உலகத்தைக் கவனித்தல்
பனிப்போரின் பின்விளைவுகள்
வாஷிங்டன், D.C.-யில் உள்ள ஓர் ஆராய்ச்சிக் குழுவாகிய உவோர்ல்ட் பிரியாரிட்டீஸ்-இன் ஒரு புதிய ஆய்வின் பிரகாரம், பனிப்போர் முடிவடைந்த பின்பும்கூட 1990-ம் வருடத்தில் ராணுவத்திற்குச் செலவிடப்பட்ட உலகளாவிய செலவு இன்னும் 90,000 கோடி டாலருக்கும் அதிகமாகியது, இது 1970-களில் வருடாந்தர சராசரி செலவைவிட 60 சதவீதத்திற்கும் மேலாக இருந்ததாக உண்மை பதிவுகள் காட்டுகின்றன. போரில் இறந்தவர்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 1980-களில் 74 சதவீதமாகவும் 1990-களில் கிட்டத்தட்ட 90 சதவீதமாகவும் உலகளாவிய அளவில் திடீரென அதிகரித்ததாக உலக ராணுவ மற்றும் சமூக செலவுகள் 1991 (World Military and Social Expenditures 1991) வருடாந்தர அறிக்கையும் கண்டுணர்ந்தது. இந்த அறிக்கையின் ஆசிரியர், ரூத் லெஜர் ஸிவார்ட், ஒரு பொருளியல் வல்லுநர், பொதுமக்கள் மரணங்களின் இந்தத் திடீர் அதிகரிப்புக்கான காரணத்தைக் கொடிய படைக்கருவிகளின் அதிகரிப்பின் மீது சுமத்தினார். “இன்றுள்ள சாதாரண படைக்கருவிகள் என்றழைக்கப்படுபவை அவற்றின் அழிக்கும்திறனில் சிறிய அணுகுண்டுக்கருவிகளுக்கு ஒப்பாக இருக்கின்றன,” என்று அவர் சொல்கிறார். உலகின் ஆயுதப்படைகளே பூமியில் உள்ள மிகப்பெரிய தூய்மைக்கேடுகளைச் செய்பவை என்றும் இந்த ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது; ஐக்கிய நாடுகளில் இவை, ஐந்து பெரிய இரசாயன ஆலைகள் சேர்ந்து உண்டாக்கும் நச்சுப்பொருட்களைவிட அதிகமான நச்சுப்பொருட்களை ஆண்டுதோறும் உண்டாக்குகின்றன. (g91 11/22)
கருச்சிதைவினால் மரணம்
“நைஜீரியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10,000 பெண்கள் வரை கருச்சிதைவினால் மரிக்கிறார்கள், 2,00,000 பேர் பின்விளைவுக் கோளாறுகளுக்காக சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்,” என்று நைஜீரியாவின் ஞாயிறு ஒப்பந்தம் (Nigeria’s Sunday Concord) அறிக்கையிடுகிறது. ஒருவேளை, இவற்றில் ஏறக்குறைய 20 சதவீதம் பருவவயதினரை உட்படுத்துகிறது. குடும்பக் கட்டுப்பாட்டிற்கான சர்வதேச உதவி இயக்கத்தின் இயக்குநர், டாக்டர் ஊச்சே ஆஸியே என்பவர், “பலர் சுயமாகவே கருச்சிதைவைச் செய்துகொள்ள முயற்சிசெய்கிறார்கள்” என்று சொன்னதாக அறிக்கையிடப்பட்டது. பால் சம்பந்தமான விஷயங்களில் அறியாமை அதிகமாக இருப்பதுதான் கருச்சிதைவுக்கு வழிநடத்தும் கருவுறுதல்களுக்குக் காரணமாக இருக்கிறதாக இவர் குறிப்பிட்டார். (g91 11/22)
மதுவும் இருதய நோயும்
லேன்செட் என்கிற பத்திரிகை சொல்கிறபிரகாரம், ஹார்வார்ட் பொது உடல்நலப் பள்ளியில் உள்ள விஞ்ஞானிகள், மதுபானங்களை மிதமாகக் குடிப்பது இருதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது என்பதாக உரிமைபாராட்டுகிறார்கள். நல்ல கொழுப்பிணி (Cholesterol) என்று அழைக்கப்படுகிற இரத்த ஓட்டத்திலுள்ள இரண்டு விதமான அதிக அடர்த்தியுள்ள லிபோ புரோட்டீன்கள் (HDL) அளவை மது அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இந்த HDL அடைக்கப்பட்ட இரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புப் படிவுகளை நீக்கி, இதனால் இருதய நோய் ஏற்படுவதைக் குறைக்கிறது என்பதாகத் தெரிகிறது. மது மேலுமாக இரத்தத்தில் உள்ள குறையடர்த்தியுள்ள லிபோ புரோட்டீன்கள் (LDL) அளவுகளைக் குறைப்பதன் மூலம் இரத்தம் உறைதலைத் தடுப்பதற்கும் ஒருவேளை உதவிசெய்யலாம். LDL-ன் அதிக அளவுகள், மாரடைப்புகளுக்கான முக்கிய காரணமாக இருக்கின்றன. எனினும், ஒருவர் மதுபானங்களைப் பயன்படுத்துகிறார் என்றால், ‘அவருடைய வயிற்றிற்காக கொஞ்சம் திராட்சரசத்தை,’ அவர் பயன்படுத்துவது நல்லது.—1 தீமோத்தேயு 5:23. (g91 12⁄8)
தொலைக்காட்சி துர்ப்பிரயோகத்தைக் குணப்படுத்த குழந்தைமருத்துவர்கள்
“தொலைக்காட்சி விஷயங்களில் இன்னும் அதிகமான பங்கை குழந்தைமருத்துவர்கள் எடுப்பது மிக அவசரத்தேவையாக இருக்கிறது,” இதோடுகூட “தொலக்காட்சி வன்முறை, குழந்தைகளுக்குப் பொருந்தாத மற்ற நிகழ்ச்சிகள் உண்டாக்கும் தீங்கான விளைவுகளைப் பற்றியும் இவர்கள் பெற்றோரை எச்சரிக்கவேண்டும்,” என்பதாக குழந்தைமருத்துவம் (Pediatrics) பத்திரிகை சிபாரிசு செய்கிறது. 311 குடும்பங்களின் தொலக்காட்சி காணும் பழக்கத்தைப் பற்றிய ஒரு சமீபத்திய கானடா ஆராய்ச்சி, அவர்கள் அனைவரும் குறைந்தது ஒரு தொலக்காட்சி பெட்டியையாவது சொந்தமாகக் கொண்டிருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இதில் 16 சதவீதம் குடும்பங்களில், இது நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. “அநேக குழந்தைகள், தொலக்காட்சி காண்பதில் தங்களுடைய பெற்றோரால் எந்தவித கட்டுப்பாடும் வைக்கப்படாமல், இந்த எளிதில் பதிகிற மற்றும் பாதிக்கிற வயதில் வன்முறையான நிகழச்சிகள் நடக்கும்போது அங்கு இருக்கிறார்கள்.” தொலக்காட்சியைத் துர்ப்பிரயோகம் செய்வதினால் வரும் தீயவிளைவுகளைக் குறித்து குழந்தைமருத்துவர்கள் பெற்றோரை எச்சரிக்கும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். (g91 12⁄8)
இரத்தமேற்றுதல் “உயிர்ப்பரிசு” அல்ல
இரத்தமேற்றுதல்கள் உண்மையில் உயிரைப் பாதுகாப்பவையாய் இருக்கின்றனவா? அதிகமாகிக் கொண்டே போகும் மருத்துவ அதிகாரிகள், சந்தேகத்தைக் கொண்டிருக்கின்றனர். மெடிக்கல் ஜர்னல் ஆப் ஆஸ்திரேலியா என்ற பத்திரிகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி ராயல் நார்த் ஷோர் ஹாஸ்ப்பிடலில் உள்ள இரத்த இயல் துறையின் இயக்குநர், இரத்தம் ஏற்றுவதின் பாதுகாப்புத்தன்மைப் பற்றிய கஷ்டங்களைக் குறித்து சிந்திக்கிறார். அவர், இரத்தம் ஏற்றுதலுக்கும் புற்றுநோய், தொற்றுநோய் என்பவற்றிற்கும் தொடர்பு இருப்பதாக நம்புகிறார். தி பிரிஸ்பேன் கூரியர்-மெயில் இந்தப் பிரபலமான மருத்துவர் இவ்வாறு சொல்வதாக மேற்கோள் காட்டுகிறது: “இரத்த ஏற்றம் ஒரு காலத்தில் உயிர்ப் பரிசாக கருதப்பட்டது, ஆனால் இப்பொழுதோ அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. இப்போது உள்ள பொதுவான கருத்து என்னவென்றால், இரத்தம் ஏற்றப்படாத அறுவைசிகிச்சையும் இரத்த ஏற்றுதலைத் தவிர்ப்பதுமே உயிர்ப்பரிசாக இருக்கக்கூடும் என்பதே. அறுவைசிகிச்சை செய்யும்போது இரத்தம் ஏற்றுவது, புற்றுநோய் மறுபடிதோன்றுவதற்கும் அறுவைசிகிச்சைக்குப் பின்பாக வரும் நோய்தொற்றுதலுக்கும் ஆளாகும் நிலைக்கு வழிநடத்துவதாக புதிய சான்றுகள் குறிப்பிடுவது, மனதில் எடுத்துக்கொள்ள வேண்டிய காரியம்.” (g91 11⁄22)
அரசாங்கத்தின் திறமையற்றத்தன்மை
மிகச் சமீபத்தில் வெளிவந்த அறிக்கையில் ஐ.நா.-வின் மேம்பாட்டு வளர்ச்சி அமைப்புத்திட்டம் வறுமையை எதிர்த்துப் போரடுவதில் அரசாங்கங்களின் திறமையற்றதன்மையைக் குறித்துக் கண்டனம் தெரிவித்தது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டுவதாக, ஒரு ஃபிரஞ்ச் தினசரி பத்திரிகை லீ மாண்ட்டி, வளரும் நாடுகளில் “போர் ஆயுதங்களுக்கான செலவு உடல்நலத்திற்கும் கல்விபுகட்டுவதற்கும் ஆகும் செலவைவிட குறைந்தது இரண்டு மடங்காகவாவது இருக்கும்,” என்பதாக விளக்குகிறது. அது, “ராணுவ செலவு, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் உள்ளது போல, வளரும் நாடுகளிலும் மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது,” என்று குறிப்பிட்டது. “வளைகுடா போரின் பத்து நாட்களில் ஆன செலவு, அடுத்த பத்து ஆண்டுகளாக இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்புஊசி சிகிச்சைக்குப் பிரதிபலிக்கும் நோய்களுக்கு எதிராக தடுப்புஊசி குத்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது,” என்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. (g91 12⁄8)
ஒருமணிநேர வேலைக்கு
ஒரு சமீபத்திய திறனாய்வு, இந்த உலகமெங்கும் உள்ள 49 வித்தியாசமான சமுதாய படிநிலைகளில், 159 வேறுபட்ட வேலைகளில் உள்ள தொழிலாளிகளின் சம்பாதிக்கும் திறனைத் தொடர்புபடுத்திப் பார்த்ததாக, ஃபிரஞ்ச் செய்தித்தாள் லீ மாண்ட்டி அறிக்கை செய்கிறது. சர்வதேச தொழிற்சங்கத்தினால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, இடத்திற்கு இடம் வெறுமென எவ்வாறு தொழிலாளிகளின் பொருள்வாங்கும்திறன் முரண்படுகிறது என்பதைக் காண்பிக்கிறது. எடுத்துக்காட்டாக, சூடானில் உள்ள ஒரு நெசவாளி, ஸ்ரீலங்காவில் உள்ள ஓர் உணவு பரிமாறுபவன், யுகோஸ்லாவியாவில் உள்ள ஒரு நூற்பவன், வங்காள தேசத்தில் உள்ள ஒரு பேருந்து ஓட்டுநர், மேலும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் உள்ள ஒரு ரொட்டிசுடுபவன், இவர்கள் வெறுமென ஒரு கிலோகிராம் அரிசி வாங்க, மூன்றுக்கும் அதிகமான மணிநேரங்கள் வேலைசெய்ய வேண்டியதிருக்கிறது. இதற்கு நேர்எதிராக, ஃபிரஞ்ச் பாலினீசியாவில் உள்ள ஓர் அலுவலக பணியாளர் அல்லது சுவீடனில் உள்ள ஒரு தச்சன் தன்னுடைய ஒரு மணிநேர வேலையின் சம்பளத்தினால் குறைந்தது ஒன்பது கிலோகிராம் அரிசி வாங்க முடியும். (g91 11⁄22)
மனத்தாழ்மையுள்ள உருளைக்கிழங்கின் மதிப்பு
“அமெரிக்காவிற்கு ஐரோப்பிய வெற்றியாளர்கள் வந்தபோது அங்குள்ள செல்வங்கள் உலோகங்களாகவும் விலைமதிப்புமிக்க மணிக்கற்களாகவும் இருக்கும் என்னும் எண்ணத்தோடு வந்தனர். உருளைக்கிழங்கின் பொருளாதார மதிப்பைக் ‘கண்டுபிடிப்பதற்கு’ முன்பு, மூன்று நூற்றாண்டுகள் கடந்துசெல்ல வேண்டியதிருந்தது.” அர்ஜன்டினாவில் உள்ள பேரிலோச்சின் மண்டல பல்கலைக்கழக மையத்தின் எட்வர்ட் H. ரேப்போபோர்ட் என்பவர், ஸியான்சியா ஹோஜி என்ற பிரேசிலிய பத்திரிகையில் மேற்கூறியவாறு விளக்கினார். உருளைக்கிழங்குகள் மிக முக்கியமான, ஊட்டமிக்க உணவுகளில் ஒன்றாகவும் அநேக வைட்டமின்களையும் உடையதாக இருக்கிறது. எனவே, இவை ஆண்டுதோறும் பில்லியன்கள் கணக்கான டாலர்களில் மதிப்பிடப்படுகின்றன. ரேப்போபோர்ட் தொடர்ந்து சொல்கிறார்: “ஓர் ஆண்டில் உலகின் உருளைக்கிழங்கு அறுவடையின் மதிப்பு, அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின் தோண்டியெடுத்த எல்லா தங்கத்தையும் வெள்ளியையும் காட்டிலும் மிகஅதிகமான அளவில் உயர்வானதாக இருக்கிறது.” (g91 11⁄22)
இசையோடு சாப்பிடுதல்
ஆராய்ச்சியாளர்கள், சாப்பிடும் பழக்கங்களின் மீது பின்னணி இசையின் பாதிப்பைப் பற்றி ஆராய்ச்சிசெய்கிறார்கள். இவர்கள், சாப்பாட்டு நேரங்களில் அநேக வித்தியாசமான இசை வகைகளைக் கவனமாக கேட்கும்போது ஜனங்கள் எத்தனை தடவை உணவைக் கடிக்கிறார்கள் என்பதை ஓர் ஆராய்ச்சியில் கணக்கெடுத்தார்கள். பின்னணி இசை ஒலிக்காதபோது, பங்கெடுத்தவர்கள் “ஒரு நிமிஷத்திற்கு 3.9 கடிகள் என்ற சராசரி வேகத்தில் சாப்பிட்டனர்,” இவர்களில் மூன்றில் ஒரு பங்கானோர், ஒரு தட்டு சாப்பிட்ட பிறகு அதிக உணவிற்காக கேட்டனர் என்பதாக தி டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி டயட் அண்ட் நியூட்டிரிஷன் லெட்டர் அறிக்கைசெய்கிறது. “எழுச்சியூட்டும் இசை” போடப்பட்டபோது, சாப்பிடுபவர்கள் “ஒரு நிமிஷத்திற்கு சராசரியாக 5.1 கடிகள் வரை தங்கள் வேகத்தை அதிகரித்தனர். மறுபட்சத்தில், மெல்லிசை கொடுக்கும் புல்லாங்குழல் போன்ற கருவிகள் இந்த வேகத்தை ஒரு நிமிடத்திற்கு 3.2 கடிகள் என்ற வேகத்திற்குக் குறைத்துவிட்டன—மேலும் கடிகளும் சிறியவைகளாயின” என்று அந்த அறிக்கை மேலுமாக கூறியது. இந்தப் பின்னால் குறிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டில், யாருமே இரண்டாவது தடவை உணவிற்காக கேட்கவில்லை. உண்மையில், திருப்தியடைந்த ஓர் உணர்வோடு, பலர் தங்களுடைய தட்டுகளில் மிச்சம் வைத்தனர், மேலும் அவர்கள் உணவு மிகவும் சுவையாக இருந்தது என்றும் உரிமைபாராட்டினர். விவரஅறிக்கை காண்பிக்கிற பிரகாரம், அவர்களுக்குச் “சில செரிமானப் பிரச்னைகளும்” இருந்தன. (g91 12⁄8)
உலகளாவிய எழுத்தறிவின்மை குறைகிறது
“உலகில் உள்ள எழுத்தறிவில்லாதவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் முதன்முதலாக, சிறிதளவு குறைந்திருக்கிறது,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கையிடுகிறது. “ஐக்கிய மாகாணங்களின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் சம்பந்தமான அமைப்புக் கொடுத்த அறிக்கை, 1990-ல் எழுத்தறிவில்லாதவர்களின் எண்ணிக்கை 94.8 கோடிகளாகவும் இது 1985-ன் கணக்கெடுப்பாகிய 95 கோடிகளிலிருந்து குறைவாகவும் இருப்பதாக மதிப்பீடு செய்தது.” உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய 26.6 சதவீதம் எழுதப்படிக்கத்தெரியாதவர்களாக இருக்கிறார்கள், இந்த நவீனப் போக்குத் தொடர்ந்தால் 2000 ஆண்டு வரும்போது இது 21.8 சதவீதமாக அல்லது 93.5 கோடியாக குறைந்துவிடும். தற்செயல்பொருத்தமாக, 1990 சர்வதேச எழுத்தறிவு ஆண்டாக பெயரிடப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் நாடுகளிலும் எழுத்தறிவை அதிகரிப்பதற்கு அதிக ஆர்வம் இருப்பதோடுகூட, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில், சிறிதளவு பள்ளிப் படிப்பு இருந்தும் எழுத்தறிவின்மையைப் பற்றிய விழிப்புணர்ச்சி அதிகரித்திருப்பது, இப்பொழுது 10 முதல் 20 சதவீதத்துக்கு இடைப்பட்டதாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. (g91 11⁄22)