ஓர் ஆப்பிரிக்க நகரத்தில் வளர்ந்துவருதல்
சகாராவின் தெற்குப் பகுதியிலுள்ள ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள்தொகை பெருக்க வீதங்கள் உலகிலேயே உயர்ந்தவை. அங்குச் சராசரி ஒவ்வொரு பெண்ணும் ஆறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். வறுமை, சீரழிந்துகொண்டுபோகும் சுற்றுச்சூழல் மற்றும் நிலவள பற்றாக்குறை ஆகியவை கஷ்டத்தை அதிகரிக்கவே செய்கின்றன. உலகின் அந்தப் பாகத்தில் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு நேரடியான சம்பவத்தை இங்குக் கவனியுங்கள்.
நான் ஒரு மேற்கு ஆப்பிரிக்க நகரில் வளர்ந்து வந்தேன். எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஏழு பிள்ளைகள் இருந்தோம், ஆனால் இருவர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எங்களுடைய வீடு ஒரு வாடகைக்கு எடுக்கப்பட்ட படுக்கையறை மற்றும் வரவேற்பறையை உடையதாகும். தாயும் தந்தையும் படுக்கையறையில் தூங்கினார்கள்; அறையின் ஒரு பக்கத்தில் பையன்களும் மறுபக்கத்தில் பெண்களுமாக பிள்ளைகளாகிய நாங்கள் வரவேற்பறையின் தரையில் பாய்களில் தூங்கினோம்.
எங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள அநேகரைப் போல, எங்களுக்கும் அதிக பணமில்லாதிருந்தது; எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நாங்கள் எப்பொழுதுமே கொண்டிருக்கவில்லை. சில நேரங்களில் எங்களுக்குப் போதுமான உணவும்கூட இல்லாதிருந்தது. காலையில் அடிக்கடி, முந்தின நாள் மீதமான, சூடாக்கப்பட்டச் சோற்றைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. சில வேளைகளில் அதுவும்கூட இருப்பதில்லை. சம்பாதிப்பதனால் கணவனே பெரிய பங்கைக் கொண்டிருக்கவேண்டும், அடுத்தது மனைவி, பின்னர் மீந்திருப்பதே பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று விவாதிப்பவர்களைப் போலில்லாமல், எங்கள் பெற்றோர், இருக்கும் கொஞ்சத்தைப் பிள்ளைகளாகிய எங்களை பகிர்ந்துகொள்ளச் செய்து அவர்கள் ஒன்றுமில்லாமல் இருந்துவிடுவர். நான் அவர்களுடைய தியாகத்தைப் பாராட்டினேன்.
பள்ளிக்குச் செல்லுதல்
ஆப்பிரிக்காவிலுள்ள சில மக்கள் பையன்கள் மட்டும்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நம்பினார்கள். பெண்கள் மணம் செய்கிறார்கள்; மேலும் அவர்களுடைய கணவன்மார் அவர்களைக் கவனிப்பதால் அது அவர்களுக்குத் தேவையில்லை என்பதாக எண்ணுகிறார்கள். என் பெற்றோர் அந்த எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் ஐந்து பேரும் பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். ஆனால் என் பெற்றோருக்கு அது பொருள் சம்பந்தமான அழுத்தமாக இருந்தது. எழுதுகோல் மற்றும் காகிதங்கள் பெரிய பிரச்னையாக இருக்கவில்லை; ஆனால் பாடபுத்தகங்களும் கட்டாயமாக அணியப்படவேண்டிய பள்ளி சீருடைகளும் பெருஞ்செலவு பிடிப்பவையாக இருந்தன.
நான் பள்ளிக்குப் போக துவங்கியபோது என்னிடம் காலணிகள் இல்லை. நான் 14 வயதுள்ளவனாய், உயர்நிலை பள்ளியில் என்னுடைய இரண்டாவது வருடத்தில் இருந்தபோதுதான் என்னுடைய பெற்றோரால் எனக்கு காலணிகள் வாங்கித் தர முடிந்தது. இது எனக்குக் காலணிகளே இல்லை என்பதை அர்த்தப்படுத்தாது என்று புரிந்துகொள்ளுங்கள். நான் கொண்டிருந்த ஒரே ஜோடி சர்ச்சுக்கு செல்வதற்கு மட்டுமே; பள்ளிக்கு அல்லது மற்ற இடங்களுக்கு அதை அணிந்து செல்ல நான் அனுமதிக்கப்படவில்லை. நான் வெறும் காலில் செல்லவேண்டியிருந்தது. சிலசமயங்களில் என்னுடைய தகப்பனாரால் பேருந்து சீட்டுகளுக்குப் பணம் கொடுக்க முடியும்; ஆனால் அவரால் முடியாதபோது, பள்ளிக்கு போகும்போதும் திரும்பி வரும்போதும் நாங்கள் நடக்க வேண்டும். அது ஒரு வழிமட்டும் சுமார் 3 கிலோமீட்டராயிருந்தது.
சலவைநாள் மற்றும் தண்ணீர் கொண்டுவருதல்
நாங்கள் எங்களுடைய துணிகளை ஓர் ஓடையில் துவைத்தோம். ஒரு வாளி, ஒரு சோப்புத் துண்டு மற்றும் துணிகளை எடுத்துக்கொண்டு என் தாயாரோடு அங்குச் செல்வது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஓடையில், அவர்கள் வாளியை தண்ணீரால் நிரப்பி, அதனுள் துணிகளைப் போட்டு, அவற்றில் சோப்பைத் தேய்ப்பார்கள். பின்னர் சமதளமான பாறைகளில் துணிகளை அடித்து துவைத்துவிட்டு, ஓடையில் அலசுவார்கள். அவற்றை ஈரமாக வீடு கொண்டு செல்லுதல் அதிக கனமாக இருக்குமாதலால் அதன் பின்னர் அவற்றை மற்ற பாறைகளின் மேல் விரித்து உலரச் செய்கிறார்கள். அச்சமயத்தில் நான் இளைஞனாக இருந்தேன்; எனவே துணிகள் உலரும்போது யாரும் திருடிவிடாதபடி காவல் காப்பதற்காக நான் நியமிக்கப்பட்டேன். பெரும்பான்மையான வேலைகளை தாயார் செய்தார்.
சிலர் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் வரச் செய்திருக்கின்றனர்; அதனால் ஒரு வாளி எடுத்துச் சென்று, நிலைகுத்துக் குழாய் எனப்படும் வெளியிலுள்ள ஒரு வடிகுழாயிலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டியது என்னுடைய வேலைகளில் ஒன்றாகும். பிரச்னை என்னவென்றால், வறட்சியான காலத்தில், இதில் அநேக நிலைகுத்துக் குழாய்கள் தண்ணீர் சேமிப்பிற்காக பூட்டப்பட்டிருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில், நாங்கள் ஒரு நாள் முழுவதும் குடிப்பதற்கு தண்ணீரே இல்லாமல் இருந்தோம். ஒரு சொட்டு இல்லை! சில நேரங்களில் நான் ஒரு வாளி தண்ணீரைக் கண்டடைய மைல்கள் நடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரங்களுக்குத் தண்ணீரை என் தலையில் சுமப்பதால், வாளியை சுமக்கும் பாகத்தில் என் முடி உதிர்ந்துவிட்டது. பத்து வயதிலேயே எனக்கு ஒரு வழுக்கை தழும்பு ஏற்பட்டது! என்னுடைய முடி திரும்ப வளர்ந்துவிட்டது என்று சொல்வதில் நான் சந்தோஷப்படுகிறேன்.
குழந்தைகள் ஒரு பாதுகாப்பு
திரும்பிப் பார்க்கும்போது, வாழ்க்கையில் எங்களுடைய நிலை நடுத்தரமானது, ஒருவேளை ஆப்பிரிக்காவில் எங்களுடைய பகுதியில் நடுத்தரத்தைவிட மேம்பட்டது என்றும்கூட நான் சொல்வேன். எங்களுடையதைவிட வாழ்க்கைத் தரம் மிகவும் குறைவாக இருந்த பல குடும்பங்களை நான் அறிவேன். என்னுடைய பள்ளித் தோழர்களில் அநேகர், தங்கள் குடும்பங்களுக்கு பணம் கொண்டுவருவதற்காக பள்ளி நேரம் துவங்குமுன்னும் முடிந்த பிறகும் சந்தையில் விற்பனைகள் செய்ய வேண்டியிருந்தது. மற்றவர்கள் காலையில் பள்ளிக்கு வருமுன் எதுவும் உண்ண இயலாத நிலையில் உள்ளனர்; நாள் முழுவதும் உண்பதற்கு எதுவும் இல்லாமல் பசியோடு வீடு திரும்புகின்றனர். அநேக தடவைகள் நான் பள்ளியில் ரொட்டியைச் சாப்பிடும்போது இந்தப் பிள்ளைகளில் ஒருவர் என்னிடம் வந்து கெஞ்சுவது எனக்கு நினைவிருக்கிறது. ஆகவே, நான் ஒரு துண்டை பிட்டு அவனுடன் பகிர்ந்துகொள்வேன்.
அவ்விதமான வறுமையும் கஷ்டங்களும் இருந்தாலும், இன்னும் அநேக மக்கள் பெரிய குடும்பங்களைக் கொண்டிருக்க விரும்புகின்றனர். “ஒரு குழந்தை குழந்தையே இல்லை,” என்று இங்குள்ள அநேகர் கூறுகின்றனர். “இரண்டு குழந்தைகள் ஒன்றிற்கும் நான்கு குழந்தைகள் இரண்டிற்கும் சமம்.” இது ஏனென்றால் குழந்தை இறப்பு வீதம் உலகிலேயே உயர்ந்ததாக உள்ளது. அவர்களுடைய சில பிள்ளைகள் இறந்துபோனாலும், சிலர் வாழ்ந்து, வளர்ந்து, வேலை செய்து, வீட்டிற்குப் பணம் கொண்டுவருவார்கள் என்பது பெற்றோருக்குத் தெரியும். அப்போது அவர்கள் தங்கள் வயதுசென்ற பெற்றோரைக் கவனிக்கும் நிலையில் இருப்பர். சமூக-பாதுகாப்பு நன்மைகள் எதுவும் இல்லாத தேசத்தில், அது அதிகத்தைக் குறிக்கிறது.—டானல்ட் வின்சென்ட் கூறியது. (g91 11/8)