இனத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்ன?
ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜரோப்பியர்கள் பூமியை ஆய்வு செய்வதற்குக் கடற்பயணத்தை ஆரம்பித்தபோது, என்ன வகையான மக்களை அவர்கள் சந்திப்பர் என்று வியந்தனர். கடலுக்குள் நடந்து சென்று ஒரு கப்பலை ஒரு கையில் நொறுக்கும் திறமை வாய்ந்த இராட்சதர்களைப் பற்றி புராணக் கதைகள் அப்போது இருந்தன. அனற்கொழுந்துகளைச் சுவாசிக்கும் நாய்-தலையுடைய மனிதர்களைப் பற்றி கட்டுக்கதைகள் இருந்தன. சூரியனிலிருந்து அவர்களுக்கு நிழல் கொடுத்த பெரிய, முன்னால் துருத்திக்கொண்டிருக்கும் உதடுகளைக் கொண்டிருந்த பச்சை இறைச்சியை உண்ட “இணங்கிப்பழகாத” கற்பனை ஆட்களை அவர்கள் சந்திப்பார்களா?
ஆப்பிள் பழங்களின் மணத்தை நுகருவதன் மூலம் வாழ்ந்து கொண்டிருந்த, வாய்கள் இல்லாத மனிதரை அவர்கள் காண்பார்களா? சிறகுகளைப் போல் சேவிக்கும் பெரிய காதுகளை உடையவர்களைப் பற்றியென்ன? அல்லது தங்களுடைய ஒரு பெரிய காலின் நிழலின் கீழ்ப் படுத்துத் தூங்குபவர்கள் என்று சொல்லப்பட்டவர்களைப் பற்றி என்ன?
மனிதர்கள் கடலில் பயணம் செய்தனர். மலைகளின் மீது ஏறினர், குதிரை மீது சவாரி செய்து புதர்க்காடுகளுக்கு உள்ளே சென்றனர். பாலைவனங்கள் வழியே சிரமப்பட்டு நடந்தனர். ஆனால், அப்படிப்பட்ட விநோதமான அல்லது விசித்திரமான படைப்புகளை அவர்கள் எந்த இடத்திலும் காணவில்லை. மாறாக, ஆய்வுப் பயணம் செய்தவர்கள் தங்களைப் போன்ற ஆட்களையே கண்டுபிடித்தனர். கிறிஸ்டஃபர் கொலம்பஸ் இவ்வாறு எழுதினார்: “அனேகர் எதிர்பார்த்தது போல் இந்தத் தீவுகளில் (மேற்கிந்தியர்) கோர உருவங்களை உடைய மனிதர்களை நான் இதுவரை கண்டதில்லை. அதற்கு மாறாக, இப்படிப்பட்ட மக்களிடையே நல்ல தோற்றங்கள் உயர்வாக மதிக்கப்படுகின்றன. மனித மாம்சத்தை உண்ணும் மக்களைத் தவிர நான் கோர உருவங்களை உடையவர்களைக் காணவில்லை. அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் பொருத்தமில்லாத உருவ அமைப்புகளைக் கொண்டில்லை.”
மனிதவர்க்கத்தை இனவாரியாகப் பிரித்தல்
பூமியை ஆய்வு செய்து பார்த்தபோது, பொய்க் கதைகள், புராணக் கதைகள் ஆகியவற்றிலிருந்து பலவகையான மானிடர்கள் விடுவிக்கப்பட்டனர். மக்களை உற்று கவனித்து அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். காலப்போக்கில் விஞ்ஞானிகள் அவர்களை இனவாரியாகப் பிரிக்க முயற்சி செய்தனர்.
1735-ல் ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த தாவரவியல் வல்லுநர் காரலஸ் லினேயஸ் சிஸ்டமா நேச்சுரே (Systema Naturae) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் மனிதன் ஹோமோ சப்பியன்ஸ் என்று பெயரிடப்பட்டான். அதன் அர்த்தம், “மனிதன் ஞானவான்.” இந்தப் பதம் எந்த உயிரின வகைக்கும் கொடுக்கப்பட்டிராத மூடத்தனமான பொருந்தாத விளக்கம் என்று ஒரு எழுத்தாளர் கூறினார். லினேயஸ் மனிதவர்க்கத்தை ஐந்து தொகுதிகளாக பிரித்தார். அவற்றைப் பின்வரும் வார்த்தைகளால் விவரித்தார்:
ஆப்பிரிக்கர்: கறுப்பு நிறத்தவர்கள் எளிதில் செயல்படாதவர்கள், சுறுசுறுப்பு குறைந்தவர்கள். மயிர் கறுப்பு, சுருட்டை; மெல்லிய தோல்; தட்டை மூக்கு; வீங்கிய உதடுகள், தந்திரமானவர்கள், சோம்பேரிகள், கவனக் குறைவானவர்கள்; எண்ணெயால் தன்னை அபிஷேகம் செய்து கொள்கிறான்; மனம் போல அடிக்கடி மாறும் தன்மையுடையவன்.
அமெரிக்கர்: செம்பு நிறத்தவர்கள், எளிதில் சினம் கொள்பவர்கள், நிமிர்ந்து இருப்பவர்கள்; முடி கறுப்பு, கோர, அடர்த்தி; மூக்குத் துளை அகலம்; கடுமையான மூகம்; சிறிய தாடி; பிடிவாதமுடையவர்கள், மெல்லிய சிவப்பு கோடுகளால் தன்னைச் சாயமிட்டுக் கொள்கிறான். சமுதாயப் பழக்கவழக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறான்.
ஆசியா கண்டத்தவர்: “எழுச்சி குன்றிய இயல்பு, விடாக் கண்டிப்பு; முடி கறுப்பு; கண்கள் கருமை; கடூரமானவன்; மேட்டிமையானவன்; பிறர் பொருள் விரும்புகிறவன், தளர்ந்த ஆடைகளால் மூடப்பட்டிருப்பான்; அபிப்பிராயங்களால் அட்கொள்ளப்டுகிறான்.
ஐரோப்பியர்: அழகானவர்கள், சிவப்பு நிறத்தவர்கள், வலிமை வாய்ந்தவர்கள்; அலையலையாய் விழும் மஞ்சள், பழுப்பு முடி; கண்கள் நீலம்; தயவானவர்கள்; நெருக்கமான ஆடை உடுத்தியிருப்பர்; சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுவர்
காட்டு மனிதன்: நான்கு கால்களில் நடப்பவன், ஊமை, முடி அடர்ந்து காணப்படுபவன்.
பிறப்பு மூலமாகப் பெறப்பட்ட தோற்றக் கூறுகளின்படி, லினேயஸ் மனிதவர்க்கத்தைத் தொகுதிகளாகப் பிரித்தார் என்பதைக் கவனியுங்கள். (தோலின் நிறம், முடியின் நயம் போன்றவை) பட்சபாதமான ஆள்தன்மை மதிப்பீடுகளையும் அவர் செய்தார். ஐரோப்பியர் “தயவானவர்கள், முனைப்பானவர்கள், கற்பனைத் திறமுள்ளவர்கள்” என்றும், ஆசியாக் கண்டத்தவர் கடூரமானவர்கள், மேட்டிமையானவர்கள், பிறர் பொருளை விரும்புபவர்கள்” என்றும், ஆப்பிரிக்கர் “தந்திரமானவர்கள், சோம்பேறிகள், கவனக் குறைவுள்ளவர்கள்” என்றும் லிவனேயஸ் உறுதியாகக் கூறினார்.
ஆனால் லினேயஸ் சொன்னது தவறு. நவீன கால இன பிரிவுகளில் இப்படிப்பட்ட ஆள்தன்மை பண்புகளுக்கு இடமில்லை, ஏனென்றால் ஒவ்வொரு மனித தொகுதிக்குள்ளும் ஒரே விதமான மனப்பாங்குகளும், ஒரே விதமான அறிவுத் திறனும் இருக்கின்றன என்று விஞ்ஞான ஆராய்ச்சி காண்பித்திருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த ஜனங்களிலும் ஒரே விதமான உடன்பாடான, எதிர்மறையான குணங்களை நாம் காண்கிறோம்.
சரீரப் பிரகாரமான வித்தியாசங்களின் அடிப்படையில் நவீன கால தொகுப்பு முறை மானிடர்களை மூன்று தொகுதிகளாக பிரிக்கின்றன: (1) இந்தோ-ஐரோப்பியர், வெள்ளை நிறத்தவர், கோர அல்லது அலையலையாய் விழும் முடியை உடையவர்; (2) மங்கோலிய இனத்தவர், மஞ்சள் நிறத்தவர், கண்களைச் சுற்றி மங்கோலிய மடிப்புகள்; (3) நீகிரோ இனத்தைச் சேர்ந்தவர், ஆனால் இப்படிப்பட்ட தொகுதிகளுக்குள் ஒன்றில் ஒவ்வொருவரும் சரியாக பொருந்துவதில்லை.
உதாரணமாக, தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சான், கொய்கொய் என்றழைக்கப்படும் ஜனத்தொகுதியினருக்குச் செம்பு நிறத்தோலும், கம்பளி போன்ற முடியும், மங்கோலிய முகத் தோற்றமும் இருக்கிறது. இந்தியா நாட்டைச் சேர்ந்த சிலருக்குக் கருமையான தோலும், இந்தோ-ஐரோப்பிய முகத்தோற்றமும் இருக்கிறது. தொடக்க காலந்தொட்டு உள்ள ஆஸ்திரேலிய ஜனங்களுக்குக் கருமையான தோலும், கம்பளி போன்ற பொன்னிறமான முடியும் இருக்கிறது. இவர்களைத் தெளிவாக பிரிக்கும் கோடு இல்லை.
இப்படிப்பட்ட பிரச்னைகள், அனேக மனித இன அறிஞர்கள் தாங்கள் மனிதவர்க்கத்தைப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சிகளைக் கைவிட்டு விடுமாறு செய்திருக்கிறது. “இனம்” என்ற பதம் விஞ்ஞான அர்த்தத்தையோ அல்லது மதிப்பையோ உடையதாக இல்லை என்று அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் கல்வி–விஞ்ஞான–பண்பாட்டுக் கழகத்தின் அறிக்கைகள்
ஐக்கிய நாடுகளின் கல்வி–விஞ்ஞான–பண்பாட்டுக் கழகத்தால் (UNESCO) ஒன்றுகூட்டிச் சேர்க்கப்பட்ட வல்லுநர்களின் தொகுதி இனத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான விஞ்ஞான அறிக்கைகளைச் செய்தது. 1950, 1951, 1964, 1967-ல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டத்தில் மனித இன நூலர்கள், விலங்கு நூலர்கள், மருத்துவர்கள், உறுப்பியல் ஆராய்சியாளர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு சர்வதேச குழு ஒன்றுசேர்ந்து இனத்தின் பேரில் நான்கு கூற்றுகளை வெளியிட்டது. இறுதியான கூற்று பின்வரும் மூன்று குறிப்புகளை அழுத்திக் காட்டியது:
எ “இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லா மனிதரும் ஒரே உயிரின வகையைச் சேர்ந்தவர்கள், ஒரே இன மூலத்திலிருந்து தோன்றியவர்கள்.” இக் குறிப்பு மிக உயர்வான ஒரு அதிகாரத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் (கடவுள்) ஒரே மனிதனிருந்து (ஆதாம்) தோன்றப்பண்ணி பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்தார்.”—அப்போஸ்தலர் 17:26, NW.
ஐக்கிய நாடுகளின் கல்வி–விஞ்ஞான–பண்பாட்டுக் கழகத்தின் கூற்று தொடருகிறது:
பி “மானிட உயிரின வகைகளை ‘இனங்களாக’ பிரிப்பது, ஒரு பகுதியைக் குறித்தமட்டில் வழக்கமான தொடர்புள்ளதாயும் மற்றோரு பகுதியைக் குறித்தமட்டில் திட்டவட்டமான முறைமை இல்லாததாயும் இருக்கிறது, படிநிலை அமைப்பைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதில்லை. . . .
சி “தற்போதைய உயிர் நூலைச் சார்ந்த அறிவு, பிறப்பு மூலமாகப் பெற்ற ஆற்றலில் இருக்கும் வித்தியாசங்களுக்கு அறிவு வளர்ச்சி சம்பந்தமான சாதனைகளைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டும்படி நம்மை அனுமதிக்காது. வித்தியாசமான ஜனங்களின் சாதனைகளில் இருக்கும் வித்தியாசங்கள், அவர்களுடைய அறிவு வளர்ச்சி சரித்திரத்தோடு மட்டுமே முழுவதுமாக தொடர்பு கொண்டுள்ளன. நாகரிகத்தின் எந்த மட்டத்தையும் அடைவதற்கு இன்று உலகிலுள்ள ஜனங்கள் சமமான உயிர்நூலைச் சார்ந்த ஆற்றலைப் பெற்றிருக்கின்றனர்.”
இன வேறுபாட்டுணர்ச்சி என்னும் கொள்ளை நோய்
ஆகையால் எந்த ஒரு இனமும் மற்றொரு இனத்தைக் காட்டிலும் உயர்வாக இருக்கிறது அல்லது மற்றொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்த உரிமை பெற்றிருக்கிறது என்பதை நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் மக்கள் எப்போதுமே உண்மைகளுக்கு இசைவாக நடந்து கொண்டதில்லை. உதாரணமாக, ஆப்பிரிக்க அடிமை வியாபாரத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஐரோப்பிய தேசங்கள் குடியேற்ற நாட்டைச் சார்ந்த பேரரசுகளைக் கட்ட ஆரம்பித்த போது, பழங்குடி மக்களைத் தன்னலத்துக்காக சுரண்டிப் பிழைப்பது பொருளாதார விதத்தில் லாபமாக இருந்தது. ஆனால் இங்கே தான் ஒரு முரணுரை இருந்தது. ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டனர், அன்பானவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர், சங்கிலியால் கட்டப்பட்டனர், சாட்டையால் அடிக்கப்பட்டனர், சூட்டுக்கோலால் சூடிடப்பட்டனர், மிருகங்களைப் போல் விற்கப்பட்டனர், அவர்கள் மரிக்கும் நாள் வரைக்கும் சம்பளம் இன்றி வேலை செய்யும்படி வற்புறுத்தப்பட்டனர். தங்களைப் போலவே பிறரை நேசிக்க வேண்டிய கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்ளும் நாடுகள் இதை எவ்வாறு நீதிக்குக் கட்டுப்பட்ட நடத்தை என்று நிரூபிக்க முடியும்?—லூக்கா 10:27.
அவர்கள் தேர்ந்தெடுத்த தீர்வு தங்களுக்கு இரையாகுபவர்களின் மனிதத் தன்மையைப் போக்குவதாக இருந்தது. 1840-களில் ஒரு மனித இன நூலரின் காரணம் இதுவாக இருந்தது:
“நீகிரோவும் ஆஸ்திரேலியனும் நம்முடைய உடன் படைப்புகளாகவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இல்லாமல் ஒரு தாழ்ந்த இனத்தவராயிருந்தால், அவர்களிடம் நம்முடைய கடமைகள் கிறிஸ்தவ உலகம் ஸ்தபிக்கப்பட்டிருக்கும் ஒழுக்கமுறையின் எந்த உடன்பாடான கட்டளைகளின் பேரில் ஆழ்ந்து சிந்திக்கப்படாவிட்டால், . . . இவ்வினத்தவரோடு நம் உறவுகள் நமக்கும் குரங்குகளின் இனத்திற்கும் இருப்பதாக கற்பனை செய்யப்படும் உறவுகளைவிட அதிக வித்தியசமாக இராது.”
வெள்ளை இனத்தவரல்லாத மற்ற ஜனங்கள் மனித இனத்துக்குக் கீழ்நிலைப்பட்டவர்கள் என்ற கருத்தை ஆதரிப்பதற்கு நாடுபவர்கள் டார்வினின் பரிணாமக் கொள்கையைப் பயன்படுத்திக் கொண்டனர். வெள்ளை இனத்தவரைவிட குடியேற்ற நாட்டினர் பரிணாம ஏணியில் கீழ்மட்டத்தில் இருந்தனர் என்று அவர்கள் வாதாடினர். வெள்ளை இனத்தவரல்லாதவர் ஒரு வித்தியாசமான பரிணாம வழிமுறையின் விளைவாக இருந்தனர் என்றும், முழுவதுமாக மாளிடர்களாக இருக்கவில்லை என்றும் மற்றவர்கள் உரிமை பாராட்டினர். மற்றவர்கள் பைபிளை மேற்கோளாகக் காட்டினர், அவர்களுடைய இனம் சார்ந்த எண்ணங்களை ஆதரிப்பதற்கு வேத வசனங்களைத் தவறாய் மேற்கோள் காட்டினர்.
அநேக ஜனங்கள் இந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உலகின் அனேக தேசங்களில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் வேறுபாடு காட்டுவது, தப்பெண்ணம், இன உணர்ச்சி ஆகியவை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன, அவைகள் மனித இனப் பிரிவுகள் மேல் சிந்தியிருக்கின்றன. இப்பிரிவுகள் ஜனங்களின் கற்பனையில் தான் இனப்பிரிவுகளாக இருக்கின்றன. விலங்கு நூல் பேராசிரியர் இவ்வாறு சொன்னார்: “யார் வேண்டுமென்றாலும் தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி இனங்களை உருவாக்குவதற்கு உரிமை அளிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுவதால், அரசியல்வாதிகள், விசேஷ வழக்காடுவோர், துணிச்சல் வீரர்கள் ஆகியோர் இனங்களைப் பிரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தங்களுடைய எண்ணங்கள் மற்றும் தப்பெண்ணங்கள் பேரில் ‘விஞ்ஞான’ மரியாதையை வழங்குவதற்குப் போலியான இனம் சார்ந்த அட்டைகளை உருவாக்கியிருக்கின்றனர்.”
நாசி ஜெர்மனியின் இனம் சார்ந்த கொள்கைகள் முக்கியமான உதாரணமாக நிலைத்திருக்கிறது. அடால்ஃப் ஹிட்லர் ஆரியர்களின் இனத்தை மிக உயர்வாகப் புகழ்ந்த போதிலும், உயிர் நூல் சம்பந்தமாக அப்படிப்பட்ட காரியம் எதுவுமில்லை. அப்படி ஒன்றும் இருந்ததுமில்லை. பொன்னிறமான முடியையும் நீல நிறக் கண்களையுமுடைய யூதர்கள் ஸ்வீடனிலும், கருமை நிற யூதர்கள் எத்தியோப்பியாவிலும், மங்கோலிய யூதர்கள் சீனாவிலும் இருக்கின்றனர். அப்படியிருந்தாலும், யூதர்களும் மற்றவர்களும் ஒரு இனம் சார்ந்த கொள்கைக்கு இரையாகி இருந்தனர். அக் கொள்கை கான்சன்ட்ரேஷன் முகாம்கள், வாயு அறைகள், அறுபது லட்சம் யூதர்களும், போலந்து, சோவியத் யூனியன் ஆகிய இடங்களிலிருந்து வந்த ஸ்லவிய இனத்தைச் சேர்ந்த மக்களும் கொல செய்யப்படுவதற்கு வழிநடத்தியது. (g90 12/8)
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
ஒவ்வொரு மனித தொகுதிக்குள்ளும் ஒரே வகையான அறிவுத் திறன் இருக்கின்றன என்று விஞ்ஞான ஆராய்ச்சி காண்பித்திருக்கிறது
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
‘அரசியல்வாதிகள், விசேஷ வழக்காடுவோர், துணிச்சல் வீரர்கள் தங்களுடைய எண்ணங்கள் மற்றும் தப்பெண்ணங்கள் பேரில் “விஞ்ஞான” மரியாதையை வழங்குவதற்குப் போலியான இனம் சார்ந்த அட்டைகளை உருவாக்கியிருக்கின்றனர்.’
[பக்கம் 7-ன் படங்கள்]
இந்த அறிவிப்புப் பிரதிகள் காண்பிக்கிறபடி, ஆப்பிரிக்கர் விலங்குகள் போன்று வியாபாரச் சந்தையில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்பட்டனர்