உலகமுழுவதும் குடும்பங்களை அமைத்தல் அன்பு, சிட்சை, முன்மாதிரி, மற்றும் ஆவிக்குரிய மதிப்பீடுகளோடு பெற்றோரின் பாகத்தை நிறைவேற்றுதல்
அநேக நாடுகளிலிருந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் குழந்தையிலிருந்து பருவ வயதுவரை வெற்றிகரமாக வளர்த்திருப்பதன்பேரில் அறிக்கைகளை அனுப்பியிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே யெகோவாவின் சாட்சிகள், எனவே மேலே தலைப்பில் பட்டியலிடப்பட்டிருக்கும் நான்கு அம்சங்களிலும் கவனம் தேவைப்படுவதை அவர்களுடைய அறிக்கைகள் காண்பிக்கின்றன. இங்கு அச்சிடப்பட்டிருக்கும் பகுதிகள் குடும்ப பயிற்றுவிப்பில் அவர்கள் பின்பற்றிய ஒருசில வித்தியாசமான அம்சங்களைத்தானே பிரதிபலிக்கின்றன.
ஹவாய்த் தீவிலிருந்து
“பைபிள் நமக்குச் சொல்லுகிறபடி, அன்பே ‘பெரியது.’ வீட்டிலும் குடும்பத்திலும் முழுவதுமாக அன்பு அதன் மகிமையான அம்சங்கள் அனைத்திலும் ஒளிவீசிட வேண்டும். கேரனும் நானும் எங்கள் விவாகத்தில் இந்தத் தெய்வீகக் குணத்தைப் பகிர்ந்துவந்திருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். வெற்றிகரமான பிள்ளை வளர்ப்புக்குப் பிரதான அடிப்படை மகிழ்ச்சியோடிருக்கும் விவாகத் தம்பதியாயிருப்பது என்ற என் நம்பிக்கையை நான் மிகைப்பட சொல்வதற்கில்லை.
“எங்களுடைய முதல் பிள்ளை பிறந்து பல நாட்களாகவும் வாரங்களாகவும் என் இருதயத்தில் பொங்கியெழுந்த அந்த வல்லமையான உணர்ச்சிகள் இன்று வரை என் நினைவில் இருக்கிறது. ஒரு புதிய உயிருள்ள சிருஷ்டியின் ஆரம்பம் ஆச்சரியமாயிருந்தது. குழந்தை ரேச்சலுக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது கேரல் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் காணப்பட்டது என் நினைவில் இருக்கிறது. அவளைக் கண்டு நானும் மகிழ்ந்தேன், ஆனால் சற்று வெறுப்புணர்ச்சியும் இருந்தது, சற்று பொறாமையும் இருந்தது. கேரல் ரேச்சலுடன் பிணைக்கப்பட்டிருந்தாள், ஆனால் என் நிலை என்ன? நான் தள்ளப்பட்டுவிட்டதாக—மென்மையாக, ஆனாலும்—குடும்ப வட்டாரத்திற்கு வெளியே தள்ளப்பட்டதாக உணர்ந்தேன். யெகோவாவின் உதவியால் கேரலிடம் என் உணர்ச்சிகளையும் அக்கறைகளையும் வெளிப்படுத்த முடிந்தது, அவளும் எனக்காக அனுதாபப்பட்டாள், ஆதரவு தந்தாள்.
“பின்னர்—குழந்தையின் ஈரத்துணியை மாற்றுவது போன்ற மிகைப்படச் சொல்வதற்கில்லாத தனித்தன்மை வாய்ந்த அனுபவம் உட்பட என்னால் ஏற்கமுடியாதவற்றில் சில காரியங்களைக் குழந்தைக்குச் செய்ய உதவுவதன் மூலம் எங்கள் புதிய குழந்தையிடமாக நெருங்கிவர முடிந்தது! ரேச்சலுக்குப் பின்னர் எங்களுக்குக் கூடுதலாக ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் கடைசிதான் ரெபேக்காள், இப்பொழுது அவளுக்கு எட்டு வயது. எங்கள் பிள்ளைகளில் ஒவ்வொருவருடனும் நாங்கள் தனிப்பட்ட பைபிள் படிப்புகளை நடத்திவந்தோம்.
“ஆரம்பப் பிள்ளை வளர்ப்பு பற்றிய இன்னொரு காரியம். எங்களுடைய குழந்தைகள் பிறந்தது முதல் கேரலும் நானும் அவர்களோடு பேசிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி கண்டோம். சிலசமயங்களில் நாங்கள் யெகோவாவைப் பற்றியும் அவருடைய அழகிய, மகத்துவமான கிரியைகளைப் பற்றியும் பேசினோம். சிலசமயங்களில் நாங்கள் முட்டாள்தனமாகத் தோன்றும் விளையாட்டான வேடிக்கைக் காரியங்களைப் பேசினோம். உண்மைதான், அவர்களுக்கு ஏதோ ஒன்றைக் கற்பிக்க முயன்றோம், ஆனால் அதைவிட நாங்கள் ஓர் இன்பமான, தளர்ந்த, சூதுவாதற்றவிதத்தில் நேரத்தைச் செலவழித்தோம். அவ்விதமான பேச்சுகள் பெற்றோர்-பிள்ளை பந்தம் பலப்படுவதற்கு வெகுவாக உதவியாக இருந்தது. எங்களுடைய குடும்பத்தில் இருந்துவந்திருக்கும் நல்ல பேச்சுத்தொடர்பை அமைத்திட அவை உதவியிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
“நம்மையே அளிப்பதன், ஆவிக்குரிய காரியங்களின், மேன்மையான மதிப்பை யெகோவா கற்பித்திருக்கிறார். கேரலும் நானும் மிகுந்த பொருள் காரியங்களைக் கொண்டிருந்ததில்லை, ஆனால் நாங்கள் உண்மையில் அவற்றை நாடினதுமில்லை, இழந்ததுமில்லை. ஐசுவரியத்திற்கு அடிமையாயிருக்க எங்கள் நேரத்தை அதிகமாக செலவழித்திருப்போமானால், யெகோவாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் செலவழிக்க எங்களுக்குப் போதியளவு நேரம் இருந்திருக்காது. நாங்கள் சரியான தெரிவை செய்தோம்.” (கேரலின் குறிப்புகள் பின்வருமாறு.)
“உங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகள் தங்கள் தாய்மார்களோடு கொண்டிருக்கும் பந்தத்தைப் பலப்படுத்துவதில் வெகுவாக உதவுகிறது என்று நான் கருதுகிறேன். உங்கள் குழந்தையைக் கொஞ்சுவதிலும் முத்தமிடுவதிலும் நீங்கள் அவ்வளவு அதிகமான நேரத்தைச் செலவழிப்பதால் அதற்கு நெருங்கவருவதை நீங்கள் தவிர்க்க முடியாது. தாய் குழந்தையைவிட்டு இரண்டு முதல் நான்கு மணிநேரத்திற்கும் அதிகமாக பிரிந்திருக்க முடியாது. எங்கள் பிள்ளைகளைக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பணிப்பெண்களுடன் விட்டுச் செல்லக்கூடாது என்பதில் எடும் நானும் எப்பொழுதுமே மிக உறுதியாயிருந்தோம். என் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதிலும், அவர்கள் வளருவதைப் பார்க்கவும் நாங்கள் எப்பொழுதுமே விரும்பினோம். எனவே அவர்கள் சிறியவர்களாக இருந்தபோது, நான் வெளியிலே ஒரு வேலை செய்யவில்லை. அவர்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை நான் உணரும்படியாக செய்தது என்று நினைக்கிறேன். உங்கள் பிள்ளைகளுக்கு மிக நெருங்கியிருப்பதற்கான பிரதான வழி அவர்களோடு நேரம் செலவழிப்பதே. வீட்டில் அவர்களோடு இருப்பதன் இடத்தை வேறு எதுவுமே எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் சம்பாதிக்கும் எல்லா பொருட்களுமே, உங்கள் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது.
“பருவ வயதுகள் கடினமாக இருந்ததற்கு ஒரே காரணம், நான் குழந்தைகளின் வளர்ச்சிக்கு என்னை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு என் உதவி அந்தளவுக்கு அவசியமில்லை, அவர்கள் சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்தார்கள் என்ற உணர்வை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அது அச்ச உணர்வை எழுப்பிடும் ஒரு சமயம். நீங்கள் கொடுத்துவந்த போதனை, சிட்சை, மற்றும் அவர்களைப் பக்குவப்படுத்திவந்த செயல் ஆகிய எல்லாவற்றையும் அது சோதிக்கிறது. அவர்கள் பருவ வயதடைந்த பின்னர் ஆரம்பிப்பது உண்மையில் மிகவும் பிந்திவிட்ட செயல். ஒழுக்க நெறியையும், மனிதவர்க்கத்தின்பேரில் அன்பு, விசேஷமாக யெகோவாவின்பேரில் அன்பு செலுத்துதல் ஆகியவற்றை அப்பொழுது கற்றுக்கொடுக்க முயலுவது மிகவும் தாமதமான செயல். இந்தக் காரியங்கள் பிறப்பிலிருந்தே அவர்களில் பண்படுத்தப்பட வேண்டும்.
“அந்தக் கடினமான பருவ வயது ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் பணியைச் செய்வதற்கு உங்களுக்கு 12 ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதில் நீங்கள் கடினமாக உழைத்திருப்பீர்களானால், யெகோவாவை இருதயப்பூர்வமாக சேவிப்பதற்கு அவர்கள் தீர்மானிக்கும் அந்தச் சமயம் நீங்கள் சந்தோஷமும் சமாதானமும் அறுவடை செய்வதற்கான சமயமாயிருக்கும்.”—எட்வர்டு மற்றும் கேரல் ஓயென்ஸ்.
சிம்பாப்வேயிலிருந்து
“பிள்ளைகள் ‘கர்த்தரால் வரும் சுதந்தரம்.’ இவ்விதமாக பைபிள் சங்கீதம் 127:4 சொல்லுகிறது. இதனை மனதில் கொண்டிருப்பதுதானே பெற்றோராகிய எங்களை இந்தச் சுதந்தரத்தைக் கவனிப்பதில் எங்களாலான அனைத்தையும் செய்வதற்கு உதவியிருக்கிறது. எங்களுடைய குடும்பத்தில் காரியங்களை ஒன்றாகச் செய்வது—ஒன்றாக ஜெபிப்பது, பைபிளை ஒன்றாகப் படிப்பது, ஒன்றாகத் தொழுதுகொள்வது, ஒன்றாக வேலை செய்வது, நண்பர்களை ஒன்றாகச் சென்று பார்ப்பது, ஒன்றாக விளையாடுவது—எங்கள் அடிப்படை முயற்சிகளில் ஒன்று.
“சில சமயங்களில் சிட்சை தேவைப்பட்டது. ஒருசமயம் பருவ வயதின் ஆரம்பப் பருவத்திலிருந்த எங்கள் மகன் வீட்டிற்கு வர தாமதமாயிற்று. எங்களுக்குக் கவலையாயிருந்தது. அவனிடம் தெளிவு இல்லை. ஏதோ தவறு இருப்பதை எங்களால் உணர முடிந்தது, ஆனால் மறுநாள் காலை மட்டும் அந்தக் காரியத்தை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. நள்ளிரவுபோல் எங்கள் படுக்கை அறையின் கதவு தட்டப்பட்டது. அது எங்கள் மகன், கண்களில் கண்ணீர் பொங்க நின்றான்.
“‘அப்பா, அம்மா, கடந்த நான்கு மணிநேரமாய் என்னால் தூங்க முடியவில்லை. ஏனென்றால் கெட்ட கூட்டுறவைப் பற்றி நீங்கள் பைபிளிலிருந்து எனக்குக் கொடுத்த ஆலோசனைக்கு நான் செவிகொடுக்கவில்லை. இன்று பள்ளிக்குப் பின்னர் என்னைத் தங்களோடு நீச்சலுக்கு வரும்படி சில பையன்கள் என்னை வற்புறுத்தினார்கள். அவர்களில் ஒருவன் என்னைத் தண்ணீருக்குள் இழுத்தான். இன்னொரு பையன் மட்டும் என் உதவிக்கு வராமல் இருந்திருந்தால், நான் மூழ்கியிருப்பேன். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்து, என்னைக் கோழை என்று கூப்பிட்டார்கள். நான் நேரே வீட்டிற்கு வந்துவிட்டேன், ஆனால் நான் வெளியிலேயே நின்று விட்டேன், காரணம், நான் குற்றமுள்ளவனாக உணர்ந்தேன். பைபிளில் காண்பிக்கப்பட்டிருப்பதுபோல், கெட்ட கூட்டுறவைக் குறித்து நீங்கள் என்னை எச்சரித்தபோது, நான் அதற்கு செவிகொடுக்கவில்லை, என்னை மன்னிக்கவும்.’—1 கொரிந்தியர் 15:33.
“அவன் அழுதான், நாங்களும் அழுதோம். அவன் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டதற்காக நாங்கள் சந்தோஷப்பட்டோம், ஆனால் அது ஆழமாகச் செல்வதற்காக நாங்கள் அவனைச் சிட்சித்தோம். யெகோவா இரக்கமுள்ளவர், தவறுகளை மன்னிக்கிறவர், ஆனால் ‘குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாதவர்,’ என்று யாத்திராகமம் 34:6, 7 காண்பிக்கிறது.”—டேவிட் மற்றும் பெட்டி முப்ஃபுருரீர்வா.
பிரேஸிலிலிருந்து
“நான் ஒரு விதவை, என் மகனை நானே தனியாக வளர்க்க வேண்டும். அதே சமயத்தில், நான் ஓர் ஆசிரியையாகவும் வேலை செய்கிறேன். தேவைப்படுவதெல்லாம் முரண்படாத போதனை, சமநிலையான சிட்சை, மற்றும் பெற்றோரின் பாகத்தில் ஒரு நல்ல முன்மாதிரி. உறுதியாக இருப்பதும், அதே சமயத்தில் பரிதாபப்படுவதும் எனக்குக் கடினமாயிருந்தது. நான் செவிகொடுக்கும் கலையை, விசேஷமாக என் இருதயத்தால் செவிகொடுக்கும் கலையை வளர்த்துக்கொள்ளவேண்டியிருந்தது. பேச்சுத்தொடர்பு மிகவும் முக்கியம், வெறுமென பேசுவது அல்ல, ஆனால் பிள்ளையை உட்படுத்த வேண்டும், உணர்ச்சிசம்பந்தமாக பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். குடும்ப வரவு செலவு திட்டத்தில் அவனையும் உட்படுத்துவதன்மூலம் அவனைக் குடும்பத்தின் ஒரு பாகமாக உணரச் செய்ய முயன்றேன். மின்சார செலவு அல்லது தண்ணீர் செலவுக்கான பயனீட்டுக் கணக்கு வரும்போது, அல்லது துணிமணியின் அல்லது காலணிகளின் விலை உயர்ந்த போது, இந்தக் காரியங்களை நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து கலந்தாலோசித்தோம்.
“நன்றாகச் செய்யப்பட்டக் காரியங்களுக்கு அவர்களை உற்சாகப்படுத்துவது மிகவும் முக்கியம். வாய்ப்புகள் எழும்புகையில், கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் பின்பற்றுவதன் மதிப்பை நான் காண்பிப்பதுண்டு. ஒரு சமயம், அவனுக்குப் பல முறைகள் ஆலோசனை கூறின பின்பு, சொல்லர்த்தமான பிரம்பை நான் உபயோகிக்க நேர்ந்தது. அது எனக்கு எவ்வளவு கடினமாயிருந்தது, ஆனால், ஆச்சரியம், என்னே ஆசீர்வாதமான பலன்கள்! வளரிளம் பருவத்தில் நமக்கு நல்ல காலங்களும் உண்டு, கெட்ட காலங்களும் உண்டு, ஆனால் புத்திமதி மற்றும் சிட்சிப்பின் மதிப்பை நாம் காண முடிகிறது. அவன் தன் தனிப்பட்ட பிரச்னைகளைச் சொல்லுகிறான், தன் உணர்ச்சிகளை தெரிவிக்கிறான்.
“நல்ல பேச்சுத்தொடர்பைக் காத்துக்கொள்வதற்காக நான் கவனமாயிருக்க வேண்டும். என்னுடைய மகனோடு செவழிக்க நேரம் இருக்க வேண்டும் என்பதற்காக என் வேலையில் நான் மிகவும் ஆழ்ந்துவிடாதிருக்க முயலுகிறேன். எங்களுக்குப் பிரச்னைகள் இருக்கையில், நான் அதிக கவனமாக செவிகொடுக்க முயலுகிறேன், மற்றும் யெகோவாவின் உதவியோடு நாங்கள் அதை மேற்கொள்ளுகிறோம். நானும் தவறிழைக்கிறேன் என்பதை அவன் அறிந்துகொள்ளச் செய்கிறேன். ஒரு சமயம் நான் அதிக கோபப்பட்டு, ‘அவனுடைய வாயை மூடச்’ சொன்னேன். ஒருவரை ‘வாயை மூடச்’ சொல்வது அன்பில்லாத தன்மை என்று அவன் என்னிடம் சொன்னான். அவன் சொன்னது சரியே. அன்று பிற்பகல் நாங்கள் உண்மையிலேயே நீண்ட நேரம் பேசினோம்.”—யொலன்டா மோரெஸ்.
கொரியா குடியரசிலிருந்து
“என் குடும்ப வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்துவதில் ஆர்வம் காண்பித்தேன். விசேஷமாக உபாகமம் 6:6-9 என் இருதயத்தின் ஆழத்தில் இருந்தது. எனவே என்னால் முடிந்தளவுக்கு என் பிள்ளைகளோடு இருக்க முயன்றேன், அவர்களை எனக்கு அண்மையில் வைத்துக்கொள்ளவும் அவர்களுடைய மனதுகளிலும் இருதயங்களிலும் கடவுளுடைய வார்த்தையின் நியமங்களை வளர்த்தேன். மேலும் என் பிள்ளைகளுக்கு முழுநேர ஊழியம் எப்படி இருக்கிறது என்பது குறித்து உணரச் செய்வதற்கு முழுநேர மிஷனரிகளையும் பெத்தேல் குடும்ப உறுப்பினர்களையும் என் வீட்டிற்கு அழைத்தேன்.
“பிள்ளைகள் பிரச்னைகளை உண்டுபண்ணும்போது பெற்றோர் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆவியின் கனிகளை வெளிப்படுத்துவதாகும். பிள்ளைகள் மீது எரிச்சலடைந்து நம் கோபத்தை வெளிப்படுத்துவது மிகவும் எளிது. என்றபோதிலும், பெற்றோராகிய நாம், பொறுமையாயிருந்து முன்மாதிரியான நடத்தையை வெளிக்காட்டிட வேண்டும். பிள்ளைகளை மதித்து, அவர்களுடைய சூழ்நிலைமையை விளக்கிட நேரம் கொடுப்பது முக்கியம். தவறிழைத்தலுக்கான தெளிவான அத்தாட்சி இல்லையென்றால், அவர்களை நம்பி எப்பொழுதுமே கட்டியெழுப்புங்கள். நீங்கள் ஒரு பிள்ளையைச் சிட்சிக்க நேர்ந்தால், முதலாவது அவர்களோடு நியாயமாய்ப் பேசிப் பாருங்கள், அவன் இழைத்த தவற்றை அவனுக்கு எடுத்துக்காட்டி, பின்னர் அந்தச் செயல் யெகோவாவுக்கும் அவனுடைய பெற்றோருக்கும் எந்தளவுக்குப் பிரியமற்றதாயிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுங்கள். பின்னரே சிட்சியுங்கள். சிட்சிப்பை அடைந்த என் மகன்கள், ‘நான் ஏன் கலகத்தனமாய் நடந்துகொண்டேன் என்பது எனக்குப் புரியவில்லை. நான் மிகவும் முட்டாள்தனமாயிருந்தேன்.’ தங்களைச் சிட்சிக்குமளவுக்குக் கவனிக்கும் பெற்றோரை அவர்கள் போற்றுகிறார்கள்.
“கெட்ட நடத்தையின் ஆரம்பத்தைக் கணிக்க பெற்றோர் கவனமாயிருக்க வேண்டும். என்னுடைய முதல் மகன் ஒன்பதாவது படிக்கும்போது, அவனுடைய அறையிலிருந்து சப்தமான ராக் இசை ஒலிப்பதைக் கேட்டேன். (மற்ற மூத்த மாணவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்) மாணவ சிட்சை குழுவை அவன் சேர்ந்திருப்பதும், அவன் உலக செல்வாக்குக்கு வெளிப்படுத்தப்படுவதும் தெரியவந்தது. அவனுடைய அணியைச் சேர்ந்த மாணவர்களின் வற்புறுத்தல் தொடர்ந்ததாலும் அதில் என்ன புதுமை இருக்கிறது என்பதை அறியும் ஆர்வத்தாலும் அவன் புகைபிடித்தான் என்று கண்டேன். புகைபிடித்தலில் இருக்கும் ஆபத்துகளை அவனுக்கு எடுத்துக்காண்பித்தோம். தான் அந்த அணியிலிருந்து விலகிடவேண்டும் என்று என் மகன் தன் சொந்த முடிவுக்கு வந்தான், அப்படியே செய்தான். மறுப்புக்குரிய பள்ளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்குக் குடும்பத்தோடும் சபை உறுப்பினருடனும் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளுக்கு ஏற்பாடு செய்தோம்.
“கடைசியாக, மிகவும் முக்கியமான காரியம் பெற்றோர் நல்ல முன்மாதிரி வைப்பதாகும் என்று சொல்ல விரும்புகிறேன். நான் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஒரு முழு நேர ஊழியனாக சேவிக்க விரும்புகிறேன் என்பதை என் இரண்டு பிள்ளைகளிடமும் எப்பொழுதுமே சொல்வேன். என்னுடைய இரண்டாவது மகன் பள்ளிப் படிப்பை முடித்ததும், ஒரு பட்டுத் தொழிற்சாலையில் வேலை செய்வதிலிருந்து ஓய்வுபெற முடிந்தது, ஒரு முழுநேர ஊழியனானேன். என்னுடைய தீர்மானத்தைப் பார்த்த என் இரண்டு மகன்களும் என் வழியைப் பின்பற்றினார்கள். நடுநிலைமைப் பிரச்னையின் காரணத்தால் சிறைவாசத்தை அனுபவித்தப் பின்னர், இருவருமே முழு நேர ஊழியத்தை மேற்கொண்டு, இன்றுவரை அதில் தொடருகிறார்கள்.”—ஷிம் யு கீ.
சுவீடனிலிருந்து
“நாங்கள் ஏழு பிள்ளைகளை வளர்த்தோம், ஐந்து பையன்கள், இரண்டு பெண்பிள்ளைகள். இப்பொழுது வளர்ந்தவர்களாய் எல்லாருமே கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதில் மிகவும் சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். ஆரம்ப வயதிலிருந்தே இந்தப் பிள்ளைகள் சபைக் கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் சென்றார்கள். படிப்படியாக அவர்கள் பிரசங்க வேலையில் ஈடுபட கற்றுக்கொண்டார்கள்—சந்திக்கப்படும் வீட்டு மணியை அடிப்பதற்கு, வாழ்த்துவதற்கு, தங்கள் பெயரைச் சொல்லுவதற்கு, ஒரு கைப்பிரதியை, துண்டுப்பிரதியை, அல்லது பத்திரிகையைக் கொடுப்பதற்கு. மிகச் சிறு வயதிலேயே அவர்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சுகள் கொடுத்தார்கள்.
“சிலசமயங்களில் கவலைக்குரிய பிரச்னைகள் விசேஷ கவனத்தைத் தேவைப்படுத்தியது. அந்தச் சமயத்தில் அன்பும் பொறுமையும் காண்பிப்பது முக்கியம்—கூச்சல் போடுவதோ அல்லது சண்டைபண்ணுவதோ சரியல்ல. காரியங்களை நியாயங்காட்டிப் பேசுவதன் மூலமும் யெகோவாவின் நோக்குநிலைகளை வலியுறுத்துவதன் மூலமும் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. பொருள் விவகாரங்களில் அவர்களைப் பயிற்றுவித்தோம். பெரியவர்களானபோது, அவர்கள் தினசரிகள் விநியோகிப்பது, அறுவடை வேலையில் ஈடுபடுவது, தோட்ட வேலை செய்வது போன்ற வேலைகளைச் செய்தார்கள். வெகுதூரத்தில் வசித்த தாத்தா பாட்டிமார்களைச் சந்திக்கச் செல்வது வயதானவர்களின் பிரச்னைகளை அறிய செய்து, அவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ளச் செய்தது.
“எங்களுடைய 30-வது விவாக நிறைவு தினத்தன்று, பின்வரும் கடிதத்தைப் பெற்றோம்:
“‘எங்கள் அன்புள்ள பெற்றோருக்கு:
“‘எல்லாவற்றுக்கும் நன்றி! எங்களிடமாகப் பொழிந்த உங்கள் அனலான அன்பு, எங்களில் வளர்த்த உண்மையான விசுவாசம், எங்களுக்குக் கொடுத்துள்ள அற்புதமான நம்பிக்கை—இது வார்த்தைகளாலோ அல்லது பணத்தாலோ விளக்கிடப்படமுடியாது. என்றபோதிலும், இந்தச் சிறிய நினைவுமடல் மூலம் எங்கள் அன்புள்ள அப்பா, அம்மாவைக் குறித்து நாங்கள் எவ்வாறு உணருகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். [கையொப்பம்] உங்கள் பிள்ளைகள்.’
“இந்த ‘20 ஆண்டு திட்டங்களைப்’ பின்னிட்டுப் பார்க்கும்போது, எங்களிடமாக இந்தளவுக்கு இரக்கங்காட்டிய எங்கள் பரம பிதாவாகிய யெகோவாவுக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியுணர்வுடையவர்களாய் இருக்கிறோம்.”—பர்ட்டில் மற்றும் பிரீட்டா ஈஸ்ட்பரி.
பெற்றோரிடமிருந்து இதரத் துணுக்குகள்
“தாய்ப்பால் கொடுப்பது, குழந்தையைத் தாயுடன் மிக நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான யெகோவாவின் முறையாக இருக்கிறது, ஆனால் தந்தையின் சாய்ந்தாடும் நாற்காலி அதற்குப் பதில் நிலையாக இருக்கக்கூடும். ஒவ்வொரு இரவும் எங்கள் பிள்ளைகளைக் கைகளில் அணைத்து ஆட்டித் தூங்க வைப்பதில் எனக்கு ஒரு தனிப் பிரியம்.”
“அவர்களுடைய தந்தையாக, எங்கள் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்கும் நிலையில் நான் இல்லை, ஆனால் அவர்களைக் குளிப்பாட்டுவதன் மூலம் நான் நெருங்கிய சரீரத் தொடர்பைக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் எனக்கும் அது மகிழ்ச்சியான வேளையாக இருந்தது!”
“சமயம் கிடைக்கும்போதெல்லாம், எங்கள் பிள்ளைகளில் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து தனியாக என்னோடு சாப்பிடச் செய்வேன். இப்படியாக அப்பாவுடன் ஒருத்தர்-ஒரு-சமயம் என்ற காரியத்தை அவர்கள் விரும்பினார்கள்.”
“ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர்களுக்குக் கூடுதல் சுதந்திரத்தையும், உத்தரவாதங்களையும் அளித்தோம். ஒருவருடைய கையில் இரண்டு விரல்களுக்கிடையே அழுத்தப்பட்டிருக்கும் ஸ்பிரிங் கட்டுப்பாடிழந்து பறந்து சென்றுவிடாதபடிக்கு அதை மெது மெதுவாக தளர்த்திட வேண்டும்.”
“ஏராளமான பாசத்தைக் காண்பியுங்கள். கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததால் எந்தப் பிள்ளையும் இறக்கவில்லை—ஆனால் அவை இல்லையென்றால் அவர்களுடைய உணர்ச்சிகள் இறந்துவிடக்கூடும்.”
“பொறுமையாக இருங்கள், அவர்களுடைய ஆவியை அவித்துப்போடாதீர்கள். எப்பொழுது பார்த்தாலும் அவர்களை நச்சரிக்காதீர்கள். சுய மரியாதையை அவர்கள் வளர்த்துக்கொள்ள இடமளியுங்கள். நீங்கள் காணும் ஒவ்வொரு குறைக்கும் நான்கு போற்றுதல்களைக் கொடுங்கள்!”
“அவர்களில் சிறந்தது வெளிப்பட உங்களில் சிறந்தவற்றை அளியுங்கள்.” (g91 9/22)
[பக்கம் 9-ன் படம்]
ரெபேக்காள் போன்ற இளம் பிள்ளைகளுக்குத் தேவை உண்மையான பாசம்
[பக்கம் 10-ன் படம்]
காரியங்களை ஒன்றாகச் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுதல் ஒரு பலமான குடும்ப பந்தத்தை ஏற்படுத்தும்