ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
‘சந்தைவெளியில் தினந்தோறும்’
அப்போஸ்தலனாகிய பவுல் தனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் ராஜ்ய செய்தியைப் பரப்புவதற்காக பயன்படுத்தினார். தகுதியுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக, அவர் ‘ஜெபஆலயத்தில் யூதரோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும்’ நியாயங்காட்டிப் பேசினார்.—அப்போஸ்தலர் 17:17.
அப்படிப்பட்ட வைராக்கியமே, பொ.ச. முதலாம் நூற்றாண்டு முதற்கொண்டு யெகோவாவின் உண்மை வணக்கத்தாரது அடையாளமாக இருந்துவந்திருக்கிறது. (மத்தேயு 28:19, 20) அதேவிதமாய் இன்று திருத்தமான அறிவை அடைய நேர்மையுள்ள ஆட்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் அநேக விதங்களில் வைராக்கியத்தோடு உதவிசெய்து வருகின்றனர். (1 தீமோத்தேயு 2:3, 4) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பின்வரும் அனுபவம் இதை எடுத்துக்காட்டுகிறது.
ஸிட், ஹரால்ட் என்ற இருவர், வாரத்தில் ஐந்து நாட்கள், சிட்னியிலுள்ள ரயில் நிலையம் அருகே ஒரு சின்ன ஸ்டான்டில் பைபிள் பிரசுரங்களைப் பரப்பி வைத்து அதை மாறிமாறி கவனித்துவருகின்றனர். கிட்டத்தட்ட ஐந்து வருடமாய் அவர்கள் இம்முறையில் கடவுளது ராஜ்ய நற்செய்தியைப் பரப்பிவருகின்றனர். 95 வயதான ஸிட் சொல்கிறார்: “87 வயதானபோது, என்னால் காரை ஓட்டமுடியவில்லை. மனமுடைந்துபோனேன், ஏனென்றால் எனக்கு பிரசங்க வேலை மிகவும் பிடிக்கும். காட்டூம்பா என்ற நகரிலுள்ள, சுற்றுலாப் பயணிகளுக்கான பிரபல இடமான எக்கோ பாயின்டிற்கு பக்கத்தில் ஒருநாள், ஒரு கலைஞர் இயற்கைக்காட்சி ஓவியங்களை விற்பதைப் பார்த்தேன். அந்த ஓவியங்களைப் பார்த்துவிட்டு, ‘இதைவிட அருமையான படங்கள் என்னிடம் இருக்கிறதே, அதுவும் குறைந்த விலைக்கு!’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன். ஆகவே உல்லாசப் பயணிகள் திரண்டுவரும் ஒரு இடத்தில் ஒரு சின்ன ஸ்டான்டை வைத்துக்கொண்டு, அழகிய படங்களுள்ள யெகோவாவின் சாட்சிகளது பைபிள் பிரசுரங்களை அளிக்க முடிவு செய்தேன்.
“நான்கு வருடங்களுக்கு முன், சிட்னிக்கு மாறினேன், அங்கு ஹரால்ட் என்னோடு சேர்ந்துகொண்டார். நாங்கள் மாறிமாறி ஸ்டான்டை கவனித்துக்கொள்கிறோம், எங்கள் சபைகளோடும் ஊழியம் செய்கிறோம்.” 83 வயதான ஹரால்ட் சொல்கிறார்: “திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை ஆட்களை வீட்டில் பார்ப்பது ரொம்ப கஷ்டம். அதனால் ஆட்கள் இருக்கும் இடத்தில் ராஜ்ய செய்தியைப் பரப்புவதற்கு இது உதவுகிறது. கிடைக்கும் பலனைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த நாட்டில் பெருமளவு பிரசுரங்கள் அளிக்கப்படுகின்றன.”
“கடந்த சில ஆண்டுகளாக நான்கைந்து இடங்களில் நாங்கள் ஸ்டான்டை மாற்றி வைத்திருக்கிறோம் என்றாலும், விரைவிலேயே மக்கள் எங்களை அடையாளம் கண்டுகொள்கின்றனர்” என்கிறார் ஸிட். “சிலர் பிரசுரங்களை கேட்டு வாங்குகின்றனர். வேறு சிலர் தங்களது சந்தேகங்களைத் தீர்க்குமாறு கேட்கின்றனர். இன்னும் சிலருக்கோ ஒருசில நிமிடங்கள் மட்டும் பேச வேண்டுமாம். இப்படித்தான் எங்கேயும் போகாமலேயே மறுசந்திப்பு செய்ய முடிகிறது என்னால்” என்று சிரிப்பை அடக்கியவாறு சொல்கிறார்.
ஹரால்ட் சொல்வதாவது: “அநேகர் பைபிள் பிரியர்கள். ஒரே மாதத்தில் நான்கு பேர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். இதற்குக் காரணம், எங்களிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட பிரசுரங்கள். அவர்களது கேள்விகளுக்கு நாங்கள் பைபிளிலிருந்து பதில்களைக் காட்டியதும் இன்னொரு காரணம். இதுபோன்ற அனுபவங்கள் எங்களை அதிக உற்சாகப்படுத்துகின்றன.”
ஸிட், ஹரால்ட், அப்போஸ்தலனாகிய பவுல் ஆகியோரைப் போலவே எங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள், தங்களால் முடிந்த எல்லா விதங்களிலும் இந்த முக்கிய செய்தியைப் பரப்பிவருகின்றனர். இவ்வாறு, “சுவிசேஷம்” தொடர்ந்து ‘பூலோகமெங்கும்’ பிரசங்கிக்கப்படுகிறது.—மத்தேயு 24:14.