அதையும் பொழுதுபோக்கு என்றனர்
அந்த வட்டரங்கம் மிகவும் பரபரப்பாய் இருந்தது. பண்டைய ரோமின் மிகக் கிளர்ச்சியூட்டும் காட்சிகளில் ஒன்றைக் காண ஆயிரக்கணக்கானோர் அங்குக் கூடியிருந்தனர். கொடிகளும், ரோஜா மலர்களும், பல வண்ண சித்திரத் தொங்கலாடைகளும் குதூகலத்தைத் தெரிவிக்கும் வகையில் அந்த அரங்கின் மையப்பகுதியிலிருந்த களத்தை அலங்கரித்தன. செயற்கை நீரூற்றுகள் நறுமண நீரை இறைத்து, அங்கிருந்த காற்றுக்கு இன்ப மணமூட்டின. செல்வந்தர்கள் தங்களிடமுள்ளவற்றிலேயே அதிக மினுமினுப்பான உடைகளை உடுத்தியிருந்தனர். அந்தக் கூட்டத்திலிருந்தவர்களின் அரட்டையுடன் சிரிப்பொலிகளும் சேர்ந்து எதிரொலித்தன; ஆனால் இந்தக் கூட்டத்தினரின் விளையாட்டுத்தனம், நடக்கவிருக்கும் நிகழ்ச்சியின் பயங்கரத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தையே தந்தது.
சீக்கிரத்தில், டுபை எனப்படும் எக்காள அறிவிப்பொலி, வாட்போர் வீரர் இருவரை வரவழைத்தது. நெஞ்சில் கொஞ்சமும் ஈரமில்லாக் கொடுமையுடன் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் வாளால் வெட்டிக்கொள்ள ஆரம்பிக்கையில், அந்தக் கூட்டத்தினருக்குப் பைத்தியமே பிடித்துவிட்டதுபோல இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துப்போய் போட்ட சத்தத்தில், அந்த வாள்கள் ஒன்றோடொன்று மோதும் சத்தம்கூட காதில் விழவில்லை. திடீரென, சாமர்த்தியமாய் தன் வாளைச் சுழற்றிய ஒரு வீரன், அவனுடைய எதிரியைப் பலமாய் வெட்டி வீழ்த்தினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் பிரதிபலிப்பை வைத்துத்தான் கீழே விழுந்த அந்த வாட்போர்வீரனின் முடிவைச் சொல்லமுடியும். அவர்கள் தங்கள் கைக்குட்டைகளைச் சுழற்றினால், அவன் உயிருடன் இருப்பவனாவான். கூட்டத்தினர் தங்கள் கட்டைவிரல்களால் செய்துகாட்டும் ஒரேயொரு செய்கையின் அடிப்படையில், அந்தக் கூட்டம்—பெண்களையும் சிறுமிகளையும் உள்ளிட்டது—மரண அடியைக் கட்டளையிட்டது. கொஞ்ச நேரத்துக்குள்ளாக, உயிரற்ற அவ்வுடல் அந்த மையப்பகுதியின் தரையிலிருந்து இழுத்துச்செல்லப்பட்டது; இரத்தத்தில் தோய்ந்திருந்த அந்த மண், மண்வாரிகளால் கிளறிவிடப்பட்டது. அந்த இடத்தில் வேறு மணல் பரப்பப்பட்டது; அந்தக் கூட்டமோ, அடுத்து வரவிருந்த இரத்தவெள்ளத்தைக் காணத் துடித்துக்கொண்டிருந்தது.
பண்டைய ரோமில் வாழ்ந்துவந்த பலருக்கு, அது பொழுதுபோக்காய் இருந்தது. “இரத்தஞ்சிந்துதலில் இன்பம் காணும் இச்செயலுக்கு, ஒழுக்கநெறியை உறுதியாய்ப் பின்பற்றினவர்களும்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்பதாக ரோம்: முதல் ஆயிர ஆண்டுகள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் கூறுகிறது. ரோமில் நிகழ்த்தப்பட்ட கீழ்த்தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் ஒரேயொரு வகையாகவே அந்த வாட்போர் விளையாட்டு இருந்தது. இரத்த வெறியுடைய காட்சியாளர்களை மகிழ்விப்பதற்காக மெய்வாழ்க்கையில் நடந்த கடற்போர்களும் மேடையில் நிகழ்த்திக்காட்டப்பட்டன. பொதுமக்கள் எதிரிலேயே மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன; அப்போது, நியாயத்தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளி ஒரு மரச்சட்டத்தில் கட்டப்பட்டு, பசித்தீயால் வாட்டப்பட்ட காட்டு விலங்குகளால் பட்சிக்கப்படுவார்.
இரத்த வெறியுடையவர்களாய் இராதவர்களுக்கு, வேறுவித மேடை நாடகங்களை ரோம் நடத்தியது. அபிநயக்கூத்துக்களில்—அன்றாட வாழ்வைப் பற்றிய குறுநாடகங்களில்—“விபசாரமும் காதல் விவகாரங்களுமே முக்கிய தலைப்புகளாக இருந்தன” என்றும், “வக்கிரமான பேச்சும், மோசமான நகைச்சுவையும், அருவருப்பான முகபாவனைகளும், கீழ்த்தரமான உடல் அசைவுகளும், எல்லாவற்றுக்கும் மேலாக, குழலோசைக்கு ஏற்ப ஆடும் ஆபாசமான நடனங்களும் நிறைந்தவையாய் இருந்தன” என்றும் தொடக்கப் பேரரசில் ரோம வாழ்வும் நடத்தையும் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் லூட்விக் ஃப்ரீட்லெண்டர் எழுதினார். தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவின்படி, “ரோமப் பேரரசின் காலத்தில், அபிநயக்கூத்து மேடையில், விபசார நடிப்புகள் உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டன என்பதற்கான அத்தாட்சிகளும் இருக்கின்றன.” ஆகவே, அந்த அபிநயக்கூத்தை, “ஒழுக்கக்கேடு, அசிங்கம் ஆகியவற்றை அப்படியே எடுத்துக்காட்டும் வஞ்சப்புகழ்ச்சியின் அப்பட்டமான அத்தாட்சி” என்றும், “மிகவும் அசிங்கமான காட்சிகள் வெகுவாய் போற்றப்பட்டன” என்றும் ஃப்ரீட்லெண்டர் அழைத்தது சரியே. a
இன்றைய நிலையென்ன? பொழுதுபோக்கில் மனிதனின் நாட்டம் மாறியிருக்கிறதா? பின்வரும் கட்டுரையில் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் அத்தாட்சியை எண்ணிப்பாருங்கள்.
[அடிக்குறிப்பு]
a சில சமயங்களில், ஒரு நாடகத்தைத் தத்ரூபமாகக் காட்டுவதற்காக, அந்த மேடையிலேயே ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்படும். ரோமின் நாகரிகம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிட்டுக் காட்டுவதாவது: “அவல நாடகத்தின் உச்சக்கட்டத்தில், மரணத்தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை அந்த நடிகரின் இடத்தில் வைத்துக் கொல்லுவது சர்வசாதாரணம்.”
[பக்கம் 3 படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck