அன்று சிறிய தீவு இன்று பெரிய ஏர்போர்ட்
ஹாங் காங்கிலிருந்து விழித்தெழு! நிருபர்
விமானம் ஹாங் காங் நகரின் கை டக் சர்வதேச ஏர்போர்ட்டில் தரை இறங்கிக் கொண்டிருந்தது. அதில் பயணம்செய்து கொண்டிருந்த பெண் ஜன்னல் வழியே பார்த்தார். “ஐயோ! டெலிவிஷன் ஆன்டெனாக்கள்மீது மோதப் போறோம்!” என்பதாக பயந்து அலறினாள். ஏர்போர்ட்டின் அருகில் இருந்த கவ்லூன் சிட்டியில் ஒரு வீட்டின் மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் காதை செவிடாக்கிவிடும் அளவிற்கு அந்த விமானம் அவ்வளவு அருகில் பறந்து சென்றது. தாங்க முடியாமல் அவள் காதைப் பொத்திக்கொண்டாள்.
இந்த ஏர்போர்ட்டில், சிக்கலாக இருந்தாலும் சாதுரியமாக பலமுறை விமானத்தை இறக்கி அனுபவம் பெற்ற விமானி ஜான் சொன்னார், “பிரச்சினையே அங்கிருக்கும் மலைகள்தான். இவை இருப்பதால், வடமேற்கில் இருந்து விமானம் இறங்கும்போது ரன்வேக்கு மிக அருகில் ஒரு பயங்கரமான திருப்பத்தை செய்ய வேண்டும். மேலும், மலைகள் கீழ்நோக்கிச் செல்லும் அபாயமான காற்றுகள் உண்டாவதற்கு காரணமாகின்றன. அதாவது காற்றின் வேகத்திலும் திசையிலும் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.”
கை டக் ஏர்போர்ட்டிலிருந்து எப்போது கடைசி விமானம் பறக்கிறதோ அன்றுதான் பயப்படும் பயணிகள், விமானிகள் மற்றும் கவ்லூன் நகரத்தின் ஜனங்களுக்கு விடிவு நாள். அந்த நாள் ஜூலை 1998-ல் ஹாங் காங் புதிய ஏர்போர்ட்டை உபயோகிக்க ஆரம்பித்த அன்று வந்தது.
தீவிலே ஓர் ஏர்போர்ட்
1980-களில் கை டக் ஏர்போர்ட் சமாளிப்பதற்கு மிகவும் கடினமான நிலையை எட்டியது. இதற்கு மேலும் விரிவாக்கம் செய்ய இடம் இல்லாத காரணத்தால் ஏர்போர்ட் கட்டுவதற்காக ஒரு புதிய இடம் தேடப்பட்டது. ஒரு பெரிய ஏர்போர்ட் கட்டுமளவிற்கு ஹாங் காங் நகரில் சமமான நிலம் இல்லை. மேலும் மிக அருகில் அதிக சத்தம் வரும் ஏர்போர்ட் இருப்பது ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. தீர்வுதான் என்ன? செக் லப் காக் என்ற சிறிய தீவே. இது வளர்ச்சி அடையாத பரந்த தீவான லான்டவிற்கு வடக்கே இருந்தது. ஆனால் இந்த முயற்சி ஒரு கட்டடப் பொறியாளரைப் பொருத்தவரை கனவே நனவாகும் பெரிய சவால்.
இந்தப் புதிய ஏர்போர்ட்டை கட்டுவதற்கு அந்தச் சிறிய தீவை சமப்படுத்த வேண்டும். அதற்கு அருகில் இருக்கும் இன்னொரு தீவையும் அவ்வாறே சமப்படுத்தி இதோடு இணைக்க வேண்டும். இதன் மூலம் கடலில் இருந்து ஒன்பதரை சதுர கிலோமீட்டர் பரப்பை மீட்க வேண்டியிருந்தது. இந்த ஏர்போர்ட்டை ஹாங் காங் நகரத்துடன் இணைப்பதற்கு 34 கிலோமீட்டர் தொலைவு உள்ள ரயில் பாதையும் எக்ஸ்பிரஸ் ஹைவேயும் போடப்பட்டன. இந்த இரண்டு பாதைகளும் தீவுகளையும் கடல் பகுதியையும் தாண்டி கவ்லூன் நகரத்தின் வழியாக சென்று விக்டோரியா துறைமுகத்தை கடக்கின்றன. அப்படியென்றால் இதற்காக ஏராளமான பாலங்கள், சுரங்கப் பாதைகள், வயாடக்ட் பாலங்கள் (viaducts) ஆகியவற்றைக் கட்ட வேண்டும். இதன் விளைவாக இதுவரை யாருமே முயற்சி செய்து பார்க்காத ஒரு பெரிய கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது.
தீவுகளைக் கடக்க ஈடிணையற்ற பாலங்கள்
இந்தப் பாதை லான்டவ் லிங்க் என்று அழைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் செல்கின்றனர். இது லான்டவ் தீவையும் பிரதான நிலப்பகுதியையும் இணைக்கிறது; இந்த லான்டவ் லிங்க் இப்போது உலகப் புகழ் பெற்று விட்டது. இது லான்டவ் தீவையும் சிறிய தீவான மா வான் தீவையும் இணைக்கும் கேபிள் பாலத்தையும் (cable-stayed bridge), மா வான் தீவைக் கடக்கும் வையாடக்ட் பாலத்தையும், மா வான் தீவையும் மூன்றாவது தீவான சிங் யி தீவையும் இணைக்கும் தொங்கு பாலத்தையும் உட்படுத்துகிறது. இந்தத் தொங்கு பாலத்தின் நீளம் 1,377 மீட்டர். இந்த இரட்டை மாடிப் பாலங்களே உலகத்தில் உள்ள இதைப்போன்ற பாலங்களில் மிக நீளமானவை. இதன் மாடிப் பகுதியில் சாலைப் போக்குவரத்து. இதன் மூடப்பட்ட கீழ்ப்பகுதியில் ரயில் பாதையும் இரண்டு போக்குவரத்து சாலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தூரத்திலிருந்து பார்க்கும்போது தொங்குபாலத்தை தாங்கியிருக்கும் கேபிள்கள் உறுதியற்றவையாய் தோன்றுகின்றன. இதைப் பார்க்கும்போது பொறியாளர்கள் சரியாக கணக்கிட்டுத்தான் கட்டினார்களோ, இந்தப் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்து விடுமோ போன்ற ஐயங்கள் ஏற்படுகின்றன. அருகில் வந்து பார்த்தால் அந்தக் கேபிள்கள் உறுதியற்றவை அல்ல என்பது தெளிவாகிறது. அந்தக் கேபிள்கள் 1.1 மீட்டர் விட்டம் உள்ளவை; அவற்றில் உள்ள கம்பிகளின் மொத்த நீளம் 1,60,000 கிலோமீட்டர். அதாவது உலகை நான்கு முறை சுற்றும் அளவிற்கு நீளம். அந்தக் கேபிள்கள் அந்த அளவிற்கு விட்டம் இருப்பது அவசியம். ஏனெனில் அவை பாலத்தின் பாகங்களை ஒவ்வொன்றும் 500 டன் எடையுள்ள 95 பாகங்களை தாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்தக் கம்பிகள் பொறுத்தப்பட்டபின் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பாலத்தின் பாகங்கள் படகுகளில் எடுத்துச் செல்லப்பட்டு மேலே இழுக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன.
கம்பிகளைத் தாங்கும் கோபுரங்கள் உயரமாகக் கட்டப்படுவதை அருகில் இருந்த ஜனங்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர். சாதாரணமாக கட்டடங்களில் பயன்படுத்தப்படும் சாரங்கள் இல்லாமல் கோபுரங்கள் வானத்தை நோக்கி உயர்ந்தன. இதற்கு ஸ்லிப்ஃபார்மிங் என்ற நுணுக்கத்தைப் பயன்படுத்தினர். இந்தக் கட்டடக்கலையில் ஃபார்ம்கள் அல்லது ஷட்டர்கள் தொடர்ந்து மேல் நோக்கி செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன; இவற்றில் கான்க்ரீட் ஊற்றப்படுகிறது; ஆகவே ஒவ்வொரு முறையும் அவற்றை பிரித்து மறுபடியும் மேலே கட்டப்படவேண்டிய அவசியம் கிடையாது. இந்தக் கட்டட நுணுக்கத்தால் அவர்கள் 190 மீட்டர் உயரமுள்ள பாலத்தின் கோபுரத்தை மூன்றே மாதங்களில் கட்டி முடித்துவிட்டனர்.
ஹாங் காங் சூறாவளி தாக்கும் பகுதியில் இருக்கிறது. அப்படியென்றால் பலத்தக் காற்றால் இந்தப் பாலத்திற்கு என்ன பாதிப்பு இருக்கும்? 1940-ல் மணிக்கு 68 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக்காற்று ஐ.மா., வாஷிங்டனில் இருந்த பூர்வ டகொமா நேரோஸ் பிரிட்ஜை நாசமாக்கியது. சூறாவளி அந்தப் பாலத்தை ஏதோ மூங்கிலால் கட்டப்பட்டதைப்போல் பாவித்து சர்வசாதாரணமாக முறுக்கிவிட்டது. அதன்பின் பாலம் கட்டுவதில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இதைப் போன்ற புதிய பாலங்கள் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்தும் பார்க்கப்பட்டிருக்கின்றன; எனவே மணிக்கு 300 கிலோமீட்டர் வேகக் காற்றையும் இவற்றால் தாக்குப்பிடிக்க முடியும்.
23 நிமிடங்களில் ஏர்போர்ட்டில் இருந்து நகரத்திற்கு!
புதிய ஏர்போர்ட், முந்தைய கை டக் ஏர்போர்ட்டைவிட நான்கு மடங்கு அதிக தூரத்தில் இருந்தாலும் இங்கிருந்து ஹாங் காங் தீவிற்கு வருவதற்கு நேரம் குறைவாகவே ஆகும். ஏன்? ரயில்கள் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் ஹாங் காங் நகரின் வியாபார மையமான சென்ட்ரல் என்று அழைக்கப்படும் இடத்திற்கு செல்வதால் இது சாத்தியமாகிறது; பிரதான வியாபார மையமாக இருப்பதால் பொருத்தமாகவே அவ்விதம் அழைக்கப்படுகிறது. முதலாவது லான்டவ்வின் வெறுமையான மலைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. பிறகு அந்த ரயில், தீவைத் தாண்டி பிரதான நிலப்பகுதிக்கு (main land) வந்து உலகத்திலேயே பெரிய கன்டெயினர் துறைமுகமான க்வை சுங்-ஐ தாண்டிச் செல்கிறது. அதிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாங் காக்கிற்கு வருகிறது; இங்கு 1,70,000 ஜனங்கள் வசிக்கின்றனர். அதன்பின் சுற்றுலாப் பயணிகளை கவரும் சிம் ஷா சுயி சென்று அங்கிருந்து துறைமுகத்திற்கு கீழே ஒரு சுரங்கப்பாதை வழியாக சென்ட்ரல் என்ற கடைசி இடத்திற்கு வந்துசேர்கிறது. இதற்கு ஏர்போர்ட்டிலிருந்து சரியாக 23 நிமிடங்களே எடுக்கிறது!
எதிர்காலத் தேவைக்கான ஏர்போர்ட்
செக் லப் காக் என்ற தீவு டிசம்பர் 1992-ல் 302 ஹெக்டேர் பரப்புள்ள ஒரு மலைத்தீவு. ஆனால் ஜூன் 1995-ல் அது 3,084 ஏக்கர் பரப்பளவுள்ள புதிய ஏர்போர்ட்டிற்கான பிளாட்ஃபாரமாக மாற்றமடைந்தது; இதனால் ஹாங் காங் நகரின் நில அளவு மொத்தத்தில் கிட்டத்தட்ட 1 சதவீதம் அதிகரித்தது. பூர்வ மலைத்தீவை 44,000 டன் வெடிமருந்தை உபயோகித்து சமப்படுத்திய அதே சமயம், ஆழப்படுத்தும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட அநேக கப்பல்கள் கடல் ஆழத்திலிருந்து மணலை வாரி இந்த இடத்தில் நிரப்பின. கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த உச்சக்கட்டத்தில் ஒரு நாளைக்கு ஐந்து ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. அந்த 31 மாதங்களிலும் சராசரியாக ஒரு விநாடிக்கு பத்து டன் நிலத்தை நிரப்பும் பொருட்கள் இடம் பெயர்க்கப்பட்டன. நிலத்தை சரிப்படுத்தும் ஒப்பந்தக்காரர்கள் தங்கள் பணிகளை முடித்தபின் மற்றவர்கள் ஏர்போர்ட்டைக் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணியில் பங்குபெற்ற ஸ்டீவ் இதைப்பற்றிய சில முக்கிய குறிப்புகளை அளிக்கிறார்: “ரன்-வே சரியான தரத்தில் அமைக்கப்படவில்லை என்றால் இப்போது இருக்கும் பெரிய ஜம்போ ஜெட்டு விமானங்கள் அதை வெகு எளிதில் சேதப்படுத்திவிடும். ஆகவே ஆஸ்பால்ட் தளம் அமைப்பதற்கு முன்பாக மண்ணை வலுப்படுத்துவதற்கு மிகப்பெரிய ரோலர்களை உபயோகித்தோம். இந்த ரோலர்கள் முதல் ரன்வேயையும் தளப்பகுதிகளையும் முடிப்பதற்கு போய்வந்த தூரம் 1,92,000 கிலோமீட்டர் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது; அதாவது இந்த உலகை ஐந்து முறை சுற்றி வருவதற்கு சமமான தூரம்.
“விமான நிலையத்தின் டெர்மினலைக் கட்டும் ஒப்பந்தம் எங்கள் கம்பெனிக்கு கிடைத்தது. நாங்கள் கூரைக்குத் தேவையான ஸ்டீல் டிரஸ்களை தயாரித்து உயரத்தில் பொருத்தினோம். இவை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 150 டன் எடையிருக்கும். நாங்கள் ஒரு ராட்சத கிரேனை உபயோகித்து பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட டிரெய்லர்களில் ஏற்றினோம் அவை மணிக்கு 2 கிலோமீட்டர் வேகத்தில் ஊர்ந்து கட்டுமான இடத்திற்குச் சென்றன.”
இந்த டெர்மினல் ஒரு கான்கிரீட் பெட்டியைப் போன்றதல்ல. மாறாக ஏர்போர்ட் பணியாளர்களும் பயணிகளும் சந்தோஷமாக இருப்பதற்கென்றே வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதற்கும் மேலாக பயணிகளை எந்த காலதாமதமும் செய்யாமல் அனுப்பிவிட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏர்போர்ட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. செக் இன் கவுன்டருக்கு வந்ததிலிருந்து சரியாக 30 நிமிடங்களில் பயணிகளை விமானத்தில் அமரச் செய்யலாம். பயணிகள் இந்த டெர்மினலின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு வேகமாக செல்வதற்கு டிரைவர் இல்லாத ஒரு ரயில் வண்டி உபயோகிக்கப்படுகிறது. இதோடுகூட 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள நகரும்-நடைபாதை களைத்து வந்திருக்கும் பயணிகளுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கிறது.
ஸ்டீவ் தொடர்ந்து இவ்விதம் குறிப்பிடுகிறார்: “கை டக் ஏர்போர்ட்டிற்கும் இதற்கும் என்னே வித்தியாசம்! 1995-ல் 2.7 கோடிக்கும் அதிகமான பயணிகள் அதை உபயோகித்தனர்! ஆனால் புதிய ஏர்போர்ட் ஒரு வருடத்தில் 3.5 கோடி பயணிகளையும் 30 லட்சம் டன் சரக்குகளையும் கையாளும் தகுதி உடையது. போகப்போக 8.7 கோடி பயணிகளையும் 90 லட்சம் டன் எடையுள்ள சரக்குகளையும் இந்த ஏர்போர்ட்டால் கையாள முடியும்!”
இந்தத் திட்டத்தில் ஹாங் காங் மிக அதிக முதலீடு செய்திருக்கிறது. கிட்டத்தட்ட 2,000 கோடி டாலர்; இதை வேறு வார்த்தையில் சொன்னால் ஹாங் காங் நகரின் 63 லட்ச குடிமக்களில் ஒரு நபருக்கு கிட்டத்தட்ட 3,300 டாலருக்கு சமம். ஹாங் காங் இப்போது அனுபவித்து வரும் பொருளாதார செழுமையை தொடர்ந்து காத்துக்கொள்ள செக் லப் காக் ஏர்போர்ட் உதவும் என்பதாக நம்பப்படுகிறது. அவ்விதம் நடக்கப் போகிறதா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, ஹாங் காங் நகரில் தரை இறங்குவது என்பது மறக்க முடியாத ஓர் அனுபவமாக தொடர்ந்து இருக்கும்.
[பக்கம் 12-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
செக் லப் காக் ஏர்போர்ட்
லான்டவ் இணைப்பு
கப் ஷுயி முன் பாலம்
சிங் மா பாலம்
லான்டவ் தீவு
ஹாங் காங் தீவு
கை டக் ஏர்போர்ட்
மேற்கு கவ்லூன் எக்ஸ்பிரஸ் ஹைவே
வடக்கு லான்டவ் எக்ஸ்பிரஸ் ஹைவே
ஏர்போர்ட் ரயில்வே
எக்ஸ்பிரஸ் ஹைவே கவ்லூன்
[பக்கம் 13-ன் படம்]
மசிங் மா பாலத்தைக் கட்டுதல்
[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]
New Airport Projects Co-ordination Office