குறைகூறப்படுவதை ஏற்பது உங்களுக்கு வெறுப்பாயுள்ளதா?
உங்களைக் குறைகூறின கடைசி சமயம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது பல்வேறு காரணங்களினிமித்தம் அவ்வப்போது எல்லாருக்கும் ஏற்படுகிறது.
ஒருவேளை ஒருவர் தன்னை உயர்த்தும்படி உங்கள்பேரில் குறைகூறியிருக்கலாம். எனினும், குறைகூறுவது பெரும்பாலும் உங்கள் அக்கறைகளை இருதயத்தில் கொண்டுள்ள ஒருவரிடமிருந்து வருகிறது: உங்கள் கணவர் உங்கள் சமையலில் ஒரு குறைபாட்டைக் கண்டார்; உங்கள் கழுத்துக்கச்சை உங்கள் முழு உடையுடன் நிறம் ஒத்திசையவில்லையென உங்கள் மனைவி சொன்னாள்; உங்கள் உடல்நலத்தைக் கவனிக்காததற்காக ஒரு நண்பர் குறைகூறினார். அல்லது அந்தக் குறைகூறினது ஒருவேளை கண்டிப்பாக இருந்திருக்கலாம், நீங்கள் சொன்ன அல்லது செய்த ஏதோவொன்றைத் திருத்துவதற்கு ஓர் எஜமானரிடமிருந்து அல்லது (நீங்கள் வயதுவராதவராயிருந்தால்) பெற்றோரிடமிருந்து வருவது போன்றவை.
காரியம் என்னவாயினும், அந்தக் குறைகூறுதலை நீங்கள் வரவேற்றீர்களா? அல்லது நீங்கள் எரிச்சலடைந்தீர்களா, ஒருவேளை ‘உன் சொந்தக் காரியத்தைக் கவனி’ என்றுங்கூட அவருக்குச் சொன்னீர்களா?
குறைகூறப்படுவதை ஏற்பது பலருக்கு வேதனையான அனுபவமாயுள்ளது. அவர்கள் கோபமும், மனக்கசப்புமடைகின்றனர். மற்றவர்கள் தன்னம்பிக்கையை இழுக்கின்றனர், ‘என்னால் எதுவும் சரியாய்ச் செய்ய முடியாது,’ என்று முடிவுசெய்து மனச்சோர்வுறுகின்றனர்.
குறைகூறப்படுவதை வெறுப்போருக்குள் நீங்களும் இருக்கிறீர்களா? நீங்கள் வழக்கத்துக்கு மாறாக இல்லை; பலர் அவ்வாறு உணருகின்றனர். குறைந்த வேதனையுடன், மட்டுக்குமீறி பிரதிபலிக்காமல் குற்றங்குறை கூறப்படுவதை ஏற்பதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள முடியுமா? குறைகூறுவதை மனதுக்குப் பிடித்தமானதாக்குவதற்கான ஆறு வழிகளை இந்தக் கட்டுரை ஆராயும். இவை குறைகூறுவதன் வேதனையின் கடுமையை நீக்க, அல்லது குறைக்கவாவது உங்களுக்கு உதவிசெய்யலாம்.
1. குறைகூறுவதை வரவேற்றுங்கள்
சில ஆட்கள் குறைகூறுவதை விரும்புகின்றனர், அதை நாடியும் தேடுகின்றனர் என்பது உங்களுக்கு விசித்திரமாய்த் தோன்றுகிறதா? துண்டுத்துணுக்குகள் என்ற பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது: “கூரறிவுத்திறம் வாய்ந்தத் தலைவர்கள் . . . குறிப்பிட்ட சதவீத காலம் தாங்கள் தவறில் இருக்கப்போகின்றனரென அறிந்திருக்கின்றனர். இதனிமித்தம் அவர்கள் இந்த எதிர்ப்பு நோக்கு நிலைகளை விரும்புகின்றனர்—பிழைகள் செய்வதற்கு முன்னால் அவற்றைக் குறைக்கவும், சென்றகால பிழைகளைக் கூடியவரை உடனடியாகத் திருத்தவுமே.”
நாம் காணமுடியாத நம் தோற்றத்தின் அம்சங்களை—மடங்கிய கழுத்துப்பட்டை, கோணலான கழுத்துக்கச்சையை—மற்றவர்கள் காணக்கூடியதுபோல், நாம் காணமுடியாத நம் பண்பியல்பின் அம்சங்களையும் அவர்கள் காண முடியும். அவர்கள் கவனித்துக்கூறுபவற்றை பயமுறுத்தலாக அல்லாமல் உதவியாகக் கருதுங்கள். அவர்கள் குறைகூறுவதை ஒன்றைக் கற்பதற்கு நல்வாய்ப்பாக வரவேற்றுங்கள். அதைப் பலப்படுத்தும் அனுபவமாக்குங்கள்.
2. உங்கள் மிகமோசமான குறைகாண்பவரைக் கட்டுப்படுத்துங்கள்
உங்களை நீங்களே கடுமையாய்க் குறைகாண்பவராக இருக்கிறீர்களா? உங்கள் குறைபாடுகளை எண்ணி எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது யாராவது ஒரு குறையைக் குறித்து உங்களை எச்சரித்தால், நீங்கள் அதை, மனதில் வைத்துள்ள சம்பந்தப்படாத பலவீனங்களின் நீண்ட பட்டியலுடன் சேர்த்துக்கொள்கிறீர்களா?
டாக்டர் ஹெரல்ட் புளூம்ஃபீல்ட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “நாம் ஏற்கெனவே தற்குறைகாண்பதனால் வாதிக்கப்பட்டால், மற்றவர்கள் நம்மில் குறைகண்டு கூறுகையில் நாம் முக்கியமாய்க் கலக்கமடைவோம். ஒருவர் நம்மைப் புகழ்ந்து பேசி குறைகூறுவதற்கு ஒரு சிறிய காரியத்தை மாத்திரமே கொண்டிருந்தாலும், நாம் நன்றாய்ச் செய்த காரியங்களைப் பார்க்கிலும் மேலாகக் குறைபாட்டின்பேரிலேயே நாம் பொதுவாய் மனதை ஊன்றவைக்கிறோம்.”
உங்களை மதிப்பிடுகையில் நியாயமாய் இருங்கள். நியாயமானதென்னவென நீங்கள் எவ்வாறு தீர்மானிப்பீர்கள்? நெருங்கிய நண்பர் ஒருவர் அதைப்போன்ற குறைகூறுதலைப் பெறுகிறாரென கற்பனைசெய்துகொள்ளுங்கள். அவரிடமிருந்து என்ன பிரதிபலிப்பை நீங்கள் விரும்புவீர்கள்? தன்னிரக்கத்தையா? கோபமடைவதையா? நல்ல ஆலோசனையை அகந்தையுடன் தள்ளிவிடுவதையா? இல்லை, அவர் பெரும்பாலும் வருத்தமடையாமல் அந்தக் குறைகூறப்படுவதற்குச் செவிகொடுத்துக் கேட்டு, நேர்மையுடன் அதை மதிப்பிட்டு, தன் சொந்த முன்னேற்றத்துக்காக அதைப் பயன்படுத்துவாரென்று நீங்கள் நம்பக்கூடும்.
அப்படியானால், அதே முறையில் உங்களையும் நீங்கள் கையாளலாமல்லவா?
3. நுட்பவிவரங்களுக்காகக் கேளுங்கள்
“உங்கள் மனப்பான்மையை நான் விரும்புகிறதில்லை!” எவராவது உங்களுக்கு அவ்வாறு சொல்வதை விரும்புவீர்களா? இல்லை, அதைப்போன்ற குறிப்புரைகள் வருத்தம் உண்டாக்குகின்றன அல்லவா?
இங்கே உங்கள் மிகச் சிறந்த அணுகுதலானது மேலும் திட்டமான விவரங்களைக் கேட்பதாகும். உரையாடல்சார்ந்து பேசுவது என்ற தன் புத்தகத்தில், ஆலன் கார்னர் பின்வருமாறு விளக்குகிறார்: “குறைகூறுவது அடிக்கடி பொதுத்தன்மைகளில் கொடுக்கப்படுகிறது . . . நுட்பவிவரங்களைக் கேட்பது அந்த மற்ற ஆளின் ஆட்சேபனைகள் சரிநுட்பமாய் என்னவென கண்டறிய உங்களுக்கு உதவிசெய்யும். . . . ஒரு நிருபரைப்போல், நீங்கள் செய்வதெல்லாம், யார், என்ன, எப்பொழுது, எங்கே, ஏன், மற்றும் எவ்வாறு என்பவற்றைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் கேள்விகள் கேட்பதேயாகும்.”
உதாரணமாக, மேற்கூறப்பட்ட சொற்களுக்கு, நீங்கள் பின்வருமாறு பதிலளிக்கலாம்: ‘என்ன குறிப்பான மனப்பான்மையை நீங்கள் மனதில் வைத்திருக்கிறீர்கள்?’ அவர் இன்னும் போதியளவு திட்டமாய்க் கூறாவிடில், ‘ஏன் அது எரிச்சலூட்டுகிறது? இதை நான் செய்த சமயத்தைப்பற்றிய ஓர் உதாரணத்தை நீங்கள் எனக்குக் கொடுக்க முடியுமா?’ என்றும் நீங்கள் கேட்கலாம். எதிர்ப்புத் தெரிவிப்பதைப் பார்க்கிலும் கலந்துபேசுவதற்கான உங்கள் ஆவலால் தூண்டப்பட்டு, இவற்றைப்போன்ற கேள்விகள் உங்களைக் குறைகூறுபவரையும் உங்களையும் திட்டமான நுட்பவிவரங்களின்பேரில் கவனத்தை ஊன்றவைக்க உதவிசெய்யலாம். அவை அந்தக் குறைகூறுதல் நேர்மைவாய்ந்ததா அல்லது மட்டுக்குமீறிய பிரதிபலிப்பாவென வெளிப்படுத்தலாம். மேலும் அந்தக் காரியத்தை முழுமையாய்ச் சிந்தித்துப் பார்க்க இன்னும் சிறிது அதிக நேரத்தை அவை உங்களுக்குக் கொடுக்கின்றன.
4. உங்களைக் குறைகூறுபவரைச் சாந்தப்படுத்துங்கள்
உங்களைக் குறைகூறுபவர் மன அமைதிகுலைந்திருந்தால் என்ன செய்வது? டாக்டர் டேவிட் பர்ன்ஸ் பின்வருமாறு சிபாரிசு செய்கிறார்: “உங்களைக் குறைகூறுபவர் சரியாயினும் தவறாயினும், முதலில் அவர் அல்லது அவளுடன் ஒத்துப்போகும் ஏதோ ஒரு வழியைக் கண்டுபிடியுங்கள்.” இது எவ்வாறு உங்கள் அனுகூலத்துக்கு ஏதுவாகிறது? இது உங்களைக் குறைகூறுபவரின் எதிர்ப்பாற்றலைத் தணிய செய்து, அமைதிப்படுத்தும் பாங்குடையது, மேலும் கலந்துபேசுவதற்கு அவரை மேலும் திறந்தமனமுடையவராக்குகிறது.
மறு பட்சத்தில்—உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமற்றதாயிருந்தால் ஏற்படும் மனப்போக்கைப்போல்—நீங்கள் தற்காப்பு செய்யும் போக்கில் உடனடியாகச் சென்றால், நீங்கள் உங்களைக் குறைகூறுபவரின் தாக்கும் ஆற்றலை மேலும் பலப்படுத்துகிறீர்கள். டாக்டர் பர்ன்ஸ் குறிப்பிட்டுக் காட்டுகிறபடி: “உங்களை எதிர்ப்பவருடைய தாக்குதலின் தீவிரம் அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள்!” அப்படியானால், முரண்படும் எந்தக் காரியங்களையாவது கலந்துபேசுவதற்கு முன்னால் உங்களுடைய மிகச் சிறந்த நடவடிக்கை, ஒத்துப்போகும் ஏதோ குறிப்பைக் கண்டுபிடிப்பதேயாகும்.
5. பேச்சுமுறையில் அல்ல, உட்பொருளில் கவனத்தை ஊன்றவையுங்கள்
ஒரு தாய் அந்தச் சூழ்வட்டாரத்தில் தன் மகனின் நடத்தையைப்பற்றிய குறைதெரிவிப்பைப் பெற்றாள். அந்தக் குறைதெரிவிப்பு கடுமையான முறையிலும் எதிர்த்துப் போட்டியிடும் மனப்பான்மையிலும் கூறப்பட்டது. அந்தத் தாய் அந்த அயலாரின் குறைகூறுதல்களை நேர்மையற்றவை அல்லது கபடமானவையென விட்டுவிட்டிருக்கலாம், அவ்வாறு செய்யும்படி அவளுக்குத் தூண்டுதலும் உண்டாயிற்று.
அதற்குப்பதில், அந்தக் குறைகூறுதலில் ஏதோ சிறிது உண்மை இருந்ததென உறுதிசெய்தப்பின், அவள் தன் மகனிடம் இவ்வாறு கூறினாள்: “நம்முடைய தவறுகளைக் குறிப்பிட்டுக் காட்டுவதால் நாம் பயனடைவோராய் இருந்தாலுங்கூட, அவற்றைக் குறிப்பிட்டு காட்டுவோர் நம் அன்புக்குகந்தவர்களாக எப்பொழுதும் இருப்பதில்லை. இதை முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பாக நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.”
எவராவது உங்களைக் கடுகடுத்து கண்டனம் செய்திருக்கிறார்களா? ஒருவேளை அந்த ஆளுக்குக் கூருணர்வற்ற அல்லது பொறாமைக்குமுரிய பிரச்னை இருக்கலாம். பொருத்தமான சமயத்தில் அதில் அவருக்கு உதவிசெய்ய உங்களுக்கோ வேறொருவருக்கோ வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் அவர் அதை நயமற்ற முறையில் கூறினதனிமித்தம் அவர் கவனித்தறிவித்ததை ஏற்காது தள்ளிவிடாதீர்கள். அந்தக் குறைகூறுதலின் உட்பொருளின்பேரில் கவனத்தை ஊன்றவையுங்கள். அது உண்மைதானா? உண்மைதான் எனில், முன்னேறுவதற்கான இந்த நல்வாய்ப்பை உங்களுக்கு மறுத்துவிடாதீர்கள்.
6. கடுமையைத் தணிவியுங்கள்
இது உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம், ஆனால் குறைகூறுதலை நீங்கள் பெறுவது அடிக்கடியும் கடுமையாயும் இருப்பதை கட்டுப்படுத்துவதற்குரிய ஓரளவு ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. அதிகாரத்திலுள்ள ஆட்களிடமிருந்து வரும் திருத்தும் குறைகண்டுகூறுதலைக் குறித்ததில் இந்த நியமம் முக்கியமாய் உண்மையாயுள்ளது. எவ்வாறு?
வெகு காலத்துக்குமுன், கருஞ்சீரகச் செடி பலஸ்தீனாவில் பிரசித்திப்பெற்றதாயிருந்தது. ஆனால் மற்றச் செடிகளைச் செய்வதைப்போல், இதைக் கனமான சக்கரங்கள் அல்லது உருளைகளைக் கொண்ட போரடிக்கும் கருவிகளால் போரடிக்கவில்லை. அதற்குமாறாக, இது கழி அல்லது கோலைக் கொண்டு போரடிக்கப்பட்டது. ஏன் இந்தத் தனிப்பட்ட, மென்னயமான கையாளுதல்? ஏனெனில் இதன் சிறிய, நொய்தான விதைகளுக்குக் கனத்தப் போரடிப்பு தேவைப்படவில்லை மற்றும் உண்மையில், அதால் சேதப்படுத்தவேபடும்.
சிட்சையின் பல்வேறு அளவுத்தரங்களை விளக்கிக் காட்டுவதற்கு பைபிள் புத்தகமாகிய ஏசாயா இந்தக் கருஞ்சீரகச் செடியைப் பயன்படுத்துகிறது. ஒருவன் கடுமையற்ற திருத்தும் முறைகளுக்குச் சாதகமாகப் பிரதிபலிக்கையில், அதே காரியத்தில் அதிகக் கடுமையான முறையில் கையாளப்படுவது அவனுக்குத் தேவையிராது.—ஏசாயா 28:26, 27.
ஆகையால் கடுமையற்ற முறைகளில் குறைகூறப்படுவதற்கு நீங்கள் உடனடியாகப் பிரதிபலிப்பதனால் கடுமையான திருத்தத்தைத் தவிர்க்கலாம். ஓர் உதாரணமாக, நீங்கள் அடிக்கடி வேலைக்குப் பிந்தி வருவதைப் பற்றி உணர்வுடனிருக்கிறீர்களா? உங்கள் எஜமானர் அதைப்பற்றி உங்களிடம் பேசுவதற்கு முன்பாக, இப்பொழுதே அந்தப் பழக்கத்தைத் திருத்திக்கொள்ளுங்கள். அவர் அதை ஏற்கெனவே உங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறாரா? அவர் மேலும் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்கக் கடமைப்பட்டவராக உணருவதற்கு முன்னால், குறித்த நேரத்துக்கு வருவதால் உடனடியாக உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள்.
உங்களால் சமாளிக்க முடியும்
குறை எடுத்துக் காட்டப்படுவதை ஏற்பது வருத்தம் உண்டுபண்ணலாம். ஆட்கள் உங்களைக் கவனியாமல் வெறுமென சும்மா விட்டு, குற்றங்குறைகூறுவதை நிறுத்திவிட்டால், ‘உதவியான ஆலோசனைகளைக்’ கூறுவதை நிறுத்திவிட்டால் நலமாயிருக்குமென நீங்கள் விரும்பலாம்.
ஆனால் விரும்புவதும் எதிர்ப்பதும் குறைகாண்பதை நிறுத்திவிடாது. குறைகாண்பது இப்பொழுது மனித இயல்பின் பாகமாயுள்ளது. மேலும், வேண்டப்படாத அறிவுரையைக் கொடுக்கையில் மற்றவர்கள் பயன்படுத்தும் அளவான சமயோசித சாதுரியத்தின்பேரிலும் உங்களுக்குக் கட்டுப்பாடு கிடையாது.
எரிச்சலடைவதற்குப் பதிலாக, நீங்கள் கட்டுப்படுத்தக்கூடியதை: உங்கள் பிரதிபலிப்பை, அனுகூலப்படுத்திக்கொள்ளுங்கள். குறைகூறப்படுவதை சமாளிப்பதற்கும் அதன் புண்படுத்தும் வேதனையைத் தணிப்பதற்கும் மேற்கூறப்பட்ட ஆலோசனைகளில் சிலவற்றைப் பயன்படுத்துங்கள். அவ்வாறு செய்ததற்காக நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
குறையைத் தெரிவித்தல்
குறைகூறப்படுவதை ஏற்பதற்கு நீங்கள் எளிதில் புண்படக்கூடியவராக இருந்தால், அதைத் தெரிவிப்பதிலும் உங்களுக்குக் கடினம் ஏற்படலாம். குறையைத் தெரிவிக்கையில் நினைவில் வைக்க வேண்டிய சில வழிகாட்டுக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்படுகின்றன:
குறைந்த சொற்களைப் பயன்படுத்துங்கள். நீங்கள் குறை எடுத்துக் கூறுபவரின் உணர்ச்சிகளைப் புண்படுத்துவதைத் தவிர்ப்பதாகக் கருதி எடுக்கும் முறையான முயற்சிகள் தேவைப்படாத மிகுச்சொற்களிலிருந்து பெரும்பாலும் வருகிறது, இது தெளிவற்ற செய்தியை அனுப்பலாம்.
ஒருவரில் நீங்கள் காணும் ஒவ்வொரு சிறிய குறையையும் எடுத்துக் காட்டுவதைத் தவிருங்கள். இது எரிச்சலூட்டுகிறது, முடிவில் ஆட்கள் உங்கள் கருத்துக்களை முக்கியமல்லாதவைபோல் தள்ளிவிடுவார்கள். உங்களைத் தவிர்க்கவும் தொடங்குவார்கள். எல்லாரும் அபூரணர் குறைகளையுடையவர்களே. ஒரே சமயத்தில் அவை எல்லாவற்றையும் தீர்க்க அவர்கள் உழைக்க முடியாது. நீங்கள் கவனிக்கும் குறைபாடு வினைமையானதல்லவெனில், அதை விட்டுவிடுங்கள். பைபிள் கூறுகிறபடி: “அன்பு திரளான பாவங்களை மூடும்.”—1 பேதுரு 4:8. (g91 2/8)