பைபிளின் கருத்து
மானிட ஜீவன் எப்பொழுது ஆரம்பமாகிறது?
செப்டம்பர் 21, 1989, டெனசி மாநிலத்தின் ஐந்தாவது சட்ட மாகாணத்திற்கு (அ.ஐ.மா.) ஓர் அசாதாரணமான நாள். அந்த நாளில் வட்டார நீதிமன்றம் ஏழு உறைந்த மனித கருவின் பேரில் எழுந்த உரிமைப் பிரச்னையின் பேரில் ஓர் எண்ணத்தை ஒப்புவித்தது. விவாகரத்து செய்துகொள்ளும் பெற்றோரில் யார் அவற்றிற்கு உரிமை கோரலாம் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டிய நிலையில் இருந்தது. என்றபோதிலும், முதலில் தீர்க்கப்பட வேண்டிய இன்னொரு பிரச்னை இருந்தது: அந்தக் கருவுயிர்கள் உடைமையாகக் கொள்ளப்பட வேண்டுமா, அல்லது மனிதராகக் கருதப்படவேண்டுமா?
உலகில் பிரபல மரபுக்கூற்றியல் நிபுணரும் பாரீஸ் நகரைச் சேர்ந்த பேராசிரியருமான ஜெரோம் லெஜுன், ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தன்மைவாய்ந்த ஆரம்பத்தைக் கொண்டிருக்கிறான், இது கருவுறும்போது நிகழுகிறது என்றும் “அவன் கருவுற்ற உடனேயே மனிதன் மனிதனாகவே இருக்கிறான்” என்றும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மறுவார்த்தைகளில், மூவணு நிலையில் (ஜைகோட் என்ற இருபாலணு இணைவுப் பொருள்) ஆரம்பமாகும் அந்தக் கருவுயிர்கள், அவர் நீதிமன்றத்தில் சொன்னபடி, “சிறிய மனித ஜீவன்கள்” ஆவர்!—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
ஜைகோட் ஓர் உரிமை வயதுவந்த நபரைப் போலவே நடத்தப்பட வேண்டுமா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, டாக்டர் லெஜுன் கொடுத்த பதில்: “அதை நான் சொல்வதற்கில்லை, ஏனென்றால் அதை அறிந்துகொள்ளும் நிலையில் நான் இல்லை. அவன் ஒரு மனிதன் என்று நான் உங்களிடம் சொல்லுகிறேன், இந்த மனிதன் மற்றவர்களைப்போலவே அதே உரிமை கொண்டவனாயிருக்கிறானா என்பதை ஒரு நீதிபதி சொல்வார். . . . ஆனால் ஒரு மரபுக்கூற்றியல் நிபுணராக இந்த மனிதன் ஒரு மனிதனா என்று என்னிடம் கேட்கிறீர்கள், அவன் ஓர் ஆள், மனிதனாக இருப்பதால் அவன் ஒரு மனித ஆள் என்று நான் சொல்லுவேன்.”
டாக்டர் லெஜுனின் சாட்சியத்துக்கு எதிர்வாதம் இல்லாதிருந்ததால், மூன்று நீதிமன்றங்களும் இந்த முனைப்பான முடிவுகளுக்கு வந்தனர்:
◻“கருவுற்ற சமயத்திலிருந்தே, ஒரு மனித கரு வித்தியாசப்படுத்தப்படுகிறது, தனித்தன்மை கொண்டது மற்றும் சிறப்பின் மிக உச்ச நிலையில் விசேஷ தன்மை கொண்டதாய் இருக்கிறது.”
◻“மனித கருவுயிர்கள் உடைமையல்ல.”
◻“மனிதரின் உயிர்வாழ்வு கருவுறுகையில் ஆரம்பமாகிறது.”
மனிதரின் உயிர்வாழ்வு குறித்து பைபிள் சொல்வதற்கு இது ஒத்திருக்கிறதா?
ஜீவன் கருவுறுகையில் ஆரம்பமாகிறது
யெகோவா தேவன் தாமே “ஜீவ ஊற்று,” “அவராலே நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.” (சங்கீதம் 36:9; அப்போஸ்தலர் 17:28) ஜீவன் எப்பொழுது ஆரம்பமாகிறது என்று சிருஷ்டிகர் சொல்லுகிறார்? ஒரு பிள்ளையின் ஜீவனை அவர் விலையேறப்பெற்றதாய்க் கருதுகிறார், அதன் வளர்ச்சியில் கருவுற்ற பின்னர் மிக ஆரம்ப நிலைகளையும் அவர் அப்படியாகக் கருதுகிறார். மேற்குறிப்பிடப்பட்ட அந்த நீதிமன்ற தீர்ப்புக்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே தன்னுடைய தீர்க்கதரிசியாகிய தாவீதைத் தம் பரிசுத்த ஆவியால் ஏவி எழுதும்படிச் செய்தார்:
“என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே [செய்யுள்நடையில், கருப்பையிலிருக்கும் இருளை குறிப்பிடுகிறது] விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது (பின்னப்பட்டிருக்கும் போது, NW) [ஒரு துணியின் வண்ண இழைகள் போன்று உடல் முழுவதும் பின்னலாய் அமைந்திருக்கும் சிரைகளையும் தமனிகளையும் குறிக்கிறது], என் எலும்புகள் உமக்கு [கருப்பையில்] மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவை உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங்கீதம் 139:13-16.
கருவுற்ற சமயத்திலிருந்து, வளரும் ஜீவன் ஒரு புத்தகத்தில், மிகப் பெரிய புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிவதுபோல் ஒரு திட்டவட்டமான வழிமுறையைப் பின்பற்றுகிறது. “ஜைகோட்டுக்குள் இருக்கும் தகவல் அளவை சொல்லில் குறிப்பிட்டு ஒரு கம்ப்யூட்டரில் செலுத்தப்பட்டு, அடுத்து என்ன சம்பவிக்கும் என்பதை எப்படிக் கணக்கிட வேண்டும் என்று கம்ப்யூட்டரிடம் சொன்னால், இந்தத் தகவல் அளவு எவராலும் அளவிடப்படமுடியாதளவுக்குப் பெரியது.”
பிறவா குழந்தையின் ஜீவன் மிகுந்த மதிப்புடையது
எனவே, கருப்பையில் வளரும் இன்னும் பிறவாத குழந்தை வெறுமென ஓர் இழைமத்தின் மூட்டையைக் காட்டிலும் மேன்மையானது. அதற்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது, இந்தக் காரணத்தினிமித்தமே, பிறவாத குழந்தைக்கு சேதம் ஏற்படுத்தும் ஒருவன் கணக்கு கொடுக்க வேண்டும் என்று கடவுள் குறிப்பிட்டார். யாத்திராகமம் 21:22, 23-ல் [NW] அவருடைய சட்டம் இப்படியாக எச்சரிக்கிறது: “ஒருவேளை மனிதர் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொள்ளும்போது அவர்கள் கர்ப்பவதியான ஒரு பெண்ணை உண்மையிலேயே காயப்படுத்தி, அவளுடைய பிள்ளைகள் பிறக்க, ஆனால் எந்த வகையான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விபத்தும் ஏற்படாதிருந்தால், அந்தப் பெண்ணின் கணவர் அவன் மீது சுமத்துகிற இழப்பீட்டைத் தவறாமல் செலுத்த வேண்டும்; அதை அவன் நியாயாதிபதிகள் மூலம் செலுத்த வேண்டும். ஆனால் உயிரை ஆபத்துக்குள்ளாக்கி விபத்து ஏற்படுமானால், அப்பொழுது நீ ஆத்துமாவுக்கு ஆத்துமா கொடுக்க வேண்டும்.”
மேல் குறிப்பிட்ட வசனங்களை, பெண்ணுக்கு சம்பவிக்கும் காரியத்தையே சட்டத்தின் பிரதான கவனக்குறியாக்கிடும் வகையில் சில பைபிள்கள் மொழிபெயர்த்துள்ளன. என்றபோதிலும், மூல எபிரெய வசனம் தாய்க்கு அல்லது பிள்ளைக்கு ஏற்படும் கொடிய விபத்தினிடமாகக் கவனத்தைத் திருப்புகிறது.a எனவே, தேவைப்படாத ஒரு பிள்ளையின் பிறப்பை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே கருச்சிதைவு செய்துகொள்வது மனித உயிரை வேண்டுமென்றே எடுப்பதாயிருக்கிறது.
மனித கருவுயிர் மனித உயிர் அல்ல, ஏனென்றால் அது கருப்பைக்கு வெளியே தன்னைப் பராமரித்துக்கொள்ள முடியாது என்று சிலர் வாதாடுகின்றனர். இது வீண் வாதம். புதிதாய்ப் பிறந்த குழந்தை—பிறந்து ஒருசில நிமிடங்கள் ஆகியிருக்கும் குழந்தை—ஒரு மனித ஜீவன் என்பதை எவருமே சந்தேகிப்பதில்லை. என்றாலும், அந்தக் குழந்தை வயல்வெளியில் ஆடையின்றி கிடத்தப்பட்டால், அந்தக் குழந்தை எவ்வளவு நேரம் பிழைத்திருக்கும்? அது முற்றிலும் உதவியற்ற நிலையில் இருக்கிறது, கருவுயிர் அல்லது ஒரு முதிர்கரு தன்னைத்தானே காத்துக்கொள்ளும் திறமையற்றிருக்கிறது. புதிதாய்ப் பிறந்த குழந்தைக்கு உறைவிடம், உஷ்ணம், மற்றும் உணவு—தாய் போன்ற ஒரு பெரியவர் மட்டுமே அளிக்கக்கூடிய பராமரிப்பு, உதவி மற்றும் துணை தேவைப்படுகிறது.
எனவே, மனித ஜீவன் கருவுறுகையில் ஆரம்பமாகிறது என்ற பைபிள் கருத்தை மேற்கூறிய சட்டப்படியான தீர்மானம் ஒப்புக்கொள்கிறது. பிறவாத குழந்தையின் உயிரை வேண்டாத ஓர் அந்நிய பொருள் என வேண்டுமென்றே அப்புறப்படுத்திவிடுவதற்கு அது ஒரு சாதாரண காரியமல்ல. மனித ஜீவன் பரிசுத்தமானது, அது கருப்பையிலிருந்து வெளிவந்த பின்னர் மட்டுமல்ல, அது கருப்பையில் இருக்கும் போத அப்படி இருக்கிறது. (g90 10/8)
[அடிக்குறிப்புகள்]
a “உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விபத்து” (எபிரெயு அசான்) என்ற பெயர்ச்சொல் “கர்ப்பவதியான ஒரு பெண்”ணுக்கு குறிப்பான எந்தத் தொடர்பும் கொண்டில்லை; எனவே சாவுக்கேதுவான விபத்து பெண்ணை மட்டுமல்ல, ஆனால் சரியாகவே கருப்பையில் இருக்கும் “அவளுடைய பிள்ளைகளையும்” உட்படுத்தும்.