போட்டிவிளையாட்டுகள் வகிக்கும் இடம்
மகத்துவமுள்ள சிருஷ்டிகர் பைபிளில் “சந்தோஷமுள்ள தேவன்,” என்று விவரிக்கப்பட்டிருக்கிறார், மற்றும் அவருடைய சிருஷ்டிகள் சந்தோஷமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11) எனவே விளையாட்டை அனுபவித்துக் களிக்கும் திறமையுடன் மனிதர்களை அவர் சிருஷ்டித்திருக்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை. இதனால் தி நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா அறிக்கை செய்கிறது: “போட்டி விளையாட்டுகள் மற்றும் விளையாட்டுகளின் வரலாறு மனித வரலாற்றின் ஒரு பாகமாயிருக்கிறது.”
விளையாட்டுகளின் வரலாற்றில் பந்து தோன்றியது மிகவும் தலைச்சிறந்த அம்சமாகக் கூறப்படுகிறது. “விலங்குகள் விளையாட்டுப் பொருட்களுடன் துள்ளி விளையாடுதலை அனுபவிக்கின்றன என்ற குறிப்பானது, ஒரு பந்தைப்போன்ற மாற்றுப்பொருள் தட்டிச்செல்லப்படாத அல்லது எறியப்படாத . . . ஒரு காலம் ஒருபோதும் இருந்திருக்க முடியாது என்பதைத் தெரிவிக்கிறது” என்று மேலே குறிப்பிடப்பட்ட என்ஸைக்ளோபீடியா கூறுகிறது.
ஆர்வமூட்டும் விதமாகவே, பந்தை அடிப்பதற்கு வெகுகாலமாகவே சில பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. “பெர்சியர், கிரேக்கர், மற்றும் அமெரிக்க இந்தியரால் விளையாடப்பட்ட மட்டை விளையாட்டுகள் நிச்சயமாகவே இருந்திருக்கின்றன,” என்பதாக பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. “திபெத்தைத் தொடக்கமாகக் கொண்ட வார்த்தையையுடைய, போலோ, சில வடிவில் தெளிவாகவே (கி.மு. 522 முதல் 486 வரை ஆட்சி செய்த) முதலாம் தரியு காலத்தில் பெர்சியரால் நன்கு அறியப்பட்டிருந்தது. குழிப்பந்தாட்டம், அதன் நவீன வடிவில் ஸ்காட்லாந்தினால் கண்டுபிடிக்கப்பட்டதாக பெருமைப் பாராட்டப்பட்டாலும், ரோமர் காலத்திலும், மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் மதிக்கத்தக்க முன்வரலாற்றைக் கொண்டிருந்தது.”
விளையாட்டுகளுக்கான முற்கால முக்கியத்துவம்
எபிரெய வேத எழுத்துக்கள் (“பழைய ஏற்பாடு”) எழுதிமுடிப்பதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே, ஒழுங்கமைக்கப்பட்ட போட்டிவிளையாட்டுகள் பிரசித்திப் பெற்றவைகளாயிருந்தன. உதாரணமாக, முற்கால கிரீஸிலுள்ள ஒலிம்பியாவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை விளையாட்டுகள் நடத்தப்பட்டன. “கி.மு. 776 முதல் கி.பி. 217 வரையுள்ள வெற்றி வீரர்களைப்பற்றிய பதிவுகள் ஒலிம்பியாவிலுள்ளன,” அல்லது ஏறக்குறைய ஓராயிர வருடப் பதிவுகள் உள்ளன என்று பிரிட்டானிக்கா அறிக்கை செய்கிறது! ஒலிம்பிக் விளையாட்டுகளைக் கொண்டு காலத்தை அளவிடுமளவிற்கு கிரேக்க வாழ்க்கையில் அவை மிக முக்கியமாக இருந்தன. விளையாட்டுகளுக்கிடையிலுள்ள ஒவ்வொரு நான்கு வருடப் பகுதிகளும் ஓர் ஒலிம்பியாட் என்றழைக்கப்பட்டன. இவ்வாறு, இந்தப் பழைய காலக் கணிப்பு முறைப்படி, இயேசு கிறிஸ்து 194-வது ஒலிம்பியாட் காலப்பகுதியில் பிறந்தார்.
“[எருசலேம்] நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும்,” என்று தீர்க்கதரிசிகளில் ஒருவன் பேசினாலும் எபிரெய வேத எழுத்துக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. (சகரியா 8:5) இயேசுவின் பிறப்புக்கு ஒரு நூற்றுக்குமதிகமான வருடங்களுக்கு முன், கிரேக்க விளையாட்டுப் போட்டிகள் இஸ்ரேலில் அறிமுகப்படுத்தப்பட்டது. எருசலேமில் ஓர் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது, மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்காக ஆசாரியர்கள் தங்களுடைய கடமைகளில்கூட தவறியிருக்கின்றனர்.—2 மக்கபே ஆகமம் 4:12-15.
இயேசு பிறந்தபோது ரோமப் பேரரசனாயிருந்த அகஸ்டஸ் சீசருக்கு விளையாட்டுப் போட்டிகளில் பற்று இருந்தது, மற்றும் ரோமில் விளையாட்டுப் போட்டிகள் பிரசித்திப் பெற்றன. எனினும் ரோமானிய மக்களுக்கு உண்மையிலேயே ஆர்வமூட்டுவதாயிருந்தவை குத்துச் சண்டை மற்றும் மல்யுத்தம் போன்றவைகளடங்கிய நிகழ்ச்சிகள். இந்தப் “போட்டிவிளையாட்டுகள்” அடிக்கடி மனிதர் ஒருவரையொருவர் எதிர்த்தோ அல்லது மிருகங்களை எதிர்த்தோ மரணம் வரை போரடச் செய்யும் சண்டையாகிய வன்முறை மற்றும் இரத்தம் சிந்தும் பந்தயங்களாக படுமோச நிலையை அடைந்தன.
“புதிய ஏற்பாட்”டில் போட்டிவிளையாட்டுகள்
இருப்பினும், போட்டிவிளையாட்டுகளை அவ்வாறு பயங்கரமாக துர்ப்பிரயோகப்படுத்துவது, அவற்றை விளையாடுவதுதானே தவறு என்று அர்த்தப்படுத்தாது. விளையாட்டுகளை அல்லது அவற்றை விளையாடுவதை, இயேசுவோ அவருடைய சீஷர்களோ கண்டனம் செய்வதைப்பற்றி வேத எழுத்துக்களில் நாம் ஒருபோதும் வாசிப்பது கிடையாது. மாறாக, அப்போஸ்தலர்கள் அடிக்கடி அவற்றின் அம்சங்களை, போதனைக் குறிப்புக்களை உருவகப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தியிருக்கின்றனர்.
உதாரணமாக, “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் (பரிசை, NW) பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியபோது, தெளிவாகவே ஒலிம்பிக் விளையாட்டுகளில் தோன்றும் ஓட்டப் பந்தயங்களை அவர் மனதில் கொண்டிருந்தார். அவர் மேலுமாகக் கூறினார்: “பந்தயத்திற்குப் போரடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.”—1 கொரிந்தியர் 9:24, 25.
வேறொரு சந்தர்ப்பத்தில், ஒரு கிறிஸ்தவன் ஜீவனாகியப் பரிசைப் பெற்றுக்கொள்ளும்படியான தீர்மானத்தோடு ஓடவேண்டும் என்பதாக பவுல் கூறினார். “தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்,” என்று அவர் எழுதினார். (பிலிப்பியர் 3:14) மேலும், ஓர் ஒழுக்க வாழ்க்கையின் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டியத் தேவையிருக்கிறது என்பதை உருவகமாக்கிக் காட்டும்போது, பவுல் தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டினார்: “ஒருவன் மல்யுத்தம் பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.” (2 தீமோத்தேயு 2:5) மற்றும் அப்போஸ்தலனாகிய பேதுரு, தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றும் கிறிஸ்தவ மேய்ப்பர்கள் “மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவார்கள்,” என்பதாக எழுதினார்.—1 பேதுரு 5:4.
வாலிபனாகிய தீமோத்தேயு போட்டிவிளையாட்டுகளை அனுபவித்த வாலிப கிறிஸ்தவர்களை மேய்ப்பதில் ஈடுபட்டிருந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, [உடற்பயிற்சி வல்லுநனைப் போல] “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது,” என்று பவுல் அவனுக்கு எழுதி இவ்வாறு, கிரேக்கர்களால் கடுமையாக பயிற்சி செய்யப்படும் உடற்பயிற்சிகள் ஓரளவு பிரயோஜனமுள்ளவை என்பதை ஒப்புக்கொள்கிறார். “ஆனால்” என்று பவுல் உடனே தொடருகிறார், “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின் வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.”—1 தீமோத்தேயு 4:8; தி கிங்டம் இன்டர்லீனியர் டிரான்ஸ்லேஷன் ஆப் தி கிரீக் ஸ்க்ரிப்ச்சர்ஸ் (The Kingdom Interlinear Translation of the Greek Scriptures) பாருங்கள்.
உடற்பயிற்சிக்குத் தகுந்த ஓர் இடம்
எனவே, வாழ்க்கையில் உடற்பயிற்சி ஒரு தகுந்த இடத்தை வகிக்க முடியும் என்பதை வேத எழுத்துக்கள் காட்டுகின்றன. எனினும் சமநிலைக்கும், நியாயத்தன்மைக்கும் ஒரு தேவையிருக்கிறது. பவுல் எழுதினார் “உங்கள் சாந்தகுணம் [நியாயத்தன்மை NW] எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.” (பிலிப்பியர் 4:5) என்றபோதிலும், இந்தச் சமநிலையைக் காண்பது எவ்வளவு கடினமானது!
முற்கால கிரேக்கர்கள் விளையாட்டுகளுக்கு அளவுக்கதிக முக்கியத்துவம் கொடுத்தனர், மற்றும் ரோமர்கள் பங்கு கொள்பவர்களுக்கும் இரத்தம் சிந்தும் காட்சிகளில் சந்தோஷம் கண்டடைந்தவர்களுக்கும் கெடுதி விளைவிக்கக்கூடிய விளையாட்டு வகைகளைத் தனிச்சிறப்புப்படுத்திக் காட்டினர். மறுபட்சத்தில், சிலர் மதத்தின் பெயரில் விளையாட்டுகளை கட்டுப்படுத்தி தடைசெய்துமிருக்கின்றனர். தி நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா குறிப்பிட்டது: “17-வது நூற்றாண்டின் இந்தக் கடுந்துயர் மனநிலைகளானது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்த விளையாட்டுக் கேளிக்கையின் அளவைக் குறைத்து விட்டன.”
சமீபத்தில் போட்டிவிளையாட்டுகள் சரித்திரத்தில் ஒருபோதும் இருந்திராத வகையில் ஒரு புத்துயிர்ச்சி அனுபவித்தது. “வானிலைக்கு அடுத்து, வேறு எந்தத் தலைப்புகளையும் விட பெரும்பாலும் போட்டி விளையாட்டுகளைப் பற்றியே மக்கள் அதிகம் பேசுகிறார்கள்,” என்று தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா கூறுகிறது. விளையாட்டுகள் “மக்களின் போத மருந்து” என்றும் அழைக்கப்பட்டது.
போட்டிவிளையாட்டுகளுக்கான இப்படிப்பட்ட வெறியுணர்வு உருவாக்கியிருக்கும் சில பிரச்னைகள் எவை? நீங்களோ உங்கள் குடும்பமோ இந்த வெறியுணர்வின் விளைவாக துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் எவ்வாறு விளையாட்டுகளை அதன் தகுந்த இடத்தில் வைக்க முடியும்? (g91 8/22)