கொலோசியமும் பைபிள் தீர்க்கதரிசனமும்
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
இத்தாலியிலுள்ள ரோமின் கொலோசியத்தில் காணப்பட்ட பண்டைய எழுத்துப்பொறிப்பு ஒன்று, எருசலேமின் அழிவைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனத்தை மறைமுகமாக ஊர்ஜிதப்படுத்தக்கூடும். தெளிவாகவே அந்த எழுத்துப்பொறிப்பு, பொ.ச. 80-ல் கொலோசியம் கட்டப்பட்டு, அது திறக்கப்பட்டதுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஜெர்மனியில், ஹைடல்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் கேஸா ஆல்ஃபாயல்டி என்பவரால் மீண்டும் உருவமைக்கப்பட்டபடி, அந்த எழுத்துப்பொறிப்பு இவ்வாறு வாசிக்கிறது: “பேரரசராகிய டைட்டஸ் வெஸ்பேஷியன் சீஸர் அகஸ்டஸ், கொள்ளைப்பொருட்களின் வரவைக் கொண்டு புதிய கலையரங்கத்தை எழுப்பினார்.” எவ்வளவு கொள்ளைப்பொருட்கள்?
“யூதர்களுக்கு விரோதமான போரிலிருந்து எடுத்துக் கொண்டுபோகப்பட்ட ஏராளமான கொள்ளைப்பொருட்களைப் பற்றி, அதுவும் குறிப்பாக, எருசலேமில் இருந்த ஆலயத்தின் பொன்னாலான அலங்கார பொருட்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் ஆல்ஃபாயல்டி. இயேசுவுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இந்த ஆலயம் அழிக்கப்பட்டது. (மத்தேயு 24:1, 2; லூக்கா 21:5, 6) கொலோசியம்—யூதப் போரிலிருந்து கிடைத்த கொள்ளைப்பொருட்களைச் சுமந்து செல்லும் ரோம வெற்றியாளர்களைச் சித்தரிக்கும் புகழ் பெற்ற டைட்டஸ் வளைவுடன்கூட—ரோமர்களின் வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வெற்றிக்கு ஒரு நினைவுச்சின்னம் என்று ஆல்ஃபாயல்டி இறுதியாகக் கூறுகிறார்.