துப்பாக்கிகள் ஒரு வாழ்க்கை முறை
உயிரோட்டமுள்ள நீளமான வரிசையில் அமைந்திருந்த சிவப்புநிற குடியிருப்பு மனைகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. தானியங்கி மற்றும் பாதி தானியங்கி துப்பாக்கி வெடிப்பின் தெளிவான சப்தம் இனிமேலும் அமைதியைத் தகர்த்துவிடுவதில்லை. படைக்கலத்தின் ஒவ்வொரு வெடிப்போடும் தோன்றும் மின் வெட்டொளி இரவில் மயிர்க்கூச்செறிய வைக்கும் நிழல்களை வீசுவதோ, மங்கலான ஒளியுள்ள தெருக்களுக்கு ஒளியூட்ட உதவிசெய்வதோ இல்லை. கடந்த கால மற்றும் தற்காலத்திய துப்பாக்கிச் சண்டைகளில் கட்டுமான வேலையில் புதைந்து கொண்டுவிட்ட துப்பாக்கிக் குண்டு பழங்காலத்திய செங்கல் கட்டிட முகப்புகளில் துளைகளை உண்டுபண்ணியிருக்கின்றன.
காவல்துறையினரும் மருத்துவ ஆய்வாளர்களும் தெருக்களை நன்கு அறிவர். ஒரு சிறிய காவல்துறை படைக்கு படைக்கலம் பூட்ட போதுமான வேட்டுத்திறம் கொண்ட படைக்கலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன—கொலைகள், தற்கொலைகள், தற்செயலாக சுடுதல் மற்றும் கொள்ளையடித்தல் ஆகியவைகளின் பின்விளைவுகள். தபால்காரர்களும் குப்பைகளை அள்ளுகிறவர்களும் துப்பாக்கிக் குண்டு மழையில் சிக்கிக் கொள்ளும் பயத்தில் சமுதாயத்துக்கு சேவைபுரிய மறுக்கின்றனர். பிள்ளைகள் தங்கள் வீடுகளுக்குள் மறைப்பாக வைக்கப்படுகிறார்கள். ஆனால் அப்படியும் வேண்டுமென்றே அல்லது திறமையற்று குறி வைத்து வெடிக்கப்படும் துப்பாக்கிக் குண்டுகள் ஜன்னல்களிலும் சுவர்களிலும் ஊடுருவிச் சென்று அறைகளினூடே தத்திப்பாயும்படி சுடப்படுகையில் சிலர் சுட்டுத்தள்ளப்படுகின்றனர்.
நீங்கள் ஒரு பெரிய நகரில் வாழ்ந்துவந்தால், நேரில் பார்த்த காட்சியாக இல்லாவிட்டாலும் டி.வி. மாலை செய்திகளின் பார்வையாளராக, இங்கே விவரிக்கப்பட்ட காட்சி உங்களுக்குப் பழகிப்போன ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அநேக நகரங்களில், சுடப்படுதல் அத்தனை பொதுசெய்தியாக இருப்பதால், அவை அநேகமாக உள்ளூர் பத்திரிகையில் அறிவிக்கப்படுவதே இல்லை. மற்ற நகரங்களில் அல்லது உலகின் மற்ற பாகங்களில் நடைபெறும் மற்ற அநேக படுகொலைகள் தினசரி செய்தியை கவர்ந்து கொள்ள இவை அற்பமானவையாக தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டுவிடுவது அடிக்கடி நிகழ்கிறது.
உதாரணமாக துப்பாக்கி ஏந்திய ஒரு மனிதன் கைத்துப்பாக்கிக் கொண்டு தன்னை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக, வேகமான வேட்டு தாக்குதல் சுழல்துப்பாக்கியிலிருந்து தொடக்கப் பள்ளிப்பிள்ளைகளின் ஒரு கூட்டத்தின் மேல் நூறு சுற்றுகளைத் தெளித்து 5 மாணவர்களை கொன்று மற்ற 29 பேரை காயப்படுத்தியபோது கலிஃபோர்னியா படுகொலை காட்சி உலகின் பல பகுதிகளில் தகவலாக அமைந்தது. AK-47 சுழல்துப்பாக்கிக் கொண்டு இங்கிலாந்தில் பித்துபிடித்த ஒரு மனிதன் 16 பேரை கொன்ற அதிர்ச்சியூட்டும் செய்தியை ஐரோப்பாவும் ஐக்கியமாகாணங்களும்கூட வாசித்தது. கானடாவில் பெண்கள் மீது வெறுப்புற்ற ஒரு மனிதன் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்துக்குச் சென்று 14 பெண்களைச் சுட்டுக்கொன்றான். உயிரிழந்தோரின் எண்ணிக்கை தடுமாறச் செய்வதாக இருந்தாலொழிய அநேக துப்பாக்கிக் கொலைகள், வேண்டுமென்றே செய்யப்பட்டாலும் அல்லது தற்செயலாக செய்யப்பட்டாலும், அவை நடைபெறும் நகரத்துக்கு வெளியே அறிவிப்பு செய்யப்படுவது அபூர்வமாகவே உள்ளது.
துப்பாக்கியைச் சூழ்ந்த புதிர்
சட்டத்தை அமல்செய்யும் உள்ளூர், அரசு, தேசீய மற்றும் சர்வதேசீய ஏஜென்ஸிக்களும், தலைவர்களும் உயர்ந்துவரும் மரண எண்ணிக்கைக்கு காரணமாக குறிப்பிடப்படுகின்ற, ஏற்கெனவே குற்றவாளிகள் மற்றும் மனநோயாளிகள் கைவசமிருக்கும் கைத்துப்பாக்கிகள் மற்றும் பெரிய தானியங்கி மற்றும் பாதி தானியங்கிக் கருவிகளைக் குறித்து குழப்பமடைந்தவர்களாக இருக்கின்றனர். காவல்துறை தலைவர்களின் சர்தேசீய சங்கம், மதிப்பிடுகிறபடி 6,50,000 முதல் 20,00,000 வரையாக பாதி தானியங்கி மற்றும் தானியங்கிப் போரயுதங்கள் “தேசம் முழுவதிலுமுள்ள [அ.ஐ.மா.] குற்றவாளிகளின் கைவசம் இருக்கக்கூடும் துப்பாக்கி சுடுதலில் பெரும்பாலும் எப்பொழுதுமே தங்கள் பக்கத்தில் சாதகமான அனுகூலங்களைக் கொண்ட துன்மார்க்கமான பேர்வழிகளின் ஒரு படை” என்பதாக ஐ.மா. செய்தி மற்றும் உலக அறிக்கை அறிவிப்பு செய்தது.
ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே ஏறக்குறைய இரண்டில் ஒரு வீட்டில் ஒரு துப்பாக்கி உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளின் சரியான எண்ணிக்கை தெளிவாக தீர்மானிக்க முடியாவிட்டாலும் 7 கோடி அமெரிக்க மக்கள் ஏறக்குறைய 14 கோடி சுழல்துப்பாக்கிகளையும் 6 கோடி கைத்துப்பாக்கிகளையும் சொந்தமாக வைத்திருப்பதை அண்மைக் கால மதிப்பீடுகள் காண்பிக்கின்றன. “தேசத்தின் தனியார் படைக்கலச் சாலை, தேசத்திலுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஒரு துப்பாக்கியை வழங்குவதற்குப் போதிய அளவு பெரியதாக இருக்கிறது” என்பதாக ஐ.மா. செய்தி மற்றும் உலக அறிக்கை எழுதியது. இது அதிர்ச்சியைத் தருவதாக நீங்கள் காண்கிறீர்களா?
ஐரோப்பாவிலும்கூட மக்கள் தொகுதி படைக்கலம் பூண்ட ஒரு முகாமைப் போல ஆகிவிட்டிருக்கிறது. வலிந்து மேற்சென்று தாக்குகிற பேர்வழிகள் படைக்கலம் பூட்டிக்கொண்டிருக்கையில், இங்கிலாந்து அதனுடைய போரயுதப் பிரச்னையைச் சமாளிக்க போரடிக்கொண்டிருக்கிறது. மேற்கு ஜெர்மனியில் சட்டத்துக்கு மாறாகத் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் வேட்டுப்படைக் கருவிகள் புழக்கத்திலிருக்கும் எல்லாக் கருவிகளையும்விட 80 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இவைகளில் அதிகமான எண்ணிக்கை, அறிக்கைகளின்படி, “ஜெர்மன் காவல் துறை, எல்லைக் காவலர், ஜெர்மன் படைக்கலம், மற்றும் NATO கடைகளிலிருந்து திருடப்பட்டவை.” சுவிட்சர்லாந்தே, உலகில் மிக உயர்ந்த அளவில் தனியார் வேட்டுப்படைக்கருவிகளைக் கொண்டிருப்பதாக அறிக்கை செய்யப்பட்டது. “சட்டத்தைப் பின்பற்றும் எந்த ஒரு சுவிஸ் நாட்டவனும் சொந்தமாக துப்பாக்கிகளை வைத்திருக்கலாம். இராணுவ வயதிலுள்ள ஒவ்வொரு ஆண்மகனும் ஸ்டக்டன் [கலிஃபோர்னியா] படுகொலையில் பயன்படுத்தப்பட்டதைவிட அதிக சக்திவாய்ந்த தாக்குதல் சுழல்துப்பாக்கி ஒன்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும்,” என்பதாக 1989, பிப்ரவரி 4, தேதியிட்ட தி நியு யார்க் டைம்ஸ் அறிவிப்பு செய்தது.
சான் சால்வடாரில், “துப்பாக்கிகள் ஆண்களின் இடுப்புகளில் பணப்பையைப் போல அத்தனை சாதாரணமாக உள்ளது. வேட்டைத் துப்பாக்கிக் கொண்டு பல்பொருள் அங்காடியின் பக்கங்களில் ரோந்துவரும் காவலர்கள், கடைக்கு வருபவர்கள் வாயில் கதவுகளின் பக்கத்தில் நிலைப்பெட்டியில் தங்கள் கருவிகளை சரிபார்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்கிறார்கள்” என்பதாக ஒருசில நாட்களுக்கு முன்னர், தி நியு யார்க் டைம்ஸ் அறிவிப்பு செய்தது. 1989 பிப்ரவரி ஏஷியாவீக் பத்திரிகையின்படி, பிலிப்பீன்ஸ் அரசாங்கம் “ஒத்துக்கொள்வதென்னவென்றால் தேசத்தில் குறைந்தபட்சம் 1,89,000 உரிமம் பெறாத வேட்டுப் படைக் கருவிகள் குவிந்து கிடக்கிறது. அதுவும், உரிமம் பெற்ற 4,39,000-ம் சேர்கையில், தனி நபர்களின் கைகளிலுள்ள கருவிகள், சுமார் 1,65,000 வாடிக்கையாளர்களைக் கொண்ட ஆயுதம் பூண்ட சேனைகள் வைத்திருப்பதை எண்ணிக்கையில் விஞ்சிவிடுகிறது என்று அர்த்தமாகிறது. சட்ட விரோதமான ஆயுத சரக்குகள் வாரந்தோறும் பன்னாட்டு விமான நிலையத்திலும் மனிலா துறைமுகத்திலும் பறிமுதல் செய்யப்படுகின்றன.”
வேட்டுப்படைக் கருவிகளை வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் கண்டிப்பாகத் தடைசெய்யும் சட்டத்தொகுப்பேட்டைக் கொண்ட அமைதியான கானடா, வேட்டுப்படைகளோடு தொடர்புடைய குற்றச்செயல்கள் ஒரே சீராக அதிகரித்து வருவதைப் பார்க்கிறது. 1986-ன் முடிவில், கானடாவில், சுமார் 8,60,000 பதிவேட்டில் வரையறைசெய்யப்பட்ட வேட்டுப் படைக்கருவிகள் இருந்தன. இதில் 1978-க்கு முன்பு வழங்கப்பட்ட தனியார் சேர்த்து வைத்திருக்கும் தானியங்கிக் கருவிகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. ஓய்வுபெற்ற கானடா காவல் அதிகாரி ஒருவர் சொன்னதாவது: “நான் தெரிந்துகொள்ள விரும்புவது என்னவென்றால், கானடா மக்கள் ஏன் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு சுழல்துப்பாக்கி அல்லது ஒரு வேட்டுத்துப்பாக்கி அவசியம் என்பதாக நினைக்கிறார்கள் என்பதே.”
ஐ.மா. அரசாங்கம் அண்மையில், பாதி தானியங்கி கருவிகள் மீது தற்காலிகமாக தடையுத்தரவை போட்ட போது, விளைவுகள் எதிர்பாராதவையாக இருந்தன. ஏற்கெனவே தேசம் முழுவதிலும் துப்பாக்கிக் கடைகளில் இருந்தவற்றை வாங்குவதற்காக ஒருவித வெறியோடு வந்திருந்தவர்கள் நீண்ட மணிநேரங்கள் வரிசையில் காத்திருந்தனர். கடைசியாக கையிருப்பிலிருந்தவற்றில் ஒன்றினை வாங்குவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் “இது ஓக்லஹாமா நில நெருக்கடி” போல இருக்கிறது என்றார். தடையுத்தரவுக்கு முன்பாக இவைகளை சுமார் ரூ. 1,600-க்கு வாங்கலாம். இந்த நாளில் அவை ஒன்று 16,000-க்கு விற்றுக்கொண்டிருந்தன. “இந்தத் துப்பாக்கிகள் நாள் ஒன்றுக்கு 30 வந்துகொண்டும், விற்பனையாகிக் கொண்டுமிருக்கின்றன” என்றார் மகிழ்ச்சியுள்ள ஒரு கடையின் சொந்தக்காரர். “அவர்கள் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கண்ணில்படும் எல்லாவற்றையும் எதையும் வாங்குகிறார்கள்” என்றார் அவர். “அவர்கள் செய்திருப்பது எல்லாருடைய வீட்டிலும் ஒன்றைத் தோன்றச் செய்திருக்கிறார்கள்” என்றார் மற்றொரு துப்பாக்கிக்கடை சொந்தக்காரர்.
ஐக்கிய மாகாணங்களில், ஃப்ளாரிடா மாநிலத்திலுள்ள ஒரு சட்டம், துப்பாக்கி சொந்தக்காரர்களுக்கு, பொதுவிடங்களில் துப்பாக்கியை இடுப்பில் இணைத்தோ அல்லது தங்கள் உடலில் மறைத்து வைத்தோ நடந்துசெல்ல அனுமதியளிக்கிறது. இது மேற்கு அமெரிக்காவில் நிலவிய குழப்பமான காலப்பகுதியை நினைப்பூட்டும் தெருமுனை துப்பாக்கி சூடுகளில் விளைவடையலாம் என்பதாக அஞ்சப்படுகிறது. ஃப்ளாரிடா அரசு பிரதிநிதி ஒருவர் சொன்னதாவது: “நாங்கள் தெரிவிக்கும் செய்தி இதுவே, ‘எங்களால் இனிமேலும் உங்களைப் பாதுகாக்க முடியாது, ஆகவே துப்பாக்கி ஒன்றை வாங்கிக்கொண்டு, உங்களாலான மிகச் சிறந்ததைச் செய்துகொள்ளுங்கள்.’” துப்பாக்கி விற்பனைகளை வைத்து நிதானிக்கையில், ஆயிரக்கணக்கானோர் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
துப்பாக்கிகள் மீது—போர்க்கள சண்டைக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு குண்டுகளை காரைக்கட்டு சுவர்களினூடாக அனுப்பி நிமிடத்துக்கு 900 சுற்றுகளை வெடிக்கும் அளவுக்கு அத்தனை சக்திவாய்ந்த ஒருசில துப்பாக்கிகள் மீது—ஏன் இந்தத் திடீர் மோகம்? துப்பாக்கிகளுக்கு அவற்றை விசேஷமாக ஆண்களுக்கு கவர்ச்சியுள்ளதாக்கும் “கிளர்ச்சியான ஒரு புதிர்” இருப்பதாக ஒரு சில அதிகாரிகள் சொல்கிறார்கள். “இருப்பதிலேயே மிகப் பெரியதும் அருவருப்பானதும், அதிக சக்திவாய்ந்ததுமான ஒரு கருவியை ஏந்திச் செல்வதில் ஆண்மை இருக்கிறது” என்கிறார் ஓர் அரசாங்க அதிகாரி. “குறிப்பாக ஆண்களுக்குத் துப்பாக்கிகள், அவர்களை ஏறக்குறைய வாலிப வயதுக்கு மாயமாக திரும்பிப் போகச் செய்யும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்பதாக ஒரு நிருபர் எழுதினார். ஒரு சில வங்கி நிறுவனங்கள், வைப்புத் தொக சான்றிதழ்களின் பேரில் வட்டி செலுத்துவதற்கு மாற்றாக கைத்துப்பாக்கிகளை அளிப்பதன் மூலம், இந்தத் துப்பாக்கிப் புதிர் மீது வெற்றி கண்டிருக்கிறார்கள். பணம் செலுத்துபவர்கள் மத்தியில் வளர்ச்சி மிகவும் பிரபலமாகியிருப்பதை அறிக்கைகள் சுட்டிக் காண்பிக்கின்றன.
உலகம் முழுவதும் துப்பாக்கி விற்பனை வளர்ந்துகொண்டேயிருக்கின்றது. அது எங்கே முடிவடையும்? சமுதாயத்தில் ஒவ்வொரு ஆண்மகனும், குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான துப்பாக்கிகளைச் சொந்தமாக வைத்திருக்கும்போதா? அல்லது துப்பாக்கிகள் ஆண்களுக்கு மாத்திரம்தானா? அடுத்தக் கட்டுரையின் ஒருசில அக்கறையூட்டும் உண்மைகளைச் சிந்தித்துப் பாருங்கள். (g90 5/22)