“ஒருவருடைய நீதியான செயல்கள் அவரை ஞானமுள்ளவர் என்று நிரூபிக்கும்”
1. நாம் செய்கிற பிரசங்க வேலையைச் சிலர் எவ்வாறு கருதுகிறார்கள்?
1 சில சமயம், நாம் சொல்லும் செய்தியை வீட்டுக்காரர் புறக்கணிக்கலாம்; நம்மைப் பற்றித் தவறான எண்ணம் அவருக்கு இருப்பதாலோ நம்மைப் பற்றி மற்றவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பதாலோ அவ்வாறு புறக்கணிக்கலாம். ஒருவேளை, மீடியாவில் சொல்லப்படுகிற ஒருதலைப்பட்சமான தகவலைக் கேட்டதால் நம்மைப் பற்றித் தவறான அபிப்பிராயத்தை வளர்த்திருக்கலாம். சில இடங்களில், முறையற்ற விதத்தில் நாம் மக்களை “மதமாற்றம்” செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்ப்படும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
2. குற்றம் சுமத்தப்பட்டாலும் மனந்தளராமல் இருக்க எது நமக்கு உதவும்?
2 மனந்தளர்ந்துவிடாதீர்கள்: இயேசுவையும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மற்ற ஊழியர்களையும் மக்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள், அவர்களுக்கு விரோதமாகப் பேசினார்கள். (அப். 28:22) இருந்தாலும், இவற்றையெல்லாம் கண்டு பயந்து அவர்கள் ஊழியம் செய்வதை நிறுத்திவிடவில்லை. “ஒருவருடைய நீதியான செயல்கள் அவரை ஞானமுள்ளவர் என்று நிரூபிக்கும்” என இயேசு சொன்னார். (மத். 11:18, 19) அவர் தம்முடைய தகப்பனின் சித்தத்தைத் தொடர்ந்து பக்திவைராக்கியத்துடன் செய்து வந்தார்; சத்தியத்தை உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் நற்செய்தியின் மதிப்பைப் புரிந்துகொள்வார்கள் என நம்பினார். கடவுளுடைய சொந்த மகனும் நம்மைப் போன்ற பிரச்சினைகளை எதிர்ப்பட்டார் என்பதை நினைவில் வைத்தால் நாம் மனந்தளர மாட்டோம்.
3. எதிர்ப்புகளையும் நம்மைப் பற்றிய தவறான செய்திகளையும் குறித்து நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை?
3 இந்த உலகம் தம்மை வெறுத்ததைப் போலவே தம்முடைய சீடர்களையும் வெறுக்கும் என இயேசு சொன்னார். (யோவா. 15:18-20) ஆகவே, எதிர்ப்புகளைக் கண்டோ நம்மைப் பற்றிய தவறான செய்திகளைக் கேட்டோ நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால், கடைசி நாட்களின் கடைசி கட்டத்தை நாம் நெருங்கி வருவதாலும் சாத்தானுடைய கோபம் அதிகரித்து வருவதாலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருமென நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும். (வெளி. 12:12) சாத்தானுடைய உலகத்தின் ஆயுள் முடிந்துவிட்டது என்பதற்கு இவையெல்லாம் அத்தாட்சி அளிப்பதால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
4. நற்செய்தியை மக்கள் புறக்கணித்தாலும்கூட அவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
4 இனிமையாக நடந்துகொள்ளுங்கள்: நம் செய்தியை மக்கள் புறக்கணித்தாலும்கூட, அவர்களிடம் நாம் இனிமையாக நடந்துகொள்ள வேண்டும்; சாந்தமாகப் பேச வேண்டும். (நீதி. 15:1; கொலோ. 4:5, 6) சூழ்நிலை அனுமதித்தால், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நிறையத் தவறான கருத்துகள் நிலவுவதாக நல்மனமுள்ள வீட்டுக்காரரிடம் விளக்கலாம்; அல்லது, அவர் ஏன் யெகோவாவின் சாட்சிகளை வெறுக்கிறார் எனக் கேட்கலாம். நாம் சாந்தமாகப் பேசுவது, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தான் கேள்விப்பட்ட விஷயங்கள் உண்மையா எனக் கேட்க அவரைத் தூண்டலாம்; அதோடு, அடுத்த முறை சாட்சிகள் அவரைச் சந்திக்கையில் செவிகொடுக்கவும் தூண்டலாம். என்றாலும், வீட்டுக்காரர் கோபமாக இருந்தால் அங்கிருந்து அமைதியாக வந்துவிடுவது நல்லது. மற்றவர்கள் நம்மை எப்படிக் கருதினாலும் சரி, யெகோவா நம் ஊழியத்தை உயர்வாய் மதிக்கிறார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்.—ஏசா. 52:7.