உலக மக்கள்தொகை —எதிர்காலத்தைப் பற்றியதென்ன?
குடியிருப்பு வசதிக்குறைவு, சுகாதாரமற்ற சூழ்நிலைமைகள், உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் பற்றாக்குறை, நோய், ஊட்டச் சத்துக் குறைவு—இவை மற்றுமநேக இன்னல்கள், உலகின் மக்கள்தொகையின் பெரும் பகுதியினரின் வாழ்க்கையில் தினசரி உண்மையாக இருக்கிறது. இருப்பினும், நாம் பார்த்தபடி, அவ்விதமான சூழ்நிலைமைகளில் வாழும் பெரும்பாலான மக்கள் அவற்றை எப்படியோ சமாளித்து தினசரி வாழ்க்கையை நடத்துகின்றனர்.
என்றபோதிலும், எதிர்காலத்தைப் பற்றியதென்ன? அவ்விதமான கடுமையான உண்மைகளை மக்கள் என்றென்றுமாக பொறுத்துக்கொண்டே செல்ல வேண்டுமா? காரியங்களைக் குழப்புவதற்கு, தொடர்ச்சியான மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவாக, சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் மற்றவர்களும் முன்னறிவிக்கும் அழிவையும் மங்கலான எதிர்காலத்தையும் பற்றியதென்ன? நாம் சார்ந்திருக்கும் காற்று, தண்ணீர், மண் ஆகியவற்றை அசுத்தப்படுத்துவதன் மூலம், நம்முடைய வாசஸ்தலத்தை நாமே கெடுத்துக்கொள்கிறோம். அவர்கள் கண்ணாடி அறை விளைவை—கரியமிலவாயு, மீதேன், க்ளோரோஃப்ளோரோகார்பன்கள் (குளிர்பதனப் பொருட்கள் மற்றும் நுரைக்கச் செய்யும் காரணிகள்) இவை வெளிவிடப்படுதல், வளிமண்டலம் வெப்பமடைவதிலும் உலகளாவிய வானிலை அமைப்பில் மாற்றங்கள் கொடிய பலன்களுடன் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இது முடிவில் நாம் தெரிந்திருக்கிற நாகரிகத்தின் மறைவைக் கொண்டுவருமா? நாம் முக்கிய காரணங்களில் சிலவற்றை கூர்ந்தாராய்வோம்.
மிக அதிகமான மக்கள் இருக்கிறார்களா?
முதலாவதாக, உலகின் மக்கள்தொகை என்றுமாக விரிவாகிக்கொண்டே போகுமா? அது எவ்வளவு தூரம் வரையாக செல்லும் என்பதையறிய ஏதாவது குறிப்பிருக்கிறதா? சந்தேகமின்றி, குடும்ப கட்டுப்பாட்டிற்கான முயற்சிகள் இருந்தும் உலக மக்கள்தொகை பெருகுகிறது. இப்போது வருடாந்தர அதிகரிப்பு சுமார் 900 லட்சமாக இருக்கிறது (ஒவ்வொரு வருடமும் இன்னொரு மெக்ஸிகோவிற்கு சமம்). அதை நிறுத்துவதற்கான உடனடியான வாய்ப்பு எதுவும் இல்லாதிருப்பதாகத் தோன்றுகிறது. எனினும் முன்நோக்கும்போது, மக்கள்தொகையியல் கணிப்பாளர்கள் முடிவில் மக்கள்தொகை நிலைவரப்படுத்தப்படும் என்று ஒப்புக்கொள்கின்றனர். அது எந்நிலையில், எப்போது என்பது அவர்கள் மனதில் கேள்வியாக உள்ளது.
ஐ.நா. மக்கள்தொகை நிதியமைப்பின் எறிவுப் படத்தின்படி, உலக மக்கள்தொகை நிலைவரப்படுத்தப்படுமுன் 140 கோடியை சென்றெட்டும். எனினும் மற்றவர்கள், 100 கோடிக்கும் 110 கோடிக்கும் இடையில் அது உச்சநிலையை அடையும் என்று கணிக்கின்றனர். எவ்வாறிருப்பினும், மிக முக்கியமான கேள்விகளாவன: மிக அதிகமான மக்கள் இருப்பார்களா? இப்போதைய மக்கள்தொகையின் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிப்புக்குப் பூமி இடமளிக்கக்கூடுமா?
புள்ளிவிவர நோக்குநிலையிலிருந்து, உலகம் முழுவதிலும் 140 கோடி ஜனங்களை ஒரு சதுர கிலோமீட்டருக்கு 104 பேர் என கணக்கிடப்படும். நாம் பார்த்தபடி, ஹாங்காங்கின் மக்கள்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 5,592 பேர் ஆகும். தற்போது, நெதர்லாந்தின் மக்கள்தொகை அடர்த்தி 430, அதே நேரத்தில் ஜப்பானுடையது 327; இந்த நாடுகள்தான் நடுத்தரத்தைவிட மேம்பட்ட வாழும் தரங்களை அனுபவிக்கின்றன. தெளிவாகவே, உலக மக்கள்தொகை முன்னறிவிக்கப்பட்ட அளவிற்கு பெருகினாலும்கூட, மக்களின் எண்ணிக்கைதானே பிரச்னையாக இல்லை.
போதிய உணவு இருக்குமா?
அப்படியென்றால், உணவளிப்பைப் பற்றியதென்ன? 100 கோடி அல்லது 140 கோடி மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்திச் செய்யக்கூடுமா? தெளிவாகவே, உலகின் தற்போதைய உற்பத்தித் திறன் அத்தகைய மக்கள்தொகைக்குப் போதுமானதாக இல்லை. உண்மையில், நாம் அடிக்கடி, பஞ்சங்கள், ஊட்டச்சத்துக் குறைவு மற்றும் பட்டினி பற்றி கேள்விப்படுகிறோம். இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிப்பைச் சேர்க்காமல், இப்போதைய மக்கள்தொகையை பராமரிப்பதற்கு போதுமான உணவையே நம்மால் உற்பத்தி செய்யமுடியவில்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா?
இது பதிலளிப்பதற்கு கடினமான கேள்வி, ஏனென்றால் “போதுமானது” எவ்வளவு என்பதைப் பொறுத்து அது இருக்கிறது. உலகின் ஏழ்மையான தேசங்களிலுள்ள லட்சக்கணக்கான ஆட்களுக்கு குறைந்தபட்ச ஆரோக்கியமான உணவுகூட கிடைக்காமல் இருக்கையில், செழுமையான, தொழில்மயமான தேசங்கள் கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளின் விளைவுளால்—திடீர் அதிர்ச்சி, சில புற்றுநோய் வகைகள், இருதய நோய்கள், போன்றவற்றால் துன்பப்படுகின்றனர். இது உணவு நிலைமையை எவ்வாறு பாதிக்கிறது? ஒரு கணக்கீட்டின்படி, ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சியை உற்பத்திச் செய்ய ஐந்து கிலோகிராம் தானியம் தேவைப்படுகிறது. அதன் விளைவாக, உலகில் குடியிருப்பவர்களில் மாம்சம் உண்ணும் பகுதியினர், உலக தானிய உற்பத்தியில் ஏறக்குறைய பாதியை உட்கொள்ளுகின்றனர்.
உற்பத்திச் செய்யப்பட்ட உணவின் மொத்த அளவை பொறுத்ததில், உலகிற்கு உணவு (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்: “தற்போதைய உலக உணவு உற்பத்தி, வீணாக்கப்படுவதை மிகவும் குறைவாக வைத்துக்கொண்டு, எல்லா உலக மக்களுக்கும் இடையில் சமமாக பகிர்ந்துகொள்ளப்பட்டால், ஒவ்வொருவருக்கும் போதுமானது இருக்கும். ஒருவேளை தேவைக்கும் சற்று குறைவாக, ஆனால் போதுமானதாக இருக்கும்.” இந்தக் கூற்று 15-ற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர், 1975-ல் சொல்லப்பட்டது. இன்றைய நிலைமை என்ன? உலக வள நிலையத்தின்படி, “கடந்த இரு பத்தாண்டுகளாக, மொத்த உலக உணவு உற்பத்தியளவு, தேவையை மிஞ்சி பெருகியது. இதன் விளைவாக, சமீப வருடங்களில், முக்கிய உணவுப்பொருட்களின் விலை வியாபார சந்தையில் உண்மையாகக் குறைந்தது.” அந்தச் சமயத்தில் அரிசி, நவதானியம், சோய அவரை மற்றும் பல தானியங்களின் விலை பாதியாக அல்லது அதற்கும் மேலாக குறைந்தது.
இது அடிப்படையாக எதை அர்த்தப்படுத்துகிறதென்றால், உணவு பிரச்னை, தரம் மற்றும் உட்கொள்ளும் பழக்கங்களில் இருக்கும் அளவிற்கு மொத்த உற்பத்தியளவில் இருப்பதில்லை. புதிய மரபியல் தொழில்நுட்பம், அரிசி, கோதுமை மற்றும் பல தானியங்களில் தற்போதைய உற்பத்தியளவை இருமடங்காக்கும் பலவகைகளை உற்பத்திச்செய்யும் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறது. என்றபோதிலும், ஏழைகளின் வயிற்றை நிரப்புவதற்குமாறாக செல்வந்தர்களின் ஆசைகளை திருப்தி செய்வதற்காக, இதன் சம்பந்தமான எல்லா சிறப்பாய்வுகளும், புகையிலை மற்றும் தக்காளிகள் போன்ற வியாபாரப் பயிர்களிடமாகவே ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழலைப் பற்றியதென்ன?
மேலுமதிகமாக, மக்கள்தொகை பெருக்கம், மனிதவர்க்கத்தின் எதிர்கால நலனை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காரணங்களில் ஒன்று மட்டும்தான் என்பதை இந்தக் காரியத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்கள் உணருகின்றனர். உதாரணமாக, பால் மற்றும் ஆன் எர்லிக் என்பவர்கள் மக்கள்தொகை வெடிப்பு என்ற தங்களுடைய புத்தகத்தில், சுற்றுச்சூழலில் மனித கிரியைகளின் விளைவைப் பின்வரும் ஒரு சமன்தொடர் மூலம் விளக்கலாம் என்கிறார்: விளைவு = மக்கள்தொகை × செழிப்பான நிலை × சுற்றுச்சூழலின்மேல் தற்போதைய தொழில்நுட்பத்தின் பாதிப்பு.
இந்த நியமத்தின்படி, ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகள் நிறைய மக்களைக் கொண்டிருப்பதால் அதிக குடியேற்றப்பட்டிருப்பதில்லை, ஆனால், சுற்றுச்சூழலைக் கொள்ளை கொள்ளக்கூடிய இயற்கை வளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உட்கொள்ளும் உயர்வீதத்தைச் சார்ந்து அவர்களுடைய செழுமை நிலை இருப்பதாலேயே என்று அந்த எழுத்தாளர்கள் வாதிடுகின்றனர்.
மற்ற ஆய்வுகளும் இதை ஆதரிப்பதாக தோன்றுகிறது. பொருளாதார நிபுணர் டானியல் ஹாமெர்மெஷ் சொல்வதாக தி நியூ யார்க் டைம்ஸ் மேற்கோள்காட்டுவதாவது, ‘கண்ணாடி அறை விளைவை உண்டுபண்ணக்கூடிய பொருள் வெளியீடுகள், அவற்றை வெளியிடுபவற்றின் எண்ணிக்கையைவிட பொருளாதார செயல்பாட்டு அளவோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன. ஒரு சராசரி இந்தியன் ஒரு சராசரி அமெரிக்க ஆளைவிட 19 மடங்கு அதிக கரியமிலவாயுவை உண்டுபண்ணுகிறான். உதாரணமாக, குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியை உடைய பொருளாதார செழிப்புடைய பிரேஸில், விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை உடைய ஏழ்மையான பிரேஸிலைவிட அதிவிரைவில் அதன் வெப்பமண்டல காடுகளை எரித்துவிடக்கூடும்.’
அடிப்படையாக அதே கருத்தைக் கூறுபவராய், உலக கவனிப்பு நிலையத்திலுள்ள ஆலன் டர்னிங் குறிப்பிடுகிறார்: “உலகில் செல்வந்தராயுள்ள கோடிக்கணக்கானோர், பிறர் பொருளைக் கைப்பற்றும் ஆர்வமுடைய மற்றும் தீயொழுக்கமுடைய ஒரு நாகரீகத்தை உருவாக்கியிருப்பதால் இந்தக் கிரகம் அபாய நிலையில் உள்ளது. இவ்வித உயர்தர வகுப்போரின்—கார் ஓட்டுநர்கள், மாட்டிறைச்சி உண்பவர்கள், சோட அருந்துபவர்கள், பயன்படுத்திய பின் தூக்கியெறியக்கூடிய பொருள்களை நுகர்வோர்—வாழ்க்கை முறை, ஒருவேளை மக்கள்தொகை பெருக்கத்தைத் தவிர வேறு எதற்கும் ஒப்பிடமுடியாதளவு கடுமையாக சுற்றுச்சூழலுக்கு ஓர் அச்சுறுத்தலாக அமைகிறது.” மனிதவர்க்கத்தின் இந்த “ஐந்திலொரு பங்கான செல்வந்தர்கள்,” சுற்றுச்சூழலை அச்சுறுத்தக்கூடிய ஏறக்குறைய பத்தில் ஒன்பது பங்கு க்ளோரோஃப்ளூரோகார்பன்களையும் மற்ற கண்ணாடி அறை வாயுக்களையும் உண்டுபண்ணுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
உண்மையான பிரச்னை
மேற்கண்ட விவாதத்தின்படி, மனிதவர்க்கம் எதிர்ப்படும் இன்னல்களுக்கு மக்கள்தொகை பெருக்கத்தை மட்டும் குறைகூறுவது உண்மையைவிட்டு விலகிச்செல்வதாகும். நம்மை எதிர்ப்படும் பிரச்னை நமக்கு வாழும் இடம் போதமலிருப்பதால் அல்லது பூமியால் ஓர் ஆரோக்கியமான திட்டஉணவிற்கான போதிய உணவை உற்பத்திச் செய்ய முடியாமலிருப்பதால் அல்லது விரைவில் இயற்கை வளங்கள் உபயோகிக்கப்பட்டுவிடும் என்பதால் இல்லை. இவை வெறுமென அறிகுறிகளே. தங்களுடைய செயல்களின் விளைவுகளைப்பற்றி எண்ணிப்பார்க்காமலேயே அதிகமதிகமான மக்கள் பொருள்களை மேலும் மேலுமாக உட்கொள்வதில் நாட்டம் கொண்டிருப்பதே உண்மையான பிரச்னையாகும். இந்த அதிகத்திற்கான ஆசை, பூமியின் கொள்ளளவையும் மீறி செல்லும் அளவிற்கு நம் சுற்றுச்சூழலை கடுமையாகத் தாக்குகிறது. அதாவது, அடிப்படை பிரச்னை, மனிதவர்க்கத்தின் இயல் சார்ந்திருக்குமளவிற்கு அவர்களுடைய எண்ணிக்கையைச் சார்ந்திருப்பதில்லை.
ஆலன் டர்னிங் இவ்விதமாக விவரிக்கிறார்: “ஓர் அழியத்தக்க உயிர்க்கோளத்தில், மனிதவர்க்கத்தின் இறுதியான முடிவு, வரையறுக்கப்பட்ட பயன்படுத்தல் என்னும் மிக பரவலாயுள்ள நன்னெறியையும் பொருள் சம்பந்தமற்ற செழுமையையும் ஆதாரமாக கொண்ட ஒரு சுயகட்டுப்பாட்டிற்கான ஆழ்ந்த உணர்ச்சியை வளர்ப்பதை சார்ந்து இருக்கக்கூடும்.” இந்தக் குறிப்பு நியாயமானதே, ஆனால், எவ்விடத்திலும் உள்ள மக்கள் மனமுவந்து சுயகட்டுப்பாட்டை வளர்த்து, பொருள்களை வரையறையுடன் பயன்படுத்தி மற்றும் பொருள் சம்பந்தமற்ற செழுமையை நோக்கமாகக் கொண்டும் செல்வார்களா? என்ற கேள்வி கேட்கப்பட வேண்டும். அரிதாகவே அவ்வாறு இருப்பர். தற்போது நிலவும் தன்னிச்சையான சிற்றின்பப்பிரிய வாழ்க்கை முறையில், அதற்கு முரணானது சம்பவிப்பதற்கே அதிக சாத்தியமிருக்கிறது. இன்று அநேக மக்கள், “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்,” என்ற குறிக்கோளுடன் வாழ்கின்றனர்.—1 கொரிந்தியர் 15:32.
போதுமான மக்கள் உண்மைகளுக்கு விழித்துக்கொண்டு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள துவங்கினாலுங்கூட, அடுத்துவரும் காலத்தில் தற்போதைய போக்கை முழுமையாக மாற்றியமைக்க முடியாது. பல சுற்றுச்சூழல் தீவிரவாத குழுக்களையும் வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் பார்வையிடுங்கள். அவற்றில் சில செய்தித்தாளின் தலையங்கத்தில் வெளிவரும் நிலையை எட்டியிருக்கின்றன, ஆனால் சமுதாயத்தின் முக்கியபோக்கின்மேல் அவை ஏதாவது உண்மையான பயனைக் கொண்டுவர முடிந்திருக்கிறதா? இல்லை. பிரச்னை என்னவாக இருக்கிறது? அதாவது முழு அமைப்பும்—வர்த்தகம், பண்பாடு, அரசியல்—வழக்கற்றுவரும் உள்ளிணைப்பு மற்றும் நுகர்ந்தபின் தூக்கி எறியும் கோட்பாட்டை விருத்திசெய்வதற்காகவே இயக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழமைவில், அஸ்திபாரத்திலிருந்து எழுப்பி மறுபடியும் சரியாக கட்டப்பட்டாலொழிய மாற்றம் ஏற்படாது. அது மாபெரும் மறுகல்விப்பயிற்சியைத் தேவைப்படுத்தும்.
ஒரு மகிழ்ச்சியான எதிர்காலம் இருக்கிறதா?
ஒரு கொடயாளரால், தேவையான பொருட்களை நிரப்பி முன்னேற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்ட வீட்டில் வாழும் ஒரு குடும்பத்திற்கு இந்த நிலைமையை ஒப்பிடலாம். முழுமையாக அவர்கள் வீட்டில் இருப்பதைப்போல உணருவதற்காக, அவ்வீட்டில் உள்ள எல்லா வசதிகளையும் தங்களுடைய திருப்திக்கு உபயோகிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அந்தக் குடும்பம் அப்பொருட்களைச் சேதப்படுத்த, தரையைப் பிளக்க, ஜன்னல்களைத் தகர்க்க, கழிநீர் குழாய்களை அடைபட செய்ய, மின்சார ஓட்டவழியிலிருந்து அளவுக்கதிக மின்சாரத்தை எடுக்கத் துவங்கினால்—சுருங்கக் கூறினால், அந்த வீட்டை முழுமையாக கேடுசெய்வதாக அச்சுறுத்தினால் என்னவாகும்? அதன் உரிமையாளர் எதுவும் செய்யாமல் வெறுமென சகித்துப் பார்த்துக்கொண்டிருப்பாரா? பெரும்பாலும் அவ்விதம் இருக்கமாட்டார். சந்தேகமின்றி, பாழ்ப்படுத்தும் குத்தகைக்காரரை தன்னுடைய சொத்திலிருந்து வெளியேற்றிய பின்னர் அதன் சரியான நிலைமைக்குத் திரும்ப கொண்டுவர அவர் நடவடிக்கை எடுப்பார். அந்த நடவடிக்கை நியாயமற்றது என்று ஒருவரும் சொல்லமாட்டார்கள்.
அப்படியென்றால், மனித குடும்பத்தைப் பற்றியதென்ன? நாமும் நன்கு பொருட்களால் நிரப்பப்பட்டு மிகவும் மேம்பட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள, சிருஷ்டிகராகிய யெகோவா தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு வீட்டில் வாழும் குத்தகைக்காரரைப் போல இருக்கிறோமல்லவா? ஆம், நிச்சயமாகவே; ஏனென்றால் சங்கீதக்காரன் இவ்விதமாக விவரிக்கிறார்: “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது [யெகோவாவுடையது, NW].” (சங்கீதம் 24:1; 50:12) கடவுள் நமக்கு வாழ்வதைக் கூடியகாரியமாக்கும் தேவைகளை மட்டும் அளிக்கவில்லை—வெளிச்சம், காற்று, தண்ணீர் மற்றும் உணவு—ஆனால் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கு அவற்றை மிகுதியான அளவிலும் பல்வகைப்பட்டனவாயும் கொடுத்திருக்கிறார். இருப்பினும், குத்தகைக்காரராக, மனிதவர்க்கம் எவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது? பரிதாபகரமாக, அவ்வளவு நன்றாக நடந்துகொள்ளவில்லை. நாம் சொல்லர்த்தமாகவே இந்த அழகிய வீட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். அதன் உரிமையாளராகிய யெகோவா தேவன் அதைக் குறித்து என்ன செய்வார்?
‘பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுப்பார்’—அதையே கடவுள் செய்வார்! (வெளிப்படுத்துதல் 11:18) அவர் அதை எப்படிச் செய்வார்? பைபிள் பதிலளிக்கிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
கடவுளுடைய என்றென்றுமாக நிலைக்கும் ஆட்சியின்கீழ் நாம் எதை எதிர்பார்க்கமுடியும்? ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளில், என்ன வரப்போகிறது என்பதைப்பற்றி நமக்கு ஒரு முற்காட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது:
“வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.”—ஏசாயா 65:21-23.
மனிதவர்க்கத்துக்கு என்னே ஒரு மகிழ்ச்சியான எதிர்காலம்! கடவுளால் உண்டாக்கப்படும் புதிய உலகில், மனிதவர்க்கம் வீட்டுவசதி, உணவு, தண்ணீர், ஆரோக்கியம் மற்றும் கவனிப்பின்மை சம்பந்தமான எந்தப் பிரச்னைகளினாலும் பீடிக்கப்படமாட்டார்கள். கடைசியாக, கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம், கடவுளுடைய வழிநடத்துதலின்கீழ், மட்டுக்குமீறிய மக்கள்தொகையின் அச்சுறுத்தலில்லாமல், பூமியை நிரப்பி அதைக் கீழ்ப்படுத்த முடியும்.—ஆதியாகமம் 1:28. (g91 11/8)
[பக்கம் 13-ன் பெட்டி]
ஏன் உணவு அடிக்கடி மிகவிலையுள்ளதாயிருக்கிறது?
உணவின் உண்மையான விலை குறைந்து கொண்டிருக்கிற போதிலும், உணவு விலைகள் அதிகரிப்பதே பொது அனுபவமாக இருக்கிறது. ஏன்? ஓர் எளிய காரணம் நகர மயமாக்குவதாகும். உலகின் என்றும் வளர்ந்துகொண்டிருக்கும் நகரங்களிலுள்ள திரளானோருக்கு உணவளிக்க அதிக தூரங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், “ஒரு வாய்நிறையும் அளவு உணவு வயல்நிலத்திலிருந்து சாப்பாட்டு தட்டிற்கு வருவதற்கு 2,100 கிலோமீட்டர் பிரயாணம் செய்கிறது,” என்று உலக கவனிப்பு ஆய்வு ஒன்று கூறுகிறது. நுகர்பவர் உணவிற்காக மட்டுமல்ல, ஆனால் அதைப் பதப்படுத்தி, பொதிந்து, கொண்டுவருவதற்காக ஆன மறைவான செலவுகளுக்கும் விலை கொடுக்கவேண்டியுள்ளது.
[பக்கம் 10-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கண்ணாடி அறை வாயுக்கள்
தப்பிச்செல்லும் கதிர்வீச்சு
அகப்படுத்தப்பட்ட அகச்சிகப்புக் கதிர்வீச்சு
பூமியின் காற்றுமண்டலம் சூரியனின் வெப்பத்தை அகப்படுத்தி வைக்கிறது. ஆனால் அங்கு உண்டாக்கப்பட்ட வெப்பம்—அகச்சிகப்புக் கதிர்வீச்சால் கொண்டுசெல்லப்பட்டது—கண்ணாடியறை வாயுக்கள் காரணமாக எளிதில் வெளியேற முடிவதில்லை, இவ்வாறு பூமியின் மேற்பரப்பின் வெப்பத்தை அதிகரிக்கிறது
[பக்கம் 12-ன் படங்கள்]
ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சியை உற்பத்திச் செய்ய ஐந்து கிலோகிராம் தானியம் தேவைப்படுகிறது. அதன் விளைவாக, உலகில் குடியிருப்பவர்களில் மாம்சம் உண்ணும் பகுதியினர், உலக தானிய உற்பத்தியில் ஏறக்குறைய பாதியை உட்கொள்ளுகின்றனர்