பொழுதுபோக்குக்கு என்ன நேர்ந்திருக்கிறது?
தங்களுடைய கலாச்சார ஏணியின் உச்சியில் இருந்தவர்களாகக் கருதப்பட்ட பண்டைய ரோமர்கள், உடன் மனிதருக்கு ஏற்படும் துயரார்ந்த நிலையை எவ்வாறு பொழுதுபோக்காகக் கண்டுகளிக்க முடிந்தது? “புதிய, சக்திவாய்ந்த ஊக்கிகளுக்கான பேராவலால் மட்டுமே அது விளக்கப்பட முடியும்” என்று புறமத தத்துவத்துடன் கிறிஸ்தவத்தின் அபிப்பிராய பேதம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் கேர்ஹார்ட் ஊல்ஹார்ன் எழுதுகிறார். “தங்களால் முடிந்தளவான வழிகளிலெல்லாம் இன்ப அனுபவங்களால் தெவிட்டிப் போயிருக்கும் மக்கள், . . . வேறெங்கும் இனி கிடைக்காத ஒரு பரவசமூட்டும் அனுபவத்தைத் தேடிச்சென்றனர்.”
இன்றைய மக்களில் பலர், அதைப் போலவே, ‘புதிய, சக்திவாய்ந்த ஊக்கிகளுக்கான பேராவலை’ வெளிக்காட்டுகின்றனர். மெய்வாழ்க்கையில் கொல்லப்படுவதையோ, ஒழுக்கக் கட்டுப்பாடற்ற விதத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளையோ கண்டுகளிப்பதற்காக அவர்கள் கூடிவராமலிருக்கலாம் என்பது மெய்யே. ஆனால், பொழுதுபோக்குக்கான அவர்களுடைய தெரிவு, வன்முறை, பாலியல் போன்றவற்றால் அவர்கள் ஆட்டிப்படைக்கப்படுவதையே வெளிக்காட்டுகிறது. சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
திரைப்படங்கள். சமீப ஆண்டுகளில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், “தப்புத்தண்டாவுக்கு முதலிடம்” கொடுத்திருப்பதாக திரைப்பட விமர்சகர் மைக்கேல் மெட்வெட் உறுதியுடன் கூறுகிறார். அவர் மேலும் கூறுவதாவது: “திரைப்படத்துறையின் அடிப்படை உள்நோக்கானது; பெருந்தன்மை, நற்குணம் ஆகியவற்றைப் பற்றிய சித்தரிப்புகளைவிட கொடுமை, சீர்குலைந்த மனோபாவங்கள் ஆகியவற்றைப் பற்றிய சித்தரிப்புகளுக்கே அளவுக்கு அதிகமான கவனத்தையும் மரியாதையையும் காட்டுவது தகுதியாய் இருப்பதைப் போல் தோன்றுகிறது.”
தொலைக்காட்சியுடன் போட்டிபோடும் நிலை, திரையரங்குகளுக்குள் மக்களைத் தந்திரமாய்க் கவர்ந்திழுப்பதற்காக, நடைமுறையில் எதை வேண்டுமானாலும் செய்யும்படி திரைப்படத் தயாரிப்பாளர்களை வற்புறுத்தியிருக்கிறது. “மக்கள் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகள் அனைத்தையும்விட மேலோங்கியிருக்கும், கூரிய சுவையுணர்வும் கவர்ச்சியுமுடைய படங்களே எங்களுக்குத் தேவை” என்று திரைப்பட ஸ்டூடியோ ஒன்றின் தலைவர் கூறுகிறார். “நாங்கள் இரத்தக்கறைபடிந்த காட்சிகளையோ, [அருவருப்பான] பேச்சுக்களையோ காட்டுவதற்காக உழைக்கவில்லை; ஆனால், அப்படிப்பட்ட படங்களையே இன்று காட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” உண்மையில், சினிமாவில் காட்டப்படும் மிகவும் தத்ரூபமான வன்முறைக் காட்சிகளாலும்கூட பலர் இனிமேலும் அதிர்ச்சியடைவதில்லை. “மக்கள் வன்முறைக்காட்சிகளைப் பார்த்துப் பார்த்து மரத்துப்போகின்றனர்” என்று திரைப்பட இயக்குநர் ஆலன் ஜே. பக்கூலா கூறுகிறார். “எதிரிகளால் கொன்று குவிக்கப்படுவோரின் எண்ணிக்கை நான்கு மடங்காகியுள்ளது; வெடிகுண்டின் உபயோகம் தீவிரமாய் அதிகரித்துவருகிறது; அவர்களோ, அதனால் அதிர்ச்சியடைவதேயில்லை. அவர்கள் மிருகத்தனமான உணர்வுகளுக்காக ஒரு தீராப்பசியை வளர்த்திருக்கிறார்கள்.”
தொலைக்காட்சி. ஐரோப்பா, பிரேஸில், ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல பாகங்களில், டிவியில் காட்டப்படும் ஆபாசமான காட்சிகள் நவீன காலங்களில் சர்வசாதாரணமாய் இருக்கின்றன. அமெரிக்காவில், சராசரியாக டிவி பார்க்கும் ஒருவர், சுமார் 14,000 ஆபாசமான படங்களையோ, பேச்சுக்களையோ ஓர் ஆண்டில் பார்க்கிறார். “செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களும், ஒளிவுமறைவற்ற பல காட்சிகளும் அதிகரித்துக்கொண்டே வருவதானது, அவை குறைவதற்கான அத்தாட்சியைக் கொடுக்கவில்லை” என்று ஓர் ஆய்வுக்குழு அறிக்கை செய்கிறது. “ஒருகாலத்தில், ஒழுக்கங்கெட்டவையாயும் நாட்டங்கொள்ளப்படாதவையாயும் எண்ணப்பட்ட நெருங்கிய உறவினருடன் தகாப்புணர்ச்சி கொள்வது, தானோ பிறரோ அடையும் வேதனையில் இன்பம் காண்தல் (sadomasochism), மிருகப் புணர்ச்சி ஆகிய காட்சிகள், இப்போது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, லாபம்தரும் ஒரு சிறந்த வழியாகும் அளவுக்குச் சென்றிருக்கின்றன.”
வாச்சிங் அமெரிக்கா என்ற புத்தகத்தின்படி, டிவி நிகழ்ச்சிகளில் மோசமான காட்சிகளையெல்லாம் அனுமதிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “செக்ஸ் படக்காட்சிகளைக் காட்டுவது நன்றாக விலைபோகிறது. . . . புண்படுத்தப்படும் ரசிகர்களைவிட அதிகமான ரசிகர்களைத் தாங்கள் பரவசமடையச் செய்துவந்ததாகவும், எக்காலத்தையும்விட ஒளிவுமறைவில்லாத பாணியிலான நிகழ்ச்சிகளின் பேரில் இருந்த தடைகளை அகற்றுவதற்கு அனுமதி அளிப்பதன் மூலம், அவர்கள் லாபகரமான விற்பனை நிகழ்ச்சிகளைப் படிப்படியாக அதிகரித்திருப்பதாகவும் நெட்வொர்க்குக்காக டிவி நிகழ்ச்சிகளைத் தயாரித்தளிக்கும் நிறுவனங்கள் கண்டுபிடித்திருக்கின்றன.”
வீடியோ கேம்ஸ். ஒப்பிடுகையில் அறியா யுகமாய் இருந்தபோது வெளியிடப்பட்ட பேக்-மேன், டாங்க்கி காங் ஆகியவை, பயமுறுத்துவதாயுள்ள கொடூரமான விளையாட்டுகளை வெளியிட்டுவரும் ஒரு புதிய சகாப்தத்துக்கு விட்டுக்கொடுத்து விட்டது. “டிவியையும் ஒரு திரைப்படத்தையும்விட மோசமானது. மற்றவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரே வழி, வன்முறை மட்டுமே” என்ற செய்தியை இவை தெரிவிக்கின்றன என்பதாக இவ் விளையாட்டுகளைப் பற்றி பேராசிரியர் மார்ஷா கின்டெர் விளக்குகிறார்.
பொதுமக்கள் மீதான கரிசனையினால், ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு பிரசித்திபெற்ற தயாரிப்பு நிறுவனம், அங்குத் தயாரிக்கப்படும் வீடியோ கேம்ஸ்களின்மீது, தரம் பிரிக்கும் முறை ஒன்றைப் பயன்படுத்துகிறது. “எம்ஏ-17” என்ற ஒரு லேபில்—“முதிர்ச்சியான” விளையாட்டு, 17 வயதுக்குக் கீழானோருக்குப் பொருத்தமற்றது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவது—அதிக வன்முறையையும், செக்ஸ் விஷயங்களையும், புனிதத்தன்மையைக் கெடுக்கும் காட்சிகளையும் உள்ளடக்கலாம். என்றபோதிலும், “முதிர்ச்சியான” தரம் ஒரு விளையாட்டின் கவர்ச்சியைக் கூட்டுவதாகவே இருக்கிறது என்று சிலர் பயப்படுகின்றனர். “எனக்கு 15 வயதே ஆகியிருந்து, நான் ஓர் எம்ஏ-17 லேபலைப் பார்த்தால், என்ன ஆனாலும்சரி, அந்த விளையாட்டை நான் நிச்சயம் வாங்கிவிடுவேன்” என்று வீடியோ கேம்ஸில் ஆர்வமிக்க இளைஞன் ஒருவன் சொல்லுகிறான்.
இசை. 1995-ன் முடிவில், முன்னணியிலிருக்கும் 40 ஆல்பங்களில் 10 ஆல்பங்கள் மட்டுமே புனிதத்தன்மையைக் கெடுக்காதவையாகவோ, அல்லது போதைப்பொருள்கள், வன்முறை, செக்ஸ் ஆகியவற்றைப் பற்றிய படங்கள், மற்றும் பேச்சுக்களைக் கொண்டிராதவையாகவோ இருந்தனவென்பதாக பிரபல இசையில் அடங்கியிருப்பவற்றை நுணுக்கமாய் ஆராய்ச்சி செய்யும் ஒரு பத்திரிகை உறுதியுடன் கூறுகிறது. “வளரிளம் பருவத்திற்கு முந்திய வயதினருக்குக் கிடைக்கக்கூடிய இசை, வெகு அதிர்ச்சியூட்டுவதாயும், பார்க்கப்போனால் அதன் பெரும்பகுதி, சூனியவாதம் சம்பந்தமாகவே இருக்கிறது” என்று செயின்ட் லூயிஸ் போஸ்ட்-டிஸ்பேச் அறிக்கை செய்கிறது. “வளரிளம் பருவத்திலுள்ள சிலருக்குக் கவர்ச்சியாய் இருக்கும் [இசை], கோபமும் நம்பிக்கையின்மையும் நிறைந்ததாயும், இந்த உலகமும் இசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் தனிநபரும் அழிவின் பாதையில் இருப்பதாகவும் ஏற்படும் உணர்வுகளைத் தூண்டி உற்சாகமளிக்கிறது.”
டெத் மெட்டல், “கிரஞ்” ராக், “கேங்ஸ்டா” ராப் ஆகிய இசைகள் வன்முறையில் திருப்தியடைந்திருப்பதாய்த் தோன்றுகின்றன. சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிக்கல் அறிக்கை ஒன்றின்படி, “பொழுதுபோக்கு நிறுவன உறுப்பினர்களில் பலர், மிகவும் கொடூரமான குழுக்களே வெற்றிபெற்றவையாகவும் பிரசித்திபெற்றவையாகவும் விரைவில் ஆகிவிடப்போவதை முன்குறித்துக்காட்டுகின்றனர்.” கோபம், மரணம் ஆகியவற்றைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பிரபலமடைந்திருக்கின்றன. சில குழுக்கள் மிகவும் அனுகூலமான விஷயத்தை எடுத்துச்சொல்ல முற்பட்டிருப்பது உண்மைதான். இருந்தபோதிலும், “குற்றம் சொல்ல முடியாத இசைக்கு அவ்வளவு கிராக்கி இல்லை என்பதை அத்தாட்சிகள் காட்டுகின்றன” என்று க்ரானிக்கல் குறிப்பிடுகிறது.
கம்ப்யூட்டர்கள். இவை பல்வேறு நன்மைகளைத் தரும் மதிப்புமிக்க கருவிகள். என்றபோதிலும், கீழ்த்தரமான விஷயங்களைப் பற்றிய தகவல் அளிப்பதற்காகவும் சிலரால் இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இந்தக் கீழ்த்தரமான விஷயம், “மிதமிஞ்சிய வினோதமான விஷயங்களிலிருந்து விபசாரம், சிறுவர் புணர்ச்சி வரை அடங்கினதாய்—பல பெரியவர்கள் மாத்திரமல்ல, அவர்களுடைய பிள்ளைகளும்கூட அதிர்ந்துபோகும் அளவுக்கு, படங்களையும் எழுத்துக்களையும்” உட்படுத்துவதாய் மக்லீன்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது.
வாசிப்புப் பொருள். பிரபலமான பல புத்தகங்களில், செக்ஸும் வன்முறையும் மலிந்திருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் இருந்துவரும் சமீபத்திய பாணியாவது, “அதிர்ச்சிக் கதை” என்றழைக்கப்பட்டிருக்கும்—எட்டு வயதே அடைந்துள்ள இளைஞர்களைக் குறிவைத்துத் தயாரிக்கப்படும்—திகிலூட்டும் பயங்கரக் கதைகளாகும். இப் புத்தகங்கள் “மிக இளசுகளாய் இருப்பவர்களையும் மரத்துப்போகச் செய்து, மனத்தின் திறன் செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, அதைக் கட்டுப்படுத்துவதாய்” இருக்கின்றன என்பதாக, நியூ யார்க் ஆசிரியர் (ஆங்கிலம்) என்ற பத்திரிகையில் எழுதியிருக்கும் டயனா வெஸ்ட் உறுதியுடன் கூறுகிறார்.
ஐக்கிய மாகாணங்கள், ஜப்பான், ஹாங் காங் ஆகிய இடங்களில் பிரசுரிக்கப்படும் காமிக் புத்தகங்கள் பல, “கொடிய, மிருகத்தனமான போர் விஷயங்களையும், நரமாமிசத்தை உண்ணுவது போன்றவற்றைச் சித்தரிக்கும் விஷயங்களையும், சிரச்சேதம் செய்யும் காட்சிகளையும், சாத்தானியக் கொள்கையையும், கற்பழிப்புக்காட்சிகளையும், புனிதத்தன்மையைக் கெடுக்கும் தன்மையுடைய காட்சிகளையும் முக்கியப்படுத்திக் காட்டுகின்றன” என்று டிவி வன்முறை தொடர்பான தேசிய ஒருமைப்பாடு (NCTV) நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு அறிக்கை காட்டுகிறது. “இந்தப் பத்திரிகைகளிலுள்ள வன்முறை, கீழ்த்தரமான செக்ஸ் விஷயங்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் அளவு அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது” என்று NCTV-யின் ஆய்வு இயக்குநர் டாக்டர் தாமஸ் ரேடெக்கி கூறுகிறார். “நாம் நம்மையே எந்தளவுக்கு மரத்துப்போகச் செய்திருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது.”
எச்சரிக்கைக்கான அவசியம்
இன்றைய உலகில் செக்ஸுக்கும் வன்முறைக்கும் ஒரு வசீகரம் இருக்கிறதென்பது தெளிவாய் இருக்கிறது; அது பொழுதுபோக்குத் துறையில் வெளிப்படுத்திக் காட்டப்படுகிறது. கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுலால் பின்வருமாறு விவரிக்கப்பட்டிருப்பதைப் போலவே இந்தச் சூழ்நிலை இருக்கிறது: “உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.” (எபேசியர் 4:19) நல்ல காரணத்தோடுதான் இன்று வாழும் பலர், சிறந்ததாயிருக்கும் பொழுதுபோக்கைத் தேடுகின்றனர். நீங்களும் அப்படிப்பட்ட ஒன்றைத் தேடுகிறீர்களா? அப்படியானால், பின்வரும் கட்டுரை காட்டப்போகிறபடி, தரமான பொழுதுபோக்கை நீங்கள் கண்டடையலாம் என்பதை அறிகையில் மகிழ்ச்சியடைவீர்கள்.