுத்தினார்கள்.
அடுத்த இன்கா பட்டத்து இளவரசரும் (மான்கோ இன்கா யூபாங்கி) வாஸ்கரின் சகோதரருமாய் இருந்த, இரண்டாம் மான்கோவுடன்கூட, பிஸாரோ கூசுக்கோவிற்கு விரைந்து சென்று அங்கிருந்த ஏராளமான தங்கப் பொக்கிஷங்களை கொள்ளையடித்தான். பெரும்பாலான பொற்சிலைகள் உருக்கி தங்கக்கட்டிகளாக்கப்பட்டு ஸ்பெய்னுக்கு கொண்டு செல்லப்பட்டன. பெருவின் ஏராளமான பொக்கிஷங்களை சுமந்து சென்ற ஸ்பானிய போர்க்கப்பல்களை கைப்பற்ற ஆங்கிலேய கடற்கொள்ளையர் காத்துக்கிடந்தது ஆச்சரியத்துக்குரியதல்ல! மூட்டை மூட்டையாக பொக்கிஷங்களை சுமந்துகொண்டு, பிஸாரோ கடற்கரைக்கு திரும்பினான்; அங்கு, 1535-ம் ஆண்டு தன்னுடைய அரசாங்கத்தின் மையமாக லிமா என்ற நகரை உருவாக்கினான்.
மான்கோ இன்கா யூபாங்கி, அதற்குள்ளாக, படையெடுப்போரின் பேராசையையும் சதித்திட்டத்தையும் முழுமையாக புரிந்துகொண்டு, கிளர்ச்சியைத் தூண்டினார். மற்றவர்களும்கூட ஸ்பானியர்களுக்கு எதிராக கலகம் செய்தனர்; ஆனால், கடைசியாக இந்தியப் பழங்குடிகள் தங்களாலான மட்டும் எதிர்ப்பதற்காக ஒதுக்குப்புறமான இடங்களுக்கு பின்வாங்கிச் செல்ல வேண்டியதாயிற்று. மலைகளில் மறைந்திருந்த புனித நகரமாகிய மச்சு பிச்சு இத்தகைய பாதுகாப்பு புகலிடங்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும்.
கடைசி இன்கா
கடைசியில், மான்கோ இன்கா யூபாங்கியின் ஒரு மகனாகிய டூபாக் அமரூக் இன்கா அரசரானார் (1572). ஸ்பானிய அரச பிரதிநிதிகள் (viceroys) இப்போது பெருவை ஆளத் தொடங்கினர். அரச பிரதிநிதியான டோலேதோ இன்காக்களை ஒழித்துவிட வேண்டுமென உறுதிபூண்டார். வில்காபம்பா பகுதிக்குள் பெரிய சேனையுடன் நுழைந்தார். டூபாக் அமரூக் காட்டுப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டார். அவரும், அவருடைய கர்ப்பிணி மனைவியும் வெட்டிக் கொல்லப்படுவதற்காக கூசுக்கோவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். கன்யாரி இந்தியப் பழங்குடியினன் ஒருவன் டூபாக் அமரூக்கிற்கு மேலே வெட்டும் கத்தியை உயர்த்தினான். சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியப் பழங்குடிகள் ஒரே வெட்டில் தலை துண்டிக்கப்பட்ட தங்களுடைய இன்காவுக்காக துயரம் கலந்த கூக்குரலில் ஓலமிட்டனர். அவருடைய தளபதிகள் தூக்கிலிடப்பட்டோ துன்புறுத்தியோ கொல்லப்பட்டனர். விரைவாகவும் திடீரென்றும் இன்காவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
நீண்ட காலங்களுக்கு வெறுமனே அடிமைகளாக கருதப்பட்ட இந்தியப் பழங்குடிகளின்மீது கத்தோலிக்க துறவிகளுடனும் குருக்களுடனும் சேர்ந்து, நியமிக்கப்பட்ட அரச பிரதிநிதிகள், தங்களுடைய நல்ல மற்றும் தீய செல்வாக்கை மெதுவாக பரப்பினர். தங்கம் அல்லது வெள்ளிச் சுரங்கங்களில் வேலை செய்யும்படி அநேகர் வற்புறுத்தப்பட்டனர்; பொலிவியாவிலுள்ள போட்டஸியில் அமைந்திருந்த செழிப்பான வெள்ளி தாதுப்பொருள் நிறைந்த மலை அவற்றில் ஒன்று. மனிதாபிமானமற்ற இச்சூழ்நிலைகளை தாக்குப்பிடிப்பதற்காக, கடுமையாக நடத்தப்பட்ட இந்தியப் பழங்குடிகள் கோகா இலையை சவைக்கத் துவங்கினார்கள். 19-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி வரையாக ஸ்பெய்னிடமிருந்து பெருவுக்கும் பொலிவியாவுக்கும் விடுதலை கிடைக்கவில்லை.
இன்காக்களின் நவீன கால சந்ததியினர்
இன்றைய நவீன சகாப்தத்தில் இன்கா மக்களின் சந்ததியினருடைய நிலைமை என்ன? மற்றநேக நவீன நகரங்களைப் போலவே, பெருவின் தலைநகராகிய லிமாவும், லட்சக்கணக்கான குடிமக்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் அதற்கு அப்பாலுள்ள மற்ற மாகாணங்களில், சிலசமயங்களில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே காலம் நகராமல் நின்றுவிட்டதுபோலத் தோன்றுகிறது. அநேக ஒதுக்குப்புறமான கிராமங்கள் இன்றும்கூட கத்தோலிக்க பாதிரிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியப் பழங்குடி விவசாயிக்கு, கிராம சதுக்கத்திலுள்ள கத்தோலிக்க சர்ச் கவனத்தை ஈர்க்கிறது. ஜொலிக்கும் உடையில் உள்ள புனிதர்களின் அநேக சிலைகள், விதவிதமான நிறங்களில் பிரகாசிக்கும் விளக்குகள், தங்கத்தாலான பீடம், எரியும் மெழுகுவர்த்திகள், இராகத்துடன் நடத்தப்படும் புதிரான சடங்குகள், விசேஷமாக நடனங்கள், கொண்டாட்டங்கள் என இவை யாவுமே அவனுடைய புத்துணர்ச்சி பெறுவதற்கான தேவைக்கு கவர்ச்சியூட்டுவதாயிருக்கின்றன. ஆனால், கண்களுக்கு கவர்ச்சியூட்டுகிற இவை அனைத்தும் பழமையான நம்பிக்கைகளை அவனிடமிருந்து எடுத்துப் போடவில்லை. அற்புதகரமான வல்லமை உடையதாக கருதப்படும் கோகா இலைகளின் பயன்பாடு இன்றும் அநேகருடைய வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகிறது.
தங்களை யாராலும் அசைக்க முடியாது என்ற மனப்பான்மையால் உந்துவிக்கப்பட்டு, இன்று கலப்பின மக்களாக இருக்கும் இன்கா மக்களின் சந்ததியினர் தங்களுடைய கண்கவரும் நடனங்களையும் தங்களுடைய வைனோ இசையையும் போற்றிப் பாதுகாக்க முயலுகிறார்கள். அந்நியர்களுடன் எடுத்த எடுப்பிலேயே கலகலப்பாக பழகாவிட்டாலும்கூட தங்களுடைய இயல்பான உபசரிக்கும் தன்மையை வெளிக்காட்டுகிறார்கள். இன்கா பேரரசின் சந்ததியினரான இம்மக்களை தனிப்பட்ட விதமாக அறிந்திருப்பவர்களுக்கு, அதாவது உயிர்வாழ்வதற்காக தினமும் அவர்கள் படும் பாடுகளைக் கண்டு, அவர்களுக்கு தனிப்பட்ட கவனத்தையும் அக்கறையையும் காட்ட முயற்சி எடுப்பவர்களுக்கு, இன்கா மக்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்னே மனத்துயரை ஏற்படுத்துகின்றன!
கல்வி மாற்றங்களைக் கொண்டு வருகிறது
டிடிகாகா ஏரியிலுள்ள சோகா கிராமத்தைச் சேர்ந்த, ஐமாரா மொழி பேசும் இந்தியப் பழங்குடியில் வந்தவரான வாலன்டின் ஆரிசாகா, விழித்தெழு!-வுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு சொன்னார்: “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக ஆவதற்கு முன்பு, பெயரளவில் கத்தோலிக்கனாக இருந்தேன். என்னுடைய நண்பர்கள் சிலருடன்கூட, அநேக பேய்த்தன பழக்கவழக்கங்களில் ஈடுபட்டு வந்தேன். கோகா இலையையும்கூட சவைத்துக் கொண்டிருந்தேன்; ஆனால் இப்போது அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டேன்.”
ஆப்புஸ் என்ற கடவுளுக்கு கோபமூட்டிவிடும் என்ற பயத்தை ஏற்படுத்தின அநேக மூடநம்பிக்கைகளை நன்றாக நினைவுகூருபவராய் 89 வயதான பெட்ரோனிலா மாமானி என்ற பெண்மணி சொன்னார்: “மலைத் தெய்வங்களை சாந்தப்படுத்துவதற்காகவும் என்னுடைய வாழ்க்கைப்பாட்டை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காகவும் நான் தவறாமல் காணிக்கைகளை எடுத்துச் சென்றேன். அவற்றைக் கோபப்படுத்தி, அதனால் விளையும் கேடுகளுக்குள்ளாக நான் எவ்விதத்திலும் விரும்பவில்லை. இப்போது, என்னுடைய வயதான காலத்தில், காரியங்களை வித்தியாசமாக பார்க்க கற்றுக்கொண்டேன். இத்தகைய சிந்தனைகளிலிருந்து விடுதலை அடைந்ததற்காக பைபிளுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.”
குச்சுவா மொழியையும் ஐமாரா மொழியையும் பேசும் இந்தியர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் வாசிப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றனர். இதன் மூலம் கற்றுக்கொண்டவர்கள் மற்றவர்களுக்கு பைபிளை போதிக்கிறார்கள். இவ்விதமாக, ஆயிரக்கணக்கான இன்கா மற்றும் ஸ்பானிய இந்தியர்கள் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக கல்வி புகட்டப்படுகிறார்கள். பூமி முழுவதிலுமாக சீக்கிரத்தில் நிலைநாட்டப்படவிருக்கும், நியாயமும் சமாதானமும் நீதியுமுள்ள புதிய உலகைக் குறித்து பைபிளிலுள்ள கடவுளின் வாக்குறுதியைக் குறித்தும்கூட அவர்கள் கற்று வருகிறார்கள்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4.
[பக்கம் 13-ன் குறிப்பு]
“இன்கா” என்ற பதம் இன்கா பேரரசின் மேன்மைமிகு ஆட்சியாளர்களை குறிக்கலாம்; அப்பழங்குடி மக்களையும்கூட குறிக்கலாம்.
[பக்கம் 15-ன் குறிப்பு]
சிலி
கரிபியன் கடல்
கொலம்பியா
ஈக்வடார்
பெரு
லிமா
பாச்சாகாமாக்
டிடிகாகா ஏரி
மச்சு பிச்சு
கஜமர்கா
வில்காபம்பா
போட்டஸி
கூசுக்கோ
அர்ஜன்டினா
பொலிவியா
இன்காக்களின் பொன்னா(லா)ன பேரரசு
இன்கா பேரரசு
தென் அமெரிக்கா
பசிபிக் பெருங்கடல்
ஆண்டிஸ்
கூசுக்கோ
[பக்கம் 16-ன் குறிப்பு]
மேலே: சூரியனின் பூர்வ கோயில் கூசுக்கோவிலுள்ள இந்தக் கத்தோலிக்க சர்ச்சுக்கு ஆதாரமாக சேவிக்கிறது
[பக்கம் 16-ன் குறிப்பு]
இடது: சுக்விடோவிலுள்ள கோயிலில் இன்காவுக்கு முற்பட்ட காலத்து இனக்குறி சிலை
[பக்கம் 16-ன் குறிப்பு]
வலது: இன்கா செலுத்திய பலிகளின் இரத்தம் இந்தக் கல் சிற்பங்களின் வழியே ஓடியது
[பக்கம் 17-ன் குறிப்பு]
வலது: கூசுக்கோவுக்கு அருகிலுள்ள மச்சு பிச்சுவில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டுள்ள அடுக்குத்தளங்கள்
[பக்கம் 17-ன் குறிப்பு]
கீழே: மச்சு பிச்சுவிலுள்ள பழங்காலத்து வாசலிலிருந்து காட்சி
[பக்கம் 17-ன் குறிப்பு]
கீழ் வலது: சாக்ஸாவாமனிலுள்ள கோட்டை-கோயிலின் 100 டன் எடையுள்ள கற்பாளங்கள்