மறுசீரமைப்பதற்குரிய சத்தியத்தின் வல்லமை
“சீக்கிரத்திலேயே விடுதலை செய்யப்பட்ட ஒரு திருடன் ஏழு மாதங்களில் 500 திருட்டுகளைச் செய்தான். கற்பழிப்பவன் ஒருவன், தன்னுடைய குறைந்தபட்ச பத்தாண்டுகால தண்டனை நிறைவேறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுவிக்கப்பட்ட பின் ஒரு பெண்ணை பலவந்தமாய் கற்பழித்து கொல செய்தான். வாக்குறுதியின் பேரில் விடுதலை பெற்ற ஒரு கொலகாரன் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து மூன்று ஆட்களை கொன்று போட்டான்.”—ரீடர்ஸ் டைஜஸ்ட், நவம்பர் 1990.
“அதிக வினைமையான குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆட்களை கொண்ட சிறைகளில் கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்ட ஆட்கள் ஏறக்குறைய 63 சதவிகிதத்தினர் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக வினைமையான குற்றச்செயலுக்காக கைது செய்யப்பட்டனரென்று இன்று வெளிவந்த ஓர் ஆராய்ச்சியில் நீதி துறை சொன்னது.”—தி நியூ யார்க் டைம்ஸ், ஏப்ரல் 3, 1989.
“குற்றவாளிகள் மறுசீரமைக்கப்படுவதற்கு சிறைச்சாலைகள் ஓர் இடம் என்ற கருத்து உண்மையானதல்ல சிறைகள் ஒன்றுகூடும் ‘கிடங்குகளாகவும்,’ ‘குற்றச்செயல் பள்ளிகளாகவும்’ இருக்கின்றன.”—டொரொன்டோ சன்டே ஸ்டார், மார்ச் 20, 1988.
ரிக்கர்ஸ் தீவிலுள்ள ஒரு நியூ யார்க் நகர சிறையின் காவலர் சொல்வதாவது: “பத்தொன்பது வயதுள்ளவனாக ஓர் இளைஞன் இங்கு வருகிறான். அவனே ஒரு திருட்டுக்காக தேடப்பட்ட மனிதனாக இருந்தான். அவன் இங்கிருந்து வெளியேறும்போது தேடப்படும் ஒரு மனிதனாக இரான். அடுத்தமுறை அவன் விசைத்துப்பாக்கி ஏந்திய ஆளாக இருக்கப்போகிறான்.”—நியூ யார்க் பத்திரிகை, ஏப்ரல் 23, 1990.
“சிறைச்சாலை கதவுகள் பெரும்பாலும் சுழல் கதவுகளை போல் ஆகிவிட்டன: ஏறக்குறைய மூன்றில் இரண்டு பாகமான எல்லா குற்றவாளிகளும் விடுதலையாகி மூன்று ஆண்டுகளுக்குள்ளாக மீண்டுமாக சிறையிலடைக்கப்படுகின்றனர்.”—டைம் பத்திரிகை, மே 29, 1989.
மேல் சொல்லப்பட்டவை எதுவும் நமக்கு புதிய செய்தி அல்ல. அது பழைய கதையே: மறுசீரமைத்தலை சிறைகள் செய்வதில்லை. சத்தியம் அதை செய்கிறது. ரான் பிரையருடைய விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.
ரான் ஒவ்வொரு நாளையும் தன்னுடைய குடும்பத்தாருடன் பைபிளிலிருந்து ஒரு வசனத்தை வாசிப்பதன் மூலம் துவங்குகிறார். அவருடைய விவாக வாழ்க்கை சமாதானமும் அன்பும் உள்ள ஒன்றாயிருக்கிறது. வீடு நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. அவர்களுடைய இரண்டு மகன்களும் நல்ல மாணவர்களாயிருந்தனர்—போதைமருந்துகள் உட்கொள்வதில்லை, சாராயம் பருகுவதில்லை, பிரச்னையும் கிடையாது. இப்போது அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை நடத்துகின்றனர், கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாயிருக்கின்றனர். ரானும் அவருடைய மனைவியாகிய ஆர்லினும் கிறிஸ்தவர்களாக மனமுவந்த வேலையை செய்வதில் தங்கள் சமுதாயத்தில் சுறுசுறுப்பாய் இருக்கின்றனர். மற்றவர்களுக்கு சேவை செய்யும் பயனுள்ள வாழ்க்கை.
என்றபோதிலும், 1970-ல் ரான் பிரையர் கொலசம்பந்தப்பட்ட விசாரணைக்காக சிறையில் காத்திருந்தார். அவர் குற்றவாளியாக காணப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு அரசாங்க சீர்திருத்த சிறையில் காலங்கழித்துக் கொண்டிருந்தார். தன்னை மீண்டும் மீண்டும் சிறைக்கு எடுத்து சென்ற ஒரு நீண்டகால குற்றச்செயல் தொழிலுக்கு அது ஒரு முடிவுக்கட்டமாக திகழ்ந்தது. ஆனால் ரான் இப்பொழுது தன் கதையை சொல்லட்டும்.
“அந்த முதல் ‘சிறையிருப்பின்போது’ கவசம் அணிவிக்கப்பட்டு தோல்வார் மூலம் கொடி கம்பியில் கட்டப்படுவது எனக்கு நினைவிருக்கிறது. நான் மூன்று அல்லது நான்கு வயதுள்ளவனாக இருந்தபோது எனக்குள்ளாக சுற்றித்திரியும் ஆவல் பதிந்திருப்பதாக தோன்றுகிறது. நான் அலைந்து திரிவேன், காணாமற் போய் விடுவேன். காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு திரும்ப வீட்டில் சேர்க்கப்படுவேன். கடைசியாக, நான் இதை நிறுத்தாவிட்டால் அநாதை பிள்ளைகள் நிறுவனத்தாரை வரவழைத்து என்னை பிடித்துக்கொண்டு போய் அடைத்துவைக்கச் சொல்வதாக என் தாய் என்னிடம் சொன்னார். நான் அவர்கள் வருவதற்காக வாசலில் உட்கார்ந்து அழுதேன். அவர்கள் வரவில்லை. அதற்கு பதிலாக என் தாயார் என்னை கவசம் அணிவித்து கொடி கம்பியில் கட்டி வைத்தார்.
“நான் பெரியவனாக வளர்ந்தபோது எப்பொழுது பார்த்தாலும் தொந்தரவுக்குள் சிக்கிக்கொள்வேன், எல்லா பிரச்னைகளுக்கும் வன்முறையே எனக்கு பரிகாரமாக இருந்தது. நான் குழப்ப உணர்ச்சி அடைந்தேன். மனமுறிவடைந்தேன். வெறுப்படைந்தேன். சரி, தவறு உணர்வு எனக்கு இல்லை. ஒரு மனச்சாட்சியை அல்ல என்னுடைய உணர்ச்சிகளே என்னை வழிநடத்தும்படி நான் அனுமதித்தேன். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நான் தேறிக்கொண்டே வந்தேன் ஏனெனில் ஆசிரியர்கள் என்னை விட்டு விடுபடுவதில் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏழாம் வகுப்பில் நான் தோல்வியடைந்து வீட்டைவிட்டு ஓடிவிட்டேன். கெட்ட தோழமைக்குள் சிக்குண்டேன், வேதாகமம் எச்சரிப்புக்கு ஏற்ப அது என்னை கடுமையான தொந்தரவுக்குள்ளாக வழிநடத்திற்று.—1 கொரிந்தியர் 15:33.
“கவசம் அணிவித்து கொடி கம்பியில் கட்டிவைக்கப்படுவதற்கு பதிலாக சீர்திருத்தப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டேன். அவைகள் என்னை சீர்திருத்தவில்லை. நான் தப்பியோடிவிடுவேன், மீண்டும் கைது செய்யப்படுவேன். வெர்ஜினியாவிலுள்ள ஒரு பள்ளியிலிருந்து நான் தப்பியோடியபோது பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்றை திருடி கைது செய்யப்பட்டேன். ஆட்டோ-திருட்டு குற்றச்சாட்டின் பேரில் ஜென்கின்ஸ் என்ற பெயருடைய ஒரு நீதிபதி முன் நிற்கையில் நான் திருடியது நீதிபதி ஜென்கின்ஸ்-ன் வாகனமே என்பதை கண்டறிந்தேன்! எனக்கு அப்போது வயது 16, நான் சீர்திருத்தப்பட முடியாதவன் என்றறிவிக்கப்பட்டு ஒரு பெரிய மனிதனாக விசாரிக்கப்பட்டேன். இரண்டாண்டு காலத்துக்கு சிறையில் அடைக்கப்பட்டேன்.
“அதன் பின்பு நான் சிறையைவிட்டு வெளியேறினேன், 20-களில், நான் ஒரு மோட்டார் வாகனத்தை வாங்கினேன். அது எனக்கு தந்த வலிமையின் உணர்ச்சியால் வசீகரிக்கப்பட்டேன். ஆனால் அது போதுமானதாயிருக்கவில்லை. நான் ஒரு மோசமான கும்பலை—தொந்தரவு கொடுப்பதற்காகவே எப்பொழுதும் பதுங்கி அலையும் ஒரு மோட்டார் வாகன கும்பலை, எப்பொழுதும் சண்டையை ஆரம்பிப்பதில் ஆர்வமுள்ள கும்பலை—சேர்ந்துகொண்டேன். அத்துடன் சேருவதற்குகந்த ஆளாயிருந்தேன்.
“பின்பாக நான், ஃப்ளோரிடாவுக்கு வெளியே விளைச்சல் சரக்குகளை ஏற்றிச் செல்பவனாக, ஒரு ட்ரக் ஓட்டுநராக இருந்தேன். நான் அந்த மோசமான கும்பலோடு செயல்படுபவனாக இருக்கவில்லை. ஆனால் 1969-ல் இந்தக் குறிப்பிட்ட சமயத்தில் வெர்ஜினியா வழியாக வந்துகொண்டிருந்தபோது நான் என்னுடைய அந்தப் பழைய மோசமான கும்பல் நண்பர்களில் ஒரு சிலரை சந்தித்தேன். நாங்கள் ஒன்றுசேர்ந்து திராட்சமது குடிக்க ஆரம்பித்தோம். போதமருந்துகளை அதிகமாக உட்கொண்டோம். படபடப்பு ஆரம்பித்தது, அது அதிகரித்தது, மதுபானத்தாலும் போத மருந்துகளாலும் தூண்டப்பட்ட அடிதடி சண்டையினால் நான் ஒரு மனிதனை சுட்டுக் கொன்றுவிட்டேன். கெட்ட கூட்டுறவின் கூடுதலான கனிகள்! பின்பாக இரண்டு துப்பறியும் அதிகாரிகள் என்னை விசாரித்தார்கள். கொல செய்ததை நான் ஒப்புக் கொண்டேன். 1970-ல் இது நடந்தது.
“நான் சிறையில் விசாரணைக்காக காத்திருந்தேன். ஆனால் இன்னமும் அடங்காத கலகக்காரனாக இருந்தேன். உதாரணமாக, ஒரு நாள் காலை சிறையில் பொறுப்பளிக்கப்பட்டிருந்த ஒரு சிறை கைதி ஒரு கோப்பை காஃப்பியுடன் என்னிடம் வந்தான். பின்னர் குடிப்பதற்காக, கூடுதலாக ஒரு கோப்பை காஃப்பியை அவர்கள் கொடுப்பது வழக்கம். அந்தக் குறிப்பிட்ட காலையன்று நான் என்னுடைய மற்றொரு கோப்பையை காஃப்பி பாத்திரத்தின் கீழ் வைத்தேன், ஆனால் அவன், ‘கூடுதல் காஃப்பி கிடையாது,’ என்றான். அப்படியானால் அதை அவன் இன்னொருவனுக்கு கொடுக்க தீர்மானித்துவிட்டான் என்று நான் நினைத்து அவனிடம், ‘ஏய் இன்று காலை போதுமான காஃப்பி உன்னிடமில்லையா?’ என்றேன். அதற்கு அவன் ‘ஆம்’ என்றான். ‘இதோ என்னுடையதை திரும்ப எடுத்துக்கொள்’ என்று சொல்லி அதை நான் அவன் முகத்தின் மீது வீசினேன். இதன் விளைவாக நான் தனிமை சிறையில் போடப்பட்டேன்.
“எனவே, நான் 2.5 மீட்டருக்கு 3 மீட்டர் அளவான சன்னல்கள் இல்லாத தனிச்சிறையில் சுற்றி நடந்து கொண்டிருந்தேன். என்னுடைய வாழ்க்கையில் முதல் தடவையாக நான் சிந்திக்க ஆரம்பித்தேன். சரமாரியான கேள்விகள் எனக்குள் எழும்பின. ‘என் வாழ்க்கை ஏன் இவ்வளவு பாழாய் இருக்கிறது? நான் ஏன் அடிக்கடி சிறைக்கு வருவதும் வெளியேறுவதுமாக இருக்கிறேன்? நான் ஏன் இந்தத் தனிச்சிறையில் அடைப்பட்டிருக்கிறேன்? நான் ஏன் உயிர் வாழ்கிறேன்? ஏன்? ஏன்? ஏன்?’ ஏன் என்ற கேள்விகள் எழும்பிக்கொண்டேயிருந்தது. ஆனால் விடை கிடைக்கவில்லை. அப்பொழுது நான் எனக்குள்ளாக சொல்லிக்கொண்டது என்னவெனில்: ‘நான் இப்பொழுது உச்சத்துக்கே வந்துவிட்டேன். இதற்கு மேல் என்னால் செல்ல முடியாது. கடவுள் என்ற ஒருவர் இருந்தாலொழிய—என்னை பார்க்கக்கூடிய, நான் ஜீவிக்கிறேன் என்றறியக்கூடிய—என்னை புரிந்துகொள்ளக்கூடிய—ஒரு கடவுள் இருந்தாலொழிய—என்னால் முடியாது! கடவுளே, நீர் இருப்பீரானால், நீர் என்னை அறிந்திருப்பீரானால், நான் எதையாகிலும் செய்யக்கூடுமானால்,—எனக்கொரு காரியத்தை, ஏதாவதொரு காரியத்தை வெறுமென சொல்லும்!’
“என்னிடம் ஒரு பைபிள் இருந்தது. ‘அதுவே ஆரம்பம்’ என்பதாக நான் நினைத்தேன். நான் வாசிக்க ஆரம்பித்தேன். நான் என்ன வாசித்தேன் என்பது எனக்கு நினைவில்லை. நான் அதை வெறுமென எதையும் புரிந்து கொள்ளாமல் வாசித்தது நினைவில் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள்ளாக நான் மீண்டும் மற்றொரு சிறைக்கு வந்தேன். ஒரு சிறையின் அறை திறந்து இருந்தது. அதனுள்ளிருந்த இரண்டு படுக்கைகளும் வெறுமையாக இருந்தன. அதனுள் என்னை அடைத்தார்கள். இரண்டு நாள் கழித்து மற்றொரு கைதியை என்னுடன் அடைத்தார்கள். அந்தச் சமயத்தில் நான் பைபிளை படித்துக்கொண்டிருந்தேன், அதனுடன் போரடிக்கொண்டிருந்தேன். நான் வாசித்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்து: ‘நீ பைபிளை புரிந்துகொள்ள விரும்புகிறாயா?’ என்று கேட்டான். ‘ஆம்!’ என்றேன். ‘உனக்கு உதவி செய்யக்கூடிய ஒரு புத்தகத்தை நான் பெற்றுத் தருகிறேன்’ என்று சொன்னான். அவன் ஒரு காலத்தில் தனக்கு பைபிள் படிப்பு நடத்திய சாட்சிகளிடம் தொடர்பு கொண்டு விரைவில் எனக்கு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற தலைப்புள்ள புத்தகத்தை கொடுத்தான். அது ஜூலை 1970-ல் ஆகும்.
“நான் வாசிக்க ஆரம்பித்தேன். அதை முழுவதுமாக வாசித்து முடித்தேன். நான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அது அர்த்தமுள்ள ஒன்றாக இருந்தது. யெகோவாவின் சாட்சிகள் வந்து எனக்கு படிப்பு நடத்திய போது தனிச்சிறையில் எனக்கு எழும்பிய கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஆரம்பித்தது. வாழ்க்கையில் முதல் தடவையாக எது சரி எது தவறு என்பதன் பேரில் சிறிது உட்பார்வை பெற்றேன். இந்த ஆவிக்குரிய உணவை நான் எவ்வளவு அதிகமாக உட்கொண்டேனோ அவ்வளவாய் நான் ‘நன்மை தீமையின்னதென்று பகுத்துப் பார்ப்பதற்கு தங்கள் அறிவாற்றலை பயிற்றுவித்துக் கொண்டவர்களை’ போன்றிருக்கும் நிலைக்கு நெருங்கி வந்தேன். (எபிரெயர் 5:14, NW) என் மனச்சாட்சி உயிர் பெற்று எழுந்து இப்பொழுது கிரியை செய்து கொண்டிருந்தது!
“எனக்கு திடீரென்று கிடைத்த இந்தப் பைபிள் சத்தியம் என் மனநிலையில் ஒரு மெய்யான எழுச்சியை ஏற்படுத்தியது. 24 மணிநேரத்தில் அந்தப் புத்தகத்தை படித்து முடித்தேன். ஒரே இரவில் நான் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு சென்றுவிட்டேன். நான் கற்றுக்கொண்டிருந்த சத்தியங்களை என்னுடைய சக கைதிகள் கண்டடைய வேண்டுமென்று நான் தீர்மானமாயிருந்தேன். அதை குறித்து என்னை போன்றே மற்ற அனைவரும் கிளர்ச்சியடைவார்கள் என்று நினைத்தேன். அவர்கள் அப்படியிருக்கவில்லை. இதற்கு முன்பு மற்ற கைதிகளுக்கு நான் ஒரு பிரச்னையாக இருந்தேன்; இப்பொழுதோ அதை காட்டிலும் அதிக எரிச்சலூட்டுபவனாக இருந்தேன்—இது கூடிய காரியம் என்று எவருமே எண்ணவில்லை! ஆனால் இந்த நாட்டு சிறைக்கு எனக்கு படிப்பு நடத்த சாட்சிகள் தொடர்ந்து வந்தபடியால் நான் என்னுடைய பிரசங்கிப்பு வேலையில் அதிக சாதுரியமுள்ளவனாக ஆனேன்.
“நான் அநேக மாற்றங்களைச் செய்தேன். இரண்டே மாதங்களில் நான் ஒரு பொறுப்பாளரானேன். நான் வெளியே சென்று வரவும் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய கடந்தகால பதிவுகள் மேலும் நான் ஏன் அங்கிருந்தேன் போன்றவற்றை கவனிக்கையில் இவ்வாறாக அனுமதிக்கப்படுவது கேள்விப்படாத ஒரு காரியமாக இருந்தது. நான் பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட நியமங்கள் நற்பாதிப்புள்ளவையாக இருந்தன. கடவுளுடைய வார்த்தையின் சத்திய தண்ணீர்கள் அப்போஸ்தலர்களுடைய நாட்களிலிருந்ததைப் போலவே அவற்றின் சுத்திகரிப்பு வேலையை செய்துகொண்டிருந்தன. அவற்றின் மறுசீரமைப்பு வல்லமைகள் 1 கொரிந்தியர் 6:9-11-ல் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது:
“‘அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் . . . கழுவப்பட்டீர்கள்.’
“இறுதியாக நான் விசாரணைக்கு வந்தேன். கொல குற்றத்துக்காக அவர்கள் எனக்கு 20 ஆண்டுகளை விதித்தார்கள். 1971-ல் நான் உச்சஉயர்வான பாதுகாப்பு சிறைக்கனுப்பப்பட்டேன். அங்கேதானே சாட்சிகளுடன் என்னுடைய பைபிள் படிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. என் நடத்தையில் தீவிர மாற்றம் ஏற்பட்டது. விரைவில் இந்தப் புதிய சிறையில் என்னை பொறுப்பாளராக ஆக்கினார்கள். மற்றும் விடுப்பு தந்தார்கள். அந்தச் சமயத்தில் என்னோடு தங்கிக் கொண்டிருந்த சாட்சி ஒருவரிடம், ‘நான் முழுக்காட்டுதல் பெறுவதற்குத் தடையென்ன?’ என்று கேட்டேன். அவர் உள்ளூர் சபையில் விசாரித்தறிந்தப் பின்பு ‘எதுவும் தடையாயில்லை’ என்று பதிலளித்தார். 1973-ல் ஒரு நாள் பிற்பகலில் அருகிலிருந்த பண்ணை ஒன்றிலிருந்த மாடுகளின் தண்ணீர் தொட்டியில் நான் முழுக்காட்டப்பட்டேன். தண்ணீருக்குள் முழுகும்போது நான் ஜெபித்தேன். ஏனெனில் முழுக்காட்டுபவனாகிய யோவனால் இயேசு தண்ணீருக்குள் அமிழ்த்தப்படும்போது அவர் அதையே செய்தார்.
“அதன் பின்பு என்னுடைய ஆவிக்குரிய முன்னேற்றம் தீவிரமாக இருந்தது. உள்ளூர் சபையில் நடத்தப்பட்ட தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்து கொண்டேன்—நேரில் கூட்டத்துக்கு போகமலே கூட்டத்துக்கு ஆஜரானேன். பள்ளியில் பேச்சு நியமிப்புகள் கிடைத்தது. என்னுடைய பேச்சை டேப்பில் பதிவு செய்தேன். அது சபையினர் கேட்க போட்டுக் காட்டப்படும். பள்ளி கண்காணி நான் முன்னேறுவதற்கு உதவியான ஆலோசனைகளை எனக்கு திருப்பி அனுப்புவார். சிறையில் வாராந்தர கூட்டங்களை கொண்டிருந்தோம். மற்ற சிறைக்கைதிகள் ஆஜராகும்படி அழைக்கப்பட்டார்கள்.
“இந்தக் காலப்பகுதியில் என்னுடைய பைபிள் அறிவோடு இன்னும் அநேக வேதவசனங்களை நான் சேர்த்துக்கொண்டிருந்தேன். ‘பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்,’ என்று கொலாசெயர் 3:9, 10-ல் அப்போஸ்தலன் பவுல் பேசிய மறுரூபமாகுதலை மதித்துணரும் வரையில் அந்த வேதவசனங்கள் நான் என்னுடைய பெரும்பாலான வாழ்நாட்களை கழித்த அந்தக் குழம்பிய ஒழுக்க நிலையிலிருந்து வெளியேறுவதற்கு வழிநடத்தும் படிகற்களை போன்று இருந்தன.
“நாணய வாக்குறுதி பேரில் விடுதலை வழங்கும் குழுவின் மூன்றாவது முறை விசாரணை 1978-ல் நெருங்கிக் கொண்டிருந்தது. எனது குற்றச்செயல்களின் வினைமையான இயல்பின் காரணமாக இரண்டு முறை எனக்கு விடுதலை மறுக்கப்பட்டது. இந்தச் சமயம் சாட்சிகளிடமிருந்தும் மேலும் மற்றவர்களிடமிருந்தும் என்னுடைய மாற்றங்களுக்கு சான்றளிக்கக்கூடிய சுமார் 300 கடிதங்களை அந்தக் குழு பெற்றுக்கொண்டது.
“நான் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு மேம்பட்டதாய் தென்பட விவாகம் செய்து கொள்வதற்கான சாத்தியத்தைப் பற்றி யோசித்தேன். ஆர்லின், இரண்டு பிள்ளைகளையுடைய ஒரு விதவை. அவள் ஒரு சாட்சி. நான் சிறையிலிருக்கும்போது எனக்கு கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய இரண்டு மகன்களோடு என்னை சந்தித்தாள். நாங்கள் ஒருவரையொருவர் காதலித்தோம். பிப்ரவரி 1, 1978-ல் நான் விடுதலை அடைந்தேன். பிப்ரவரி 25, 1978-ல் நாங்கள் விவாகம் செய்துகொண்டோம். இப்பொழுது 13 ஆண்டுகளுக்கு பிற்பாடு இன்னமும் நாங்கள் விவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியாயிருக்கிறோம். எங்களுடைய ஒரு மகன் விவாகம் செய்துகொண்டு யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக சுறுசுறுப்பாய் இருக்கிறான். மற்றொரு மகன் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகம் நியூ யார்க் புரூக்லினில் முழு நேரமாக வேலை செய்கிறான்.
“என்னுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டன. எனக்கு அதிக உதவியாக இருந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சந்தோஷமுள்ள கடவுளாகிய யெகோவாவுக்கே என்னுடைய சந்தோஷத்தையெல்லாம் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.—1 தீமோத்தேயு 1:11.
“என்றாலும் நான் என்னுடைய கடந்தகால பாவங்களுக்காக அதிகமான மனவேதனை அடைகிறேன். என்னுடைய முன்நாளைய இழிவான நடத்தையை பின்னோக்கிப் பார்க்கையில் வெறுப்படைகிறேன். என்னை மன்னிக்கும்படியாக, நான் பல தடவைகள் யெகோவாவிடம் ஜெபித்திருக்கிறேன். அவர் என்னை மன்னித்திருப்பார் என்று உணருகிறேன். கடந்த காலத்தில் என்னால் தீமைகளை அனுபவித்த மக்களும்கூட என்னை மன்னிப்பார்களென்று நம்புகிறேன். மற்றும் முக்கியமாக நான் கொன்ற அந்த மனிதனை யெகோவா திரும்பவும் உயிருக்கு கொண்டு வருவார் என்றும் அப்பொழுது கடவுளுடைய பூமிக்குரிய பரதீஸில் என்றென்றும் வாழும் வாய்ப்பை அவன் பெறுவான் என்றும் நம்புகிறேன். அது என்னுடைய மகிழ்ச்சியை நிறைவாக்கும்!”
சிறைக் கம்பிகளோ தனிப்பட்ட சிறைவாசமோ எதை செய்ய முடியாதோ அதை பைபிள் சத்தியம் செய்தது. ரான் பிரையர் தன்னுடைய பழைய குற்றச்செயல் ஆள்தன்மையை களைந்து போட்டு புதிய கிறிஸ்தவ ஆள்தன்மையை தரித்துக்கொள்ள அது உதவியது. ஏன்? ஏனெனில் “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது” மறுசீரமைப்பதற்கும் வல்லமையுள்ளது.—எபிரெயர் 4:12. (g91 7⁄22)
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
நான் திருடியது நீதிபதி ஜென்கின்ஸ் வாகனமே!
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
தனிச்சிறையில் ஒரு பைபிள் இருந்தது. அதை நான் வாசிக்க ஆரம்பித்தேன்
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
கொலை குற்றத்துக்காக அவர்கள் எனக்கு 20 ஆண்டுகளை விதித்தார்கள்
[பக்கம் 13-ன் படம்]
இன்று, ரான் பிரையரும் அவருடைய மனைவி ஆர்லினும்