“கான்கூ” விமானநிலையம்—காணப்பட்டாலும் கேட்கப்படுவதில்லை
ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஆகாயத்திலிருந்து கான்ஸை சர்வதேச விமானநிலையத்தை நெருங்குகையில், ஆங்கிலத்தில் “கான்ஸை” என்ற ஓர் அடையாளக் குறிப்பைக் கொண்ட ஒரு தீவை நீங்கள் காண்பீர்கள்.a இந்த ஜப்பானியத் தீவு ஒசாகா வளைகுடாவில், கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கப்பால் அமைந்துள்ளது. விமானநிலையத்தையும் அதோடு தொடர்புடைய வசதிகளையும் தவிர வேறொன்றையும் காண முடிகிறதில்லை. உண்மையில், ஒரு விமானநிலையமாக பயன்படுத்துவதற்கென்றே இத்தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 1994-ல் திறக்கப்பட்டு, அந்த விமானநிலையம் ஜப்பானியப் பெயராகிய கான்ஸை கோக்கூஸை கூக்கோ என்பதன் சுருக்கமாகிய கான்கூ என்று மாறுபெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவ்விமானநிலையத் தீவை, 3.75 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு விரைவுவழிப் பாலம் முக்கிய நிலப்பரப்போடு இணைப்பதன்மூலம், சாலைமார்க்கம் மற்றும் இரயில் மார்க்கம் மூலம் அதை அடையக்கூடியதாக்குகிறது. கப்பல்களுக்கும் ஃபெரி படகுகளின் போக்குவரத்து சேவைக்கும் வேண்டிய துறைமுக வசதிகளை இத்தீவு கொண்டுள்ளது. ஆனால் ஒரு விமானநிலையத்துக்காக ஒரு முழுமையான புதிய தீவைக் கட்டுவது ஏன்?
கேட்கப்படாத ஒரு விமானநிலையம்
கான்ஸைப் பகுதிக்குச் செல்லும் உல்லாசப் பயணிகள் மற்றும் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவது, ஒசாகா சர்வதேச விமானநிலையத்தைச் சுற்றியிருந்த குடியிருப்புப் பகுதியின்மீது பலமான ஓசையுடன் கூடிய ஆகாயவிமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது. அங்கு வாழும் மக்களை ஓசைத் தொல்லையிலிருந்து விடுவிப்பதற்கு, இரவு 9:00 மணியிலிருந்து காலை 7:00 மணிவரை விமானப் போக்குவரத்துக்குத் தடை போடப்பட்டது. 1974-லிருந்து சர்வதேச விமானசேவையை இன்னும் கூட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இவ்வாறு, முக்கிய நிலப்பரப்பில் கேட்கப்படாத வகையில் அதிகமான பயணிகளையும் சரக்குகளையும் கையாளும் ஒரு விமானநிலையம் ஓர் அவசரத் தேவையானது.
தொல்லை தராமல் நாள்முழுவதும் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு விமானநிலையம்—அது அத்திட்டத்தில் உட்பட்டிருந்தவர்களுக்கு ஒரு பெரிய சவாலாயிருந்தது. அளிக்கப்பட்ட ஒரே தீர்வானது, மக்கள் வாழும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் ஒரு தீவைக் கட்டி அதை ஒரு விமானநிலையமாக்குவதாய் இருந்தது. நிச்சயமாகவே ஒரு பிரம்மாண்டமான திட்டம்!
புதிய விமானநிலையத்தைக் கட்டி அதை இயக்குவதற்கு ஒரு தனியார் கம்பெனியை ஏற்படுத்துவதற்கென்று, தேசிய மற்றும் உள்நாட்டு அரசாங்கங்கள் உள்நாட்டு வர்த்தக உலகோடு சேர்ந்து $1,500 கோடி திட்டத்துக்கு முதலீடு செய்தன. கான்ஸை சர்வதேச விமானநிலையக் கம்பெனியின் நிர்வாகத் துணைத்தலைவர் திரு. காசூக்கெ கீமூரா, விழித்தெழு!-விடம் கூறினார்: “ஒரு தனியார் கம்பெனியாக இருந்ததால், தீவை உருவாக்குவதில் அதிகப்படியான நேரத்தைச் செலவிட எங்களால் முடியவில்லை. வேலை சீக்கிரமாகச் செய்யப்பட வேண்டியதாயிருந்தது.”
“தீவை உருவாக்குதல்”
கடற்கரை நெடுக நிலச் சீராக்கம் செய்வது கடினமானதாயிருக்க, கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கப்பால் ஒரு தீவை உருவாக்குவது அதைவிடக் கடினமானது. அந்த 511 ஹெக்டேர் பரப்புள்ள விமானநிலையத்தீவை உருவாக்குவதற்காக, 18 கோடி கன மீட்டர் மணலும் மண்ணும் நிலப்பரப்பியாக பயன்படுத்தப்பட்டது. “அது 73 பிரமிடுகளுக்குச் சமானமானது—அதாவது, கூஃபூ அரசரால் உண்டாக்கப்பட்ட மிகப் பெரியதொன்று,” என்று விளக்குகிறார் திரு. கீமூரா.
சமுத்திரத்தரை மீது, 18 மீட்டர் சராசரி ஆழத்தில், படிந்திருந்த ஒரு மிருதுவான களிமண் அடுக்கிலிருந்து நீர் வடிகட்டப்பட வேண்டியிருந்தது. “நீரை வடிகட்டவும் அஸ்திவாரத்தை உறுதிப்படுத்தவும் 40 சென்டிமீட்டர் [16 அங்குலம்] குறுக்களவுள்ள பத்து இலட்சம் மணற்குவியல்கள் அந்த அடுக்கின்மீது போடப்பட்டன. நிலப்பரப்பியின் எடையினால், 20-மீட்டர் [66 அடி] மிருதுவான மண் அடுக்கிலிருந்து நீர் பிழிந்தெடுக்கப்பட்டு, 14 மீட்டராக [46 அடியாக] சுருக்கப்பட்டது,” என்று விளக்குகிறார் நிலப்பரப்பித் திட்டத்தின் பொறுப்பாளராயிருந்த திரு. கெனீச்சீரோ மீநாமீ. “நாங்கள் அதிகம் பயந்தது எதற்கென்றால் அடிமண்ணின் ஒரு சரிசமமற்ற படிவு குறித்து. சரிசமமான படிவிற்காக சரியாக எவ்விடத்தில் நிலப்பரப்பிகள் போடப்பட வேண்டும் என்பதைக் கணக்கிடுவதற்கு கம்ப்யூட்டர்களை நாங்கள் பயன்படுத்தினோம்.”
மொத்தத்தில், நிலப்பரப்பியின் ஆழம் 33 மீட்டரை, ஒரு 10-மாடிக் கட்டடத்திற்குச் சமானமான அளவை எட்டியது. என்றபோதிலும், நிலப்பரப்பியின் எடையினால், சமுத்திரத்தரை கீழே இறங்கியிருக்கிறது, தொடர்ந்து கீழே இறங்குகிறது. தீவை, கடல் மட்டத்திற்கு மேல் நான்கு மீட்டர் உயரத்தில் விட்டுவிடும் வகையில், சமுத்திரத்தரை 50 வருடங்களில் இன்னும் 1.5 மீட்டர் கீழே இறங்குமென்று கணக்கிடப்படுகிறது.
1991-ல், முழுத்தீவும் உருவாக்கப்படுவதற்கு முன்பே, பயணிகள் முனைக் கட்டடமும் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடு கோபுரமும் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமான கடினவேலைக்குப் பிறகு, தீவு, விமானநிலையம், அதோடு தொடர்புடைய வசதிகள் ஆகியவற்றின் கட்டுமான வேலை முடிக்கப்பட்டது.
பிரம்மாண்டமாயினும் கச்சிதமானது
வந்துசேரும் பயணிகள் ஓர் இன்பமான ஆச்சரியமடைகின்றனர். “மூட்டைமுடிச்சுக்களை உரிமைகோரி எடுக்கும் பகுதிக்குப் போவதற்குள், எங்கள் சூட்கேஸ்கள் அங்கு இருந்தன,” என்று ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்த ஒரு பயணி கூறுகிறார். காரியங்கள் எளிதில் நடைபெறுவதற்கு என்ன காரணம்? “பயணிகள் முனைக் கட்டடம் பெரிதாயினும் கச்சிதமானது,” என்று பயணிகள் முனைக் கட்டடத்தின் பொறுப்பாளராயிருக்கும் காஜூஹீட்டோ ஆராவோ கூறுகிறார். “சர்வதேச விமானநிலையங்களில் இருப்பதைப் போன்ற ஒரு சிக்கலான பாதை வழியாக பயணிகள் போக வேண்டியதில்லை.”
பயணிகள் முனைக் கட்டடத்தின் அமைப்பு எளிதானதாயினும் தனித்தன்மை வாய்ந்தது. பயணிகள் தேவையின்றி அங்குமிங்கும் அலையாதபடி அவர்களுக்கு உதவும் வகையில், தலைமைக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரயில் நிலையத்திலிருந்து உள்நாட்டுப் பயணிகள் நேராக தங்கள் செக்-இன் கவுன்ட்டருக்கும், அங்கிருந்து போர்டிங் வாசலுக்கும் எந்தப் படிக்கட்டுகளிலும் ஏறியிறங்காமலே நேராகச் சென்று விடலாம்.
செக்-இன் கவுன்ட்டர்கள், உள்நாட்டுக் குடியேற்றம் பற்றிய அலுவலகங்கள், மேலும் சுங்க வரி அலுவலகங்கள் ஆகியவை அமைந்துள்ள தலைமைக் கட்டடத்திலிருந்து, 33 போர்டிங் வாசல்களுக்கு வழிநடத்தும் வகையில் வடக்கிலும் தெற்கிலும் 700 மீட்டர் அளவுள்ள இரண்டு பக்கப்பகுதிக் கட்டடங்கள் நீண்டுள்ளன. தலைமைக் கட்டடத்திலிருந்து வெளியே வாசல்களைப் பயன்படுத்தும் பயணிகள், விங் ஷட்டில் என்றழைக்கப்படும் தானியங்கும் வாசல்வழி போக்குவரத்து அமைப்புமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம். அது பயணிகளை, அவர்கள் விரும்பிய வாசலுக்கு ஐந்து நிமிடத்திற்குள்—ஷட்டிலுக்காகக் காத்திருக்கச் செலவிடும் நேரம் உட்பட எடுத்துச் செல்கிறது.
காணப்படவேண்டிய விமானநிலையம்
“முற்றிலும் கடல்மீதுள்ள ஒரு விமானநிலையமாக, அது எவ்விதத் தடையிலிருந்தும் விடுபட்டுள்ளது,” என்று கூறுகிறார் திரு. ஆராவோ. “ஆம், அது இறங்குவதற்கு எளிதாயுள்ள ஒரு விமானநிலையம் என்று விமானிகள் கூறுவதை நாங்கள் கேட்கிறோம்,” என திரு. கீமூரா ஒத்துக் கொள்கிறார்.
மற்றவர்களும் அதன் தோற்றத்தைப் போற்றுகின்றனர். ஆகாயவிமானத்தின் இறக்கைகளைப் போன்ற உருவத்திலுள்ள முனைக் கட்டடத்தின் நுண்ணிய தொழில்நுட்பம் வாய்ந்த வடிவமைப்பு, உல்லாசப் பயணிகள் பலரை கான்கூவிடம் கவர்ந்திருக்கிறது. அவர்கள் அசாதாரணமான தீவு விமானநிலையத்தில் ஆகாயவிமானங்கள் ஏறுவதையும் இறங்குவதையும் பார்ப்பதைக்கூட அனுபவிக்கின்றனர். “விமானநிலையத்திற்கு வரும் பயணிகளுக்காக பராமரிப்பு மையத்தின் உச்சியில், பார்வையிடும் ஒரு மேடையை நாங்கள் முதலில் கட்டுவதற்கு நோக்கம்கொண்டிராத போதிலும் கட்ட வேண்டியிருந்தது,” என்று திரு. கீமூரா கூறுகிறார். ஒரு நாளில் சராசரியாக 30,000 மக்கள் சுற்றிப்பார்க்க மட்டுமே அவ்விமானநிலையத்திற்கு வருகைதருகின்றனர்.
நீங்கள் கான்ஸைப் பகுதிக்கு அருகில் ஜப்பானைச் சென்று பார்க்கையில், கான்கூவிற்கு உள்ளேயோ வெளியேயோ பறந்து பாருங்களேன்—அருகிலிருப்பவர்களால் காணப்பட்டாலும் கேட்கப்படாத ஒரு விமானநிலையம்.
[அடிக்குறிப்பு]
a கான்ஸை என்பது வணிக நகரங்களாகிய ஒசாகாவையும் கோப்பையும் வரலாற்றுச் சிறப்புடைய நகரங்களாகிய கியோடோவையும் நாராவையும் உட்படுத்தும் மேற்கு ஜப்பானில் உள்ள பொதுப் பகுதி. கோக்கூஸை கூக்கோ என்பதற்கு “சர்வதேச விமானநிலையம்” என்று அர்த்தம்.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Kansai International Airport Co., Ltd.