மங்கின நிறமுள்ள குதிரை சவாரி செய்கிறது
தீர்க்கதரிசியாகிய யோவான், மங்கிய குதிரையின் மீது மரணம் சவாரி செய்வதைப் போன்று பூமி முழுவதிலும் கட்டுக்கடங்காமல் நோய்கள் பெருவாரியாகப் பரவும் ஒரு காலத்தை முன்னறிவிக்கக் கடவுளால் ஏவப்பட்டான். (வெளிப்படுத்துதல் 6:8) அந்தக் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு, அதிர்ச்சியூட்டும் வகையில் எய்ட்ஸ் நோய் பரவி வருவது அதிக உறுதியான அத்தாட்சியாக இருக்கிறது. உண்மையில், வளர்ந்துகொண்டே வரும் எய்ட்ஸை “வரப்போகிற கொள்ளைநோய்” என்பதாக நியு யார்க் நகர சுகாதார அதிகாரிகள் வருணிக்கிறார்கள்.
தாய்லாந்திலுள்ள 73 மாகாணங்களிலே 70 மாகாணங்களில் எய்ட்ஸ் நச்சுக்கிருமி இப்போது இருந்து வருகிறது. 1987-ல் பாங்காங்கில் போதைப் பொருள் பயன்படுத்துகிறவர்களில் 1 சதவீதத்தினருக்கு மாத்திரமே எய்ட்ஸ் இருந்தது. 1989-ன் நடுவில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு இது இருந்தது. பிரேஸிலில் மூன்று ஆண்டுகளில் எய்ட்ஸ் நோய் அறுதிசெய்யப்பட்டவர்கள் 75,000 பேர் இருப்பார்கள் என்றும் இன்னொரு 15 இலட்சம் பேர் நோய் நுண்மங்களைக் கொண்டிருப்பர் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரேஸிலிலுள்ள 1,200 இரத்த வங்கிகளில், 1988-ல் 20 சதவீதம் மாத்திரமே தங்கள் இரத்த அளிப்பை தடைகாப்பு செய்திருந்தன. எய்ட்ஸில் அவதியுற்ற 14 சதவீதத்தினர் கறைப்பட்ட இரத்தத்திலிருந்து நோய்யைப் பெற்றனர். ரியோ டி ஜேனிரோ மற்றும் சாவ் பாலோவிலும், நாள்பட்ட இரத்தப் போக்குள்ளவர்களில் சுமார் 75 சதவீதத்தினர் நோயுற்றிருக்கின்றனர். கோடி டி லிவோரில், கருவுற்றிருக்கும் பெண்களில் 10 சதவீதம் வரையாகவும், இரத்த தானம் செய்பவர்களில் 10 சதவீதத்தினரும் எய்ட்ஸ் நோயுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
87 தேசங்கள் பங்கு கொண்ட எய்ட்ஸ் பற்றிய ஒரு கருத்தரங்கில் அமெரிக்க மருத்துவ அதிகாரி ஒருவர் சொன்னதாவது: “பெருவாரியாகப் பரவிவரும் HIV [எய்ட்ஸ் நச்சுக் கிருமி] தொற்றுநோய் ஐக்கிய மாகாணங்களிலும் உலகிலும் கட்டுப்பாட்டுக்கு மீறிவிட்டிருக்கிறது.” ஐ.மா. நோய் கட்டுப்பாட்டு மையங்கள், 1998-ற்குள் 10 இலட்சம் அமெரிக்கர்கள், முற்றிப்போன நோயையும், அநேகர் நச்சுக்கிருமியை உடையவர்களாயும் இருப்பர் என்று மதிப்பிடுகின்றன. ஏற்கெனவே நச்சுக்கிருமிகளைக் கொண்டவர்களின் எண்ணிக்கைப் பற்றிய மதிப்பீடுகள் மறுஆய்வு செய்யப்பட்டு உயர் எண்ணிக்கையாகத் திருத்தப்பட்டிருக்கின்றன. நியு யார்க் நகரில், எய்ட்ஸ் இப்பொழுது இருதய நோய்க்கும், புற்றுநோய்க்கும் அடுத்தபடியாக மரணத்துக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக இருக்கிறது.
எய்ட்ஸ் கறைபடிந்த இரத்தத்தை இரத்தமேற்றுதலுக்கு வழங்கியதற்காக இரத்த வங்கிகள் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கின்றன. பல இரத்த வங்கிகள், இழப்பீடு செலுத்தும்படியாக உத்தரவிடப்பட்டிருக்கின்றன. இன்னும் அநேக உரிமைக் கோரிக்கை வழக்குகளை அவர்கள் எதிர்ப்படவேண்டியிருக்கும். இரத்த வங்கிகளின் அமெரிக்க சங்கத்தின் முக்கிய வழக்குரைஞர் பின்வருமாறு வருத்தத்தோடு கூறினார்: “எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது? எனக்குத் தெரியாது. நிகழக்கூடிய மிக மோசமானக் காரியம், இரத்த மையங்கள் மறைந்து போவதாகும்.”
ஆம், விரைவில் எல்லா இரத்த வங்கிகளுக்கும் ஒரு முடிவு இருக்கும், ஏனென்றால் எய்ட்ஸ் இல்லாத உலகை, மருத்துவமனைகள், நோய்கள் அல்லது மரணம் இல்லாத ஓர் உலகைக் காணப்போகும் ஒரு காலத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். மங்கின நிறமுள்ள குதிரை சவாரியை விவரித்த யோவான், கொள்ளைநோய்களிலிருந்து விடுபட்ட ஒரு மனித சமுதாயமாகிய “புதிய பூமி”யைப் பற்றிய கடவுளுடைய வாக்கையும்கூட பதிவு செய்தான். (வெளிப்படுத்துதல் 21:1–4) மங்கின நிறமுள்ள குதிரை சவாரி செய்துகொண்டிருக்கையில், அந்த வாக்குறுதியை மதிப்பிடுவது இப்போது அவசரமானதாகும். (g89 12/8)