இளைஞர் கேட்கின்றனர்
நான் செய்கிற எதுவும் ஏன் ஒருபோதும் அந்த அளவுக்கு நன்றாக இருப்பதில்லை?
“நான் என் தந்தைக்காக வேலை செய்ய ஆரம்பித்தபோது அவரைத் திருப்திப்படுத்துவதை மிகக் கடினமாகக் கண்டேன். நான் 15 வயதுடையவனாகவே இருந்தேன், மேலும் அந்த வேலை மிக சிக்கலானதாயும் இருந்தது. நான் ஒரு தவறு செய்தபோது, அவர் குறைகூறுபவராகிவிட்டார்.”—ரேண்டி.
“என் தாய் ஒரு காவல்துறை துப்பறிபவரைப் போல தோன்றினார்—நான் தவறுகிற அம்சங்களுக்காக எப்பொழுதும் காத்திருப்பார். நான் என் வீட்டுவேலைகளை முடிப்பதற்கான நேரம் ஆகுமுன்னே, என் வேலைகளில் குற்றங்கள் காண்பதற்காக ஆய்வு நடத்துவார்.”—க்ரேய்க்.
“என் பெற்றோர் எதைப்பற்றியாவது எப்பொழுதும் எனக்குப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தனர். நான் என்னுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியமைக்க முடிந்தவனாகத் தோன்றவில்லை என்பதாக சொன்னார்கள். பள்ளியிலும் வீட்டிலும் சபையிலும் இடைவிடாது பிரசங்கம் செய்துகொண்டிருப்பார்கள்.”—ஜேம்ஸ்.
நீங்கள் செய்யும் எதுவும் உங்களுடைய பெற்றோரைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு ஒருபோதும் நன்றாக இருப்பதில்லை என்பதாக சிலசமயங்களில் தோன்றுகிறதா? உங்களுடைய ஒவ்வொரு செயலும் ஒரு நுண்ணோக்காடியில் பார்க்கப்படுகிறது, நீங்கள் எப்பொழுதும் கவனிக்கப்படுகிறீர்கள், இடைவிடாமல் குறைகாணப்படுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் அவர்களுடைய ஆய்வில் வெற்றிப் பெறுவதில்லை என்றெல்லாம் நீங்கள் எப்பொழுதாவது உணருகிறீர்களா? அப்படியானால், பெற்றோரின் கண்டனத்தினால் ஏற்படும் ஒரு மனவருத்தத்தின்கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என நீங்கள் உணரலாம்.
உங்களுடைய சூழ்நிலை தனித்த ஒன்றாக இல்லை. டாக்டர் ஜாய்ஸ் L. வத்ரல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பெரும்பாலான பருவவயதினரின்படி, பெற்றோர் ஓயாது நச்சரிக்கின்றனர். . . . உங்களுடைய அறையைச் சுத்தமாக வைப்பதிலிருந்து குப்பைக்கூளங்ளைக் வெளியே களைவதுவரை, குளியலறையைப் பயன்படுத்துவதிலிருந்து நீங்கள் உடுத்தும் விதம்வரை, உங்களுடைய நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து உங்களுடைய மதிப்பெண்கள் மற்றும் வீட்டு வேலைவரை போன்ற ஒவ்வொரு காரியத்தைப்பற்றியும் ஓயாது பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.” புரிந்துகொள்ளக்கூடிய விதமாகவே இது உங்களைச் சிலசமயங்களில் எரிச்சலூட்டலாம், ஆனால் இது ஒரு கெட்ட காரியமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. தங்களுடைய பிள்ளைகளைக் கடிந்துகொள்வதும் திருத்துவதும் பெற்றோருக்கு இயற்கையானதே; இது பிள்ளைகளிடத்தில் அவர்கள் வைத்திருக்கும் தங்களுடைய அன்பைக் காட்டும் ஒரு வழியாகும். பைபிள் சொல்லுகிறதுபோல, “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறான்.”—நீதிமொழிகள் 3:12.
உங்களுடைய பெற்றோரிடமிருந்து திருத்தத்தை ஒருபோதும் பெற்றதில்லையென்றால், அவர்கள் உங்கள்மேல் அக்கறைக்கொள்கிறார்களா என ஆச்சரியப்படமாட்டீர்களா? (நீதிமொழிகள் 13:24; ஒப்பிடவும்: எபிரெயர் 12:8.) எனவே, உங்களைச் சரிசெய்வதற்கு உங்கள்பேரில் அதிக அக்கறைக்காட்டும் பெற்றோரைக் கொண்டிருப்பதற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடும்! என்னயிருந்தாலும், நீங்கள் இளைஞரும் அவர்களைவிட அனுபவத்தில் குறைந்தவருமாய் இருக்கிறீர்கள் அல்லவா; சிலசமயங்களில் திருத்தம் பொருத்தமானதாகவே இருக்கிறது. வழிநடத்துதல் இல்லையென்றால், “பாலியத்துக்குரிய இச்சைகளால்” நீங்கள் எளிதில் மேற்கொள்ளப்படுவீர்கள்.—2 தீமோத்தேயு 2:22.
அந்த இச்சைகள் இளைஞருக்குக் கொடுக்கும் பிரச்னைகளில் சிலவற்றைக் கவனியுங்கள். எழுத்தாளர் க்ளேட்டன் பார்போ இவ்வாறு சொல்கிறார்: “பருவவயதினருக்கு இது ஓர் ஆபத்தான உலகமாயிருக்கிறது: ஒவ்வொரு மணிநேரத்திலும், ஓர் இளைஞன் குடிவெறி சம்பந்தப்பட்ட ஒரு வாகன விபத்தில் கொல்லப்படுகிறான்; ஒவ்வொரு ஆண்டும் பன்னிரண்டாயிரம் பருவவயதினர் தற்கொலை செய்துகொள்வதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது; ஆண்டொன்றுக்குப் பத்து லட்சம் இளம் பெண்கள் கர்ப்பந்தரிக்கிறார்கள்; இன்று முப்பது லட்சம் குழந்தைகள் குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டவராய் உள்ளனர்; பாலின நோய்கள் பரவலாக காணப்படுகின்றன.” (பெற்றோரை எவ்வாறு வளர்ப்பது, How to Raise Parents) உங்களுடைய பெற்றோர் உங்களுக்கு இடைவிடாது திருத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்க தீர்மானமாயிருக்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை! பைபிள் சொல்லுகிறவண்ணம், “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான் . . . மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.”—நீதிமொழிகள் 1:5, 7; ஒப்பிடவும்: நீதிமொழிகள் 10:17.
ஏன் அது புண்படுத்துகிறது
இருப்பினும், “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்.” (எபிரெயர் 12:11) குறிப்பாக நீங்கள் இளைஞராய் இருக்கும்போது இது இப்படியிருக்கும். எப்படியிருந்தாலும், உங்கள் ஆளுமை முழுமையாக வளரவில்லையே; நீங்கள் இன்னும் வளர்ந்துகொண்டே, நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். எனவே, குறைகூறுதல்—கவனத்துடன் யோசித்து அன்பான முறையில் கூறினாலும்கூட—கோபத்தைத் தூண்டிவிடலாம். உங்களுடைய வளரிளமைப்பருவத்தினரின் வளரிளமைப்பருவத்தை எவ்வாறு கடப்பது (How to Survive Your Adolescent’s Adolescence) என்ற புத்தகம் பருவவயதினர் “குறைகூறுதலுக்கு மிக அதிக கூருணர்ச்சியைக்” கொண்டிருக்கின்றனர் என்று சொல்லி முடிக்கிறது. ஓர் இளைஞன் கூறுகிறான், “குறைகூறுதல் என்னைப் புண்படுத்துகிறது.”
ஆனால், குறிப்பாக அது உங்கள் பெற்றோரிடமிருந்து வரும்போது, உங்களை ஆழமாகவே புண்படுத்தக்கூடும். அழுத்தத்தைக் கையாள உங்கள் பருவவயதினருக்கு உதவிசெய்தல் (Helping Your Teenager Deal With Stress) என்ற தனது புத்தகத்தில் டாக்டர் பெட்டீ யங்ஸ் “மற்றவர்களின் அங்கீகாரம் அல்லது கண்டனம்” போன்றவற்றின் மூலம் ஓர் இளைஞன் “ஒரு மனிதனாக தன்மதிப்பைப்பற்றிய அபிப்பிராயத்தையும், தன்னுடைய மதிப்பீடுகளையும் வளர்க்கிறான்,” என நமக்கு நினைவூட்டுகிறார். என்றாலும் பெற்றோர், ஓர் இளைஞன் தன்கருத்தை வளர்ப்பதற்கான பெரிய காரணமாக இருக்கிறார்கள். எனவே ஒரு பெற்றோர் உங்களைத் திருத்தும்போதோ நீங்கள் ஏதோவொன்றைச் செய்யும் விதத்தைக் குறைகூறினாலோ, அது உங்களைப் பாழாக்குவதாயும் உங்களுக்கு வேதனையைத் தருவதாகவும் இருக்கக்கூடும்.
அது அப்படியேயிருந்தாலும், நீங்கள் செய்கிற எதுவும் ஒருபோதும் அந்த அளவுக்கு நன்றாக இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வரவேண்டுமா? அல்லது வெறுமனே உங்களுடைய குறைபாடுகளில் சிலவற்றை உங்களுடைய பெற்றோர் சுட்டிக்காட்டிவிட்டார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு முழு தோல்வி என்பதாக முடிவு செய்யவேண்டுமா? உண்மையில், எல்லா மனிதருமே துயரகரமாகப் பரிபூரணத்திலிருந்து விழுந்துபோகிறோம். (ரோமர் 3:23) தவறுகள் செய்வது கற்கும் முறையின் பாகமாக இருக்கிறது. (யோபு 6:24-ஐ ஒப்பிடவும்.) பிரச்னை என்னவென்றால், நீங்கள் ஏதாவதொன்றை நல்ல முறையில் செய்யும்போது உங்களுடைய பெற்றோர் அதிகத்தைச் சொல்வதில்லை—ஆனால் தவறு செய்யும்போதோ அதிக குரலெழுப்பலாம்! இது புண்படுத்துகிறது, ஆனால் நீங்கள் முழு தோல்வி என்று இது அர்த்தப்படுத்துவது கிடையாது. நியாயமான குறைகூறுதலை, புறக்கணிக்காமலும் அதே உணர்ச்சியில் ஆழ்ந்துவிடாமலும், அமைதியாகவும் புத்தியுடனும் அளவுக்குமீறிய வருத்தமின்றியும் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.—எபிரெயர் 12:5-ஐ ஒப்பிடவும்.
நியாயமற்ற குறைகூறுதல்
குறைகூறுதல் நியாயமற்றதாக இருந்தால் என்ன? சில பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு நியாயமற்ற முறையில் உயர் தராதரங்களை நிர்ணயிக்கின்றனர். அற்பமான காரியங்களுக்காகவும் ஓயாது நச்சரிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டலாம். மேலும் குற்றம்காண்பதற்குச் சரியான காரணங்களைக்கொண்ட பெற்றோர் அந்தக் குறைகூறுதலை ஒரு கடுமையான, மதிப்பைக் குறைக்கும் வழியில் செய்யலாம். டாக்டர் பெட்டீ யங்ஸ் பெற்றோர் பிள்ளைகளை “இழிபெயரிட்டழைப்பது, பிரசங்கம்பண்ணுவது, கேலிசெய்வது, வெட்கப்படுத்துவது, பழிசுமத்துவது, மிரட்டுவது” போன்றவையெல்லாம் “அழிவை உண்டாக்கும் பேச்சுத்தொடர்பு முறைகளாகும், . . . இவை பிள்ளையின் தன்னம்பிக்கையையும் மதிப்புணர்ச்சியையும் குறைக்கின்றன,” என்றும் கூறுகிறார்.
நீதிமான் யோபு நியாயமற்ற குற்றங்களால் வரிசையாகத் தாக்கப்பட்டபோது, கூக்குரலிட்டுச் சொன்னார்: “நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?” (யோபு 19:2) அதுபோலவே, ஒரு பெற்றோரால் தொடர்ந்து தரங்குறைக்கப்படுவதனாலோ நடைமுறையற்ற உயர் தராதரங்களைக்கொண்டு அளக்கப்படுவதனாலோ ஓர் இளைஞனை அவர்கள் எரிச்சலூட்டமுடியும். இது அவனைத் “திடனற்றுப்போகச்” செய்யும். (கொலோசெயர் 3:21) கேதலீன் மகோய் எழுதிய பருவவயதின் சோர்வை மேற்கொள்ளுதல் (Coping With Teenage Depression) என்ற புத்தகமும்கூட இவ்வாறு வலியுறுத்துகிறது: “பெற்றோரின் உயர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழமுடியாமை, வளரிளமைப்பருவத்தினரின் தன்மதிப்பில் குறிப்பிடத்தக்க இழப்பை விளைவிக்கிறது மற்றும் அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய சோர்வைத் தூண்டிவிடுகிறது.”
உண்மையில், அப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற குறைகூறுதல் அடிக்கடி ஒரு விஷ சுழற்சியைத் தூண்டிவிடுகிறது: உங்களுடைய பெற்றோர் உங்களிடத்தில் குறை காண்கிறார்கள். உங்களைப்பற்றி நீங்கள் மோசமாக உணர்வதனால் எதிர்மாறாகப் பிரதிபலிக்கிறீர்கள். உங்களைப்பற்றி நீங்கள் மோசமாக உணருவதனால், உங்கள் பெற்றோர் உங்களை வேறு ஏதாவது செய்ய சொல்லும்போது அதை மோசமாகச் செய்யும் மனச்சாய்வை உடையவர்களாகிறீர்கள். விளைவு? அதிக குறைகூறுதல்!
குறைகூறுதலுக்குப் பின்னால்
இப்படிப்பட்ட அழிவுக்கேதுவான சுழற்சியை நீங்கள் எவ்வாறு நிறுத்த முடியும்? முதலாவது, உங்களுடைய பெற்றோர் ஏன் அவ்விதம் உணருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்கள் நச்சரித்துக்கொண்டிருப்பது அல்லது இடைவிடாது குறைகூறுவது உண்மையில் தீய எண்ணத்தோடுதான் செய்யப்படுகிறதா? அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. டாக்டர் ஜாய்ஸ் L. வத்ரல் கேட்கிறார்: “அவர்கள் ஏன் நச்சரிக்கிறார்கள்? அவர்கள் நச்சரிப்பதற்குக் காரணம் ஒருவரும் கவனிப்பதில்லை, அல்லது அவர்கள் கவனிப்பார்கள் என்பதையும்கூட ஒருவரும் ஒப்புக்கொள்வதில்லை. எவ்வளவதிகம் அவர்கள் அசட்டை செய்யப்படுவதாக உணருகிறார்களோ அவ்வளவதிகம் நச்சரிக்கிறார்கள்.” நீங்கள் அவர்களுடைய முறையீடுகளுக்குப் பிரதிபலிக்கிறீர்கள் என்று உங்கள் பெற்றோருக்கு உண்மையிலேயே சான்று பகருகிறீர்களா? அல்லது அவர்களுடைய வார்த்தைகள் செவிட்டுக்காதில் சங்கு ஊதியதுபோல் ஆகிறதா? அப்படியென்றால் மிகவும் அடிக்கடி குற்றங்காணப்பட்டு, குற்றம்காண்பது தீவிரமடையுமென்றால் அதைக் குறித்து ஆச்சரியப்படாதீர்கள்! நீங்கள் வெறுமனே நீதிமொழிகள் 19:20-ல் சொல்லப்பட்ட வார்த்தைகளைப் பொருத்தி பிரயோகிக்கும்போது அது நிற்கலாமா? அந்த வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.”
சிலசமயங்களில் ஒரு பெற்றோர் அளவுக்குமீறி குறைகூறுகிறார். இது உங்களுடைய பங்கில் உள்ள எந்தவொரு குறிப்பிட்ட தவறினாலுமல்ல, ஆனால் வெறுமனே தந்தையோ தாயோ ஒரு கெட்ட மனநிலையில் இருக்க நேரிட்டதனாலேயே. உங்களுடைய தாய் வேலையில் அது ஒரு கடின நாளாக கண்டாரா? அப்படியானால் உங்களுடைய அறை அசுத்தமாகத் தோன்றுகிறதென்பதற்காக அவர் வழக்கத்தைவிட அதிகம் கோபமூட்டும் வகையில் பேசும் மனச்சாய்வைக் கொண்டிருக்கலாம். உங்களுடைய தந்தை குறைவுபடும் குடும்ப நிதியைப்பற்றி கோபமாகவும் நிலைகுலைந்தும் இருக்கிறாரா? அப்படியானால், அவர் என்ன பேசுகிறார் என்ற யோசனையேயில்லாமல் “பட்டயக்குத்துகள்போல்” பேசலாம். (நீதிமொழிகள் 12:18) இது நியாயமில்லை என்றே வைத்துக்கொள்வோமே. ஆனால் “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷன்” ஆவான். (யாக்கோபு 3:2) எனவே தாயும் தந்தையும் பதற்றத்திலோ அல்லது மனஅமைதியிழந்தோ இருப்பாரேயானால் எவ்வித குறைகூறுதலுக்கும் இடங்கொடுக்காமல் கவனமாக நடந்துகொள்வது விவேகமாகும்.
அபூரண மனிதர்களாக, பெற்றோரும்கூட தாங்கள் குறைபாடுள்ளவர்கள் என்ற உணர்ச்சியினால் துன்பப்படுத்தப்படக்கூடும். உங்களுடைய பாகத்தில் உள்ள தவறுதல் அவர்கள் தவறியவர்களாக உணரச்செய்யும்! டாக்டர் வத்ரல் விவரிக்கிறார்: “நீங்கள் வீட்டுக்கு ஒரு மோசமான அறிக்கை சீட்டைக் கொண்டுவரலாம், உங்கள் தந்தை, ‘என்ன, நீ மடையனா? ஒரு மகன் என்பதற்கு நான் ஒரு முட்டாளைக் கொண்டிருக்கிறேன்,’ என்று சொல்லலாம். இயற்கையாகவே உங்களுடைய தகப்பன் நீங்கள் ஒரு முட்டாளாக இருக்கிறீர்கள் என்று உண்மையில் நினைக்கிறதில்லை. உண்மையில் அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘படிப்பதற்கு உன்னை ஊக்குவிக்கும் என் வேலையை நான் செய்யவில்லையோ என்று பயப்படுகிறேன்.’”
அப்படிப்பட்ட பயம் பிள்ளைகளுக்குப் பின்பற்ற முடியாத உயர் தராதரங்களை வைக்க பெற்றோரை வழிநடத்தக்கூடும். ஜேஸன் என்ற பெயருள்ள ஓர் இளைஞன் புலம்பினான்: “நான் செய்த எதுவும் எப்பொழுதுமே அந்த அளவுக்குப் போதுமானதாக இருந்ததில்லை. நான் இலைகளைப் பொறுக்கினால், நான் அதைச் செய்துகொண்டிருக்கும்போதே, ஏன் வண்டி கொட்டிலைச் சுத்தம் செய்யவில்லை என்றறிய விரும்புகிறார் என் தந்தை. பள்ளியில் நான் ‘A மைனஸ்’ தரநிலை எடுத்தால் என் பெற்றோர் ஏன் அது ‘A’ இல்லை என அறிந்துகொள்ள விரும்புகின்றனர், மேலும் நான் பயனற்றவன் என்பதாக சொல்கின்றனர்.” ஆனால் ஒரு பள்ளி ஆலோசகர் ஜேஸனின் பெற்றோரிடம் பேசி, “தங்கள் மகனுக்கான அவர்களுடைய மட்டுக்குமீறிய உயர் எதிர்ப்பார்ப்புகள்தானே, குறைவுள்ளவர்கள் என்ற அவர்களுடைய சொந்த உணர்ச்சிகளையும், வேலையில் அவர்களுடைய சொந்த தெரிவுகள் மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் அவர்களுடைய ஏமாற்றத்தையும் பிரதிபலித்தது,” என்பதைக் கண்டுபிடித்தார்.—பருவவயதின் சோர்வை மேற்கொள்ளுதல் (Coping With Teenage Depression).
வீட்டில் உங்கள் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், உங்கள் சொந்த பெற்றோர் சில நேரங்களில் ஏன் குறைகூறுபவர்களாக இருக்கிறார்கள் என உங்களால் ஒருவேளை நன்கு உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் பெற்றோர் குறைகாண்பதை மேற்கொள்வதற்கான சில வழிகள் என்ன? அவர்களுடைய குறைகூறுதலிலிருந்து பலனடையக்கூடிய வழிகள் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகள் எதிர்கால கட்டுரை ஒன்றில் கலந்தாலோசிக்கப்படும். (g92 11/22)
[பக்கம் 10-ன் படம்]
ஒரு பெற்றோர் நீங்கள் ஏதோவொன்றைச் செய்யும் விதத்தைக் குறைகூறினால், அது உங்களைப் பாழாக்குவதாய் இருக்கக்கூடும்