வாழ்க்கை சரிதை
யெகோவாவின் அன்புள்ள தயவையும் கரிசனையையும் ருசித்தல்
ஃபே கிங் சொன்னது
என் அப்பா அம்மா தங்கமானவர்கள், ஆனால் அநேகரைப் போல அவர்களுக்கும் மதம் என்றால் சுத்தமாக பிடிக்காது. “கடவுள் ஒருத்தர் இருக்கணும், இல்லேன்னா யாரு இந்த பூக்களையும் மரங்களையும் படைச்சிருப்பாங்க?” என என் அம்மா சொன்னதுண்டு. ஆனால் அதற்கு மேல் அவர்கள் அதைப் பற்றி யோசித்ததே இல்லை.
அப்பா 1939-ல் இறந்துவிட்டார்; அப்போது எனக்கு 11 வயது. இங்கிலாந்தில் மான்செஸ்டருக்கு நேர் தெற்கே உள்ள ஸ்டாக்போர்ட்டில் அம்மாவும் நானும் வசித்து வந்தோம். என்னைப் படைத்தவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள எனக்கு எப்போதும் ஆசையிருந்தது, பைபிளைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாத போதிலும் அதனிடம் எனக்கு அளவுகடந்த மதிப்பிருந்தது. எனவே, அதைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆசையில் சர்ச் ஆஃப் இங்லண்டு என்ற சர்ச்சுக்குப் போக தீர்மானித்தேன்.
சர்ச் ஆராதனைகள் அர்த்தமற்றவை போல் எனக்குத் தோன்றின, ஆனால் சுவிசேஷங்கள் வாசிக்கப்பட்ட போது, பைபிள் உண்மையாக இருக்க வேண்டுமென இயேசுவின் வார்த்தைகள் என்னை எப்படியோ நம்ப வைத்தன. பைபிளை நானாக படித்ததே இல்லை என்பதை நினைத்துப் பார்த்தால் எனக்கே விசித்திரமாக இருக்கிறது. அதற்குப் பிறகுகூட, எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் “புதிய ஏற்பாட்டின்” நவீன மொழிபெயர்ப்பு ஒன்றைத் தந்தார்; ஒருநாளும் நான் அதை தொட்டுகூடப் பார்க்கவில்லை.
1950-ல் நடந்த கொரியப் போர் உண்மையிலேயே என்னை சிந்திக்க வைத்தது. இரண்டாம் உலகப் போரைப் போல இதுவும் எல்லா இடத்திற்கும் பரவிவிடுமா? அப்படி பரவினால் சத்துருவை நேசியென இயேசு கொடுத்த கட்டளைக்கு நான் எப்படி கீழ்ப்படிய முடியும்? அப்படியே கீழ்ப்படிந்தாலும் ஆட்கள் என் தாய் நாட்டின் மீது படையெடுக்கையில், கைகட்டிக் கொண்டு சும்மா அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒருவேளை அப்படி நடந்துகொண்டால் என் கடமையை செய்யாமல் தப்பித்துக் கொள்கிறேன் என்றுதானே உண்மையில் அர்த்தம். யோசிக்க யோசிக்க தலையே சுற்றியது என்றாலும், என் கேள்விகள் அனைத்துக்கும் விடை பைபிளிலுள்ளது என்பதை உறுதியாக நம்பினேன்; ஆனால் அதை எப்படி கண்டுபிடிப்பது, எங்கே கண்டுபிடிப்பது என தெரியாமல் தவித்தேன்.
ஆஸ்திரேலியாவில் சத்தியத்தைத் தேடி
1954-ல் நானும் அம்மாவும் ஆஸ்திரேலியாவில் குடியேற தீர்மானித்தோம், அங்கு என் அக்கா ஜீன் வசித்து வந்தார்கள். பைபிளில் எனக்கிருந்த ஆர்வத்தையும் சர்ச்சுக்குச் சென்று வந்ததையும் அக்கா அறிந்திருந்தார்கள்; சில வருடங்களுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளிடம் என்னை வந்து சந்திக்கும்படி சொல்லியிருப்பதாக அக்கா என்னிடம் சொன்னார்கள். சாட்சிகளைப் பற்றிய என் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள அவர்கள் ஆசைப்பட்டார்கள். “அவர்கள் கொடுக்கும் விளக்கம் சரிதானா இல்லையா என எனக்குத் தெரியவில்லை, ஆனால் சர்ச்சு மாதிரி இல்லாமல் இவர்கள் விளக்கமாவது கொடுக்கிறார்களே” எனவும் அக்கா மனந்திறந்து என்னிடம் சொன்னார்கள்.
பில், லின்டா ஷ்நெய்டர் தம்பதியினர் என்னை காண வந்தார்கள்; அவர்கள் பழகுவதற்கு இனியவர்கள். அவர்களுக்கு 68-70 வயதிருக்கும், அநேக வருடம் சாட்சிகளாக இருந்து அனுபவம் பெற்றவர்கள். அடிலெய்ட்டில் யெகோவாவின் சாட்சிகள் நடத்தி வந்த வானொலி நிலையத்தில் அவர்கள் வேலை செய்து வந்தார்கள்; இரண்டாம் உலகப் போரின் போது ஆஸ்திரேலியாவில் பிரசங்க ஊழியம் தடை செய்யப்பட்டபோது அவர்கள் முழுநேர பிரசங்கிகள் ஆனார்கள். இருப்பினும், பில், லின்டா தம்பதியினர் எனக்கு பெரும் உதவியாக இருந்தபோதிலும் நான் பல மதங்களைத் தொடர்ந்து ஆராய்ந்து வந்தேன்.
என்னோடு வேலை பார்த்து வந்த ஒருவர் என்னை பில்லி கிரஹாம் என்ற பிரசங்கியின் கூட்டத்திற்கு அழைத்து சென்றார்; அக்கூட்டத்திற்குப் பிறகு, கேள்விகளுக்குப் பதிலளிக்க தயாராக இருந்த ஒரு மதகுருவை எங்களில் சிலர் போய் பார்த்தோம். அப்போது, என் மனதை சதா அரித்துக்கொண்டிருந்த கேள்வியை அவரிடம் கேட்டேன்; அது என்னவென்றால்: “ஒருவர் போருக்கு சென்று மற்றவர்களைக் கொல்லுகையில் ஒரு கிறிஸ்தவராகவும் சத்துருவை நேசிப்பவராகவும் எப்படி இருக்க முடியும்?” உடனடியாக அங்கிருந்த எல்லாரும் கூச்சல் போட ஆரம்பித்தார்கள்; உண்மையில் அந்தக் கேள்வி அவர்கள் ஒவ்வொருவருடைய மனதையும் குடைந்துகொண்டிருந்தது! சற்று நேரத்திற்குப் பிறகு “அந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியாது. நான் இன்னமும் அதைக் குறித்து யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்றார் அவர்.
இதற்கிடையில் பில், லின்டா தம்பதியினருடன் நான் தொடர்ந்து பைபிள் படித்து வந்தேன், 1958, செப்டம்பரில் முழுக்காட்டுதல் பெற்றேன். எனக்குப் படிப்பு நடத்தியவர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற தீர்மானித்தேன், எனவே மறுவருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய, அதாவது முழுநேர பிரசங்க ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். எட்டு மாதங்களுக்குப் பிறகு விசேஷ பயனியராக ஊழியம் செய்யும்படியான அழைப்பு எனக்குக் கிடைத்தது. என் அக்கா ஜீனும் பைபிள் படிப்பில் படிப்படியாக முன்னேறி முழுக்காட்டுதல் பெற்றதை கேட்டபோது எவ்வளவு சந்தோஷப்பட்டேன்!
வாய்ப்பெனும் கதவு திறந்தது
சிட்னியில் இருந்த சபைகள் ஒன்றில் நான் ஊழியம் செய்து வந்தேன், அநேக பைபிள் படிப்புகளை நடத்தினேன். ஒருநாள் சர்ச் ஆஃப் இங்லண்டின் ஓய்வுபெற்ற மதகுரு ஒருவரை சந்தித்தேன், உலக முடிவைப் பற்றி சர்ச்சு என்ன கற்பிக்கிறது என அவரிடம் கேட்டேன். 50 வருடங்களாக சர்ச்சு கோட்பாடுகளை அவர் போதித்து வந்த போதிலும் “யெகோவாவின் சாட்சிகளைப் போல பைபிளைக் கரைத்துக் குடிக்காததால் அதைக் குறித்து ஆராய்ச்சி செய்ய எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்” என அவர் சொன்ன போது அதிர்ந்து போனேன்.
இதற்குப் பிறகு பாகிஸ்தானில் சேவை செய்ய வாலண்டியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டது. மணமாகாத பெண்கள் அங்கு அனுப்பப்பட மாட்டார்கள், ஆனால் மணமாகாத ஆண்கள் அல்லது தம்பதியினர் மட்டுமே அனுப்பப்படுவார்கள் என்பதை அறியாத நான் அதற்காக விண்ணப்பித்தேன். என் விண்ணப்பம் புரூக்ளினிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது; தற்போது மும்பை எனப்படும் பாம்பேயில் ஊழியம் செய்ய விரும்பினால் அங்கு ஊழியம் செய்யலாம் என்ற பதில் கடிதம் உடனடியாக கிடைத்தது. இது நடந்தது 1962-ல். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன், அலகாபாத் செல்வதற்கு முன்பு பாம்பேயில் 18 மாதங்கள் தங்கினேன்.
முதல் வேலையாக ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள தீர்மானித்தேன். பொதுவாக இந்திய மொழிகளில் இந்த ஹிந்தி மொழியின் வார்த்தைகள் எழுத்துக்கூட்டலிலும் உச்சரிப்பிலும் முரண்படாமல் இருப்பதால் அதைக் கற்றுக்கொள்வது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. எனினும் வீட்டுக்காரர்களிடம் அவர்கள் மொழியில் பேச நான் தட்டுத் தடுமாறுகையில் அவர்கள் ‘ஆங்கிலத்திலேயே பேசுங்கள் பரவாயில்லை’ என சொன்னபோது அடிக்கடி சோர்ந்து போனேன்! ஆனால் இந்த புதிய நாடு, ஆர்வமும் ஊக்கமுமிக்க சவால்களை முன்வைத்தது; ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த உடன் சாட்சிகளின் கூட்டுறவை அனுபவித்து மகிழ்ந்தேன்.
ஆரம்ப நாட்களில் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி எண்ணியதுண்டு, ஆனால் முழுக்காட்டுதல் எடுத்தபோது யெகோவாவுக்கு சேவை செய்வதிலேயே மூழ்கிப் போனதால் அதைப் பற்றி சிந்திக்க நேரமில்லாதிருந்தது. எனினும் இப்போது வாழ்க்கைத் துணை பற்றி மீண்டும் யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அயல் நாட்டில் சேவை செய்வதை நிறுத்திவிட எனக்கு துளியும் விருப்பமில்லைதான்; எனவே அதைக் குறித்து யெகோவாவிடம் ஜெபித்தேன், பின்னர் அதைப் பற்றி நினைக்கவே இல்லை.
எதிர்பாராத ஆசீர்வாதம்
அந்த சமயத்தில் எட்வின் ஸ்கின்னர் என்பவர் இந்திய கிளை அலுவலக வேலையை கவனித்து வந்தார். 1946-ல் நடைபெற்ற உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் எட்டாவது வகுப்பில் ஹெரால்டு கிங், ஸ்டான்லி ஜோன்ஸ் போன்ற உண்மையுள்ள அநேக சகோதரர்களுடன் அவரும் கலந்துகொண்டார்; மற்ற இருவரும் ஊழியம் செய்ய சீனாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.a 1958-ல் ஷாங்காயில் பிரசங்கித்ததற்காக ஹெரால்டு கிங்கும், ஸ்டான்லி ஜோன்ஸும் சிறையில் தன்னந்தனியாக அடைக்கப்பட்டார்கள். 1963-ல் ஹெரால்டு விடுதலை பெற்றபோது எட்வின் அவருக்குக் கடிதம் எழுதினார். ஐக்கிய மாகாணங்களுக்கும் பிரிட்டனுக்கும் சென்றுவிட்டு ஹாங்காங் திரும்பிய பின்னர் அந்தக் கடிதத்திற்கு ஹெரால்டு பதிலெழுதினார், அதில் தான் மணமுடிக்க விரும்புவதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். சிறையிலிருக்கையில் ஜெபத்துடன் சிந்தித்து இதை தீர்மானித்ததாக எட்வினுக்கு எழுதியிருந்தார்; தான் திருமணம் செய்துகொள்ள பொருத்தமான சாட்சி யாரையாவது எட்வினுக்குத் தெரியுமா என அதில் அவர் கேட்டிருந்தார்.
இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்யப்படுகின்றன. இப்படி ஏற்பாடு செய்து தரும்படி எப்போதும் எட்வினிடம் கேட்கப்பட்டது, ஆனால் அதில் தலையிடாதிருக்கவே அவர் எப்போதும் விரும்பினார். எனவே அவர் ஹெரால்டின் கடிதத்தை ரூத் மெக்கே என்பவரிடம் கொடுத்தார்; இவரது கணவர் ஹோமர் பயணக் கண்காணியாக சேவித்து வந்தார். இறுதியில், அநேக வருடங்களாக சத்தியத்திலிருக்கும் மிஷனரி ஒருவர் மணம் செய்ய விரும்புவதாகவும் அவருக்குக் கடிதம் எழுத விருப்பமிருக்கிறதா எனவும் கேட்டு ரூத் எனக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அந்த சகோதரர் யாரென்றோ அவரைப் பற்றிய வேறு தகவலோ இருக்கவில்லை.
வாழ்க்கைத் துணைக்காக நான் செய்திருந்த ஜெபம் யெகோவாவைத் தவிர யாருக்குமே தெரியாது என்பது உண்மைதான்; சகோதரி ரூத்திடம் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லத்தான் முதலில் தோன்றியது. இருப்பினும் அதைக் குறித்து சிந்திக்க சிந்திக்க நாம் நினைக்கும் விதத்தில் யெகோவா அரிதாகவே நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார் என்ற முடிவுக்கே வந்தேன். அந்த சகோதரரை மணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தாதவரை அவர் தாராளமாக எனக்கு கடிதம் எழுதலாம், எனக்கு அதில் ஆட்சேபணை இல்லையென ரூத்திற்கு பதில் கடிதம் எழுதினேன். ஹெரால்டு கிங் இரண்டாவது கடிதத்தை எனக்கு எழுதினார்.
சீன சிறையிலிருந்து ஹெரால்டு விடுதலை ஆனபோது அவரது புகைப்படங்களும், அவரைப் பற்றிய தகவலும் பல்வேறு செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தன. அந்த சமயத்தில் அவர் உலகெங்கும் பிரபலமடைந்திருந்தார், ஆனால் அவர் உண்மையுடன் செய்து வந்த தேவராஜ்ய ஊழியமே அவரிடம் என்னை ஈர்த்தது. எனவே ஐந்து மாத காலம் கடிதத்தில் “உரையாடிய” பிறகு நான் ஹாங்காங் சென்றேன். 1965, அக்டோபர் 5-ம் தேதி நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
திருமணத்திற்குப் பிறகும் நாங்கள் தொடர்ந்து முழுநேர ஊழியம் செய்ய விரும்பினோம்; வயது ஏற ஏற வேறு எதையும்விட துணையின் தேவையை நாங்கள் பெரிதும் உணர்ந்தோம். ஹெரால்டிடம் எனக்கிருந்த பாசம் வளர்ந்துகொண்டே வந்தது; ஜனங்களையும், எங்கள் ஊழியத்தில் எழுந்த பிரச்சினைகளையும் அவர் கனிவோடும் வெகு கவனத்தோடும் கையாண்டதை கண்ணார கண்டேன்; இதனால் அவரிடம் எனக்கு ஆழ்ந்த மரியாதை ஏற்பட்டது. மணவாழ்க்கையில் நாங்கள் 27 வருடங்களை அதிக மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கழித்தோம், யெகோவாவிடமிருந்து அநேக ஆசீர்வாதங்களையும் பெற்றோம்.
சீன மக்கள் சுறுசுறுப்பானவர்கள், எனக்கு அவர்களிடம் பிரியம் அதிகம். ஹாங்காங்கில் பேசப்படும் மொழி கன்டோனீஸ் ஆகும்; இது, மான்டரின் மொழியைவிட அதிக ஏற்றத்தாழ்வுகள், அதாவது நெளிவு சுழிவுகள் கொண்ட சீன கிளைமொழியாகும், எனவே இதைக் கற்றுக்கொள்வது பெரும்பாடு. யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலிருந்த மிஷனரி இல்லத்தில் எங்கள் இல்வாழ்க்கையை ஆரம்பித்தோம்; பின்னர் ஹாங்காங்கில் பல பகுதிகளில் சேவை செய்தோம். எங்கள் வாழ்க்கை அதிக சந்தோஷமாய்க் கழிந்தது; ஆனால் 1976-ல் என் உடல்நிலை மோசமானது.
உடல்நல பிரச்சினைகளை சமாளித்தல்
சில மாதங்களாகவே எனக்கு அதிக இரத்தப் போக்கு இருந்து வந்தது, இதனால் என் இரத்தத்தின் அளவு ரொம்பவே குறைந்துவிட்டது. எனக்கு ஆப்ரேஷன் செய்யும் நிலை ஏற்பட்டது; இரத்தமில்லாமல் ஆப்ரேஷன் செய்ய மாட்டார்களென அந்த மருத்துவமனையிலிருந்த டாக்டர்கள் என்னிடம் சொன்னார்கள்; காரணம், இரத்த அளவு குறைவாக இருக்கையில் ஏற்படும் அழுத்தத்தில் இறந்துவிடுவேனோ என அவர்கள் பயப்பட்டார்கள். ஒருநாள் என் பிரச்சினையைப் பற்றி டாக்டர்கள் கலந்தாலோசிக்கையில் அநாவசியமாக என் வாழ்க்கையைத் தூக்கியெறிய எனக்கு எந்த உரிமையுமில்லையென சொல்லி என் மனதை மாற்ற நர்சுகள் படாத பாடுபட்டார்கள். அன்று 12 ஆப்ரேஷன்கள் நடைபெற இருந்தன, அவற்றில் 10 கருக்கலைப்பு; ஆனால் பிள்ளைகளின் உயிரைப் பறிப்பதை எதிர்த்து அந்த கர்ப்பிணிகளிடம் அவர்கள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை; அதையும் நான் கவனித்தேன்.
இறுதியில், என் உயிர் போனாலும் அதற்கு மருத்துவமனை எந்தப் பொறுப்பையும் ஏற்க வேண்டாம் என ஹெரால்டு எழுதிக் கொடுத்ததும் தேவையான அந்த ஆப்ரேஷனை செய்ய டாக்டர்கள் சம்மதித்தார்கள். என்னை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று மயக்க மருந்து கொடுக்க தயார்படுத்தினார்கள். ஆனால் அந்த சமயத்தில் மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார், எனவே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன்.
வேறொரு பெண்நோயியல் மருத்துவரை (gynecologist) அணுகினோம். என் நிலைமை மோசமாக இருப்பதை அந்த டாக்டர் புரிந்துகொண்டார்; ஆகும் செலவைப் பற்றி நாங்கள் யாரிடமும் மூச்சு காட்டாதிருக்க ஒப்புக்கொண்டால் குறைந்த செலவில் ஆப்ரேஷன் செய்ய அவர் தயாரென சொன்னார். துளியும் இரத்தம் ஏற்றாமல் ஆப்ரேஷனை அவர் வெற்றிகரமாக செய்து முடித்தார். இந்த சமயத்தில் யெகோவா காட்டிய அன்புள்ள தயவும் கரிசனையும் எனக்கும் ஹெரால்டுக்கும் தெள்ளத் தெளிவாக தெரிந்தன.
1992-ல் ஹெரால்டு வியாதிப்பட்டு படுமோசமடைந்தார். நாங்கள் கிளை அலுவலகத்துக்கு மாறி சென்றோம். அங்கு எங்களை அன்புடன் கவனித்துக் கொண்டார்கள். என் அன்பு கணவர் 1993-ல் தன் 81-வது வயதில் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
இங்கிலாந்து திரும்புதல்
ஹாங்காங் பெத்தேல் குடும்ப அங்கத்தினராக இருந்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம், ஆனால் அங்குள்ள உஷ்ணத்தையும் ஈரப்பதத்தையும் சமாளிக்க முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன். எதிர்பாராத விதத்தில் புரூக்ளின் தலைமை அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது, என் உடல்நிலை காரணமாக, எனக்கு நன்கு பராமரிப்பு அளிக்க முடிந்த ஒரு கிளை அலுவலகத்திற்கு மாறி செல்ல சம்மதமாவென அதில் கேட்கப்பட்டிருந்தது. எனவே வருடம் 2000-த்தில் இங்கிலாந்திலுள்ள லண்டன் பெத்தேல் குடும்பத்திற்கு வந்தேன். இது எப்பேர்ப்பட்ட அன்பான ஏற்பாடு! அங்கு அன்போடு வரவேற்கப்பட்டேன், பெத்தேல் குடும்பத்தாரின் லைப்ரரியை, அதிலுள்ள 2,000 புத்தகங்களைக் கவனித்துக் கொள்வதில் உதவுவது போன்ற பல்வேறு பணிகளை செய்வதில் அதிக சந்தோஷம் காண்கிறேன்.
லண்டனிலுள்ள சீன சபை கூட்டங்களுக்கு செல்கிறேன். ஆனாலும் இங்கு நிலைமை ரொம்பவே மாறியிருக்கிறது. இப்போதெல்லாம் ஹாங்காங்கிலிருந்து வெகு சிலரே இங்கு வருகிறார்கள், பெரும்பாலும் மெயின்லாண்டு சீனாவிலிருந்தே அநேகர் வருகிறார்கள். அவர்கள் மான்டரின் மொழியைப் பேசுகிறார்கள், இது பிரசங்க ஊழியத்தில் புதிய சவால்களை முன் வைக்கிறது. சீனாவிலிருந்து பட்டப் படிப்புக்காக வரும் மாணவர்களுக்கு ஆர்வமிக்க அநேக பைபிள் படிப்புகள் நடத்தப்படுவதாக இந்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் அறிக்கைகள் காட்டுகின்றன. அவர்கள் கடும் உழைப்பாளிகள், கற்றுக்கொள்ளும் பைபிள் சத்தியங்களை போற்றுகிறார்கள். அவர்களுக்கு உதவுவதில் எனக்கு சந்தோஷம் கிடைக்கிறது.
நிசப்தமான இந்தப் புதிய வீட்டில் அடிக்கடி என் சந்தோஷமான வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன், யெகோவா காட்டும் அன்புள்ள தயவை நினைத்துப் பார்த்து எப்போதும் அதிசயிக்கிறேன். அந்த குணம் அவருடைய சித்தத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்திலும் காணப்படுகிறது, தனிப்பட்ட அவருடைய ஊழியர்களிடம் அவர் காட்டும் அக்கறை பளிச்சென தெரிகிறது. எல்லா விதத்திலும் எனக்கு அவர் அன்புடன் காட்டும் அக்கறைக்கு அதிக நன்றியுள்ளவளாக இருக்கிறேன்!—1 பேதுரு 5:6, 7.
[அடிக்குறிப்பு]
a இந்த இரண்டு மிஷனரிகளின் வாழ்க்கை சரிதை ஆங்கில காவற்கோபுரம், 1963, ஜூலை 15, பக்கங்கள் 437-42-லும் 1965 டிசம்பர் 15, பக்கங்கள் 756-67-லும் வெளிவந்தன.
[பக்கம் 24-ன் படம்]
இந்தியாவில் ஊழியம் செய்தல்
[பக்கம் 25-ன் படங்கள்]
1963-ல் ஹெரால்டு கிங், 1950-ல் சீனாவில் சேவிக்கையில்
[பக்கம் 26-ன் படங்கள்]
1965, அக்டோபர் 5-ல் எங்கள் திருமணத்தன்று
[பக்கம் 26-ன் படம்]
ஹாங்காங் பெத்தேல் அங்கத்தினர்களுடன்—நடுவில் லையங் தம்பதியினர், வலதுபுறத்தில் கானவேஸ் தம்பதியினர்