கொலோசியம் பண்டைய ரோம் நகரின் “பொழுதுபோக்கு” மையம்
இத்தாலியிலுள்ள விழித்தெழு! நிருபர்
“ரோம் நகரின் பண்டைய நினைவுச் சின்னங்களில் அதிக பிரபலமானது இந்தக் கொலோசியம் (வட்டமான கேளிக்கை அரங்கம்); அதன் கடந்த கால வல்லமைக்கும் மகிமைக்கும் ஓர் அடையாளமாக இருக்கிறது, மிகப் பெரிய அட்டூழியங்களின் சாட்சியாக இருக்கிறது” என்று மார்க்கோ, பவுலோ என்ற தன் நண்பர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் லூசா சொல்கிறார்.
கொலோசியத்தைப் பற்றி நீங்களும்கூட அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புவீர்கள்—எப்பொழுது அது கட்டப்பட்டது, என்ன காட்சிகள் போன்ற காரியங்களைக் குறித்து தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். பூர்வ கிறிஸ்தவர்களில் யாராவது எப்போதாவது அங்கு சென்றனரா? சிலர் நம்புவது போல் அவர்கள் காட்டு மிருகங்களால் துண்டு துண்டாக கிழித்தெறியப்பட்டனரா? லூசா தன் நண்பர்களிடம் என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்.
லூசா: “இந்தக் கொலாசியம் முதலில் ஃபேளிவியன் கேளிக்கை அரங்கு என்று அழைக்கப்பட்டது. ஃபேளிவியா குடும்பத்து பேரரசர்களான வெஸ்பாஷியன், டைட்டஸ், டொமிஷியன் ஆகியோர் ஒன்றுசேர்ந்து இதைக் கட்டியதால் அப்படி அழைக்கப்பட்டது. பொ.ச. 72 முதல் 75 வரையான ஆண்டுகளின் போது வெஸ்பாஷியன் கட்டிட வேலையை ஆரம்பித்தார், அவருடைய மகன் டைட்டஸ் வேலையை தொடர்ந்து செய்தார், பொ.ச. 80-ல் கட்டிட அமைப்பை தொடங்கி வைத்தார், அவருடைய சகோதரன் டொமிஷியன் பின்னர் அதை முழுவதுமாக கட்டி முடித்தார்.”
பவுலோ: “ஆனால் அது ஏன் கொலோசியம் என்று அழைக்கப்படுகிறது?”
லூசா: “அது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வி, ஆனால் அதற்கு நிச்சயமான பதில் எதுவும் இல்லை. பொ.ச. எட்டாம் நூற்றாண்டின் போதுதான் அந்த அரங்கு கொலோசியம் என்று அழைக்கப்பட ஆரம்பித்ததாக தெரிகிறது. அதனுடைய பிரம்மாண்டமான அளவிலிருந்து அந்தப் பெயர் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சிலர் நினைக்கின்றனர். அதற்கு அருகில் இருக்கும் நீரோவின் பேருருவச் சிலையின் காரணமாக அந்தப் பெயர் வந்தது என்று வேறு சிலர் சொல்கின்றனர், அந்த மிகப் பெரிய சிலையின் உயரம் 110 அடிகள், அது நீரோவை சூரிய கடவுளாக பிரதிநிதித்துவம் செய்தது.
“ரோமர்களின் கேளிக்கை அரங்குகளிலேயே மிகப் பெரியதாக அது இருந்தது என்று விவரங்களை கூறாமல் வெறுமென சொல்வது அதிகத்தை அர்த்தப்படுத்துவதில்லை. உதாரணமாக, அது முட்டை வடிவத்தில் கட்டப்பட்டது. பெரிய விட்டம் 188 மீட்டர், சிறிய விட்டம் 156 மீட்டர். அதன் சுற்று வட்ட அளவு 527 மீட்டர். உயரம் 57 மீட்டர். பொற்படிகக் கற்கள் பத்தாயிரக்கணக்கான டன்கள் வேலைக்குத் தேவைப்பட்டன. அவைகள் அருகாமையில் இருக்கும் டிவோலி என்ற பட்டணத்தில் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு வகையான பளிங்குக் கல். பளிங்குக் கற்கள் கட்டிகளை ஒன்றுசேர்த்து வைப்பதற்கு 300 டன்கள் இரும்பு தேவைப்பட்டது. கட்டிடத்திற்கு வேண்டிய கூறுகளைத் தனித்தனியாய் உருவாக்கும் பொருட்கள் என்று சொல்லப்படுபவைகளை கட்டுபவர்கள் அதிகமாக உபயோகித்தனர். பாளங்களும், கற்தூண்களும் வேறொரு இடத்தில் செய்யப்பட்டு, கட்டிடம் கட்டும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கொலாசியம் கட்டப்பட்ட வேகத்தை இது விளக்குகிறது. இந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தை எழுப்புவதற்கு ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் போதுமானதாயிருந்தது என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.”
மார்க்கோ: “கொலோசியத்தை கட்டுவதற்கு எவ்வளவு அடிமைகள் வேலை செய்திருப்பார்கள் என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன், லூசா!”
லூசா: “பாரமான வேலைகளுக்கு ஒருவேளை போர்க் கைதிகளை உபயோகித்திருக்கலாம்; ஆனால் அவ்வேலைகளைச் செய்வதற்கு மட்டும்தான். கட்டிட வேலை விரைவாக முடிக்கப்பட்டு, பல்வேறு வகையான பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டது, வாழ்க்கைத் தொழிலர்களும், தொழில் வல்லுநர்களும் உபயோகப்படுத்தப்பட்டனர் என்பதைக் காட்டுகிறது.”
பவுலோ: “கொலோசியத்திற்கு எத்தனை மாடிகள் இருக்கின்றன?”
லூசா: “சீராக அமைக்கப்பட்டிருக்கும் வில்வளைவான கூரைகளையுடைய மூன்று மாடிகளை நீங்கள் வெளியே இருந்து காணலாம். தொடக்கத்தில் ஒவ்வொரு வில்வளைவும் ஒரு சிலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, ஒவ்வொரு மாடியிலும் 80 வில்வளைவுகள் இருந்தன. மூன்றாவது மாடிக்கு மேல், நான்காவது மாடியையும் அதன் சுவற்றில் பெரிய நீள்சதுர சன்னல்கள் இருப்பதையும் நீங்கள் காணலாம்.”
மார்க்கோ: “அதில் எவ்வளவு பார்வையாளர்கள் அமரலாம்?”
லூசா: “பெரும்பாலான பார்வைக் குறிப்பு நூல்கள் 45,000 பேர் அமருவதற்கும் 5,000 பேர் நிற்பதற்கும் போதுமானதாயிருந்தது என காட்டுகின்றன. வேறு சில ஆய்வுகள் 70,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அதில் கூடலாம் என்று காண்பிக்கின்றன. எதுவாயிருந்தாலும், பெரும் எண்ணிக்கையான ஆட்கள் அமருவதற்கு அது போதுமானதாயிருந்தது. கூரையைப் போன்று ஒரு மிகப் பெரிய பந்தல் அரங்கின் இருக்கைப் பகுதிக்கு மேல் இருந்தது, அது பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு அளித்தது.
“அரங்கம் 13 மீட்டர் தடிப்பான காரைக்கட்டு தளத்தின் மீது கட்டப்பட்டது, இதன் காரணமாக அது பல நூற்றாண்டுகளாக உறுதியாக நிலைத்திருக்கிறது. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தக் கொலாசியம் அதனுடைய சரித்திரத்தின்போது பல்வேறு தீ விபத்துக்களையும், பூமியதிர்ச்சிகளையும் தாங்கி நின்றிருக்கிறது. கலை-இலக்கிய மறுமலர்ச்சியின் காலத்தின் போதும், கலைப்பாணிக்குரிய காலத்தின் போதும் கட்டிடம் கட்டியவர்கள் இந்தக் கொலாசியத்தின் மிகப் பெரிய விரோதிகளாக இருந்தனர், அவர்கள் எடுத்துக்கொள்வதற்கு வசதியாகவும், மலிவானதாகவும் இருந்த பொற்படிகக் கற்களையும் பளிங்குக் கற்களையும் அரங்கத்தில் இருந்து எடுத்து உபயோகித்துக் கொண்டனர். இவ்வரங்கத்தில் இருந்து எடுத்த பொருட்களைக் கொண்டு ரோம் நகரில் உள்ள சில முக்கியமான கட்டிடங்கள் கட்டப்பட்டன அல்லது புதுப்பிக்கப்பட்டன. நாம் இப்போது உள்ளே செல்லலாம்.”
பவுலோ: “மனதை கவரும் எப்பேர்ப்பட்ட கட்டிட இடிபாடுகள்! அங்கே மத்தியில் என்ன இருந்தது என்று எனக்குச் சொல்லுங்கள் லூசா?”
லூசா: “காட்சிகளில் உபயோகப்படுத்திய சாதனங்களை வைப்பதற்கு, நிலத்துக்கு கீழாக இருந்த பகுதி அங்கே இருந்தது. மேடைக் காட்சித் தொகுதிகள், காட்டு மிருகங்களுக்கான கூண்டுகள், கருவிகள், அரங்கின் மட்டத்துக்கு காட்டு மிருகங்களையும், வாட்போர் வீரர்களையும் தூக்குவதற்கு சமஎடைகளையுடைய பாரந்தூக்கிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. நிலத்துக்கு கீழாக இருந்த பகுதியை மூடிய அரங்கின் தரை மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அதில் சிறிதளவு கூட ஏன் நிலைத்திருக்கவில்லை என்பதை இது விளக்குகிறது. அரங்கின் சுற்றுவட்டம் வலையால் அல்லது பாதுகாப்பான கம்பி வேலியால் மூடப்பட்டிருந்தது. கம்பங்களால் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்த வலையின் மீது இரும்பு முட்களும், தந்தத்தினாலான சுருள்களும் இருந்தன, இவை காட்டு மிருகங்கள் அதன் மீது ஏறாமல் தடை செய்தன. கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரங்கைச் சுற்றி அநேக வில்லாளர்கள் நிறுத்தப்பட்டனர்.”
பவுலோ: “உள்ளே செல்வதற்கு பார்வையாளர்கள் ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா?”
லூசா: “இல்லை, கொலாசியத்திற்குள் செல்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை, இலவசம். இது பேரரசர்களின் கொள்கையின் ஒரு பாகமாக இருந்தது, ஜனங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அரசர்கள் அவர்களுக்கு இலவசமான பொழுதுபோக்கு அளித்தனர். உண்மையில் இப்படிப்பட்ட காட்சிகள் ஜனங்களின் மனச்சாட்சிகளை கறைப்படுத்திய போதை மருந்தைப் போன்று இருந்தன. உண்பதற்கும், துய்த்து மகிழ்வதற்குமென்றே வாழ்க்கையை நடத்திய ரோம ஜனங்களின் வருந்தத்தக்க நிலையை விவரிப்பதற்கு ‘panem et circenses,’ ‘ரொட்டியும் சர்க்கஸ்களும்,’ என்ற பிரபலமான சொற்றொடரை ரோம கவிஞன் ஜூவனெல் உபயோகித்தார்.
“அரங்கில் இருக்கும் இருக்கை பிரிவுகள் காண்பிக்கிறபடி, ரோம சமுதாயம் பல வகுப்புகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முன் இருக்கைகள் ஆட்சிமன்ற உறுப்பினர்களுக்கு என ஒதுக்கி வைக்கப்பட்டன. இவைகளுக்குப் பின்னால் உயர்குடியினரின் இருக்கைகள் இருந்தன, மேலேயிருந்த மீதி இருக்கைகள் பெண்களுக்கும் அடிமைகளுக்கும் என்று இருந்தது.”
மார்க்கோ: “இங்கு தான் வாட்போர் வீரர்கள் சண்டையிட்டனரா?”
லூசா: “ஆமாம். munera, அல்லது இரண்டு வாட்போர் வீரர்களுக்கிடையே சண்டை, venationes, காட்டு மிருகங்களை வேட்டையாடுவது என்ற இரண்டு விதமான முக்கிய காட்சிகள் இருந்தன. குற்றவாளிகளும் இங்கு கொல்லப்பட்டனர், பாதுகாப்பு கொடுக்காமல் வாட்போர் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் அல்லது காட்டு மிருகங்களிடம் தூக்கியெறியப்பட்டனர். பொது மக்கள் ‘அனுபவித்து மகிழ்வதற்கு’ அவர்களுடைய மரணம் கோரமான காட்சியை அளித்தது.”
பவுலோ: “எனக்கு சரியாக ஞாபகமிருந்தால், வாட்போர் வீரர்கள் அடிமைகளாக இருந்தனர் அல்லவா?”
லூசா: “ஆமாம், போர்க் கைதிகளிலிருந்து இந்த அடிமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், தங்கள் உயிரை காத்துக் கொள்ள அவர்கள் எந்த வேலையையும் ஏற்றுக் கொண்டனர். சிலர் குற்றவாளிகளாய் இருந்தனர், மரண தண்டனையை தவிர்ப்பதற்கு வாட்போர் சண்டையில் மேலான வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்தனர். மற்றவர்கள் வாட்போர் வீரர்களாக தங்களை மனமுவந்து அளித்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பணியை துவங்குவதற்கு முன் அவர்களை பயிற்றுவிக்க பள்ளிகள் இருந்தன. சண்டையிடுவதற்கு வாள், அல்லது ஈட்டி, கவசம் அல்லது வலை, மூன்று கவர்முட்கள் உடைய ஈட்டி போன்ற பல்வேறு கருவிகளை பயன்படுத்துவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடந்த சம்பவங்கள் ludi gladiatorii, வாட்போர் விளையாட்டுகள் என்று அழைக்கப்பட்ட போதிலும், அப்படிப்பட்ட போராட்டங்கள் மனதை உருக்கும் அவலக் காட்சிகளாக இருந்தன, போட்டியிடுபவர்களில் ஒருவர் பொதுவாக முடிவில் இறந்துவிடுவது உண்டு.”
மார்க்கோ: “வாட்போர் வீரர்கள் அரங்கிற்குள் நுழைந்தபோது, அவர்கள் ‘Ave, Caesar, morituri te salutant,’ என்பது பொருள்படும் ‘இராயர் வாழ்க, சாகப் போகிறவர்கள் உம்மை வாழ்த்தி வணங்குகிறோம்’ என்ற வார்த்தைகளால் பேரரசரை வரவேற்றனர்.”
பவுலோ: “தோல்வியடைந்த வாட்போர் வீரனின் மரணத்தை கட்டளையிடுவதற்கு பேரரசர் கட்டை விரலை தலைகீழாக வைத்து தன் கையை நீட்டுவது போன்ற காட்சி திரைப்படங்களில் வருவதைப் பற்றியென்ன—அவைகள் உண்மையிலேயே நிகழ்ந்ததா?”
லூசா: “ஆமாம். அவ்வாறு நடந்தது. முற்காலங்களில் தோற்றுப் போனவரின் விதியை வெற்றி பெற்றவர் தீர்மானம் செய்தார். பின்னர் இந்த உரிமை பேரரசருக்கே கொடுக்கப்பட்டது, ஜனக்கூட்டத்தின் தீர்மானத்தைக் கேட்ட பிறகு அவர் தீர்ப்பு கூறினார். தோற்றுப் போனவர் தைரியமாக சண்டையிட்டதாக பார்வையாளர்கள் உணர்ந்தால், அவர்கள் தங்கள் கட்டை விரல்களை உயர்த்தி, ‘Mitte!’ (அவனை விட்டுவிடுங்கள்!) என்று கூச்சல் போட்டு, அவனைக் கொல்லாது விட்டுவிடும்படியாக கேட்டுக் கொள்வர். பேரரசரும் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தால், தோற்றுப் போனவர் பிழைத்துப் போக விட்டுவிடப்படுவர். அதற்கு மாறாக, தோற்றுப்போனவர் கோழைத்தனமாக நடந்து கொண்டார் என்று எண்ணினால், அவர்கள் தங்கள் கட்டை விரல்களை தலைகீழாக காட்டி ‘Iugula!’ (அவனைக் கொல்லுங்கள்!) என்று கூச்சலிட்டனர். அதே சைகையை பேரரசர் திரும்பத்திரும்பக் காண்பித்தால், வென்றடக்கப்பட்ட வாட்போர் வீரனின் மரணத் தீர்ப்பு முறைப்படி தெரிவித்தாகிவிட்டது. மரண அடிக்காக வெற்றிபெற்றவனிடம் தன் கழுத்தைக் கொடுப்பது தான் அவன் செய்யக்கூடிய ஒரே காரியம். இவை அனைத்தும் ஜனக்கூட்டத்தின் கைக்கொட்டி ஆர்ப்பரிப்பு, மகிழ்ச்சியான ஆரவாரம் ஆகியவற்றுக்கு இடையே நடந்தது. பின்னர் வெற்றிபெற்றவருக்கு விலைமதிப்புள்ள பரிசுகளும், தங்க நாணயங்களும் கொடுக்கப்பட்டன.”
மார்க்கோ: “எப்படிப்பட்ட கொடூரமான காட்சி!”
லூசா: “ஆமாம்! மனித இரத்தம் சொல்லர்த்தமாகவே வழிந்தோடியது. கொல்லப்பட்ட காட்டு மிருகங்களின் இரத்தத்தை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. மிருகங்களை உட்படுத்திய காட்சிகள், பெரும்பாலும் நவீன-நாளைய சர்க்கஸ் அரங்கத்தில் நாம் காண்பது போல் பயிற்சி தருபவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்த பயிற்றுவிக்கப்பட்ட காட்டு மிருகங்கள் ஈடுபட்டவைகளாகும். காட்டு மிருகங்கள் அடிக்கடி ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொண்டன அல்லது அவைகளை துரத்திக் கொன்றுபோட்டனர். அது உண்மையிலேயே பெரும் படுகொலையாக இருந்தது. இந்தக் கொலாசியம் தொடங்கி வைக்கப்பட்ட போது, 5,000 காட்டு மிருகங்கள் ஒரே நாளில் கொலைசெய்யப்பட்டன என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்!”
பவுலோ: “இப்படிப்பட்ட காரியங்களை ஜனங்கள் எவ்வாறு அனுபவித்து மகிழ முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது.”
லூசா: “இன்றுள்ள குத்துச்சண்டை போட்டிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தோற்றுப்போனவர் இரத்தத்தால் கீறுண்ட முகத்தோடு உணர்வற்று தரையில் தள்ளப்பட்டிருப்பதை பார்த்து பார்வையாளர்கள் தங்கள் அங்கீகாரத்தை உரத்த குரலில் தெரிவிக்கின்றனர். அல்லது இரத்தம், சாவு, எல்லா இடங்களிலும் உறைந்துபோன இரத்தம் ஆகியவற்றை காண்பித்து பொதுமக்களை உணர்ச்சிவசப்பட முயற்சி செய்யும் திரைப்படங்களைப் பற்றி என்ன? ஜனங்கள் இன்று அதே அளவு உணர்ச்சியற்றவர்களாய் இருக்கின்றனர்.
“ஆகையால் அந்த அரங்குகள் வன்முறையும், இரத்தக் கறைகளும் நிறைந்த இடங்களாக இருந்தன. இந்தக் காரணத்துக்காக பூர்வ கிறிஸ்தவர்கள் அடிக்கடி இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் கவனமாய் இருந்தனர். உண்மையில் மூன்றாம் நூற்றாண்டு எழுத்தாளனாகிய டெர்ட்டூலியன் அரங்கிற்குள் நடந்தவற்றை ‘குப்பைக்கூளம்’ என டி ஸ்பெக்டேகுலிஸ் (De spectaculis) என்ற தன் புத்தகத்தில் விவரித்தார், அப்படிப்பட்ட அரங்கம் கிறிஸ்தவர்களுக்கு ‘முற்றிலும் ஒவ்வாதவையாய்’ இருந்தது என்றும் அழுத்திக் காட்டினார்.”
மார்க்கோ: “சில கிறிஸ்தவர்கள் கொலாசியத்திற்குள் இரத்தசாட்சியின் மரணத்தை அனுபவித்திருக்கக்கூடுமா?”
லூசா: “காட்டு மிருகங்களால் துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் ரோம அரங்குகளில் இறந்தார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. சரித்திரப்பூர்வமான ஆதாரங்கள் இதை நிரூபிக்கின்றன. எபேசுவிலிருந்த அரங்கில் ஆபத்தான காட்டு மிருகங்களிடம் தான் பாதுகாப்பின்றி விடப்பட்டார் என்று 1 கொரிந்தியர் 15:32-ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்.
“ரோம் நகரில் எங்கேயோ ஓர் இடத்தில் கிறிஸ்தவர்கள் இரத்தசாட்சியின் மரணத்துக்கு ஆளானார்கள் என்பது நிச்சயம், ஆனால் கொலோசியத்திற்குள் அவர்கள் கொல்லப்பட்டனரா என்று நிர்ணயிப்பது கூடாத காரியம். ‘கிறிஸ்தவர்கள் இரத்தசாட்சிகளாக மரிப்பதற்கு கொலாசியம் ஓர் இடமாக இருந்தது என்று சரித்திரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டில்லை’ என்று தி என்ஸைக்ளோபீடியா யூனிவர்ஸேல் (The Enciclopedia Universale), புத்தகம் 4 சொல்கிறது. என்றபோதிலும், அநேக கத்தோலிக்க நூலாசிரியர்கள் அவ்வாறு இருந்ததாக உரிமைபாராட்டுகின்றனர். அதற்குப் பின்னான காலப்பகுதிகளில் தோன்றிய புராணக் கதைகளின் பேரில் அவர்கள் தங்கள் கருத்துக்களை ஆதாரமாக வைக்கின்றனர், அவைகள் கத்தோலிக்க குருமார்களின் மேலதிகாரத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
“என்றபோதிலும், வன்முறையான ஓர் உலகில் கிறிஸ்துவை பின்பற்றிய பண்டைய மக்கள் நடுநிலை வகிப்பதில் மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களாக இருந்தனர் என்ற உண்மை இன்றுள்ள கிறிஸ்தவர்களை கட்டியெழுப்புகிறது. அவர்கள் எங்கே மரித்தனர் என்பதை அறிந்துகொள்வது முக்கியமான காரியம் அல்ல, ஆனால் அவர்கள் தங்கள் உத்தமத்தன்மையை முழுமையாக காத்துக்கொண்டனர் என்பதை அறிவது தான் முக்கியம்.
“ரோம கட்டிடக் கலையின் இந்தப் பிரம்மாண்டமான அரங்கை சுற்றிப் பார்த்ததை நீங்கள் அனுபவித்தீர்களா?”
“நிச்சயமாக. நீங்கள் தெளிவாக விளக்கியதற்காக நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்கிறோம்” என்று பவுலோவும் மார்க்கோவும் பதிலளிக்கின்றனர்.
சரித்திரத்தின் மூலம் நம்மிடம் பேசும் கற்கள் அநேக ஆர்வத்துக்குரிய காரியங்களை வெளிப்படுத்தக்கூடும். கலை, கட்டிடம், ஆகியவற்றில் பண்டைய ரோமர்களுக்கு இருந்த தனிச்சிறப்புவாய்ந்த திறமைகளை இந்தக் கொலாசியம் சிறப்பித்துக் காட்டுகிறது. பாலங்கள், சாலைகள், கால்வாய்ப் பாலங்கள், நாடக அரங்குகள், கேளிக்கை அரங்குகள், கோவில்கள், மாளிகைகள் ஆகியவற்றைக் கட்டுவதில் கலைஞர்களாக அவர்கள் திகழ்ந்தனர். என்றபோதிலும், கொலோசியம் பயங்கரங்கள் நிறைந்த காட்சிகளுக்குரிய இடமாக இருந்தது. முற்காலங்களில் இருந்த கிறிஸ்தவர்களும், இன்றுள்ள கிறிஸ்தவர்களும்கூட பார்வையாளர்களாகவோ அல்லது மனமுவந்து பங்கெடுப்பவர்களாகவோ அச்செயல்களில் பங்குகொள்ள மறுக்கின்றனர். (g91 4/8)
[பக்கம் 28-ன் படம்]
இன்று கொலோசியத்திற்குள்
[பக்கம் 29-ன் படம்]
கொலோசியம் அதன் பொலிவு குன்றிய மகிமையில்