உலகத்தைக் கவனித்தல்
எய்ட்ஸ் நோயாளிகள் வழக்கு தொடருகிறார்கள்
ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மீது எய்ட்ஸ் நோயாளிகள் வழக்கு தொடருகிறார்கள். கவலீனம் அல்லது இரத்தமேற்றுதல் சம்பந்தமான அபாயங்களைக் குறித்து போதியளவு எச்சரிக்கப்படாததால் தாங்கள் இந்த மரணத்துக்கேதுவான நோயைப் பெற்றிருக்கிறார்கள் என்று இந்நோயாளிகள் கூறுகிறார்கள். மேலும், இரத்தமேற்றுதலுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய சிகிச்சைமுறை குறித்து தங்களுக்குச் சொல்லப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இரத்தக் கசிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு 16 வயது நோயாளி கொலையாளியாயிருக்கும் இந்த எய்ட்ஸ் நோயால் மரித்துக்கொண்டிருக்கும் காரியம் அதிகமாக அறியப்பட்டிருக்கிறது, ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 31 பேர் கூட்டாகச் சேர்ந்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்திருக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் முன்நிலையில் இந்த 16 வயது நோயளியின் கூற்று வாசிக்கப்பட்டது. அவன் பகுதியாகச் சொன்னதாவது: “இது ஒரு கதைப் புத்தகம் போன்றிருக்கிறது—கடைசி பக்கம் கிழிக்கப்பட்டுவிட்ட ஒரு கதைப் புத்தகம் போன்றிருக்கிறது. சந்தோஷமான முடிவு இல்லை.” (g90 4/8)
சோவியத் மத மறுமலர்ச்சி
அதிபர் மிக்கேல் கொர்பச்சேவ் கருத்துபடி, “சோவியத் யூனியன் மதத்தை நீண்ட காலமாக மறுத்ததில் தவறிழைத்திருக்கிறது, இப்பொழுது அதன் தார்மீக சக்தி தேவைப்படுகிறது,” என்று தி நியு யார்க் டைம்ஸ் கூறுகிறது. அவர் இப்படிச் சொன்னதாக அது மேற்கோள் காண்பித்தது: “மதம் நூற்றாண்டுகளாக வளர்த்து உருபடுத்தி வந்த தார்மீக மதிப்பீடுகள் நம்முடைய நாட்டின் மறுமலர்ச்சிக்கும் உதவக்கூடும். உண்மையில் இது ஏற்கெனவே நிகழ்ந்துவருகிறது.” தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஓர் அறிக்கை இதற்கு இணங்க இருக்கிறது: “விசேஷமாக மத பக்தியற்ற மக்கள் மத்தியிலும் தேசத்தின் ஒழுக்கம் வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பது இன்று புலம்பப்பட்டு வருகிறது, மற்றும் மதம் மக்களின் அபினி என்ற மார்க்சிய-லெனின் கருத்து பழிக்கப்பட்டுவருகிறது.” இந்த மாற்றம் “நாடு முழுவதும் சர்ச் மறுமலர்ச்சியை தூண்டியிருக்கிறது,” என்றாலும், “நூல்களின் நூல் மிகவும் தட்டுப்பாட்டில் இருக்கிறது,” என்று அந்தப் பத்திரிகை தொடர்ந்து கூறியது. சோவியத் புத்தக பிரசுரிப்பாளர்கள் “அதிகாரப்பூர்வமாக நாத்திகத்தைப் பிரசங்கிக்கும் ஓர் அரசாங்கத்தால்” இன்னும் கட்டுப்பட்டவர்களாயிருப்பதால், தேவையைப் பூர்த்தி செய்திட பைபிள்களை அச்சடிக்கவில்லை. கிடைக்கப்பெற்றால் கருப்புச் சந்தைப் பிரதிகளாக ஒன்று 100 டாலர் விலைக்கு விற்கப்படுகிறது, மற்றும் பைபிள்கள் திருடப்பட்டிருப்பதும் அறிக்கைசெய்யப்பட்டிருக்கிறது. (g90 3/22)
புகைத்தலுக்குச் சாவுக்கேதுவாய் அடிமையாகுதல்
“ஒவ்வொரு 13 வினாடிக்கும் ஒருவர் புகையிலைச் சார்ந்த நோயால் மரிக்கிறார்,” என்று ஐ.நா. கிரானிக்கிள் அறிக்கை செய்கிறது. “மாறுதல் விரும்பாதவர்களுடைய புள்ளிவிவரம் பிரகாரம் புகையிலைச் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் மரிக்கின்றனர்.” அநேக நாடுகளில் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருக்கிறது. நுரையீரல் புற்றுநோய் மற்றும் வேறு சுவாசக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்களின் ஆபத்துகளுடன்கூட, கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கர்ப்பிணிகள் தங்களுடைய குழந்தையின் ஆரோக்கியத்தையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றனர். (g90 3/22)
போரில் உயிர்ச்சேதம்
ஐ.மா. ஆதாரம் கொண்ட லென்ட்ஸ் அமைதி ஆய்வுக் கூடத்தின் வில்லியம் எக்ஹார்ட் ஆய்வின் படி 1988-ல் போரல் மரித்தவர்கள் 45 லட்சத்திற்கும் அதிகமான மக்களாவர். “போரின் பலியாட்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இராணுவம் சாராத பொதுமக்கள், இவர்களில் பெரும்பகுதியினர் வேகமாகப் புகலிடம் காணமுடியாதவர்களும், போஷக்கின்மைக்கு இறையானவர்களுமான வயோதிபரும் பிள்ளைகளுமாவர்,” என்கிறது நேஷனல் கத்தோலிக் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை. போர்ப் பதிவுகளைக் கொண்ட 22 நாடுகளில் உள்நாட்டுப் போரட்டங்கள் 18 நாடுகளில் நடந்தன. என்றபோதிலும், வடக்கு ஐயர்லாந்து, எல் சால்வடோர், நிக்கராகுவா, நமீபியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா உட்படுத்தப்படவில்லை, இந்த நாடுகளில் உயிர்ச் சேதத்தின் எண்ணிக்கை ஓராண்டுக்கு 1,000-ற்கும் குறைவாக இருந்தன. 1988-ல் புரூண்டியிலும் வடக்கு சமோலியாவிலும் புதிய போர்கள் ஆரம்பித்தன. (g90 3/22)
லாட்டரியில் வெற்றி பெற்றவரின் இழப்பு
“எனக்கு என்ன வேண்டுமோ, அதை நான் விரும்பும்போது வாங்கிக்கொள்ளலாம்,” என்கிறார் ஜீன்-கை லேவிகர். இவர் 1986-ல் 7.6 மில்லியன் அமெரிக்க டாலரை, கானடா தேசத்து லாட்டரி ஜாக்பாடில் பெற்றார். “ஆனால் மற்ற எவரையும் போலவே நானும் மகிழ்ச்சியாக இல்லை,” என்கிறார். மான்ட்ரியலில் வேலையில்லாமல் இருந்த ஒரு பணியாளர் அறிக்கை செய்வதாவது, ஒரு லட்சாதிபதியாக ஆகியிருப்பது “என்னை மாற்ற வில்லை, ஆனால் இது என்னைச் சுற்றியிருக்கும் எல்லாரையுமே மாற்றியிருக்கிறது.” இப்பொழுது அவர் குடும்பமும் பழைய நண்பர்களும் இவரைக் கைவிட்டனர், காரணத்தை இவர் இப்படியாகச் சொல்கிறார், “அவர்களுக்கு நான் போதிய பணம் கொடுக்கவில்லை.” (g90 3/22)
2,500 வருட புதிர்
பழம் புகழ் பெற்ற பாபிலோனின் தொங்கு தோட்டங்களுக்கு நேபுகாத்நேச்சார் அரசன் எப்படி தண்ணீர் பாய்ச்சினான்? அதுதான் ஈராக் அதிபர் சதாம் ஹுசேன் அறிய விரும்புகிறார் என்று நியு யார்க் போஸ்ட் கூறுகிறது. இந்தப் பழம் பெருமையுடைய ஏழு அடுக்குத் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கான ஒரு நல்ல திட்டத்தோடு வருகிறவருக்கு 15 லட்சம் டாலர் பரிசு கொடுக்க முன்வருகிறார். என்றபோதிலும், இந்த முறையில் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட முடியாது, அந்தச் சமயத்தில் பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடிய முறையே பயன்படுத்தப்பட வேண்டும். ஈராக் அரசு 365 அடி உயரமாயிருந்திருக்கக்கூடிய அந்தத் தோட்டங்களைப் போன்ற ஒன்றை அமைக்க விரும்புகிறது. இந்தப் போட்டி ஈராக்கியருக்கு மட்டுமே திறந்திருக்கிறது. (g90 3/22)