குற்றத்தின் பாதையிலிருந்து நம்பிக்கையின் பாதைக்கு
காஸ்ட்ட கூலாப்பீஸ் சொல்கிறார்
அழுக்குப் படிந்திருந்த அந்த சிறையறையின் சுவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுக்கடுக்காக குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கு பெரிய தொகை தேவை. அதற்கு ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்து புதுவாழ்வை ஆரம்பிக்க தீர்மானித்தேன்.
சோர்வும் சோகமும் உடலை அழுத்த, மனமோ கடந்த வருடத்தில் இறந்துபோன என் 11 நண்பர்களைப் பற்றி அசைபோட ஆரம்பித்தது. ஒருவன் கொலைக் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டான், மற்றொருவன், கொலைக் குற்றத்திற்கான விசாரணைக்குக் காத்திருந்தபோது தற்கொலை செய்துகொண்டான், மூவர் போதைமருந்தை அதிகமாக சாப்பிட்டதால் மண்ணோடு மண்ணானார்கள், இருவர் தெருச்சண்டைகளில் அடித்தே கொல்லப்பட்டனர், நால்வர் மோட்டார் விபத்தில் சிக்கி மூச்சுவிட மறந்தனர். அதோடு, என்னுடைய மற்ற நண்பர்களிள் அநேகர் மோசமான குற்றங்களை செய்ததற்காக வெவ்வேறு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
துயரத்தை சித்திரங்களாக வடித்துக்கொண்டிருந்த அந்த சிறையறையில் இருந்தபோது, இந்த குற்றச்செயல் எனும் திக்குத்தெரியா காட்டிலிருந்து தப்பிக்க ஏதாவது ஒரு வழியை காட்டும்படியாக கடவுளிடம்—அது யாராக இருந்தாலும் சரி அவரிடம்,—மனங்கசந்து அழுதேன். கொஞ்ச நாட்களிலேயே அந்த ஜெபத்திற்கான பதில் கிடைத்தது. அதற்குள்ளாக, காயப்படுத்தும் நோக்கத்துடன் திடீரென தாக்கி வன்முறையில் ஈடுபட்டதற்காக என்மேல் சுமத்தப்பட்ட பெரும் குற்றச்சாட்டிலிருந்து எப்படியோ ஒருவழியாக நழுவிவிட்டேன். மேல் அதிகாரிகளிடம் கெஞ்சிக்கூத்தாடியதால் ஒருவழியாக குறைந்தளவு தண்டனையுடன் தப்பிக்க முடிந்தது. முதலில் இந்த இக்கட்டில் எப்படி மாட்டிக்கொண்டேன் என்பதை சொல்கிறேன் கேளுங்கள்.
1944-ல், தென் ஆப்பிரிக்காவின் ப்ரிட்டோரியாவில் பிறந்து அங்கேயே வளர்ந்தேன். சிறு வயது முதற்கொண்டே துன்பமும் கஷ்டமும்தான் என் நெருங்கிய நண்பர்கள். எங்கள் குடும்ப வாழ்க்கையை துயரம் குத்தகைக்கு எடுத்திருந்தது எனலாம்; ஏனெனில் என் அப்பாவிற்கு கோபம் வந்தால்போதும், அன்று வீட்டில் ரணகளம்தான், அடி உதை என தூள்பறக்கும். இதற்கு காரணம் அவருடைய மிதமிஞ்சிய குடிப்பழக்கமே. அவர் பயங்கரமான சூதாடியும்கூட, திடீர் திடீரென அவருக்கு மூடுமாறிவிடும், இதனால் அநேகதரம் நாங்கள் அனைவரும் வார்த்தையிலும் சரீரத்திலும் புண்படுத்தப்பட்டோம். குறிப்பாக என் அம்மாவுக்குத்தான் அதிக வசைமொழி பரிசாகக் கிடைக்கும். இது தொடர்கதையானதால் இதிலிருந்து தப்ப தெருக்களில் அடைக்கலம் புகுந்தேன்.
தப்பான வழியில் தடம் பதித்தல்
அதன் விளைவாக, பிஞ்சிலேயே பழுத்துவிட்டதைப்போல சிறு வயதிலேயே அநேக விஷயங்களை கற்றுக்கொண்டேன். உதாரணத்திற்கு, நான் எட்டு வயதில் இரண்டு முக்கியமான பாடங்களை கற்றுக்கொண்டேன். முதலாவது பக்கத்து வீட்டிலிருந்து பொம்மைகளை திருடி பிடிபட்டபோது. அன்று அப்பா என்னை பின்னியெடுத்துவிட்டார். அன்று அவர் கோபத்துடன் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன: “இன்னொருவாட்டி திருட்டு பொருள உன் கையில நான் பார்த்தா, கழுத்த நெரிச்சு கொன்னுடுவேன்!” அன்று நான் ஒரு முடிவெடுத்தேன், மீண்டும் திருடமாட்டேன் என்று அல்ல, ஆனால் மறுபடி மாட்டிக்கொள்ள மாட்டேன் என்று. ‘அதை அடுத்த முறை மறைத்துவிடுவேன், யாராலும் கண்டுபிடிக்க முடியாது’ என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.
நான் சிறுவனாக இருந்தபோது கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம் இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. என் பள்ளியில் வேதாகம வகுப்பு நடந்தபோது, என் ஆசிரியை கடவுளுக்கு ஒரு தனிப்பட்ட பெயர் இருக்கிறது என்று கற்றுக்கொடுத்தார். அவர் சொன்னார்: “கடவுளுடைய பெயர் யெகோவா, அவருடைய பிள்ளையாகிய இயேசுவின் பெயரில் ஜெபம் பண்ணினால் நீங்கள் சொல்லும் எல்லா ஜெபங்களையும் அவர் கேட்பார்,” இது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் பாடம் நான் குற்றச்செயல் எனும் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதிலிருந்து தடுக்காதபோதிலும், என் பிஞ்சு மூளையில் பசுமரத்து ஆணிபோல் பதிந்தது. நான் உயர்நிலைக் கல்வியை எட்டுவதற்குள் கடையைக் கொள்ளையடித்தல், வீடு புகுந்து திருடுதல் போன்றவற்றில் கில்லாடியாகிவிட்டேன். என்னுடைய பள்ளி நண்பர்களில் அநேகர் ஏற்கெனவே அநேக குற்றங்களை செய்ததற்காக சீர்திருத்தப் பள்ளியில் சிறிது காலத்தை தொலைத்துவிட்டிருந்ததால், அவர்கள் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
சில வருடங்களில், இந்தக் குற்றச்செயல் என் வாழ்க்கைத் தொழிலாகவே ஆகிவிட்டது. நான் இருபது வயதை எட்டுவதற்குள்ளாகவே கொள்ளை அடிப்பதற்காக மற்றவர்களை தாக்குவது, வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, காரை அபேஸ்பண்ணுவது, அடிதடி போன்றவற்றில் கைதேர்ந்தவனாக ஆனேன். பிலியர்ட்ஸ் விளையாட்டு அரங்கம் மற்றும் பார்களிலேயே எப்போதும் கிடந்தேன்; அதோடு விபச்சாரத் தரகர்கள், விபச்சாரிகள், மற்றும் பயங்கரமான குற்றவாளிகளுக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருந்ததால் தொழில்நுட்ப உயர்கல்விக்கு முதல் ஆண்டிலேயே முழுக்கு போட்டுவிட்டேன்.
நான் இரக்கமற்ற கொடூரமான குற்றவாளிகளுடனேயே எப்போதும் பழகிவந்தேன்; அவர்களைக் காட்டிக்கொடுப்பவர் அவர்கள் கையில் மாட்டினால் போதும் அவரை நார் நாராக கிழித்து சின்னாபின்னப்படுத்த கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். ஆகவே, நான் செய்யும் வேலையை அல்லது சாதனைகளைக் குறித்து பெருமையடித்துக்கொண்டோ அல்லது பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்துக்கொண்டோ இல்லாமல் என் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதை அது கற்றுக்கொடுத்தது. அவ்வாறு செய்தால், நடந்த குற்றத்தை பற்றி தம்பட்டம் அடிப்பதோடு போலீஸின் கவனத்தையும் ஈர்த்து, தேவையில்லாமல் பிழிந்தெடுக்கும் குறுக்கு விசாரணையில் மாட்டிவிடும் என்பதையும் நான் அறிந்திருந்தேன். அதைவிட மோசம், அந்த கொள்ளையடித்த பொருளிலிருந்து பங்கு கேட்டு மற்ற குற்றவாளிகளும் தேவையில்லாமல் என்னை பார்க்க வரக்கூடும் என்பதும் எனக்கு தெரியும்.
இந்தளவுக்கு ஜாக்கிரதையாக நான் இருந்தபோதிலும், சில சமயம் போலீஸாரின் சந்தேகப் பார்வையில் சிக்கியிருக்கிறேன். ஆனால், நான் செய்த குற்றத்தோடு சம்பந்தப்பட்ட பொருட்களை அல்லது குற்றச்சாட்டில் சிக்கவைக்கக்கூடிய எதையும் என்னிடம் வைத்துக்கொள்ளாதபடி எப்போதும் ஜாக்கிரதையாய் இருந்தேன். ஒருநாள், போலீஸ் திடீரென அதிகாலை மூன்று மணிக்கு என் வீட்டை சோதனையிட்டது. அருகிலிருந்த மொத்த வியாபாரி ஒருவரின் சரக்குகள் திருடுபோய்விட்டன, அதனால் எலக்ட்ரிக்கல் சாமான்கள் ஏதாவது இங்கு இருக்கிறதா என தேடித் தேடி பார்த்தார்கள்; ஒன்றுக்கு இருமுறை தங்கள் கழுகுக்கண்களால் வீட்டைத் துளாவினர். ஆனால் ஒன்றும் சிக்கவில்லை. கைரேகைமூலம் அடையாளம் கண்டுபிடிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கும் என்னை கூட்டிச் சென்றனர், அதிலும் தப்பித்துவிட்டேன்.
போதையின் பாதையில்
நான் 12 வயது முதற்கொண்டே, ஆளையே மாற்றும் போதைப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தேன். இந்த கெட்டப் பழக்கத்தால் என் உடல்நிலை மேலும் மோசமாகியது. இதனால் அநேகதரம் ‘ஓவர்டோஸ்’ எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். கொஞ்ச நாட்களில் இரகசிய கும்பல்களோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு மருத்துவரிடம் அறிமுகம் ஆனேன். இது என்னை போதை மருந்து டீலராக்கியது. ஒரு சில வினியோகிஸ்தர்களுக்கு மட்டும் சரக்குகளை சப்ளை செய்வதில் அவ்வளவு ஆபத்தில்லை என்பதை தெரிந்துகொண்டேன், ஏனென்றால் மற்றவர்கள் ஆபத்தை சந்திக்க, நானோ திரைக்குப் பின்னால் என் வேலையை ஜரூராக நடத்தலாம்.
ஆனால், இப்படி என்மூலம் போதைமருந்தை வாங்கிய சிலர், ஓவர்டோஸ் காரணமாக இறந்ததையும், சிலர் இந்த போதைமருந்தின் பிடியில் சிக்கிக்கொண்டு மிக மோசமான தவறுகளை செய்ததையும் நினைத்தால் வருத்தம்தான் மேலிடுகிறது. ஒரு “நண்பன்” பிரபல டாக்டர் ஒருவரைக் கொன்றுவிட்டான். இது நாடு முழுவதும், தலைப்புச்செய்தியாக இடம் பிடித்தது. அவன் என்னையும் அதில் மாட்டிவைக்க முயற்சி செய்தான்; ஆனால், போலீஸ் என் வீட்டிற்கு வரும்வரை அந்த சம்பவத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அங்கு நடந்த அநேக குற்றங்களுக்காக போலீஸ் அடிக்கடி என்னிடம் வந்து கேள்விகளை கேட்டு திணறடிப்பர்.
இருப்பினும், ஒருநாள் முட்டாள்தனமான ஒரு காரியத்தை செய்துவிட்டேன். ஒரு வாரம் போதைமருந்திலும் மதுபானத்திலும் மிதந்துவிட்டு, கருத்துவேறுபாட்டினால் பொங்கி எழுந்த கோபாவேசத்தில் இருவரை காட்டுத்தனமாக தாக்கி கண்மூக்கு தெரியாமல் காயப்படுத்திவிட்டேன். அவர்களை தாக்கியது நான்தான் என மறுநாள் காலை அடையாளம் காட்டினார்கள். அவர்களை காயப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டேன். இதுவே நான் சிறையில் கால்பதித்த கதை.
முதலில் பணம், பின் வாழ்க்கை
நான் ஜெயிலிலிருந்து விடுதலையான பிறகு, ஒரு மருந்து கம்பெனியில் இருப்புக் கட்டுப்பாட்டாளர் வேலை காலியாக இருப்பதாக கேள்விப்பட்டேன். அதற்கு விண்ணப்பித்து, அந்த வேலைக்கு நான்தான் தகுதியானவன் என்ற அபிப்பிராயத்தை முதலாளிக்கு ஏற்படுத்தினேன். அந்த கம்பெனியில் ஏற்கனவே வேலை செய்துகொண்டிருந்த என் நண்பனுடைய சிபாரிசில் எனக்கு வேலை கிடைத்தது. எப்படியாவது நிறைய பணம் சம்பாதித்துவிட்டு பின் வேறெங்காவது சென்று ஒரு புதிய நேர்மையான வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு இதுவே சரியான வழி என நினைத்தேன். அந்த வியாபாரத்தில் உட்பட்டுள்ள எல்லா நுணுக்கங்களையும் வேலைகளையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படித்துவிடவேண்டும் என கடும் முயற்சிசெய்தேன். இரவு வெகுநேரம் வரையிலும் இருந்து அந்த மருந்துகளின் பெயர்களை எல்லாம் கஷ்டப்பட்டு படித்தேன். இதுவே என் புதிய வாழ்க்கைக்கான சரியான பாதை என நிச்சயமாய் இருந்தேன்.
என் திட்டமெல்லாம், முதலாளியிடமும் மற்ற அதிகாரிகளிடமும் நல்ல பெயர் எடுக்கவேண்டும், நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும். தக்க சமயத்தில், நான் அந்த கிடங்கிற்கு உள்ளே புகுந்து கள்ளச் சந்தையில் அதிகம் விலைபோகும் குறிப்பிட்ட மருந்துகளை நிறைய கொள்ளையடித்து, விற்று, ஒரே இரவில் கோடீஸ்வரனாகிவிடலாம் என கற்பனையில் மிதந்தேன். பிறகு நான் சுதந்திரமாக ஒரு புதிய வாழ்க்கை வாழ்வதற்கு எந்த இடையூறும் வராத அளவுக்கு தப்பித்துவிட மிக கவனமாக திட்டம் தீட்டியிருந்தேன்.
என் திட்டம் கைகூடுவதற்காக நான் காத்துக்கொண்டிருந்த நேரமும் வந்தது. ஒரு இரவு, மிக கவனமாக அந்த கிடங்கிற்குள் நுழைந்தேன், லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள மருந்துகள் வைக்கப்பட்டிருந்த அலமாரிகளை பார்த்தேன். அந்த நிமிடம் குற்றமும் வன்முறையும் இல்லாத சந்தோஷமான ஒரு ஒளிமயமான வாழ்க்கையின் கண்கொள்ளா காட்சி என் மனத்திரையில் விரிந்தது. ஆனால், முதல் முறையாக எனக்குள் ஏதோ உறுத்த ஆரம்பித்தது. எனக்கு என்ன ஆகிவிட்டது, என் மனசாட்சி என்னுள் முள்ளாய் குத்திக்கொண்டிருந்ததற்கு என்ன காரணம்? அதுவரை மனசாட்சி என்ற ஒன்று எனக்கு இருப்பதை மறந்துவிட்டேன் என்றே சொல்லலாம். இதற்கான காரணத்தை சொல்கிறேன்.
சில வாரங்களுக்கு முன்பு, வாழ்க்கையின் அர்த்தமென்ன என்பதைப் பற்றி நானும் என் மேனேஜரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயத்திற்கு, பதிலாக ‘வேறு வழி ஏதும் தெரியாதபட்சத்தில், ஒருவர் ஜெபம் செய்யலாம்’ என்று நான் சொன்னேன். அதற்கு அவர் “யாரிடம்?” என்று கேட்டார். நான்: “கடவுளிடம்”. அவர்: “ஆனால் மக்கள் அநேக கடவுட்களிடம் ஜெபம் செய்கிறார்கள், ஆக நீ யாரிடம் ஜெபம் செய்வாய்?” நான்: “எல்லாம் வல்ல கடவுளிடம்.” அவர்: “சரி, அவருடைய பெயர் என்ன?” நான்: “நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்?” அவர்: “உன்னைப்போல, என்னைப்போல, மற்ற அனைவரையும் போல அந்த சர்வவல்லமையுள்ள கடவுளுக்கும் ஒரு தனிப்பட்ட பெயர் இருக்கிறது.” அது நியாயமாக இருந்தபோதிலும் எனக்கு கோபம்தான் வந்தது. நான் எரிச்சலுடன்: “சரி, கடவுளுடைய பெயர்தான் என்ன?” “சர்வவல்லமையுள்ள கடவுளின் பெயர் யெகோவா!” என்றார் அவர்.
அதைக் கேட்டவுடன், என் மூளையின் ஒரு மூலையில் ஒளிந்திருந்த பழைய நினைவு திடீரென மின்னல் கீற்றாக தோன்றி மறைந்தது; அது. . .அது, நான் எட்டு வயதாயிருக்கையில் பள்ளியில் கற்றுக்கொண்டது. சிறுவயதில் நடந்த அந்த உரையாடல் என்னுள் அவ்வளவு ஆழமாக பதிந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு, மணிக்கணக்கில் அந்த கருத்தாழமிக்க உரையாடலை கொண்டிருந்தோம். அதற்கு அடுத்த நாள் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் a என்ற புத்தகத்தை அவர் எனக்கு கொடுத்தார். அந்த இரவே முழு புத்தகத்தையும் வாசித்துவிட்டேன், அதோடு நான் சத்தியத்தையும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தையும் கண்டுபிடித்துவிட்டேன் என்று உடனடியாக நம்பினேன். அந்த நீல நிற புத்தகத்திலிருந்து அநேக வியப்பூட்டும் விஷயங்களைப் பற்றி அடுத்த இரண்டு வாரங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்; வேறு வேலை எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.
இருட்டை குத்தகைக்கு எடுத்து மௌனத்தை வாடகைக்கு வாங்கியிருந்த அந்த கிடங்கில் நான் உட்கார்ந்திருந்தபோது, மருந்துகளை திருடி விற்கவேண்டும் என்ற என் திட்டமெல்லாம் தப்பு என என் மனசாட்சி கூறியது. இனிமேலும் நான் திருடமாட்டேன் என தீர்மானித்தேன், அமைதியாய் வீட்டிற்கு நடையை கட்டினேன்.
புலி பூனையானது
அதைத் தொடர்ந்து, நான் ஒரு புதிய வாழ்க்கையை துவங்க தீர்மானித்துவிட்டேன் என என் குடும்பத்தாரிடம் சொன்னேன்; அதோடு நான் கற்றுக்கொண்ட சில பைபிள் சத்தியங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். என் அப்பா என்னை வீட்டைவிட்டு துரத்திவிட நினைத்தார். ஆனால் என் தம்பி ஜான் என் அப்பாவிடம்: “என்னங்கப்பா! அவனோட வாழ்க்கையிலேயே இப்பதான் முதல்தடவையா சட்டவிரோதமில்லாத ஒரு நல்ல விஷயத்த செய்யப்போறான், அதுக்குப்போயி நீங்க அவன வீட்ட விட்டு தொரத்திடுவேங்குறீங்களே! நானும் இதப்பத்தி அதிகம் தெரிஞ்சிக்கப்போறேன்” என்று எனக்காக வாதாடினான். அதோடு, தன்னுடன் பைபிள் படிக்கும்படி ஜான் என்னிடம் கேட்டபோது நான் சந்தோஷத்தில் மெய்சிலிர்த்துப்போனேன். அதுமுதல், போதைமருந்திற்காக என்னிடம் கைநீட்டி வந்தவர்கள் கையில் சத்திய புத்தகம்தான் கிடைத்தது. அந்த புத்தகத்தின் உதவியால் விரைவில் 11 பைபிள் படிப்புகளை நடத்தினேன்.
பிறகு, அந்த கம்பெனி மேனேஜரே ஒரு சாட்சி அல்ல என்பதை தெரிந்துகொண்டேன். அவருடைய மனைவி சுமார் 18 வருடங்களாக சாட்சியாக இருந்திருக்கிறார், ஆனால் இவருக்கோ, “சத்தியத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரம் இல்லை.” ஆகவே அவர், எனக்கு ஒழுங்காக பைபிள் படிப்பை நடத்த ஒரு அனுபவமிக்க சாட்சியை ஏற்பாடுசெய்தார். வாழ்க்கையின் மற்ற சவால்களை எதிர்ப்படுவதற்கான அவசியத்தை தெரிந்துகொள்ள இப்படிப்பட்ட படிப்பு விரைவில் உதவிசெய்தது. அதோடு, கொஞ்ச நாட்களிலேயே, கடவுளுடைய வார்த்தையின் சத்தியம் என்னுடைய உலகப்பிரகாரமான வழிகளிலிருந்து விடுதலை செய்தது.—யோவான் 8:32.
இருப்பினும், சில வாரங்களுக்குள்ளாக நடந்த அநேக மாற்றங்களின் வேகத்தை நினைத்து ஒருகணம் திகைத்துப்போனேன். பெரிய மாற்றங்களை நான் எதிர்ப்பட வேண்டியிருந்தது. என் பைபிள் படிப்பு சுட்டிக்காட்டிய பாதையையே தொடர்ந்து பின்பற்றினால், மாமிசத்திற்கும் ஆவிக்குமிடையே பெரிய போராட்டம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர ஆரம்பித்தேன். அதேசமயம், அதுவரை நான் வாழ்ந்துவந்த அந்த கீழ்த்தரமான வாழ்க்கையை தொடர்ந்தால், ஒருவேளை மரணத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்; அந்தளவுக்குச் செல்லாவிட்டாலும், சிறைச்சாலையே கதி என்றுதான் என் வாழ்நாளின் மீதிப்பகுதியை ஓட்ட வேண்டியிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டேன். அதன் பிறகு, ஆழ்ந்து யோசித்து, தொடர்ந்து உள்ளப்பூர்வமாக ஜெபித்து, சத்திய பாதையை பின்பற்ற வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆறு மாதங்கள் கழித்து, 1971 ஏப்ரல் 4-ம் தேதி யெகோவாவிற்கான என் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலமாக வெளிக்காட்டினேன்.
நேர்வழியால் கிடைத்த பரிசுகள்
நான் செய்துவந்த குற்றங்களையெல்லாம் கைகழுவிவிடவேண்டும் என்று தீர்மானித்தது முதற்கொண்டு நான் அனுபவித்திருக்கும் ஆசீர்வாதங்களை நினைத்துப்பார்க்கும்போது சில சமயம் உணர்ச்சி வேகத்தாலும் சந்தோஷத்தாலும் திக்குமுக்காடிப்போகிறேன். அந்தக் குழப்பமான ஆரம்ப வாரங்களின்போது 11 பேருடன் பைபிளைப் படித்தேன், அவர்களுள் 5 பேர் இன்னும் சத்தியப்பாதையை தொடர்கின்றனர். என் அம்மாவும் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு ஒரு முழுக்காட்டப்பட்ட சாட்சியாக ஆனார், அவர் 1991-ல் இறக்கும் வரையாக கடவுளுக்கு உத்தமமாய் சேவித்துவந்தார். என்னுடைய இரண்டு தம்பிகள் யெகோவாவுக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து இப்போது மூப்பர்களாக சேவிக்கின்றனர். என் தாயின் சகோதரியும் சத்தியத்தை படிக்க நான் உதவினேன். அவர் கடந்த 15 வருடங்களாக முழுநேர ஊழியம் செய்திருக்கிறார்.
நான் வேலை செய்த அந்த மருந்து கம்பெனியின் மேனேஜர் நான் வாழ்க்கையில் செய்த மாற்றங்களை எல்லாம் பார்த்து அதிக உற்சாகமடைந்தார், பின்னர் அவர் பைபிள் சத்தியங்களை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக ஏற்றுக்கொண்டார். நான் முழுக்காட்டுதல் எடுத்து ஒரு வருடம் கழித்து, அவரும் கடவுளுக்கான தன் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் வெளிக்காட்டினார். பிறகு யெகோவாவின் சாட்சிகளின் ப்ரிட்டோரியா சபையில் அநேக வருடங்கள் ஒரு மூப்பராக பணியாற்றினார்.
இப்போது நான் ஒரு ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவ சகோதரியை திருமணம் செய்திருக்கிறேன். லியோனியும் நானும் 1978-ல் ஆஸ்திரேலியாவிற்கு இடம் மாறினோம். அங்கு எலைஜா மற்றும் பால் என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். என் குடும்பத்தார் எனக்கு எப்போதும் உற்சாகத்தையும் ஆதரவையும் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தியிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் தலைநகரமாகிய கேன்பராவிலுள்ள சபையில் மூப்பராக சேவை செய்யும் சிலாக்கியத்தை நான் பெற்றிருக்கிறேன். அவலநிலைக்கும் மரணத்திற்கும் வழிநடத்திக்கொண்டிருந்த, குற்றம் நிறைந்த வீணான வாழ்க்கையிலிருந்து என்னைக் காப்பாற்றிய யெகோவாவிற்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மேலாக, அவர் எனக்கும் எனக்குப் பிரியமானவர்களுக்கும் உண்மையான நம்பிக்கையை கொடுப்பதன்மூலம் என் வாழ்க்கைக்கு புது அர்த்தத்தை கொடுத்திருக்கிறார்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 18-ன் படம்]
12 வயதில் நான்
[பக்கம் 18-ன் படம்]
இன்று என் மனைவி, இரண்டு பிள்ளைகளுடன்