துப்பாக்கிகள் ஆண்களுக்கு மட்டுமல்ல
விளம்பர உலகில் துப்பாக்கிப் பிடித்தக் கைகளோடு தோன்றும் முரட்டுத்தனமான ஒரு மனிதனின் ஆண்மைக்குரிய தோற்றம் அநேகப் பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அவை வரிசையாக, புகையிலை, மோட்டார் வண்டிகள், துணிமணிகள், வேட்டுப் படைகள், விளம்பரதாரர்களின் கற்பனையால் மாத்திரமே வரையறுக்கப்பட்ட இன்னும் ஏராளமான மற்ற பொருட்களாகும்.
குறிப்பாக ஐக்கிய மாகாணங்களில், ஆண்கள் தங்கள் துப்பாக்கியிலிருந்து இணைப்பிரியாதவர்களாக வருணிக்கப்படுகிறார்கள். நகர சதுக்கங்களில், வெற்றிவீரர்களுக்கு, அவர்களுடைய கைகளில் அல்லது அவர்களுக்கு அருகில் துப்பாக்கியோடு சிலைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. தலைப்புகள் இல்லாமலேகூட, மேற்கு அமெரிக்காவில் நிலவிய குழப்பமான காலப்பகுதியை விளக்கும் படங்கள் ஒரு மனிதனின் இடுப்போடு இணைந்து தாழ்வாக தொங்கவிடப்பட்ட ஆறு–வேட்டுக்கலத்தினால் உடனடியாக அடையாளங் கண்டுக்கொள்ளப்படுகின்றன. “துப்பாக்கி” என்ற வார்த்தையைக் கொண்ட தலைப்புகளோடு அநேக திரைப்படங்கள் படைத்து உருவாக்கப்பட்டுள்ளன. டெலிவிஷன் நிகழ்ச்சிகளும், நுழைவு சீட்டு விற்பனை செய்யப்படும் திரை அரங்கங்களும்—நல்ல பேர்வழிகளும் கெட்ட பேர்வழிகளும் எண்ணிப்பார்க்கக்கூடிய ஒவ்வொரு நிலைமையிலும் இடத்திலும் சுடுகின்ற வேகமான துப்பாக்கி வெடிப்பின் ஓசையினால்—உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன. குள்ளமான உருவுள்ள மனிதர்கள் தங்கள் கையில் கைத்துப்பாக்கி அல்லது சுழல்துப்பாக்கியோடும், மரித்துக்கிடப்பவர்கள் அவர்கள் காலடியிலுமாக மெய்மையாகத் தோன்றும் காட்சிகள்.
ஆனால் இப்பொழுது அதிகமான பெண்கள் துப்பாக்கிகளில் ஈடுபாடு கொண்டவர்களாகி வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளில், துப்பறியும் பெண்களும், குற்றவாளிகளோடு கலந்து சான்று தொகுப்பவர்களும், தீயஒழுக்கமுள்ள பேர்வழிகளை துப்பாக்கியால் சுட்டு அதைவிட கொடிய குறிக்கோளோடும் மேம்பட்ட வேட்டு ஆற்றலோடும் வெற்றி பெறும் காட்சிகளோடு டெலிவிஷன் பெட்டிகள் உயிர்பெற்று வந்திருக்கின்றன.
அவர்கள் கைத்துப்பாக்கி மற்றும் சுழல்துப்பாக்கியால் சுடப் பழகிக்கொள்ளும் இடங்களுக்குத் திரளாக வந்து ஆண்களின் ஆளுயர சுவரொட்டி வேட்டிலக்கிற்குள் ஒரு சுற்றுக்குப் பின் மற்றொரு சுற்றாக வெடிமருந்தை திணித்து அவர்கள் கண்களுக்கிடையே துப்பாக்கிக் குண்டுத் துளைகளை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே பெண்களுக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் ஏற்கெனவே சந்தையில் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவது உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடாது. “பெண்களே, நீங்கள் ஆண்களின் வாசனைப் பொருளை பயன்படுத்தமாட்டீர்கள். அப்படியிருக்க, ஏன் ஓர் ஆணின் சுழல்துப்பாக்கியை பயன்படுத்துவது? இலேசான எடையுள்ளதும், உங்கள் நகங்களை சிக்கவைக்கும் கூர்மையான விளிம்பில்லாமலும், ஆனாலும் ஒரு வெடி மருந்து திணித்துவைக்கப்படக்கூடிய ஒரு நேர்த்தியான சுழல்துப்பாக்கி உங்களுக்கு வேண்டும். ஒருவேளை நீங்கள் விரும்புவது . . . வழுவழுப்பும் பளபளப்புமான நீலத்தில் அல்லது கண்ணாடி போன்ற மேற்பரப்புள்ள வெள்ளியில், நீங்கள் விரும்பும் துப்பாக்கிக் குழல் நீளத்தோடு . . . ஒரு .38–காலிபர் திறமையுள்ள லேடிஸ்மித்தாக இருக்கலாம்” என்பதாக ஒரு பெண் நிருபர் எழுதினார். துப்பாக்கிகளில் பெண்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதன் பேரில் ஒரு நிபுணர் தன் கருத்தை தெரிவித்தார்: “துப்பாக்கி அழகான தோற்றமுடன் இருப்பதை ஒரு பெண் விரும்புகிறாள். அது தன்னுடைய கைப்பையில் வைத்துக்கொள்ளும் நேர்த்தியான தோற்றமுள்ள பொருளாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறாள். அது அவளுடைய சிறு ஒப்பனைப் பெட்டியோடும் அவளுடைய கண்ணாடியோடும் மோதுவதை விரும்புவதில்லை. . . . அநேக பெண்கள், பொருட்களின் நிறம் ஒத்திசைவாக, ஒரே மாதிரியாக இருப்பதை விரும்புகிறார்கள். அது தீயதாக அல்லது கொடியதாக தோற்றமளிப்பதை அவர்கள் விரும்புவதில்லை . . . அவள் அதைப் பாதுகாப்புக்காக வாங்குகிறாள், ஆனால் அதே சமயத்தில் அது அலங்கோலமாக இருப்பதை அவள் விரும்புவதில்லை.”
நாகரிக தோற்றமுள்ள சீமாட்டிக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஒருசில கைத்துப்பாக்கிகள் ஐந்து–துப்பாக்கிக் குண்டு திறனோடு .38–காலிபராகவும்—இரண்டு அங்குலம் மற்றும் மூன்று அங்குல துப்பாக்கிக் குழல் நீளத்திலும்—ஒரு கைப்பையில் நேர்த்தியாகப் பொருந்துவதாகவும் வருகின்றன. ஒரு சிலவை வழவழப்பான தோற்றமுள்ள, கருங்காலி மரபிடிப்போடும் மற்றவற்றில் நீல நிறமுடையவையும் பொருத்தப்பட்டிருக்கலாம். “அவை மிகவும் அழகாக இருக்கின்றன,” என்றாள் ஒரு பெண். “மேலும் கைக்கு அடக்கமாயுமிருக்குமென்று நினைக்கிறேன்.” இன்னும் விசேஷமாக பெண்களின் கைத்துப்பாக்கி வைப்பதற்கென்று உள்ளிணைக்கப்பட்ட அறைகளைக் கொண்ட கைப்பைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
“விசேஷமான கைப்பையை வைத்திராத கைத்துப்பாக்கியின் சொந்தக்காரப் பெண், தொந்தரவை வரவழைத்துக் கொள்கிறாள்” என்று ஒரு பெண் சொன்னாள். “முடிவில், பெண்களின் கைப்பையின் அடிபாகத்தில் சேர்ந்துவிடும் கிழிந்த தாள் சுருள் துண்டுகளும் புதினா வகை கீரையும் அல்லது நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், புகையிலையும் துப்பாக்கிக் குழலுக்குள் சென்றுவிடும்.” ஒரு பெண்மணி துப்பாக்கியை எடுத்துச் செல்வது, ஒரு குடையை எடுத்துச் செல்வது போல அத்தனை பொதுசெய்தியாக இருக்கப் போகும் ஒரு காலத்தை சிலர் முன்னால் பார்க்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
அவர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டிருக்கிறது
1983-க்கும் 1986-க்கும் இடையே ஐக்கிய மாகாணங்களில் பெண்கள் மத்தியில் துப்பாக்கி சொந்தக்காரர்களின் எண்ணிக்கை “சுமார் 53 சதவீதமாக 120 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துவிட்டிருப்பதாக” சமீப காலத்திய வாக்கெடுப்பு காண்பித்திருக்கிறது. அந்த மூன்று ஆண்டுகளின் போது, “கூடுதலாக சுமார் 20 லட்சம் பெண்கள் வேட்டுப் படைக்கருவிகள் வாங்குவது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பதையும்”கூட வாக்கெடுப்பு காண்பித்தது. ஒருசில பெண்கள் பத்திரிகைகளில், வீடு திரும்பும் பெண், தன் முன்கதவின் ஜன்னல் உடைந்திருப்பதைக் காண்பது போன்ற வண்ண ஓவியங்களின் மூலம், பாதுகாப்புக்கான பெண்ணின் தேவைக்கு மறைமுகமாக கவனம் இழுக்கப்படுகிறது. அவள் தனியாக வாழ்கிறாளா? அழைக்கப்படாத ஒருவனை அவள் சந்திக்க நேர்ந்தால், தன்னை தற்காத்துக்கொள்ள சொந்தமாக அவளுக்கு ஒரு துப்பாக்கி இருக்கிறதா? விளம்பரத்தின் கீழேயுள்ள கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு எண், இப்பொழுது பெண்களுக்கு நேர்த்தியான புதிய கைத்துப்பாக்கிகளை வழங்கும் துப்பாக்கி உற்பத்தியாளரினுடையதாக இருக்கிறது.
“இந்த விளம்பரங்கள் ஒரு காயத்தினுள் உப்பைக் கொட்டுவது போல உள்ளது,” என்று ஒரு பெண் சொன்னாள். அநேகப் பல பெண்கள் தனிமையில் வாழ்பவர்களாக அல்லது ஒற்றைப் பெற்றோராக இருப்பதனால், அநேகமாக நல்ல காரணத்தோடுதானே வன்முறையான குற்றச் செயலினால் அவர்கள் விசேஷமாக பாதிக்கப்படுகிறவர்களாக உணருவதே காரணமாக இருக்கிறது. பெரும்பாலான பெரிய நகரங்களில் கற்பழிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் பணப்பை—அநேக சமயங்களில் கத்தி முனையில் பறிக்கப்படுகிறது. பகல்நேரங்களில் தெருக்களில், வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்களில் மற்றும் அலுவலகக் கட்டிடங்களில் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். அறைகளும் வீடுகளும் தனிமையில் வாழும் பெண்களின் இல்லங்களும் குடியிருப்பவர்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் உடைக்கப்படுகின்றன. “விழிப்பாயிருக்க நாம் கற்றுக்கொள்வது மேலானது” என்று ஒரு பெண் சொன்னாள். “ஏனென்றால் வெகுவாக வன்மையாக நடந்துகொள்ளும் ஒரு சமுதாயத்தில், நாம் அதிகமதிகமாக இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்கிறவர்களாகும்போது, நாம் கட்டாயமாகவே விழிப்பாயிருக்க வேண்டும்.”
“வேலையிலிருந்து நான் வீட்டுக்கு நடந்துவந்து கொண்டிருந்தேன்” என்பதாக ஐ.மா. தொலைக்காட்சியில் பேட்டிக்காணப்பட்ட ஒரு பெண் சொன்னாள். “எவனோ ஒருவன் பின்னாலிருந்து என்னைப் பிடித்து இழுத்தான். அவன் ஒரு கத்தியை வைத்திருந்தான். அவன் என்னைக் கீழேத் தள்ளி என் பணப்பையை பறித்துக் கொண்டான். அப்பொழுது அங்கேயே, நான் எதையாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.” துப்பாக்கியை எடுத்துச் செல்ல அனுமதிக்காக மனு செய்து, துப்பாக்கியால் சுடப் பழகிக்கொள்ளுமிடத்தில் பயிற்சியை எடுத்த பின்பு அவளுடைய மனநிலை எப்படியாக இருந்தது? “தாக்குதலுக்குள்ளாகும் எல்லா உணர்வையும் நான் இழந்துவிட்டேன். என்னிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது, என்னால் இதை சுடமுடிகிறது. அது, நேர்த்தியானது, எனக்கு பயமில்லை என்பதாக எனக்குள் நானே நினைத்துக்கொண்டேன். இந்த உலோக சுடுபடைக்கலத்தோடு உண்மையில் என்னை நான் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.”
ஐக்கிய மாகாணங்களிலுள்ள 120 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் எண்ணம் இதுவாகவே இருப்பது தெளிவாக இருக்கிறது, மேலும் இன்னும் எத்தனை அநேகர் சொந்தமாகச் சட்ட விரோதமாகக் கருவிகளை வைத்திருக்கின்றனர் என்பது யாருக்குத் தெரியும்? உலகம் முழுவதிலுமுள்ள எண்ணிக்கை தடுமாறச் செய்யக்கூடும். ஆனால், இந்த எண்ணம், உண்மைகள் காண்பிப்பதன் அடிப்படையில் செய்யப்படும் அதிகமான ஆராய்ச்சியின் விளைவாக இருக்கிறதா? தற்காப்புக்காக நீங்கள் வெளியே சென்று ஒரு கருவியை வாங்குவதற்கு முன்னால், காவல் அதிகாரிகளும் புள்ளிவிவரங்களும் காண்பிப்பது என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (g90 5/22)