என் வாழ்வில் ஒரு நாள் நெருக்கடியான ஹாங்காங் நகரில்
ஹாங்காங், உலகிலேயே மிகவும் நெருக்கமாக குடியேற்றப்பட்ட இடங்களில் ஒன்றாகும். 1,070 சதுர கிலோமீட்டர் இடத்தில் 58 லட்சம் மக்கள் குடியிருக்க, அது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 5,592 மக்களை கொண்டுள்ளது. அது குடியேறப்பட்ட சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக சுமார் 54,000 பேரைக் குறிக்கிறது! இருப்பினும், போற்றத்தக்க விதத்தில் பொது மக்கள், அதன் இடுக்கமான தங்குமிடம், போக்குவரத்துச் சந்தடி மற்றும் தூய்மைக்கேட்டோடுகூடிய ஒரு நெருக்கடியான நகரின் பரபரப்புக்குப் பொருந்த தங்களை அமைத்துக்கொண்டதாக தோன்றுகிறது.
நான் காலை 7:30 மணிக்கு என்னுடைய கடிகாரத்தின் மணி சத்தத்தைக் கேட்டு படுக்கையைவிட்டு எழுந்து விரைவாக புறப்பட்டேன். நான் என் பெற்றோரோடும் வேலைகளைக் கொண்டிருக்கிற மூன்று இளைய சகோதரிகளோடும் குடியிருக்க ஒரு சிறிய வீட்டை பகிர்ந்துகொள்கிறேன். எனவே, எப்போதும் குளியலறைக்காக ஒரு வரிசை இருக்கிறது; எங்களுடைய நேரம் குறைவாயிருக்கிறது. ஓர் அவசரமான காலை உணவிற்குப் பின், ரயில் நிலையம் செல்வதற்காக என்னுடைய மிதிவண்டியை வேகமாக எடுத்தேன். தினசரி சோதனை தொடங்கிவிட்டது. சந்தடியான ஹாங்காங் நகரில் வேலைக்கு விரையும் திரள் கூட்டத்தில் நானும் ஒருவராகிவிடுகிறேன்.
என்னுடைய ரயில் என்னை இறுக்கமாக நிரப்பப்பட்ட குடியிருப்புகள் மற்றும் நெருக்கமாக குடியேற்றப்பட்ட விண்தொடு கட்டிடங்களை வேகமாகக் கடந்து செல்கிறது. பின்னர் துறைமுகத்தைக் கடப்பதற்காக பேருந்தில் மாறி செல்ல வேண்டியுள்ளது. ஒரு குகை பாதையில், மிகுதியான போக்குவரத்தினூடே செல்கிறோம். ஹாங்காங் தீவில் வந்து இறங்குவது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது; அங்குதான் மத்திய நிதி மாவட்டத்தில் என்னுடைய அலுவலகம் உள்ளது. போக்குவரத்தைப் பொருத்து முழு பயணமும் ஒரு மணிநேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வரை எடுக்கலாம். நான் முடிவில் 9:30 மணிக்கு வந்து சேருகிறேன். ஆனால் சற்றும் இளைப்பாற முடிவதில்லை—தொலபேசியின் மணி அடிக்கிறது. அந்த நாளிற்கான எனது முதல் வாடிக்கையாளர். நாள் முழுவதும் என் கதை இதுதான்—ஒன்றன்பின் ஒன்றாக அழைப்பொலிகள், தொலபேசியை கீழே வைப்பதோ வெகு அரிது. பின்னர் மதிய உணவிற்காக ஒரு சிறிய இடைவேளை.
இப்போதைய பிரச்னை என்னவெனில், அவ்விடத்திலுள்ள எண்ணற்ற உணவுவிடுதிகள் ஒன்றில் ஓர் இருக்கையைக் கண்டுபிடிப்பதாகும். ஒவ்வொருவரும் அதே நேரத்தில் அதே இடத்தில் பெரும்பாலும் அதே மேசையில் சாப்பிட முயற்சி செய்வதாகத் தோன்றுகிறது! மறுபடியும் நான் முற்றிலும் பழக்கமில்லாதோருடன் மேசையில் உட்காருகிறேன். இதுதான் நெருக்கடியான ஹாங்காங் நகர வாழ்க்கை. பின்னர் அவசர, ஆனால் சத்துள்ள சீன உணவிற்குப் பின் அலுவலகத்திற்குத் திரும்புகிறேன்.
என்னுடைய வேலைநாள் 5:30 மணிக்கு முடிய வேண்டும்; ஆனால் வெகு அரிதாகவே அவ்வாறிருக்கிறது. எதிர்பார்த்தபடி, வேலையில் சற்று நிறுத்தம் ஏற்பட்டு, நான் கடிகாரத்தை நோக்கும்போது மணி 6:15. சில நாட்களில் நான் புறப்படுவதற்கு ஏழு மணிக்குமேல் ஆகிவிடுகிறது. பின் வீடு திரும்புவதற்கான பயணம் தொடர்கிறது.
முதலில் பேருந்து, பின்னர் ரயில். கடைசியாக அது நான் இறங்கும் இடத்தை வந்தடைகிறது; அங்கு என்னுடைய மிதிவண்டியை நோக்கிச் செல்கிறேன். வீட்டிற்கு மிதித்துக்கொண்டு செல்லும்போது, எங்களுடைய சிறிய பட்டணம் எவ்வாறு ஒரு சந்தடியான, நவீன நகராக தோற்றமளிக்கும்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று நினைப்பூட்டிக்கொண்டு செல்கிறேன். தாழ்ந்த கிராமத்து வீடுகள் 20 முதல் 30 மாடிகள் உயரமுள்ள வானளாவ உயரும் கட்டிடங்களால் மாற்றீடு செய்யப்பட்டிருக்கின்றன. பெரிய, அகல நெடுஞ்சாலைகள் நிலத்தின் பெரும்பகுதிகளை எடுத்துக் கொண்டுள்ளன; ஒரு தொடர்ச்சியான போக்குவரத்துச் சந்தடி பெரிய மேம்பாலங்களை நிரப்புகிறது. கடந்தகால சாவதானமான வாழ்க்கை முறை என்றென்றைக்குமாக அழிந்துபோய்விட்டது.
வீடு ஓரளவு சிறியதாகவே இருக்கிறது—ஆறு பேருக்கு 28 சதுர மீட்டருக்கும் கொஞ்சம் குறைவாக இருக்கிறது; எனக்கென்று ஒரு தனியறை இல்லை. எனவேதான் நான் பொது அறையில் ஒரு படுக்கையில் தூங்குகிறேன். எங்களுடைய பெற்றோருக்காவது அவர்களுக்கென்று ஒரு தனியறை உள்ளது; என் மூன்று சகோதரிகளும் தங்களுடைய சிறிய அறையில் அடுக்கு படுக்கைகளில் தூங்குகிறார்கள். தனியறை வசதி எங்கள் நிலைக்கோ ஒரு சுகபோகம்.
இது சிறியதாக இருப்பினும், முன்பு நாங்கள் எல்லாரும் அரசாங்கக் குடியிருப்பு வசதியில் ஒரே அறையில் வசித்ததைவிட ஒரு பெரிய முன்னேற்றமாக இருந்தது. மாங்காக் மாவட்டத்தில் வாழும் அநேகரின் சூழ்நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது எவ்வளவோ மேம்பட்டதாகும்; 1.8 மீட்டர் நீளம், 0.8 மீட்டர் ஆழமும் 0.8 மீட்டர் உயரமும் கொண்ட கூண்டுகள் போல் காட்சியளிக்கும் மூன்றடுக்கு உயர “கூண்டடுக்ககங்களை” அவர்கள் வாடகைக்கு எடுக்கின்றனர். ஒரு மெத்தையையும் கொஞ்சம் சொந்த சாமான்களையும் வைப்பதற்கே இடமிருக்கிறது. வீட்டுக்குத் தேவையான மேசை நாற்காலிகளை வைப்பதற்கு இடமில்லை.
ஒன்பது மணியளவில் எல்லாரும் வீட்டில் இருக்கிறோம்; சாப்பாட்டிற்காக நாங்கள் அமருகிறோம். இரவு சாப்பாட்டிற்குப் பின் ஒருவர் டிவி போடுகிறார். அமைதியான வாசிப்பு மற்றும் படிப்பிற்கான என்னுடைய எதிர்பார்ப்பை அது முடிவிற்குக் கொண்டு வருகிறது. 11 மணிக்கு எல்லாரும் தூங்கச்செல்லும் வரையாக நான் காத்திருக்கிறேன்; அதன் பின் நான் தனியாக அந்த அறையில் இருக்கிறேன்; கொஞ்சம் நிம்மதியும் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு தேவையான அமைதியும் கிடைக்கிறது. நள்ளிரவில் நானும் படுக்கை செல்ல தயாராகிவிடுகிறேன்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர், பள்ளி படிப்பை முடித்ததிலிருந்தே, நான் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். ஏதோ ஒருநாள் நான் திருமணம் செய்ய விரும்புகிறேன்; ஆனால் பிழைப்புக்காக மிகக் கவலை செய்யவேண்டியிருப்பதால் ஒரு பெண்ணைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்வதற்குக்கூட நேரம் இருப்பதில்லை. மேலும் தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடிப்பது, நாம் சொல்வதுபோல் வானத்திற்கு ஏறுவதைக் காட்டிலும் மிகக் கடினமானது. நாங்கள் சமாளிக்கக் கற்றுக்கொண்டுவிட்டாலும், இவ்விதமான அவசரவாழ்க்கை எனக்கு இயற்கையானதாக தோன்றுவதில்லை. இருப்பினும், நல்ல வீடுகள், மின்சாரம், தண்ணீர் வசதிகள் அல்லது போதுமான சுகாதார வசதிகளும் இல்லாமல் உலகின் பல பாகங்களில் வாழும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களைக் காட்டிலும் நான் மிகவும் நல்ல நிலையில் இருப்பதை உணருகிறேன். நிச்சயமாக, ஒரு மேம்பட்ட அமைப்பு, ஒரு மேம்பட்ட உலகம், ஒரு மேம்பட்ட வாழ்க்கை நமக்கு தேவை.—கீன் கர்ன் கூறியது. (g91 11/8)