இளைஞர் கேட்கின்றனர் . . .
அது ஏன் எப்போதுமே என் குற்றமாக உள்ளது?
“என் அப்பாவுக்கு அலர்ஜி இருக்குது. ஆனா அவர் புகைபிடிக்கிற ஆட்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டியிருக்குது. அதனால அவர் வீட்டுக்கு வரும்போது, சில சமயங்கள்ல ரொம்ப அப்செட்டாயிருப்பாரு. அவரே பொருட்களைத் தொலைச்சுட்டு அதுக்காக என்னை திட்டுவாரு. அவர் தான் அதை தொலைச்சாருனு நான் அவர்கிட்ட சொன்னா, அவருக்கு ஜாஸ்தி கோபம் வந்திரும், நீ ஒண்ணும் என்னை திருத்தாதேனு சொல்லுவாரு.”—ஒரு பருவவயதுப் பெண்.
நீங்கள் தான் உங்களுடைய குடும்பத்தில் பலிகடா என்று சிலசமயங்களில் உணர்ந்ததுண்டா? எப்படிப்பட்ட விஷயம் என்றில்லாமல் எது தவறாக ஆனாலும் நீங்கள் தான் குற்றம் சாட்டப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறதா? 14 வயதான ஜெயாவுக்கு அப்படித்தான் தோன்றுகிறது. அவள் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் வாழ்வதால் அடிக்கடி தன்னுடைய தம்பியையும் தங்கையையும் அவள்தான் கவனித்துக் கொள்கிறாள். “அவங்க சண்டை போட ஆரம்பிக்கும் போது நான் கீழ்த்தளத்தில இருப்பேன். அவங்க ரொம்ப அறிவில்லாமையும் குழந்தைங்களாட்டவும் நடந்துப்பாங்க, ஆனா அப்பா வீட்டுக்கு வரும்போது அத தடுக்க நீ ஏன் அங்க இல்லனு என்னைதான் திட்டுறாரு” என்று ஜெயா புலம்புகிறாள்.
உங்களுடைய பெற்றோர், உங்களை செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்டுவிட்டாயென்றோ, சோம்பேறி அல்லது கொஞ்சம்கூட பொறுப்பில்லை என்றோ அல்லது உங்களுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ளவே முடியாத அளவுக்கு ஊன்றிவிட்டது என்பதைப் போல தோன்றச் செய்யும் மற்ற பட்டப்பெயர்களை வைத்துக் கூப்பிட்டால், சில சமயங்களில் நீங்கள் தவற வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பதைப் போல ஒருவேளை தோன்றக்கூடும். ராமனின் குடும்பத்தார் அவனை மிகவும் ஆத்திரமடையச் செய்த ஆப்சன்ட் மைன்டெட் புரஃபசர் என்ற பட்டப்பெயரிட்டு அழைத்தனர். இதைப் போலவே நீங்களும் உங்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்டுகிற பட்டப்பெயரால் அல்லது முத்திரையால் அழைக்கப்படுகையில், அது பாசத்துடன் சொல்லப்பட்டாலும்கூட ஆத்திரமடையலாம். இந்த எதிர்மறையான பட்டங்கள் சரிப்படுத்திக் கொள்ள உங்களைத் தூண்டுவதற்கு மாறாக, நீங்கள்தான் எப்பொழுதும் குற்றம் சாட்டப்படுகிறீர்கள் என்ற உணர்வை வெறுமனே வலுப்படுத்தலாம்.
நீங்கள் குற்றம்சாட்டப்படுவது பட்சபாதத்தின் விளைவாக என்று உங்களுக்கு தோன்றும்போது அது கூடுதலாக வேதனையளிக்கலாம். ஃப்ராங்கி என்ற பருவ வயதுப்பெண் சொல்கிறாள், “நான்தான் எங்க வீட்டில நடுப்பிள்ளை. அதனால எப்பவுமே என்னைதான் மோசமான விதத்தில் நடத்துவாங்க.” உங்களுடைய உடன்பிறந்தவர்கள் எப்போதும் தவறே செய்யாதவர்கள் போலவும், பிரச்சினை தோன்றிய உடனேயே நீங்கள்தான் குற்றவாளி என்று தீர்க்கப்பட்டதாகவும் தோன்றக்கூடும்.
பெற்றோர் ஏன் குற்றம்சாட்டுகின்றனர்
இயல்பாகவே, பிள்ளைகள் தவறுசெய்யும்போது அவர்களை திருத்துவது பெற்றோருக்கு வழக்கமானதுதான். இன்னும் சொல்லப்போனால், ஆரோக்கியமான, கட்டியெழுப்பக்கூடிய திருத்தங்கள் செய்வது தேவ பயமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்த்துக் கொண்டுவரும் வழிகளில் ஒன்றாக உள்ளது.” (எபேசியர் 6:4) இருப்பினும், சில சமயங்களில் மிகச்சிறந்த பெற்றோர்களும்கூட மிகைப்பட்ட முறையில் செயல்பட்டு அல்லது தவறான தீர்மானங்களை விரைந்து எடுத்துவிடுவார்கள். இயேசு சிறுவராயிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு காணாமல் போய்விட்டார். அவர் தேவாலயத்தில், பைபிள் கலந்தாலோசிப்பு செய்து கொண்டிருந்தநிலையில் காணப்பட்டார். அப்படியிருந்தும்கூட, அவருடைய பெற்றோர் அவரைக் கண்டுபிடித்தபோது, அவருடைய தாய் அவரை நோக்கி: “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.”—லூக்கா 2:48.
இயேசு பரிபூரணராகையால், தீய நடக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் என்று பயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் எல்லா அன்பான பெற்றோரையும் போல, அவருடைய தாயும் அவரைக் குறித்து பொறுப்புள்ளவளாக உணர்ந்து, ஒருவேளை அவருடைய சிறந்த அக்கறைகளும்கூட ஆபத்துக்குள்ளாக்கலாம் என்ற பயத்தினால் பதற்றமாக பிரதிபலித்திருக்கவேண்டும். அதேவிதமாக, உங்களுடைய பெற்றோரும் சில சமயங்களில் மிகைப்பட நடந்துகொள்ளலாம். ஆனால் அது உங்களிடம் வெறுப்புடன் அல்லது கொடூரமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, வெறுமனே அவர்கள் உங்கள் மேல் அக்கறை உள்ளவர்களாக இருப்பதினாலேயே.
மேலும், நாம் ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில்’ வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணருங்கள். (2 தீமோத்தேயு 3:1 NW) உங்கள் வீட்டிற்காக வேலைசெய்துகொண்டும் கவனித்துக்கொண்டும் இருப்பதால், உங்கள் பெற்றோர் அதிகளவு அழுத்தத்தின் கீழ் இருக்கின்றனர். இதுவும்கூட அவர்கள் உங்களை நடத்தும் முறையைப் பாதிக்கலாம். (பிரசங்கி 7:7-ஐ ஒப்பிடுக.) ஒரு மனநல அலுவலர் கவனித்தார்: “சில குடும்பங்களில், நெருக்கடியான சூழ்நிலைமையின்போது, இயல்பாகவே நல்லவர்களாக உள்ள பெற்றோரும்கூட கோபமடைந்து பதற்றமான தீர்மானங்களை எடுக்கிறார்கள்.”
விசேஷமாக ஒற்றைப் பெற்றோர்கள் தாங்கள் நிலைகுலைந்திருப்பதை தங்கள் பிள்ளைகள் மேல் வெளிக்காட்டும் சுபாவமுள்ளவர்களாக இருக்கிறார்கள்; இது வெறுமனே காரியங்களை கலந்து பேச ஒரு துணை அவர்களுக்கு இல்லாததன் காரணமே. மறுப்புக்கிடமின்றி, ஒரு பெற்றோரின் தனிப்பட்ட நிலைகுலைவால் தாக்கப்படுவது சந்தோஷமான விஷயமில்லை. 17 வயதான லூசி சொல்கிறாள்: “நான் ஏதோ தப்பு செய்து தண்டிக்கப்பட்டால் பரவாயில்லை. ஆனால் என்னுடைய அம்மா குழப்பமான மூடில் இருப்பதால் என்னை தண்டிப்பது உண்மையில் அநியாயமானது.”
பட்சபாதம் மற்றொரு அம்சமாக உள்ளது. ஒரு பெற்றோர் சாதாரணமாக தன்னுடைய பிள்ளைகள் எல்லாரையும் நேசித்தாலும்கூட, ஒரு பிள்ளையினிடமாக அவர் குறிப்பிடத்தக்கவிதத்தில் ஈர்க்கப்படுவது அபூர்வமல்ல. a (ஆதியாகமம் 37:3-ஐ ஒப்பிடுக.) நீங்கள்தான் குறைவாக நேசிக்கப்படும் பிள்ளை என்று உணர்வதே அதிக வேதனையைத் தரக்கூடும். ஆனால் உங்களுடைய தேவைகள் புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது உங்களுடைய உடன்பிறந்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு நீங்கள் குற்றம் சாட்டப்படுவதாகவோ தோன்றினால் மனக்கசப்பு பின்தொடர்வது நிச்சயம். இளம் ராக்சன் சொல்கிறான்: “எனக்கு டேரன்னு குட்டித்தம்பி இருக்கிறான். அம்மாவைப் பொருத்தவரை அவந்தான் ரொம்ப உசத்தி . . . அவங்க டேரனையில்ல, எப்பவுமே என்னைத்தான் குற்றஞ்சாட்டுறாங்க.”
தொந்தரவிலுள்ள குடும்பங்கள்
அமைதியான குடும்பங்களில் அநியாயமான குற்றச்சாட்டுகள் எப்போதாவது ஏற்படக்கூடும். ஆனால் தொந்தரவிலுள்ள குடும்பங்களில் பெற்றோர்கள் குற்றம்சாட்டுவதும், அவமானப்படுத்துவதும் இழிவுபடுத்துவதும் அன்றாட காரியங்களாக இருக்கக்கூடும். சில சமயங்களில் குற்றஞ்சாட்டுதல் ‘கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், மற்றும் தூஷணத்துடன்கூட’ இணைசேர்ந்துகொள்கிறது.—எபேசியர் 4:31.
பெற்றோர்கள் இவ்விதமாக வெடித்தெழுவதற்கு இளைஞர் குற்றம்சாட்டப்பட முடியுமா? கீழ்ப்படியாத ஒரு மகன் அல்லது மகள் பெற்றோருக்கு ‘சஞ்சலமாயிருக்கிறான்’ என்பது உண்மைதான். (நீதிமொழிகள் 17:25 திருத்திய மொழிபெயர்ப்பு) இருப்பினும், பெற்றோரிடமாகவே பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாதிருப்பீர்களாக [சொல்லர்த்தமாக “கோபத்தைத் தூண்டுதல்”].’(எபேசியர் 6:4) எல்லா கிறிஸ்தவர்களையும் போலவே, ஒரு பெற்றோர் தன்னடக்கத்தை அப்பியாசித்து, ‘தீமையைச் சகிக்கிறவருமாயிருக்க வேண்டும்.’ (2 தீமோத்தேயு 2:24) எனவே ஒரு பெற்றோர் தன்னடக்கத்தை இழந்துவிட்டு, அதற்காக தன்னுடைய பிள்ளையுடைய தவறுகளை குற்றம்சாட்டிவிடக்கூடாது.
திட்டுவது ஒரு பெற்றோர் உணர்ச்சிப்பூர்வ துயரத்தில், மனச்சோர்வில், அல்லது குறைந்த சுயமதிப்பால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தக்கூடும். மேலும் இது மணவாழ்க்கையில் இன்னல் அல்லது குடிக்கு அடிமையாதல் போன்ற பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கக்கூடும். ஒரு செய்திமூலம் குறிப்பிடுகிறபடி, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான பெற்றோரின் பிள்ளைகளே அடிக்கடி பலிகடாக்களாக ஆகின்றனர். “அவர்கள் செய்வது எதுவுமே சரியாக இருக்காது. அவர்கள் ‘முட்டாள்,’ ‘மோசமானவன்,’ ‘சுயநலவாதி,’ என்றெல்லாம் அழைக்கப்படுவார்கள். அந்தக் குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் பிரச்சினையே இதுதான் என்று அந்தப் பிள்ளை (அல்லது பிள்ளைகளின்) மீது சாட்டிவிட்டு, தங்களுடைய சொந்த அசௌகரியமான உணர்ச்சிகள் மற்றும் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்.”
அநியாயமான குற்றச்சாட்டைக் கையாளுதல்
டாக்டர் காத்லீன் மக்காய் குறிப்பிடுகிறார்: “ஒரு பிள்ளையின் ஆள்தன்மையை பட்டப்பெயரிடுவது, சிறுமைப்படுத்துவது மற்றும் குறைசொல்வது . . . பருவவயதினரின் தன்மதிப்பு குறைதல், மனச்சோர்வடைதல், பேச்சுத்தொடர்பின்மை போன்றவற்றிற்கு காரணமாக அமையலாம்.” அல்லது பைபிள்தானே குறிப்பிடுகிறபடி, கடுமையான நடத்தை பிள்ளைகளை ‘எரிச்சலூட்டி’ ‘மனந்தளர்ந்து போகும்படி’ செய்விக்கும். (கொலோசெயர் 3:21, தி. மொ.) உதவாக்கரை என்று உங்களைக் குறித்து நீங்களே நினைக்கத் தொடங்குவீர்கள். உங்களுடைய பெற்றோரிடமாக எதிர்மறையான உணர்ச்சிகளையும்கூட வளர்க்க ஆரம்பிக்கலாம். அவர்களை பிரியப்படுத்துவது மிகக் கடினம் என்றும் அதற்காக முயற்சி எடுப்பதே வீண் என்றும்கூட நீங்கள் முடிவுசெய்யக்கூடும். கோபமும் மனக்கசப்பும் நிலைநாட்டப்பட்டுவிட, நீங்கள் எந்தவிதமான சிட்சையையும்—கட்டியமைக்கும் குற்றச்சாட்டுகளையும்கூட—புறக்கணிக்கத் தொடங்குவீர்கள்.—நீதிமொழிகள் 5:12-ஐ ஒப்பிடுக.
நீங்கள் எப்படி சமாளிக்கலாம்? உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமையின் பேரிலேயே அதிகம் சார்ந்திருக்கிறது. சற்று நிறுத்தி, உண்மை நிலையிலிருந்து ஏன் அதை மதிப்பிடக்கூடாது? உதாரணமாக, நீங்கள்தான் எப்போதும் குற்றம்சாட்டப்படுகிறீர்கள் என்பது நிஜமாகவே உண்மைதானா? அல்லது அது வெறுமனே, சில சமயங்களில் உங்களுடைய பெற்றோர் பரிகசிப்பதில் ஒரு படிமேலே சென்று தவறானதொன்றை சொல்லிவிடுகிறார்களா? “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என்று பைபிள் சொல்லுகிறது, அது பெற்றோரையும் உட்படுத்துகிறது. (யாக்கோபு 3:2) எனவே, உங்கள் பெற்றோர் எப்போதாவது கொஞ்சம் மிகைப்பட்ட முறையில் நடந்துகொண்டாலும்கூட, நீங்களும் அவ்விதம் மிகைப்பட நடக்க வேண்டிய அவசியமுள்ளதா? கொலோசெயர் 3:13-லிலுள்ள பைபிளின் ஆலோசனை நன்றாக பொருத்தப்படலாம்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”
உங்கள் பெற்றோரிடமாக பரிவைக்காட்டுவது இதை செய்ய உங்களுக்கு உதவக்கூடும். நீதிமொழிகள் 19:11 சொல்லுகிறது: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” உங்களுடைய அப்பா வேலையிலிருந்து வீட்டுக்கு வரும்போது வழக்கத்திற்கு மாறாக முன்கோபமடைந்து நீங்கள் செய்யாதவொன்றிற்காக உங்களை குற்றம்சாட்டினால், அதை ஒரு பெரிய விவாதமாக ஆக்கவேண்டியது அவசியமா? அவர் அநேகமாக அழுத்தத்திலும் சோர்வாகவும் இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வது வெறுமனே ‘அவருடைய குற்றத்தை மன்னிக்க’ உங்களுக்கு உதவும்.
இருப்பினும், அநியாயமான குற்றச்சாட்டு எப்போதாவது நிகழும் எரிச்சலாக இல்லாமல், வழக்கமாகிக்கொண்டும் கடுமையாகிக்கொண்டும் போனால் என்ன செய்வது? பின்னால் வரும் ஒரு கட்டுரை உங்களுடைய சூழ்நிலையை முன்னேற்றுவிப்பதற்கான வழியைக் குறித்து கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள் பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் பக்கம் 50-ல் உள்ள “என் சகோதரனுடனும் சகோதரியுடனும் ஒத்திணங்கிப் போவது ஏன் அவ்வளவு கடினம்?” என்ற அதிகாரம் 6-ஐக் காண்க.
[பக்கம் 19-ன் படம்]
தேவைப்படும்போது சரிப்படுத்தும் ஆலோசனையை அளிப்பது ஒரு பெற்றோரின் பாகத்தில் அநியாயமாக இல்லை