எமது வாசகரிடமிருந்து
பிள்ளையின் மரணம் “பைபிளின் கருத்து” கட்டுரை “கடவுள் ஏன் என்னுடைய பிள்ளையை எடுத்துக்கொண்டார்?” (மே 8, 1992) தக்க சமயத்தில் எனக்குத் தேவையான ஆறுதலைக் கொடுத்தது. ஜனவரி 9-ல் நான் பெற்றெடுத்த பிள்ளை மூன்று மணிநேரங்களில் மரித்துவிட்டது. எனக்கு என்மேலே அதிக கோபம் வந்தது, மேலும் இந்தத் தவறான என் கோபத்தைக் கடவுள்மீதும் சாட்டினேன். அந்தச் சமயத்தில் இந்தக் கட்டுரையை வாசித்தேன். இதன் பக்கங்களில் கடவுளுடைய இரக்கத்தின் ஆழம் ஏராளமாக கொட்டியது, நான் கூக்குரலிட்டு அழுதேன். நான் தனிமையிலும் துயரிலும் இருந்த போது நீங்கள் தந்த நம்பிக்கைக்கு உங்களுக்கு நன்றி.
C. K., ஜப்பான்
பாடும் பறவைகள் மே 8, 1992, இதழில் பாடும் பறவைகளைப் பற்றிய கவர்ச்சியூட்டும் கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. என் கணவர் அநேக வருடங்களாக வீட்டின் பின்புறத்தில் பறவைகளுக்குத் தீனியளித்துக்கொண்டுவருகிறார், மேலும் அவற்றைப் பார்த்து நாங்களிருவரும் மகிழ்வோம். ஆனால் பறவைகள் எவ்வளவு வியக்கத்தக்கவிதத்தில் தங்களுடைய குரலிசைப்புகளை உண்டாக்குகின்றன என்பதை வாசித்தப்பிறகு, நாங்கள் இப்போது அவற்றிற்குச் செவிகொடுத்தும் கேட்கிறோம். யெகோவாவின் அற்புதங்களில் மற்றொன்றை நீங்கள் அருமையாக எழுதிவிளக்கியதற்காக மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.
J. S., ஐக்கிய மாகாணங்கள்
தற்காப்பு “பைபிளின் கருத்து—தற்காப்பு—ஒரு கிறிஸ்தவர் எந்த அளவுக்கு செல்லக்கூடும்” (ஜூலை 8, 1992) கட்டுரையை வாசிக்கும்போது, போர்க் கலைகள் சண்டைசெய்யவும் வலுசண்டைக்குப் போகவும் தயாராக இருக்கும் நிலையை ஆதரவுப்படுத்துகின்றன என்கிற அபிப்பிராயத்தை ஒருவர் பெறக்கூடும். இது உண்மை இல்லை. அநேக போர்க்கலைகள் மற்ற பல விளையாட்டுகள் கொடுப்பதைவிட மேலான உடல் கட்டுப்பாடு, சுய கட்டுப்பாடு, மற்றும் ஒருவிதமான நேர்மைத்தன்மையையும் புகட்டுகிறது.
T. M., ஜெர்மனி
போர்க்கலைகளில் பங்கெடுப்பவர்களுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பது ஒருவேளை உண்மையாக இருக்கக்கூடும். எனினும், அவை ஒருவனுக்கு உடன்மனிதனை எவ்வாறு தாக்குவது என்பதைக் கற்பிக்கின்றன, மேலும் இது ஏசாயா 2:4 மற்றும் மத்தேயு 26:52-ல் காணப்படும் பைபிள் நியமங்களுக்கு முரண்பாடானதாக இருக்கிறது.—ED.
நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமா சுயபுணர்ச்சிப் பழக்கத்தை மேற்கொள்வதற்கு அதிக முயற்சி செய்தபோதிலும், தோல்விகளினால் நான் நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறேன். ஆயினும், “உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டுமா?” (ஜூலை 8, 1992) என்கிற பொருளில் வந்த தொடர்ச்சியான கட்டுரைகள் மூலமாக, நான் என்னை மாற்றுவதற்கு எடுக்கவேண்டிய ஐந்து விசேஷித்த படிகளை நான் கற்றுக்கொள்ள முடிந்தது. இது என்னுடைய மோசமான பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற என் தீர்மானத்தை வலுப்படுத்தியது.
R. H., ஜப்பான்