உங்களை ஊடுருவிப் பார்க்கும் கம்ப்யூட்டர்
நியூஜீலாந்து விழித்தெழு! நிருபர்
ஒரு நீள் சதுர சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது நான் ஒரு விசித்திரமானக் காட்சியைக் கண்டேன். மேஜை மீது படுத்திருந்த ஒரு மனிதனைச் சுற்றி வெள்ளை அங்கி அணிந்திருந்த ஊழியர்கள் நின்றிருந்தனர். பிரம்மாண்டமான பென்சில் சீவும் கருவி போன்று தோன்றிய ஒன்றினுள் தலையை முதலில் செலுத்தி அவனை நுழைக்கின்றனர்! பயமுறுத்தும் ஒரு கனவா இது? அறிவியல் கதைத் திரைப் படத்திலிருந்து ஒரு காட்சியா? என்ன நடைபெற்றுக் கொண்டிருந்தது?
இந்தக் காட்சியானது நியூஜீலாந்தின் தென் தீவான டூனடின் என்னும் ஊரில் உள்ள மருத்துவமனையில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பிரம்மாண்டமான பென்சில் சீவும் கருவி உண்மையில் ஒரு வகையான அதி நவீன சிஎடி (CAT) முறையில் அலகிடும் எஸ்ரே எந்திரமாகும். அது CAT என்றால் பூனைகளை அலகிடுவதல்ல—குறைந்தபட்சம் அதற்காக வந்ததும் அல்ல. அந்த மூன்று எழுத்துக்களும் கம்ப்யூட்டரைஸ்ட் ஆக்ஸியல் டோமோகிராஃபி (Computerised Axial Tomography) (கனனிப்படுத்திய ஊடச்சின் ஊடுகதிர் உள்தளப் படம்) என்பதன் சுருக்கமாகும். டோமோகிராஃபி (ஊடுகதிர் உள்தளப் படம்) என்ற சொல், ‘ஒரு பகுதியை எழுதுவது’ என்னும் பொருள் கொண்ட கிரேக்க வார்த்தைகளில் இருந்து வருகிறது. அதைத்தான் ஒரு சிஎடி (CAT) அலகிடும் கருவி செய்கிறது. அது உங்கள் உடலின் ஒரு பகுதியை எக்ஸ்ரே எடுத்து அது பார்ப்பதை “எழுதுகிறது” அல்லது பதிவு செய்கிறது.
இந்த விந்தை எக்ஸ்ரே எந்திரம் மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மட்டுமே அக்கறையூட்டுவதாய் இருக்கலாம் என ஒருவேளை நீங்கள் எண்ணலாம். ஆனால் இங்கே உள்ள மக்கள் சிஎடி அலகிடும் கருவியில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதைப் பொதுமக்களின் நன்கொடை மூலம் வாங்கினர். அடுத்தடுத்துள்ள இருமாகாணங்களாகிய ஒட்டாகோவும் செளத்லாந்தும், 20 லட்சம் நியுசிலாந்து டாலர்கள் (12 லட்சம் அமெரிக்க டாலர்) அதற்காக சேகரித்தனர். அதாவது அப்பகுதியில் உள்ள ஆண், பெண், குழந்தை என ஒவ்வொருவருக்கும் தலா 6 டாலருக்கு மேல் (நியூஜீலாந்து) நன்கொடை கணக்காகிறது. எங்கள் உள்ளூர் பல்கலைக்கழகமும், அதன் மருத்துவப் பள்ளியும் பொதுமக்கள் ஆர்வத்தைத் தூண்ட அதிகம் உழைத்தனர். ஆனால் இந்தச் சிஎடி எந்திரங்கள் உலகமெங்கும் இப்பொழுது பெருகிவருகின்றன. உங்களுக்கு அருகாமையில்கூட ஒன்று இருக்கலாம்.
அது எவ்விதம் வேலை செய்கிறது?
நீங்கள் எப்பொழுதாவது ஒரு எக்ஸ்ரே படம் எடுத்திருக்கிறீர்களா? அவ்வாறெனில் நீங்கள் ஒரு பெரிய தட்டையான தட்டிற்கு எதிராக நிற்கவோ அல்லது படுக்கவோ செய்து அப்படியே அசையாமல் இருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். நீங்கள் அவ்வாறு செய்து கொண்டிருக்கையில், கண்ணுக்குத் தெரியாத எக்ஸ் கதிர்கள் உங்கள் உடம்பை ஊடுருவிச் சென்று, உங்களுக்குப் பின்னால் உள்ள ஒரு புகைப்படத்தட்டில் பாய்ந்திருக்கும் வழியில் உங்கள் எலும்புகள் இருந்த இடங்களில் பெரும்பாலான எக்ஸ் கதிர்கள் தடை செய்யப்பட்டிருக்கும். ஏனைய திசுக்களும் உறுப்புகளும் அவைகளின் அடர்த்திக்கேற்ப பல்வேறு அளவுகளில் எக்ஸ் கதிர்களின் பாய்ச்சலைக் குறைத்திருக்கும். விளைவு என்னவெனில், உங்களுக்கு உள்ளே உள்ளவைகளின் ஒரு நிழற்படம் எலும்புகளை வெள்ளையாகவும், பல்வேறு திசுக்களையும் உறுப்புகளையும் சுமார் எட்டு சாம்பல் வண்ண நிறங்களில் தருகிறது.
வழக்கமான எக்ஸ்ரே படங்கள் உங்கள் எலும்புகள் மற்றும் உறுப்புகள் அனைத்தும் ஒரு கடையில் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதைப் போல் இருந்தால் நன்றாக அமையும். ஆனால் அவை அப்படியல்லவே. சில மற்றவைகளின் பின்னால் நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் படங்களை எவ்வாறு எடுப்பது? வகுப்பில் எடுக்கும் ஒரு படத்திற்காகப் பள்ளி மாணவர்களை அங்கும் இங்கும் மாறிநிற்பதுபோல் அவைகளை நகர்த்த முடியாது. ஆகவே புகைப்படக்காரர் நகர வேண்டும்—எக்ஸ்ரே படங்கள் பல்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.
ஒரு சிஎடி அலகிடும் கருவியில் பென்சில் சீவும் கருவியைப் போன்ற வடிவமைப்பு உடலைச் சுற்றி அனைத்துப் பாகங்களிலும் படமெடுக்க உதவுகிறது. உங்கள் உடலின் ஒரு சிறு பகுதியை 700 வெவ்வேறு வகையான படங்களில் 250-க்கும் மேற்பட்ட சாம்பல் வண்ண நிறங்களில் எடுத்துத்தருகிறது. இந்த எல்லாப் படங்களும் உங்கள் உடலின் உள்ளே என்ன இருக்கிறது என்ற மிகத் தெளிவான விவரங்களை முன் எப்போதும் இல்லாத அளவிற்குத் தருகின்றன.
கம்ப்யூட்டர் ஏன்?
இவ்வளவான எக்ஸ்ரே படங்களை எடுப்பது அற்புதமானதென்றால், இந்தப் படங்கள் அனைத்தையும் முற்றிலும் புரிந்துகொள்வது இன்னொரு விஷயம். சுறுசுறுப்பான ஒரு மருத்துவர் நாள் முழுவதும் உழைத்து சோர்வடைந்து வீட்டிற்குச் சென்றபின், உங்கள் உடம்பின் 700 எக்ஸ்ரே படங்களை இரவிலேயே ஆராய்ந்து மறுநாள் காலை உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யத் தயாராக இருப்பது என்பதை எண்ணிப் பாருங்கள். அத்தகைய வாய்ப்பில்லை என்றே நீங்கள் கூறுவீர்கள். எவ்வாறு அவர் அவைகளையெல்லாம் பார்க்கப் போகிறார்?
இந்தச் சிக்கல் வாய்ந்த செய்முறையை ஒரு கண்ணாடி டம்ளரில் குளிர் பானத்தை வைத்து அதில் ஏராளமான ஐஸ் கட்டிகளைப் போட்டு பிரகாசமான விளக்கொளியை அதின் வழியே பாய்ச்சினால் எப்படி இருக்குமோ அதற்கு ஒப்பிடலாம். ஒளி கண்ணாடி வழியாகவும் ஜஸ் கட்டிகள் வழியாகவும் சென்று கண்ணாடிக்குப் பின்னால் இருக்கும் திரையில் ஒரு வடிவத்தைத் தோற்றுவிக்கும். இப்பொழுது ஒருவேளை நீங்கள் அந்த ஒளிவிளக்கையும், திரையையும் கண்ணாடி டம்ளரைச் சுற்றி மாறுபடும் ஒளியையும் இருளையும் கவனித்துக் கொண்டே சுழற்றினால் ஒவ்வொரு ஐஸ்கட்டியின் சரியான வடிவை உங்களால் பார்க்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
அது உங்களுக்குச் சாத்தியப்படாத ஒரு காரிமாகத் தோன்றும். ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கு அது அப்படியல்ல. எக்ஸ்ரேக்களால் கொடுக்கப்பட்ட தகவல்கள் புகைப்பட தட்டுகளில் அல்லாமல் உணர் கருவிகளில் பெறப்படுகின்றன. உள்ளேயிருந்து வெளியே வரும் எக்ஸ் கதிர்களை, உள்ளே சென்ற எக்ஸ் கதிர்களுடன் கவனமுடன் ஒப்பிட்டு நோக்கி, எக்ஸ்கதிர்கள் உள்ளே கடந்து செல்லும் போது, உங்கள் உடம்பின் உள்ளே என்ன இருக்க வேண்டும் என்பதைக் கம்ப்யூட்டர் கணித்துவிடுகிறது. வெறுமனே வடிவங்களை அடையாளம் கண்டு கொள்வதைக் காட்டிலும், சாதாரண இரத்தத்துக்கும், உறைந்த இரத்தத்துக்கும் உள்ள வித்தியாசங்களையும் அல்லது மூளை திசுவுக்கும் மூளையைச் சுற்றியிருக்கும் திரவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் காட்டும் அளவுக்கு இந்தக் கம்ப்யூட்டர் மிகவும் சக்திவாய்ந்தது. உண்மையில் சாதாரண எக்ஸ்ரே படங்கள் காட்ட முடியாத திசுக்களின் அடர்த்தியில் உள்ள மிகச் சிறிய வேறுபாடுகளைக் கூட அது காட்டிவிடும்.
அது உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது?
இந்தச் சிஎடி அலகிடும் கருவி அளிக்கும் அதிகப்படியான விவரங்களே மருத்துவர்களிடம் அதை அதிகப் பிரபலப்படுத்துகிறது. சாதாரண எக்ஸ்ரே காட்டமுடியாத ஒரு சிறிய மெதுவான திசுக்கட்டியை சிஎடி அலகிடும் கருவி காட்டிவிடுகிறது. அதன் மூலம் ஓர் உயிரைக் காப்பாற்ற முடிகிறது. சிஎடி அலகிடும் கருவிகள் அறுவை முறையைவிட மின்னணு முறை மூலம் கூறு போட்டுப் பார்ப்பதால் அவை நோயாளிகளிடமும் பிரபலமாக உள்ளன. அவைகள் அதிக அளவிலான அபாயகரமான மனதிற்கு விருப்பமற்ற சிக்கல் வாய்ந்த நோய்க் கண்டுபிடிப்பு அறுவைகளை அகற்றி விடுகின்றன. ஆகவே இத்தகைய அறுவை முறைகளைத் தவிர்க்க விரும்புவோர் சிஎடி அலகிடுதல் அந்தப் பணியை ஆற்றுமா என தங்கள் மருத்துவர்களிடம் கேட்கலாம்.
அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடியாத நிலையிலும்கூட சிஎடி அலகிடுதல் உதவக்கூடும். ஒரு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின் கதிரியக்க மருத்துவத் துறையின் தலைவரும் பேராசிரியருமானவர், சிஎடி அலகிடும் கருவி அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு, உடம்பின் உள்ளே என்ன காண்பார்கள் என்ற விவரமான தகவலைக் கொடுப்பதன் மூலம் அறுவை சிகிச்சையை இன்னும் எளிதாக்குகிறது எனச் சுட்டிக் காட்டினார். “அலகிடும் கருவி அவைகளை ஒரு தட்டில் அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறது.” அது மருத்துவருக்கும் நோயாளிக்கும் ஒரு பெரிய அனுகூலம் என அவர் கூறினார்.
என்றபோதிலும் சிஎடி அலகிடும் கருவிகளுக்கு ஒரு வரையறை இருக்கிறது. சிஎடி அலகிடும் கருவிகள் அநேகப் பிரச்னைகளைக் குணமாக்கும் ஆரம்ப நிலையிலே கண்டுபிடித்துக் கொடுத்தாலும் அவைகளால் எதையும் குணமடையச் செய்ய இயலாது. அவைகள் அநேக மிகவும் அசெளகரியமான, சில வேளைகளில் அபாயகரமான கண்டுபிடிக்கும் முறைகளை மாற்றியமைத்தாலும், அவைகள் எப்பொழுதும் ஒரு அறுவை சிகிச்சைக்கு மாற்றாகாது. உங்களுக்கு ஒரு தலைவலி வரும் போதல்லாம் உங்கள் மருத்துவரிடம் சென்று சிஎடி அலகிடுதல் செய்ய வேண்டும் என கேட்கக் கூடாது. நினைவில் கொள்ளுங்கள், எல்லா எக்ஸ் கதிர்களும் மிகக் குறைவான, ஆனால் அளவிடத்தக்க ஓர் ஆரோக்கிய அபாயத்தைக் கொண்டுள்ளபடியால், நல்ல மருத்துவக் காரணங்கள் இன்றி அவைகளை எடுக்கக் கூடாது. மறுபட்சத்தில், உங்கள் மருத்துவர் சிஎடி அலகிட சிபாரிசு செய்தால், இந்த வியப்பூட்டும் தொழில் நுட்பம் உங்களுக்குப் பணியாற்ற இருக்கிறது என மகிழ்ச்சியடையுங்கள். (g90 7/22)
[பக்கம் 22-ன் படம்]
சிஎடி அலகிடும் கருவியினுள் பிரவேசித்தல்