இன்றைய இளைஞர்—ஓர் அனைத்துலக வர்ணனை
போதை வஸ்துக்களில் வெறிகொண்ட கலகக்கார, அறிவில்லாத, தன்னலமே கருதுகின்ற, சோம்பேறிகள்; உடை, டிவி மற்றும் பாலுறவைத் தவிர எதையும் பற்றி சிந்தியாதவர்கள் என்பதே பருவ வயதினரின் தோற்றம் பற்றிய பிரபலமான கருத்தாகும். என்றபோதிலும், பெரும்பாலானவர்களுக்கு இளைஞரைப் பற்றிய இந்த எதிர்மறையான கருத்து நிஜத்திலிருந்து வெகு தொலைவிலிருப்பதாக தோன்றுகிறது.
‘சுற்றாய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கானவர்கள் நல்லவிதமாக தங்களை சீராக அமைத்துக் கொண்டவர்களாகத் தோன்றினார்கள்’ என்று சைக்காலஜி டுடே-யில் அறிவிக்கப்பட்டிருந்த ஆய்வு கண்டுபிடித்தது. ‘அவர்கள் பொதுவாக மகிழ்ச்சியுள்ளவர்களாக, சுய-கட்டுப்பாடுள்ளவர்களாக, மற்றவர்களிடம் அக்கறையுள்ளவர்களாக, தங்கள் செயல்களின் விளைவுகளைக் குறித்து கவலையுள்ளவர்களாக இருந்தார்கள்.’ தங்கள் பெற்றோரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டவர்களாக இருப்பதற்கு மாறாக, பெரும்பாலான இளைஞர் “தங்கள் குடும்பங்களிடமாக மிகவும் உடன்பாடான மனநிலைகளை கொண்டிருப்பது” காணப்பட்டது.
மற்ற சுற்றாய்வுகள், இன்றைய இளைஞரின் அநேகமான நம்பிக்கைகளும், விருப்பங்களும், பயங்களும் அதேவிதமாகவே, நிதானமான நல்லறிவுள்ள சிந்தனையைப் பிரதிபலிப்பதை வெளிப்படுத்துகின்றன. 1985-ல் யுனஸ்கோ குரியர் 41 தேசங்களிலுள்ள இளைஞரிடம் பின்வருமாறு கேட்டது: “இன்று எல்லா இளைஞருக்கும் மிகவும் கவலைக்குரிய பிரச்னை என்ன?” அவர்கள் “யுத்தம் மற்றும் சமாதானம் பற்றிய பிரச்னைகள்” (50 சதவீதம்), “வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை” (30 சதவீதம்), மற்றும் “எதிர்காலம்” (10 சதவீதம்) போன்ற இப்படிப்பட்ட முன்யோசனையுள்ள பதில்களைப் பெற்றுக்கொண்டனர்.
அவர்கள் அடையவிரும்பும் சொந்த குறிக்கோளிடம் கவனம் திரும்பினாலும்கூட, மறுபடியுமாக இளைஞர் ஆச்சரியமூட்டும் வகையில் நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையை மேற்கொள்கிறார்கள். “பதினான்கிலிருந்து இருபத்து ஒன்று வயதுக்குட்பட்ட [ஐ.மா.] ஆண்களையும் பெண்களையும் கொண்ட, தேசத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தொகுதியை” வாக்கெடுப்பு செய்த பின்பு, பதினேழு பத்திரிகை அதன் இளம் வாசகர்களிடம் இவ்விதமாகச் சொன்னது: “எல்லாவற்றிக்கும் மேலாக, நீங்கள் திருமணம் செய்து ஒரு குடும்பத்தைக் கொண்டிருக்க விரும்புகிறீர்கள். நீங்கள் விரும்பும் இரண்டாவது காரியம் ஒரு வேலை அல்லது ஒரு வாழ்க்கைத் தொழில். பணம் பண்ணுவது உங்கள் குறிக்கோள். நீங்கள் பணத்தைக் குறித்தும் மேலும் கல்வியைக் குறித்தும் கவலையாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள், உங்கள் தலைமுறை காரியங்களை மேம்படச் செய்வதற்கு உலகின் பிரச்னைகள் அவ்வளவு பெரியதாக இருப்பதாக நினைப்பதில்லை.”
அப்படியென்றால், மொத்தத்தில் உலகம் முழுவதிலுமுள்ள இளைஞர்கள் அவர்களுடைய மூத்தவர்கள் நாடும் அதே காரியங்களையே விரும்புகிறார்கள்: மகிழ்ச்சி, பாதுகாப்பு, நெருக்கமான குடும்பங்கள். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக, அதை மேம்படுத்த உண்மையில் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். என்றபோதிலும் இந்த வர்ணனைக்கு ஓர் இருண்ட பக்கமும் உண்டு.
சோகமான தன்னையே அழித்துக்கொள்ளும் இளைஞர்
மேல் கூறப்பட்ட ஆய்வு இந்தச் சோகமான கண்டுபிடிப்பைச் செய்தது: “பரிசோதிக்கப்பட்ட வளரிளமைப் பருவத்தினரில் நான்கில் ஒரு பகுதி அவர்கள் அடிக்கடி சோகமாகவும், தனிமையாகவும், உணர்ச்சி சம்பந்தமாக வெறுமையாக உணருவதாகவும், வாழ்க்கைப் பிரச்னைகளால் திணறிவிடுவதாகவும் தெரிவித்தார்கள். ஒரு சிலர் தற்கொலை சார்ந்த சிந்தனைகளும் மனச்சாய்வுகளும் இருப்பதையும்கூட ஒப்புக்கொண்டார்கள்.” ஒரு சில தேசங்களில், இளைஞர் வெறுமென சிந்திப்பதற்கும் அப்பால் செல்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில் மூத்த பருவ வயதினர் மத்தியில் தற்கொலை வீதம், கடந்த 20 ஆண்டுகளில் உண்மையில் இரண்டு மடங்காகிவிட்டிருக்கிறது.a
பெரும் கவலைக்கு மற்றொரு காரணம், மரிஹுவானா, ஹிராயீன் கொக்கேன் மற்றும் கொக்கேனின் ஒரு வடிவான க்ராக் போன்ற போதப் பொருட்களை உலகம் முழுவதிலும் பருவ வயதினர் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாகும். மரிஹுவானா புகைப்பதைக் குறித்து ஐக்கிய மாகாணங்களில் 14 வயது சிறுமி சொன்னாள்: “அது இனிமேலும் வெறுமென ஒரு “நவநாகரீகமான” காரியமும்கூட இல்லை. இது பெரும்பாலும் வெறுமென எல்லாருடைய வாழ்க்கையின் பாகமாக இருக்கிறது.”
வளர்ந்து வரும் தேசங்களும்கூட இந்தப் பிரச்னையிலிருந்து தப்பித்துக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட அநேக தேசங்களில் இளைஞர் கொக்கோ பசையையும் இது போன்ற பொருட்களையும் புகைக்கும் காட்சி சர்வ சாதாரணமாக உள்ளது. போதப் பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி அதைத் துர்ப்பிரயோகம் செய்யும் பிரச்னை, “முற்காலங்களில் உலகின் அநேகப் பகுதிகளை துடைத்தழித்த கொள்ளைநோயைப் போன்ற ஓர் அழிவுண்டாக்கும் அச்சுறுத்தலை தற்போதைய மற்றும் வருங்கால சந்ததிகள் முன்னால் வைக்கிறது” என்பதாக ஐ.நா. செயலர்–தலைவர் ஜேவியர் பெரிஸ் டி குல்லர் சொன்னார்.
இளைஞர் மத்தியில், மதுபானம் மற்றும் புகையிலை போன்ற சட்டம் அனுமதிக்கும் போதப் பொருட்களின் உபயோகமும்கூட நிபுணர்களுக்கும் பெற்றோருக்கும் கவலையை உண்டுபண்ணுகிறது. ஐ.நா. க்ரானிக்கல் அறிவிப்பதாவது: “கடந்த 30-லிருந்து 40 ஆண்டுகளாக, உலக சுகாதார அமைப்பின்படி, அதிகமான சதவீதமான பிள்ளைகளும், வளரிளமைப் பருவத்தினரும் மதுபானம் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்; குடிக்கும் அளவும், அடிக்கடி குடிப்பதும் அதிகரித்துவிட்டிருக்கிறது; குடிக்க துவங்கும் வயது குறைந்துவிட்டிருக்கிறது.”
இளைஞரில் சிறுபான்மையானோரே சோர்வுற்றவர்களாக அல்லது தங்களை அழித்துக் கொள்ளும் நடத்தையில் ஈடுபடுகிறார்கள் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. என்றபோதிலும், உலகம் முழுவதற்கும் கடுமையான பிரச்னையுடைவர்களின் எண்ணிக்கை அநேக லட்சங்களாக ஆகிவிடுகிறது. அடுத்து நாம் பார்க்கப் போகும் வண்ணமாக, இன்று இளைஞர், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கும் நெருக்கடிகளுக்கும் அழுத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். (g90 9/8)
[அடிக்குறிப்புகள்]
a அழுத்தத்தைச் சமாளிக்க உங்கள் பருவ வயதினருக்கு உதவுதல் புத்தகத்தின்படி, “தற்கொலை செய்து கொள்வதற்கு வயதில் மூத்த இளைஞர் கையாளும் முறை காரில் சென்று மோதுவதாகும்” என்று சிலர் நம்புகிறார்கள். மோட்டார் வண்டி விபத்துகள் பொதுவாக தற்கொலைகளாக கருதப்படாததன் காரணமாக பருவ வயதினர் தற்கொலை பற்றிய புள்ளிவிவரம் குறைவுமதிப்பீடாக இருக்கக்கூடும்.