துப்பாக்கிகள் அவை இல்லாத ஓர் உலகம்
மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே, மனிதன் தன் உடன்மானிடனோடு கொண்டிருந்த நடைமுறை தொடர்புகளில் வன்முறையின் உதவியை நாடியிருக்கிறான். காயீன் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றபோது, கொலை முதல் குடும்பத்தில் அறியப்படலானது. அப்போது முதற்கொண்டு படுகொலை தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கிறது—குடும்பங்களுக்குள், கோத்திரங்களுக்குள், தேசங்களுக்கிடையே. ஆயுதங்கள் அதிக ஆற்றல்மிக்கதானபோது, பலியாட்கள் மிகப் பலராயினர். கற்களும் தடிகளும், ஈட்டிகளுக்கும் பட்டயங்களுக்கும் வழி வகுத்தது. இவைகளை துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் மாற்றீடு செய்தன. நூற்றுக்கணக்கானோரின் அழிவு, ஆயிரக்கணக்கானோருடையதானது; இன்று ஆயிரங்கள் லட்சங்களாகிவிட்டன. மேலும் போரில் மாத்திரமல்ல, அமைதி காலத்திலும்கூட. போர் வீரர்களால் மாத்திரமல்ல, ஆனால் தனிப்பட்ட குடிமக்களாலும்கூட. வயது வந்தவர்களால் மாத்திரமல்ல, சிறுவர்களாலும்கூட. வேகமாக அதிகரித்துவரும் வன்முறை எப்போதாவது முடிவுக்கு வருமா? அது மக்கள் மீது சார்ந்திருக்குமானால் வருங்கால வாய்ப்பு இருண்டதாக இருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1–5, 13.
கிறிஸ்து இயேசு, தேசத்துக்கு விரோதமாக மற்ற தேசங்கள் பயங்கரமான போர்களில் எழும்பி லட்சக்கணக்கானோரின் உயிர்களை மாய்த்துவிடும் காலமாக இது இருக்கும் என்பதாக முன்னறிவித்தார். கொள்ளைநோய்களும் நிலநடுக்கங்களும் அநேக இடங்களில், பெரும் எண்ணிக்கையான ஆட்களின் உயிர்களைப் பலியாகக் கொள்ளும்: மனிதன் பூமியை அந்த அளவுக்கு கெடுத்துவிடுவதால், உயிரைக் காக்கும் அதன் திறமையே பயமுறுத்தப்படும்—அநேக விஞ்ஞானிகள் இப்பொழுது அத்தகைய பயத்தைக் குறித்து குரலெழுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மனிதனின் பணஆசை, மேன்மேலும் மூர்க்கமாக மாசுபடுத்தும் செயலில் மூழ்கிவிடும்படி அவனைச் செய்கிறது. யெகோவா தேவன் தாமே, குறுக்கிட்டு “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கும்”போது தானே இது முடிவுக்கு வரும்.—வெளிப்படுத்துதல் 11:18.
அநேகர் இப்படிப்பட்ட எச்சரிப்புகளை ஏளனஞ் செய்து இவ்விதமாக கடைசி நாட்களை குறிக்கும் முன்னறிவிக்கப்பட்ட அடையாளத்தின் மற்றொரு பாகத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்: “முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.”—2 பேதுரு 3:3, 4.
ஆனால் மனிதவர்க்கத்தின் மீது வட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்தத் துன்பத்திலும் ஓர் ஆறுதல் இருக்கிறது. இயேசு தம்முடைய வந்திருந்தலின் போது, “பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். . . . ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” என்று முன்னுரைத்தார். ஆனால், “உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்து”வதற்கான காலமாக இது இருக்கும் என்றும்கூட அவர் சொன்னார்.—லூக்கா 21:25–28.
தேசங்கள் வேதனையிலும், மக்கள் கொந்தளிப்பிலும், தனி ஆட்கள் பூமியின் மீது நேரிடப் போகிற காரியங்களைக் குறித்து பயத்திலும் இருக்கின்றனர், ஆனால் வர இருக்கும் கடவுளுடைய ராஜ்யத்துக்காகவும் கிறிஸ்து இயேசுவின் ஆயிரம் வருட ஆட்சிக்காகவும் காத்திருப்பவர்களுக்கு இது மீட்பின் சமயமாக இருக்கிறது. ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும்’ உண்டாகுமென்ற யெகோவா தேவனின் வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்குரிய ஒரு காலமாக அது இருக்கும்.—2 பேதுரு 3:13.
மேலும் துப்பாக்கிகள் இல்லை! போருக்கு எதுவுமே தேவைப்படாது. “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை [யுத்த இரதங்களை, ராதர்ஹாம்] நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:9.
தனிப்பட்ட பாதுகாப்புக்கு எதுவுமே தேவைப்படாது. “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் [யெகோவாவின், NW] வாய் இதைச் சொல்லிற்று.”—மீகா 4:4.
செவ்வையானவர்கள் மாத்திரமே, அங்கு இருப்பார்கள், துன்மார்க்கர் எவரும் இருக்கமாட்டார்கள். “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவர்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” (நீதிமொழிகள் 2:21, 22) அப்பொழுது “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
கடவுளுடைய பார்வையில் வன்முறை பூமியைக் கெடுக்கிறது. நோவாவின் நாளில், “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.” (ஆதியாகமம் 6:11–13) ஆகவே யெகோவா உலகளாவிய ஒரு ஜலப்பிரளயத்தில் அந்த உலகத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். இயேசு, தம்முடைய வந்திருத்தலின் போது நடக்கும் இந்தத் தற்போதைய வன் முறையான உலகின் முடிவை, பூர்வ உலகின் முடிவுக்கு ஒப்பிட்டுப் பேசினார்: “எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:38, 39.
கடவுளுடைய புதிய உலகில் உயிருடனிருக்கும் அனைவருமே மாற்கு 12:31-ஐ நிறைவேற்றுவார்கள்: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” மேலும் ஏசாயா 11:9: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை [யெகோவாவை, NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” நீதியுள்ள அந்தப் புதிய உலகில், வெளிப்படுத்துதல் 21:1, 4-ல் விவரிக்கப்பட்டுள்ள மகத்தான நிலைமைகளும்கூட நிறைவேற்றமடையும்: “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.” நிச்சயமாகவே, துப்பாக்கிகள் நிறைந்திருக்கும் மனித சமுதாயங்களும் இல்லை!
மனிதனின் ஆசீர்வாதத்துக்காக நிகழும் தனிச் சிறப்பு வாய்ந்த இந்த எந்த மாற்றங்களுமே, எதிராளியைச் சுட்டுத்தள்ளும் அழல் வீசுகின்ற துப்பாக்கிகளோடு புரட்சியாளர்களால் கொண்டுவரப்படாது. மாறாக, அவை யெகோவா தேவனால், கிறிஸ்து இயேசுவின் கீழ் அவருடைய ராஜ்யத்தின் மூலமாக கொண்டுவரப்படும். ஆகவே ஏசாயா 9:6, 7 சொல்வதாவது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] வைராக்கியம் இதைச் செய்யும்.” (g90 5/22)