தொலைக்காட்சி உலகத்தை எவ்வாறு மாற்றியிருக்கிறது
சென்ற கோடை காலத்தின் போது, உலகை ஒரு விளையாட்டு அரங்காக தொலைக்காட்சி மாற்றியது. இத்தாலியிலுள்ள ரோம் நகரில் தெருக்கள் மனித நடமாட்டமின்றி இருந்தன. சுமார் 2 கோடி 50 லட்சம் இத்தாலியர்கள் உலகக் கோப்பை உதைப்பந்தாட்டப் போட்டிகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். அதே காரணத்தை முன்னிட்டு, அர்ஜென்டீனாவிலுள்ள பியுன்னஸ் ஆரிஸ்-ல் தெருக்கள் அதேப் போன்று வெறிச்சோடிக் கிடந்தன, மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கேமரூனில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சி குரல் எழுப்புகையில், அதே சாம்பல்நிற-நீல ஒளி மினுக்கு மினுக்கென சன்னல்களில் பளிச்சிட்டன. போரால் பிளவுபட்ட லெபனனில் போட்டிகளை கவனிப்பதற்காக போர் வீரர்கள் இயங்காமல் கிடக்கும் தங்கள் பீரங்கி வண்டிகள் மீது தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்தனர். அந்தப் போட்டி நிகழ்ச்சி அதன் உச்சக்கட்டத்தை அடைவதற்குள், தீக்கொழுந்திடம் பூச்சிகள் கவரப்படுவது போல் பூமியின் ஐந்தில் ஒரு பங்கு ஜனத்தொகை, அவர்களுடைய முகங்கள் அதன் மங்கலான ஒளியால் பிரகாசிக்க அதை கவனித்துக் கொண்டிருந்தனர்.
இந்த மிகப் பெரிய டிவி நிகழ்ச்சி தனித்தன்மை வாய்ந்ததாக இல்லை. 1985-ல் பூமியின் மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை—ஏறக்குறைய 1,60,00,00,000 மக்கள்—லைவ் ஏய்ட் என்றழைக்கப்பட்ட ராக் இசை அரங்கு நிகழ்ச்சியை கவனித்தனர். ஐஸ்லாந்திலிருந்து கானா வரை 12 செயற்கை கோள்கள் அந்நிகழ்ச்சியை சுமார் 150 தேசங்களுக்கு ஒளிக்கதிர் மூலம் பரப்பின.
டிவி—எங்கும் காணப்படும் இப்பெட்டி சூழ்ச்சித் திறம் மிக்க புரட்சியின் மையத்தில் இருந்திருக்கிறது. 1920 மற்றும் 1930-களில் இருந்த சிறிய மினுமினுக்கும் தொலைக்காட்சி திரைகளிலிருந்து, விசேஷ அறிவோடும் திறனோடும் செய்யப்பட்டிருக்கும் இன்றுள்ள திரைகள் வரை தொழில்நுட்பம் வளர்ந்தது. அது கண்ணைப் பறிக்கும் நிறத்தோடும் தெளிவோடும் பூமி முழுவதிலும் விரைவில் பெருக ஆரம்பித்தது. 1950-ல் 50 லட்சத்துக்கும் குறைவான தொலைக்காட்சி பெட்டிகள் உலகில் இருந்தன. இன்று, ஏறக்குறைய 75,00,00,000 தொலைக்காட்சி பெட்டிகள் இருக்கின்றன.
உலகக் கோப்பை உதைப்பந்தாட்ட போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள், ஒரு தனித்த தகவல் கோவையின் மூலம் பூமியை ஒன்றுசேர்க்கும் டிவி-யின் வல்லமையை எடுத்துக்காட்டுகின்றன. ஜனங்கள் தங்களைச் சுற்றியிருக்கும் உலகைப் பற்றி கற்றறியும் விதத்தை டிவி மாற்றியிருக்கிறது. செய்திகள், கருத்துக்கள், மேலும் கலாச்சாரத்தையும் மதிப்பீடுகளையும்கூட, ஒரு சமயம் தடங்கல்களாக இருந்த அரசியல் மற்றும் நிலஇயல் சார்ந்த எல்லைகளையும் எவ்வித கஷ்டமின்றி தாண்டி ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்துக்குப் பரவுவதற்கு உதவிசெய்திருக்கிறது. டிவி உலகை மாற்றியிருக்கிறது. அது உங்களையும் மாற்றக்கூடும் என்று சிலர் சொல்கின்றனர்.
முதல் பைபிள் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்-ன் அச்சாலையிலிருந்து 1455-ல் வெளிவந்தபோது, பெரும் அளவிலான செய்தி தொடர்புகளில் அவர் புரட்சி செய்ததாக பரவலாக எண்ணப்பட்டது. இப்போது செய்தி ஒன்று உடனடியாக பெரும் எண்ணிக்கையான ஆட்களுக்கு குறுகிய நேரத்துக்குள், மிகக் குறைந்த செலவில் சென்றெட்ட முடியும். விரைவில் அரசாங்கங்கள் அச்சாலையின் வல்லமையைக் கண்டு, அதை உரிமை வழங்கும் சட்டங்களோடு கட்டுப்படுத்த முயற்சி செய்தன. ஆனால் அச்சடிக்கப்பட்ட சாதனம் பெரும் எண்ணிக்கையான ஆட்களைச் சென்றெட்டியது. ஒரே நாளில் 10,000 மனங்களில் ஒரே கருத்தை பதிய வைக்கும் வியக்கத்தக்க வல்லமை செய்தித்தாள்களுக்கு இருந்தது என்று 1800-களின் ஆரம்பத்தில் சரித்திர ஆசிரியர் அலெக்ஸிஸ் டி டோக்வில் குறிப்பிட்டார்.
இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகளை சிந்தித்துப் பாருங்கள். இது ஒரே கருத்தை கோடிக்கணக்கானோரின் மனங்களில் பதிய வைக்கக்கூடும்—எல்லாவற்றையும் ஒரே நொடியில்! அச்சடிக்கப்பட்ட பக்கத்தைப் போல் இல்லாமல், வாசிப்பது என்ற சிக்கலான கலையில் கல்விப்புகட்ட வேண்டிய தேவையை அது அதனை காண்பவர்களிடத்தில் கேட்பதில்லை, அல்லது அவர்கள் தங்கள் மனதில் உருவங்களையும் கருத்துக்களையும் அவர்களே ஏற்படுத்திக்கொள்ளும்படி அது அவர்களைக் கேட்பதில்லை. அது அதன் செய்திகளை படங்களோடும், ஒலியோடும், அவைகள் ஏற்படுத்தும் எல்லாக் கவர்ச்சியோடும் அளிக்கிறது.
தொலைக்காட்சியின் வல்லமைமிக்க பேராற்றலைக் காண்பதற்கு அரசியல்வாதிகளுக்கு அதிக காலம் எடுக்கவில்லை. ஐக்கிய மாகாணங்களில், ட்வைட் D. ஐசன்ஹோவர் 1952-ல் நடந்த ஜனாதிபதி போட்டியில் தொலைக்காட்சியை திறம்பட்ட விதத்தில் உபயோகித்தார். டியூப் ஆஃப் பிளென்டி—தி எவலூஷன் ஆஃப் அமெரிக்கன் டெலிவிஷன் (Tube of Plenty—The Evolution of American Television) என்ற புத்தகத்தின்படி, ஐசன்ஹோவர் செய்திபரப்பு முறைகளில் அதிக “வாணிபத்தன்மை” கொண்ட வேட்பாளராக இருந்ததே தேர்தலில் அவருடைய வெற்றிக்குக் காரணம். 1960-ம் ஆண்டு தேர்தலில் ரிச்சர்ட் M. நிக்சன் மீது ஜான் F. கென்னடியின் வெற்றியில் டிவி மிகப் பெரிய பங்கை வகித்திருக்கக்கூடும் என்று அப்புத்தகம் காண்பிக்கிறது. வேட்பாளர்கள் டிவி-யில் விவாதிக்கையில், நிக்சனைவிட கென்னடி பார்வையாளர்களிடம் வாதத்தில் அதிக மதிப்பைப் பெற்றார். என்றபோதிலும், வானொலியின் மூலம் அதே விவாதத்தைக் கேட்டவர்கள் வெற்றி தோல்வியற்ற நிலையில் முடிவுற்றதாக கருதினர். ஏன் இந்த வித்தியாசம்? நிக்சன் நலிவடைந்தும் வெளிறிப்போன நிலையிலும் காணப்பட்டார், ஆனால் கென்னடி நல்ல உடற்கட்டும் நிறமும் உடையவராய், நம்பிக்கையையும் உள்ளுரத்தையும் வெளிக்காட்டினார். தேர்தலுக்குப் பிறகு, தொலைக்காட்சியைப் பற்றி கென்னடி இவ்வாறு சொன்னார்: “அந்தச் சாதனமின்றி ஒரு ஜெபத்தைக்கூட நாங்கள் கொண்டிருந்திருக்க முடியாது.”
“அந்தச் சாதனம்” உலக முழுவதும் தன் வல்லமையை தொடர்ந்து உணரச்செய்து கொண்டிருந்தது. சிலர் அதை மூன்றாவது உலக வல்லரசு என அழைக்கத் தொடங்கினர். தேசிய எல்லைகள், பெருங்கடல்கள் ஆகியவற்றை கடந்தும்கூட தங்கள் தொலைக்காட்சி குறிகளை ஒளிக்கதிர் மூலம் தெரிவிப்பதற்கு செயற்கை கோள் தொழில்நுட்பம் செய்தி பரப்புபவர்களுக்கு உதவியது. உலகத் தலைவர்கள் சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கும் தங்கள் எதிராளிகளை பழித்துரைப்பதற்கும் டிவி-யை பொது இடமாக உபயோகித்தனர். சில அரசாங்கங்கள் பகைவர் நாடுகளுக்கு பிரச்சாரத்தை பரப்புவதற்கு அதை உபயோகித்தனர். குட்டன்பர்க்-உடைய கண்டுபிடிப்பின் ஆற்றலை புரிந்துகொண்டவுடனேயே அதைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் முயற்சி செய்தது போல, அநேக அரசாங்கங்கள் தொலைக்காட்சியை அதிகமாக கட்டுப்படுத்தின. 1986-ல் உலகிலுள்ள எல்லாத் தேசங்களிலும் பாதி தேசங்கள் அரசாங்கம்-கட்டுப்படுத்திய நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பின.
என்றபோதிலும், தொழில்நுட்பம் டிவி-யை கட்டுப்படுத்துவதற்கு அதிக கடினமாக்கியுள்ளது. சிறிய உட்குழிவான வடிவுள்ள அலைவாங்கிகளை உடைய வீடுகளுங்கூட ஒளிப்பரப்பை பெற்றுக்கொள்வதற்கு இன்றுள்ள செயற்கைக் கோள்கள் தொலைக்காட்சி குறிகளை அனுப்புகின்றன. எடுத்துச் செல்லத்தக்க கையடக்கமான சிறிய வீடியோ காமராக்களும், வீடியோ கேசட்டுகளும், ஏராளமான பொழுதுபோக்கு நிழற்பட கலைஞர்களும் சேர்ந்து எந்தச் செய்திக்குரிய சம்பவத்தையும் பற்றி நிறுத்தப்பட முடியாத ஏராளமான காணக்கூடிய பதிவுகளை உற்பத்தி செய்திருக்கின்றனர்.
ஓர் ஐ.மா. செய்தி அமைப்பு, டர்னர் ஒளிபரப்பின் கேபிள் நியூஸ் நெட்வர்க் CNN (Cable News network), சுமார் எண்பது நாடுகளிலிருந்து செய்தி அறிக்கைகளை சேகரித்து அவைகளை உலகம் முழுவதும் அஞ்சல் செய்கிறது. அதனுடைய உலகளாவிய 24 மணிநேர பரப்பும் வல்லமை, எந்த ஒரு சம்பவத்தையும் ஒரு சர்வதேச பிரச்னையாக உடனடியாக மாற்றக்கூடும்.
உலக சம்பவங்களை பதிவுசெய்யும் கருவியாக இருப்பதிலிருந்து உலக சம்பவங்களை உருவமைக்கும் கருவியாக தொலைக்காட்சி அதிகளவில் மாறியிருக்கிறது. 1989-ல் கிழக்கு ஐரோப்பாவை குலுக்கிய தொடர்ச்சியான புரட்சிகளில் டிவி ஒரு முக்கிய பங்கை வகித்தது. செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள பிரேக் என்ற இடத்தில் ஜனக்கூட்டத்தார் டிவி-யில் “நேர்முக ஒளிபரப்பு” செய்ய வேண்டும் என்று தெருக்களில் கோஷமிட்டு வற்புறுத்திக் கேட்டனர். சில அரசாங்க கட்டிடம், படையரண் அல்லது காவல்துறை கோட்டை போன்றவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு புரட்சியாளர்கள் ஒரு சமயம் இரத்தம் சிந்தினர். 1989-ல் இருந்த புரட்சியாளர்கள் தொலைக்காட்சி நிலையங்களுக்குள் நுழைவதற்கு முதலாவதாக போராடினர். உண்மையில், ரோமேனியாவின் புதிய ஆட்சிமுறை தொலைக்காட்சி நிலையத்திலிருந்து தேசத்தை ஆளுகைசெய்ய ஆரம்பித்தது! ஆகையால், டிவி-யை மூன்றாவது உலக வல்லரசு என்று அழைப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் டிவி அரசியல் சம்பந்தப்பட்ட செயல்களின் மீது செல்வாக்கு செலுத்தியது மட்டுமின்றி, அதற்கு மேல் அதிகத்தை செய்திருக்கிறது. இப்போதுங்கூட அது உலகத்தின் கலாச்சாரத்தையும் மதிப்பீடுகளையும் மாற்றி வருகிறது. ஐக்கிய மாகாணங்கள் “கலாச்சார முதலாளித்துவத்தை” கடைப்பிடிப்பதாக அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது, அதாவது தொலைக்காட்சியின் மூலம் உலகத்தின் மீது அதன் கலாச்சாரத்தை புகுத்துகிறது என்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. 1940-களின் பிற்பகுதியிலும், 1950-களிலும் இலாபம் தரும் வணிகத் துறையினர் நடத்திய நிகழ்ச்சிநிரல்களை சேகரித்து வைப்பதில் ஐக்கிய மாகாணங்கள் முதலாவது தேசமாக இருந்ததால், பிற தேசத்தவர் தங்கள் நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்கு ஆகும் செலவை விட மிகக் குறைவான விலையில் அமெரிக்க தயாரிப்பாளர்கள் பிற தேசங்களுக்கு நிகழ்ச்சிகளை விற்க முடிந்தது.
கென்யா, 1980-களின் பிற்பகுதியில், அதனுடைய டிவி நிகழ்ச்சிகளில் 60 சதவீதம் வரை இறக்குமதி செய்துகொண்டிருந்தது; ஆஸ்திரேலியா, 46 சதவீதம்; ஈக்வடார், 70 சதவீதம்; ஸ்பெய்ன் 35 சதவீதம். இப்படிப்பட்ட இறக்குமதிகளில் பெரும்பகுதி ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்தது. லிட்டில் ஹவுஸ் ஆன் தி பிரெய்ரி (Little House on the Prairie) என்ற ஓர் அமெரிக்க நிகழ்ச்சி 110 தேசங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. டல்லாஸ் (Dallas) என்ற நிகழ்ச்சி 96 தேசங்களில் காட்டப்பட்டது. அமெரிக்க நாட்டின் பொருளாதார வளர்ச்சி கொள்கையும், நுகர்வோர் அக்கறைகளை வளர்க்கும் கொள்கையும் பரவிக்கொண்டிருந்தது என்றும், உலகம் முழுவதிலும் தொலைக்காட்சியிலிருந்து உள்ளூர் தனிச்சிறப்புத்தன்மை மறைந்துகொண்டிருந்தது என்றும் சிலர் குறைகூறினர்.
‘கலாச்சார முதலாளித்துவம்’ பற்றி அநேக தேசங்கள் ஆரவாரம் செய்கின்றன. அயல்நாட்டு காட்சிகளைப் பரவவிடுவது தேசிய பண்பாட்டை படிப்படியாக அழிக்கின்றன என்று நைஜீரியாவிலிருக்கும் ஒளிபரப்பாளர்கள் குறைகூறியிருக்கின்றனர்; நைஜீரியாவைக் காட்டிலும் ஐக்கிய மாகாணங்களைப் பற்றியும் பிரிட்டனைப் பற்றியும் நைஜீரியாவிலிருப்பவர்கள் அதிக தகவலைப் பெற்றிருப்பதாக அவர்கள் கவலைப்படுகின்றனர். ஐரோப்பியர்களும் அதே போன்று உணருகின்றனர். சமீபத்தில் நடந்த ஐ.மா. சட்ட மாமன்ற கூட்டத்தில், ஒளிபரப்பு தொழிலதிபதி ராபர்ட் மாக்ஸ்வெல், “எந்த ஒரு தேசமும் அதன் கலாச்சாரம் ஓர் அயல்நாட்டு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதை சகித்துக்கொள்ளக்கூடாது” என்று அதிக கோபத்தோடு கூறினார். இதன் காரணமாக சில தேசங்கள், ஒளிபரப்பு நிலையங்கள் ஒளிபரப்பக்கூடிய அயல்நாட்டு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையின் மீது வரம்புகளைச் சுமத்த ஆரம்பித்திருக்கின்றன.
‘கலாச்சார முதலாளித்துவம்’ கலாச்சாரங்களைக் காட்டிலும் அதிகமான காரியங்களுக்குத் தீங்கிழைக்கக்கூடும். அது பூகோளத்துக்குங்கூட ஒருவேளை தீங்கு உண்டுபண்ணக்கூடும். மேற்கத்திய சமுதாயத்தின் எல்லாவற்றையும்-இப்போதே-கொண்டிருங்கள் என்ற நுகர்வோரின் கொள்கை, காற்றை மாசுபடுத்துவதிலும், நீரை நச்சுப்படுத்துவதிலும், பூமியை பொதுவாக பாழ்ப்படுத்துவதிலும் ஒரு பங்கை வகித்திருக்கிறது. தி இன்டிபென்டன்ட் (The Independent) என்ற லண்டன் செய்தித்தாள் எழுத்தாளர் ஒருவர் அதை இவ்வாறு சொன்னார்: “பொருளாதார விடுதலை—மேற்கத்திய செழிப்பு—என்ற பகட்டான வாய்ப்பை தொலைக்காட்சி உலகுக்கு கொண்டுவந்திருக்கிறது. அது உண்மை அல்லாததாய் இருக்கிறது, ஏனென்றால் இயற்கையான சுற்றுச்சூழலை மீண்டும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு கேடு விளைவிக்கப்பட்டாலொழிய அதை அடையமுடியாது.”
தொலைக்காட்சி இன்று உலகை மாற்றிவருகிறது என்பது தெளிவாக இருக்கிறது, அது எப்போதுமே மேம்பட்ட நிலைக்கு மாற்றுவது இல்லை. ஆனால் அது தனிப்பட்ட நபர்களின் மீதுங்கூட அதிக திட்டவட்டமான பாதிப்புகளைக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி உங்களைப் பாதிக்க முடியுமா? (g91 5/22)
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
செய்தித்தாள்கள் ஒரே நாளில் ஒரு கருத்தை பத்தாயிரம் மனங்களில் போடமுடியும்
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
தொலைக்காட்சி கோடிக்கணக்கானோரின் மனங்களில் ஒரு கருத்தை உடனடியாக போடமுடியும்